பெரியார் மண்


தமிழகத்தைப் பெரியார்மண் என்று சிலர் சொல்லுவதும்..இல்லையில்லை தமிழகம் பெரியார் மண் அல்ல..எப்போதும் ஆழ்வார்களும் நாயன்மார்களும் பாடி மகிழ்ந்த ஆன்மிக பூமிதான் என்று மறுத்துரைப்பவர்களும் எப்போதும் உண்டு..அப்படிச் சொல்பவர்கள் சித்தர் மற்றும் வள்ளலார் போன்ற பெரியார்களை வசதியாக ஒதுக்கி வைத்து விடுவார்கள். இப்போது மைய ஆட்சி மதவாத பாஜக கையில் இருப்பதால் தமிழகம் பெரியார் மண் அல்ல என்னும் குரல் இங்கு சிலரால் ஓங்கி ஒலிக்கப்படுகிறது..
நிறுவ விரும்பும் அவர்களுக்கான பதில்..இந்தப் பதிவு.

முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும் பெரியாரின் கொள்கை நாத்திகம் அல்ல..சமூக நீதி, சமவாய்ப்பு, பெண்ணுரிமை, சாதி ஒழிப்பு போன்ற மனித உரிமைகளுக்காக அவர் எடுத்த ஆயுதம்தான் நாத்திகம். காரணம் அவர் கட்டமைக்க விரும்பிய மனிதத்துக்குத் தடையாக மதம் குறிப்பாகத் தமிழகத்தில் பெரும்பான்மை மதமாக இந்து மதம் இருப்பதாக அவர் கருதியதால், அதன் கருத்துக்களை அடித்து நொறுக்க நாத்திகத்தைக் கையிலெடுத்தார்.

தமிழகத்தில் பக்தி பெருகிவிட்டது..திருவிழாக்களில் கூட்டம் அலைமோதுகிறது..அய்யப்பனுக்கு மாலை போடுகிறவர்கள் பெருகிவிட்டனர் ..திருவண்ணாமலை கிரிவலத்தில் லட்சக்கணக்கில் கூடுகின்றனர்..என்று பேசுவதே இது பெரியார் மண்ணல்ல என்று சொல்ல விரும்புபவர்கள் வைக்கும் வாதம்..தமிழ்நாடு பெரியார் வாழ்ந்தபோதும் அதற்குப் பின்னரும் எப்போதும் நாத்திக பூமியாக இருந்ததே கிடையாது... தொடர்ந்து வந்த திராவிடக் கட்சிகளின் அரசும் தன்னுடைய கொள்கையாக நாத்திகத்தை முன்வைத்ததே இல்லை. திருவாரூர் தேரை ஓட்டுவதில் பெருமை கொள்ளும் ஆட்சியாகவும் அறநிலையத்துறை மூலம் தொடர்ந்து ஆலயங்களை நிர்வாகித்ததும் அனைவரும் அறிந்ததே. ஒரு விழுக்காட்டுக்கும் குறைவாகவே நாத்திகர்களாகத் தமிழர் இருந்தனர் இருக்கின்றனர் என்பதே உண்மை. ஆனால் இருக்கின்ற ஆத்திகர்கள் அனைவருமே நாத்திகக் கருத்துக்களைச் சகித்துக்கொள்ளும் மனநிலையினர் என்பதுதான் தமிழகச் சிறப்பு. மற்ற மாநிலங்களில் பார்க்க முடியாததும்.

தமிழகத்தின் பல முக்கியமான ஆலயங்களுக்குச் செல்கிறவர்கள் பலரும் பெரியார் சிலையைக் கடந்தும்..
கடவுள் இல்லை.. கடவுள் இல்லை..கடவுள் இல்லவே இல்லை
என்பதை மட்டுமல்ல..
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளைப் பரப்புபவன் அயோக்கியன், கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி
என்னும் வாசககங்களைப் படித்துக் கடந்து சென்றே கடவுளை வணங்குகின்றனர். இந்த கருத்துக்கள் சொல்பவர்களின் உரிமை. கடவுளை வணங்குவது என் நம்பிக்கை என்ற அளவில் ஏற்றுக்கொள்கின்றனர்.
அதனால்தான் இது பெரியார் மண்.

அறிஞர் அண்ணா வெற்றி பெற்ற நாள் முதல் அரசியல் வேறு நம்முடைய மத/கடவுள் நம்பிக்கை வேறு எனத் தெளிவாக கடவுள் நம்பிக்கையாளர் உணர்ந்து வாக்களிக்கும் மனப்பாங்கில் இருப்பதால் இது பெரியார் மண்தான். மக்களின் இந்த மனநிலையைக் கெடுக்க வேண்டுமென்பதே கெடுமதியாளரின் பலநாள் நினைப்பு. அதில் வெற்றிபெறமுடியாமையே பெரியாரின்மீது இருக்கும் தொடர் வெறுப்பு.

இதன் தொடர்ச்சியாகக் கடந்த தேர்தலில் கடவுள் நம்பிக்கையாளரில் 80 விழுக்காட்டினர் திமுக/அதிமுக என்னும் திராவிடக்கட்சிகளுக்கே வாக்களித்து அவர்களில் ஒருவரே தங்களை ஆளவேண்டும் எனது தெளிவாகத் தீர்ப்பெழுதியதாலும் மகிழ்ச்சியாகச் சொல்லலாம் ஆம்..இந்தக் கருத்து முழுக்க முழுக்க பெரியார் மண்ணல்ல என்பவர் வருந்துவதற்காக வலியச் சொல்லும் கருத்து..ஏனெனில் இதுதான் அவர்களை அதிகம் வருத்தமடையச் செய்யும்..எனவே இது இன்னமும் பெரியார் மண்தான்.

ஆத்திகம் பெருகியிருக்கிறது என்று மார்தட்டும் அதே வாய் தான் நாட்டில் குற்றங்கள் பெருகியிருக்கின்றன.. குடிப்பவர் அதிகரித்திருக்கின்றனர்.. ஊழல் தலைவிரித்தாடுகின்றன,,பண்பாடு கெட்டுவிட்டது..என்று கதறுகின்றனர். பெரும்பாலானவர்கள் பக்தியோடு இருக்கும் நாட்டில் இவை குறைந்துதானே இருக்கவேண்டும் என்ற சிந்தனை அவர்களுக்கு இருக்காது என்பதல்ல. பேராசையின் விளைவுதான் பெருகிவரும் பக்திக்குக் காரணம் என்பதை உணர்ந்தும் அவர்கள் வெளியில் சொல்லாததற்கும் காரணம் அது கடவுளுக்கும் நம்பிக்கைக்கும் கெட்டபெயராகிவிடும் என்ற கவலையில்தான்.

இன்றும்கூட பல வீடுகளில் இந்தப்பேச்சைக் கேட்கலாம்..
"எங்க வீட்டுக்காரருக்கு கோயில் குளம் ஜாதகம் இதிலெல்லாம் அவ்வளவா நம்பிக்கையில்லைங்க..அவரு வரமாட்டாருங்க.."
"என் பையன் முட்டை இல்லாம சாப்பிடமாட்டாங்க..கிருத்திகையாக இருந்தாலும் அவனுக்கு மட்டும் சமைத்துக்கொடுத்திடுவேன்.."
"பசங்கள்லாம் எங்க கோயிலுக்கு வரப்போறாங்க..சமைச்சிட்டு நானும் வீட்டுக்காரரும்தான் கோயிலுக்குப் போயிட்டு வந்தோம்.."
இப்படியான பல பேச்சுக்களையும் இயல்பாகக் கடக்கும் சமூகமும் சொல்லிவிடுகிறது..ஆம்..இது பெரியார்மண் என்பதை.

"நாங்க தாங்க மாட்டுக்கறி சாப்பிடமாட்டோம்..விருப்பம் இருக்கறவன் சாப்பிடுவதில் எங்களுக்கு எந்த வெறுப்பும் இல்லை.." என்றே பெரும்பாலான மக்கள் கோமாதா பற்றிய எண்ணத்தில் இருப்பதும்..
மாட்டுக்கறி திருவிழா நடப்பதை ஏற்பதும் சொல்லி விடுகிறது..
இது இன்னும் பெரியார் மண் என்பதை.

ஆக..நாத்திகராகத் தன்னை வெளிப்படுத்திக்கொள்வதும் நாத்திகரை ஏற்றுக்கொள்ளுவதும் சமூகத்திலும் இல்லத்திலும் இயல்பாகத் தமிழகம் அளவுக்குப் பல மாநிலங்கள் இல்லை என்பதால்..ஆம் இது பெரியார் மண்.

இல்ல நிகழ்வுகளில் சமஸ்கிருதம் தவிர்த்துத் தமிழ்மொழியில் சடங்குகள் செய்யும் பல குடும்பங்கள் இருப்பதும்..சடங்குகளே இல்லாமல் திருமணம் செய்யும் சில குடும்பங்களும் அத்திருமணங்களும் சட்டப்படி செல்லும் என்பதும் இன்றளவும் வேறெந்த மாநிலங்களிலும் இருப்பதாகத் தெரியவில்லை. தாலி மறுத்துத் திருமணங்கள் நடப்பதும்..தாலியை அணிந்திருப்பவரும் அதற்கு பெருமதிப்பு தராத நிலையும் இருப்பது தமிழகத்தில்தான்.
எனவே ஆம்..இது பெரியார் மண்தான்.

நாயுடு,ரெட்டி,நாயர்,மேனன்,ராவ்,கெய்க்வாட்,சர்மா,சாஸ்திரி என பெயருக்குப்பின்னால் தங்கள் சாதியை இணைத்து வழங்கும் இந்தியாவில்..தமிழகத்தில் மட்டும் தங்கள் பெயருக்குப் பின்னால் சாதியை விட்டொழித்து வெளியிலும் தங்கள் சாதியைத் தெரிவிக்கத் தயங்கும் போக்கு தமிழ்நாட்டில் மட்டுமே இன்றும் தொடர்கிறது. இது பெரியார் மண் அல்ல என்று சொல்லத் துடிப்பவர்கூடத் தங்கள் பெயருக்குப் பின் அய்யர், அய்யங்கார் என்று போடத் துணியாததும் தயங்குவதும் உரக்கச் சொல்லிவிடுகிறது இது பெரிய அளவில் இன்னமும் பெரியார் மண்ணாகவே இருக்கிறது என்பதை.

எல்லா இல்லங்களிலும் பண்டிகையின்போதும் குடும்பச் சடங்குகள் போதும் அந்த இல்லத்தைச் சேர்ந்த நட்பு/உறவினர் வட்டத்தில் ஒருசிலர் அது குறித்துக் கிண்டலாக விமர்சிக்கும்போக்கைக் கடக்காதவர் இருக்கவே முடியாது. தமிழகத்தில் கடவுள் நம்பிக்கை இருப்போரில் பலரும் சாமியார்களை நம்புவதில்லை என்ற கொள்கையிலும் சாமியார்கள் ஏமாற்றுக்காரர்கள் என்று வெளிப்படையாக விமர்சனம் செய்யும் போக்கையும் சமூகத்தில் இயல்பாகப் பார்க்கலாம் என்பதே தமிழக நிலை..இதற்கும் காரணம் இது பெரியார் மண் என்பதே.

தமிழகத்தில் சாதி கடந்து எல்லா இல்லங்களிலும் பெண்களுக்குச் சமமான படிப்பு தரவேண்டும் என்ற எண்ணமும் சொத்தில் பங்கு தரவேண்டும் என்ற எண்ணமும் பரவலாய் இருப்பதை உணரமுடிகிறது. இந்த மனப்போக்குக்குக் காரணமும் இது பெரியார் மண் என்பதால்தான்.

இவை எல்லாவற்றையும் கடந்து..சமுகநீதியை வலியுறுத்தி 69 விழுக்காடு இடஒதுக்கீடுதொடர்ந்து இருக்கும் மாநிலம் தமிழகம் என்பதற்கு அடிப்படைக் காரணம் இது பெரியார்மண் என்பதே. தமிழக மக்களின் ஒடுக்கப்பட்டோர் பலரும் இந்த இடஒதுக்கீட்டின் மூலம் பலன் பெறுவதைப் பொறுக்க முடியா மனநிலையே..இது பெரியார் மண்ணல்ல என நிறுவ விரும்புவதும்..அப்படி நிறுவி இடஒதுக்கீட்டை ஒழித்துவிடவேண்டுமென்பதே அவர்களின் திட்டமும்.

இன்னமும் பல காரணங்களை அடுக்க மனம் எண்ணினாலும் காலம் கருதி இவை மட்டுமே போதுமென்றே நினைக்கிறேன்.

ஆனால் பெரியார் மண் என நாம் முழுமையாகப் பெருமைகொள்ள பெண்ணுரிமை, சாதிஒழிப்பு,மூடநம்பிக்கை ஒழிப்பு இவற்றில் 100 விழுக்காடு வெற்றிபெற வேண்டுமென்பதே என் எண்ணமும் விருப்பமும் .

இங்கே கூறியுள்ள கருத்துக்கள் இது பெரியார் மண் அல்ல என்று நிறுவ முயலுபவர்களுக்கான பதில் மட்டுமே. இவைகள் மாறவில்லையே என்ற மனவருத்தத்தில்தான் அவர்கள் இது பெரியார் மண் அல்ல என்று ஒப்புக்குச் சொல்லி மகிழ்கின்றனர் என்பதும் உண்மை. அவர்கள் அந்த நினைப்பிலேயே கூட வாழட்டும். ஆனால் ஆமாம்ல அவர்கள் சொல்வது உண்மைதான் என்று மற்றவரும் நினைத்திட வேண்டாமென்ற நோக்கத்தில்தான் இப்பதிவு.

Reply · Report Post