7 ஜென்மத்துக்கு கிரிக்கெட்டின் மாஸ் மகாராஜா மகேந்திர தோனிதான்! #HBDthalaDhoni


நான் சிங்கப்பூரில் வேலை செய்தபோது உடன் வேலை செய்த சீனக்காரர்கள் ஃபுட்பால் பைத்தியங்கள். கிளப், சர்வதேச, உள்ளூர்ப் போட்டி என ஒன்றையும் விடமாட்டார்கள். கால்பந்தின் நுணுக்கங்கள் தெரிந்தவர்களும் அல்லர். 'அவர்களுக்குத் தேவை சூதாட ஒரு விளையாட்டுப் போட்டி. இவன் இத்தனை கோல் அடிப்பான், இந்த டீம் ஜெயிக்கும், பென்லாடில இப்படி ஆகும் என விதவிதமாக சூதாட தோதான ஒரு போட்டி. அவ்வளவுதான்' என்பது எனக்குத் தாமதமாகத்தான் தெரிய வந்தது. இந்தியர்களின் விருப்பத்தை இதோடு ஒப்பிடலாம். சூதாட்டத்துக்குப் பதிலாக வெற்றி, கால்பந்துக்குப் பதிலாக கிரிக்கெட். நமக்குத் தேவையெல்லாம் வெற்றி. வெற்றி மட்டுமே பெறும் ஒருவன் எனக்கு ஆதர்சம்; என் ஹீரோ எனச் சொல்லிக்கொள்ள வேண்டும். அது அணியோ, தனிநபரோ.. வெற்றி வேண்டும். அதனால்தான் சச்சின் அவுட் ஆனதும் அப்போது மேட்ச் பார்ப்பதை நிறுத்திவிடுவார்கள். சச்சின் மட்டுமே ஆதர்சம். சச்சின் பெரும்பாலும் சோடைபோனதில்லை. அந்த ரன்கள் தான் வெற்றிகள். அணி தோற்றுக்கொண்டேயிருந்ததால் அவர் அவுட் ஆனதும் எல்லாம் முடிந்தது.

இந்த சூழலை கங்குலி ஓரளவுக்கு மாற்றினார். ஆனால், மாஸ் ஹிட் ஆகவில்லை. 2003 உலகக் கோப்பையை வென்றிருந்தால் அந்த மாஸ் ஹீரோவாக கங்குலி கூட மாறியிருக்கலாம். அது மிஸ் ஆனது. தொடர் வெற்றிகளால் அந்த மாஸ் ஹீரோ பட்டத்தைத் தனதாக்கிக்கொண்டவர் தோனி. மகேந்திர சிங் தோனி.

2007. 50 ஓவர் உலகக் கோப்பையில் மரண அடி வாங்கி வீடு திரும்பியது இந்திய அணி. அதே ஆண்டு, முதல்முறையாக டி20 உலகக் கோப்பை நடந்தது. சீனியர்கள் எல்லாம் ஓய்வெடுக்க, புது ரத்தத்துடன் இளைஞர் பட்டாளம் களமிறங்கி வென்றது. அது 50 ஓவரோ, 20 ஓவரோ.. உலகக் கோப்பை. 24 ஆண்டுகள் கழித்து இந்தியாவுக்கு ஓர் உலகக் கோப்பை. அதை வாங்கித் தந்தவர் தோனி. அதுதான் தோனியை மாஸ் ஹீரோவாக்கிய முதல் மொமெண்ட். அதன் பின்னர் தோனி தொட்டதெல்லாம் கப் தான். 2010ல் ஐ.பி.எல்லில் கோப்பை, 2011ல் உலகக் கோப்பை, இன்னொரு ஐ.பி.எல் , சேலஞ்சர்ஸ் கோப்பை என தோனியின் வாழ்க்கை "கோப்பையிலே என் குடியிருப்பு" என கண்ணதாசன் போல் ஆனது.

இந்தியாவில் கிரிக்கெட் என்றால் பேட்டிங்தான். அவ்வப்போது கபிலோ, ஶ்ரீநாத்தோ அல்லது பும்ராவோ வந்து பவுலர்கள் பக்கம் நம்மைத் திருப்பினாலும் இங்கே கிரிக்கெட் என்றால் பேட்டிங்தான். தோனி என்ன அப்படிப்பட்ட பேட்ஸ்மேனா? நிச்சயமில்லை. ஆனால் தொடர் வெற்றிகள் அவரை கிரிக்கெட் உலகின் ராஜாவாக்கியது. வெற்றிகளைப் பார்த்து கிரிக்கெட்டின் நுணுக்கத்துக்காக பார்க்காதவர்கள் பலர் தோனியின் ரசிகர்கள் ஆனார்கள். அவர்களுக்கு பேக் ஆஃப் த லெந்த் எது எனத் தெரியாது. ஆனால் தோனி அடிப்பது சிக்ஸ் எனத் தெரியும். அதுதான் அவர்களுக்கு வேண்டும். தெரிந்தோ தெரியாமலோ தோனியின் ஆட்டமுறை ஒரு மசாலா படத்தின் மாஸ் மொமெண்ட் போல அமைந்தது. 3 அடி வாங்கிவிட்டு திருப்பி அடிப்பதுதானே நம்ம ஊரு மாஸ்? தோனி 49வது ஓவர் வரை அடி வாங்குவார். 50வது ஓவரில் எல்லாவற்றுக்கும் சேர்த்து திருப்பி அடித்து வென்றுவிடுவார். போதாதா? அந்த 50வது ஹிட்டா மிஸ்ஸா என நகம் கடிக்கத் தொடங்கின சென்னையும் இந்தியாவும். பெரும்பாலான நேரம் ஹிட் என்பதால் தோனி மாஸ் மகாராஜா ஆனார்.

கிரிக்கெட்டின் நுணுக்கங்கள் தெரியாத பலரும் கூட தோனி ரசிகர் ஆனதால் அவருக்கு ஆதரவு குரல்கள் எழும்போது சில அபத்தமான விஷயங்களும் முன்வைக்கப்படும். இது அனைத்து மாஸ் ஹீரோக்களுக்கும் நடக்கும் விஷயம் தான். விஜய்க்கு சிறப்பாக நடிக்கத் தெரியாது என்றால் அவர் ரசிகர்கள் சும்மா விடுவார்களா? அது போல. இங்குதான் பிரச்னை எழுந்தது. கிரிக்கெட்டின் நுணுக்கம் தெரியாத ஒருவர் தோனிதான் பெஸ்ட் பேட்ஸ்மென் என்பதால் தோனி ரசிகர்கள் எல்லோருக்குமே கிரிக்கெட் தெரியாது என முழங்கினார்கள் கிரிக்கெட் ரசிகர்கள். கிரிக்கெட் என்பது பேட்டிங் மட்டுமில்லை. தோனியின் கிரிக்கெட் நாலெட்ஜ் சமகாலத்து இந்திய வீரர் யாரைவிடவும் அதிகம். அவர் பேட்டிங் தான் பெஸ்ட் என சொல்ல முடியாது. ஓரளவுக்குக் கிரிக்கெட் தெரிந்தவர்கள் தோனியின் பேட்டிங்கை விட ஸ்டைலாக, பக்கா ஃபுட் வொர்க்குடன், செம டைமிங்குடன் ஆடுபவர்களைக் கொண்டாடினார்கள். கூட்டத்தில் ஒருவனாகிவிட்டால் நமக்கு கிரிக்கெட் தெரியாது என்றாகிவிடுமென்பதாலும் ஒரு க்ரூப் தோனியெல்லாம் கிரிக்கெட்டரே இல்லை தெரியுமா என அனலிஸ்ட் ஆகிவிட்டது. தோனியைப் பிடிக்காது என்பது நம்மைக் கூட்டத்திலிருந்து தனித்து காட்ட உதவும் என நம்பினார்கள்.. ஐ.பி.எல் இந்தச் சண்டைக்கு உதவியது. உண்மையில் தோனி சறுக்கியபோதெல்லாம் அதைச் சரியாய் சுட்டிக் காட்டியவர்களை தோனியின் ரசிகர்படை துவம்சம் செய்ததும் நடந்தது. ரசிகர்களின் இந்தச் சண்டையில் தோனி என்ற மகத்தான கிரிக்கெட் வீரரின் பெயர்தான் நாலாப்பக்கமும் அடிப்பட்டது. தோனிக்குக் கிடைத்த புகழின் முன்னால் இது ஒன்றும் பெரிய விஷயமில்லைதான். ஆனால் தன் கிரிக்கெட் கரியரின் கடைசிக்காலத்தில் இருக்கும் இன்றைய தோனிக்கு அதுதான் தலைவலையாய் இருக்கிறது.

இனிமேல் ஆடும் போட்டிகளில் ஒரு ரன் கூட அடிக்காமல் போகலாம். நிறைய பந்துகளை வீணடிக்கலாம். மோசமான கீப்பிங் செய்யலாம். ஆனால் இவை எதுவும் தோனியின் புகழைக் கொஞ்சம்கூட அசைத்துப் பார்க்காது. ஏனெனில், இந்தியர்களுக்கு அவன் தந்த வெற்றி என்னும் போதையை இன்னொருவர் தர பல தசாப்தங்கள் ஆகலாம். கோலி அதை செய்யும் வாய்ப்புகள் உண்டென்றாலும் தோனிக்கு அமைந்த மாஸ் மொமெண்ட் கோலிக்கு அமையும் என நம்பவில்லை. கோலி ஆடினால் 40வது ஓவரே மேட்ச் முடிந்துவிடுகிறது. தோனி ஆடினால் 50வது ஓவர்தான். அந்த டென்ஷன், அந்தப் பரபரப்பு... முடிவில் ஒரு வெற்றி.. அந்த தோனியை இந்தியாவால் என்றும் மறக்க முடியாது.

இன்னும் 7 ஜென்மத்துக்கு கிரிக்கெட்டின் மாஸ் மகாராஜா மகேந்திர சிங் தோனிதான். ஹேப்பி பர்த்டே தல!

Reply · Report Post