idonashok

Ashok R · @idonashok

8th Dec 2015 from TwitLonger

அன்புள்ள தமிழக ஊடகங்களுக்கு,

அதிமுக அரசு பதவியேற்று நான்கரை ஆண்டுகள் ஆகியிருக்கிறது. எனக்குத் தெரிந்து நீங்கள் அதிமுக அரசை விமர்சித்து இலேசாக சிணுங்க ஆரம்பித்ததே இந்த வெள்ளம் வந்த பின்புதான். அதுவும் இப்போதும் சிணுங்கவில்லை என்றால் மக்களின் கடுங்கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்ற பயத்திலும், நடுநிலை வேடம் அப்பட்டமாக கலைந்துவிடும் என்ற பயத்திலும் சிணுங்கியிருக்கிறீர்கள். முதன்முறையாக சென்னைக்கு அரசு பிரஸ்மீட்டில் பங்கேற்க வந்த இந்திய ஊடகவியளார்களுக்கு சென்னையை ஆட்டுவித்த வெள்ளத்தை விட அமைச்சர்களும், ஐஏஎஸ் அதிகாரிகளும் எழுதிக் கொண்டுவந்ததை, "அம்மா, அம்மா," என ஒப்புவிக்கும் பாங்கு மிகப்பெரிய அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது என்பதை ஆங்கில ஊடகங்கள் எதைப் படித்தாலும் அறிந்துகொள்ளலாம்.

எந்த ஒரு ஜனநாயகத்திலுமே அதிகார அடுக்கு என்பது அவசியம். நாம் ஓட்டுப் போட்டு மன்னர்களைத் தேர்ந்தெடுக்கவில்லை, மக்கள் பிரதிநிதிகளைத் தான் தேர்ந்தெடுக்கிறோம். முதலமைச்சர், அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரின் அதிகாரமும் இணைந்து இயங்குவதுதான் அரசு. அந்த அதிகார அடுக்கு சரியாக இருந்தால்தான் அரசு இயந்திரம் என்பது சரியாக வேலை செய்யும். இதெல்லாம் ஜனநாயகத்தின் அடிப்படை மாண்புகள். ஆனால் கடந்த நான்கரை ஆண்டுகளாக தமிழகத்தில் அப்படியா நடக்கிறது?

அமைச்சர்களுக்கு எதுவுமே தெரியவில்லை என்றால் அது அவர்களது தவறு இல்லை. புதிதாக ஒரு அலுவலகத்தில் சேரும் ஒரு பியூன் கூட அந்த அலுவலகத்தின் பழக்கவழக்கங்களை அறிந்துகொள்ள சில வாரங்கள் ஆகும். அப்படியிருக்க, மாநில அமைச்சர்கள் தங்கள் துறையைச் சேர்ந்த செயல்பாடுகளை அறிந்துகொள்ள எத்தனை நாட்கள் ஆகும்? அந்த அவகாசம் அவர்களுக்கு கொடுக்கப்பட்டதா? அல்லது அமாவசைக்கு ஒருமுறை சுழற்றியடிக்கப்படும் அமைச்சரவையில் இது சாத்தியம் தானா? ஒருமுறை, ஒரே ஒருமுறையாவது பொறுப்புள்ள ஊடகமாக, "ஏன் இந்த அமைச்சரை மாற்றினீர்கள்? காரணத்தைச் சொல்லுங்கள்" என உங்களில் ஒரு பத்திரிக்கையாவது முதல்வரைப் பார்த்து கேள்வி கேட்டிருக்கிறீர்களா? மாறாக அதை எதோ ஹீரோயிசம் போல அல்லவா சித்தரித்தீர்கள்!

அமைச்சர்கள் படித்தவர்களாக இருக்கவேண்டிய அவசியம் எல்லாம் இல்லை. அதை ஈடுசெய்யத்தான் அதிகாரிகள் இருக்கிறார்கள். சரியான ஆலோசனைகளைக் கேட்டு முடிவெடுக்கும் அதிகாரம் மட்டும் தான் அவர்களுக்குத் தேவை. அந்த அதிகாரம் தான் தமிழக அமைச்சர்களிடம் முற்றிலும் கிடையாதே! திமுக ஆட்சியில் அந்தந்த துறையின் ஆணை அந்தந்த அமைச்சரின் பெயரில் வெளிவரும். திமுக மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே அதுதான் மரபு. ஆனால் தமிழகத்தில் மட்டும்தான் கொட்டாம்பட்டியில் ஒரு பொதுக்கழிப்பிடம் கட்ட நிதி ஒதுக்கினால் கூட அதுவும் முதல்வர் பேரில் தான் வெளிவரும். பிறகு எதற்கு அமைச்சரவை, அமைச்சர்கள்? ஒரு கல்லூரியின் ப்ரின்சிபலே எல்லா வகுப்புகளையும் நடத்தும் அளவுக்கு மகா-வல்லமை பொருந்தியவராக இருந்தால் எதற்கு மற்ற ஆசிரியர்கள்? எதற்கு அவர்களுக்கு சம்பளம்? இந்தக் கேள்விகளை எல்லாம் நான்கரை ஆண்டுகளாக நீங்கள் கேட்டிருந்தால் ஒருவேளை நமக்கு முடிவெடுக்கும் அதிகாரமுள்ள அமைச்சர்கள் கிடைத்திருப்பார்கள். அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பார்கள். சென்னையில் அரசு சார்பிலும் வெள்ள நிவாரணப் பணிகள் நடந்திருக்கும்!

தமிழ்நாட்டில் எதில் எப்போது அம்மா படம் ஒட்டப்படவில்லை? வாட்டர் பாட்டிலில் இருந்து, மிக்ஸி, ஃபேன், என எல்லாவற்றிலும் அம்மா படமும், இரட்டை இலை சின்னமும் தானே! என்ன ஆச்சரியம் என்றால் இவ்வளவு கலவரத்திலும் இவ்வளவு மோசமான சூழலிலும் இத்தனை லட்சம் ஸ்டிக்கர்களை இந்த அரசு எப்படி இவ்வளவு துரிதமாக அச்சடித்தது என்பதுதான்.

கடைசியாக வீட்டில் இருக்கும் 'தமிழக அரசு வண்ணத் தொலைக்காட்சியில்' தமிழக அரசின் லட்சிணையைப் பார்த்தேன். அதன்பிறகு எங்கு பார்த்தேன் என முற்றிலும் மறந்துவிட்டது."ஏன் எல்லா திட்டங்களிலும் உங்கள் படத்தையும், இரட்டை இலையையும் பதிப்பிக்கிறீர்கள்? தமிழக அரசு லட்சிணை என்று ஒன்று இருந்ததே அது என்ன ஆனது?" என உங்களில் யாராவது கேள்வி கேட்டிருந்தால் மக்கள் செத்துக்கொண்டிருக்கும் போது ஆறஅமர ஸ்டிக்கர் ஒட்டும் பணி நடந்திருக்காது! தவறு அவர்கள்மீது அல்ல. முழுக்க முழுக்க உங்கள் மீது!

நான்கரை ஆண்டுகளாக இந்த அரசின் அத்தனை செயல்பாடுகளையும் கேள்விக்கு உள்ளாகாதபடி, மக்களுக்கு தெரியாதபடி மறைத்து, மறைத்து காப்பாற்றியது நீங்கள். மன்னராட்சியில் ஒரு குறை என்றால் முழுப்பழியையும் மன்னன் மீது போட்டுவிடலாம். ஆனால் மக்களாட்சியில் மக்களுக்கு உண்மையைத் தெரிவிக்க வேண்டிய ஊடகங்களுக்கு சரிநிகர்பங்கு இருக்கிறது. தமிழக ஊடகங்களான நீங்கள் நான்கரை ஆண்டுகளாக கேள்வியே கேட்காமல் ஒத்து ஊதும் பணியை மட்டுமே செய்து முற்றிலும் செயலிழந்ததன் விளைவைதான் இன்று மக்கள் அனுபவிக்கிறார்கள். அரசின் மீதான விமர்சனங்களை அரசு பதவியேற்ற அடுத்த நாளில் இருந்தே நீங்கள் ஆரம்பித்திருக்க வேண்டாமா?

அட மற்ற எல்லாவற்றையும் விடுங்கள். உங்களையெல்லாம் வாரம் ஒருமுறை சந்திக்கப்போவதாக பதவியேற்ற நாளில் ஜெயலலிதா அறிவித்தாரே. உடனே, "அட ஜெயலலிதா திருந்திவிட்டார்," என எழுதி மகிழ்ந்து குதித்தீர்களே, அந்த வாக்குறுதி என்ன ஆனது என கேட்கவாவது உங்களில் ஒருவருக்கேணும் துப்பிருந்ததா?

இந்த நான்கரை ஆண்டுகளையும் நீங்கள் எப்படி ஒப்பேத்தினீர்கள்? திமுக விமர்சனம், விஜயகாந்த்தை கிண்டல், வைகோவை கேலி, ராமதாசை நக்கல்! கடந்த நான்கரை ஆண்டுகளாக தமிழக அச்சு ஊடகங்களில் வெளியான அட்டைப்படங்களையும், தமிழக காட்சி ஊடகங்களின் விவாதத் தலைப்புகளையும் பார்த்தாலே இந்த அவலத்தை தெரிந்து கொள்ளலாம். மற்றவர்கள் மீதான விமர்சனங்களை வைக்கக் கூடாது என இங்கே யாரும் சொல்லவில்லை, ஆனால் அதில் காட்டிய அக்கறையில் ஒரு சதவிகிதத்தையாவது அரசின் மீது வைத்திருக்கலாமே!

சரி. இப்போதாவது திருந்தினீர்களா என்றால் அதுவும் இல்லை. ஒரு அதிமுக அரசியல்வாதி, தன்னார்வலர் ஒருவரிடம் நிவாரணப் பொருட்களைக் கேட்டு சண்டை போடுகிறார். அதை வீடியோவுடன் வெளியிடுகிறது பாலிமர் டிவி. ஆனால் அந்த நபரைக் குறிப்பிடும் போது, 'ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்த நபர்' எனச் சொல்கிறது!! அதிமுகவைச் சேர்ந்தவர் எனச் சொன்னால் குடிமூழ்கிவிடுமா? இதுதான் ஊடக அறமா? இந்தப் பக்கம் தந்திடிவியில் பாண்டே, "வெள்ளத்துக்கு விதிதான் காரணமா?" என விவாதித்துக் கொண்டிருக்கிறார். விதிதான் காரணம் என்றால் எதுக்கு தந்திடிவி? எதற்கு ஊடகம்? எல்லாமே விதிதான் எனப் போக வேண்டியதுதானே! தினமலரோ, "ஹெலிகாப்டரில் போனால் எங்கள் பாடு தெரியுமா?" என ஒரு பதிப்பிலும், "ராணுவத்தளபதி ஜெயலிதா," என இன்னொரு பதிப்பிலும் வெளியிடுகிறது. அதன் குடும்பத்திற்குள்ளேயே ஆயிரம் குழப்பம்! எந்தப் பதிப்பு சொல்வதை நம்புவது? ஏதோ ஒன்றுதான் உண்மையாக இருக்க முடியும். அப்படியென்றால் பொய் சொல்லும் மற்றவருக்கு என்ன தண்டனை? இதைவைத்து ஒரு விவாதம் நடத்த வேண்டியதுதானே?

சென்னையின் பல பகுதிகளில் ஏரிகள் திறந்துவிடப்படுவதைப் பற்றி அறிவிப்பே இல்லை. தன் சிறுவயது மகள்களுடன் ஒவ்வொரு படியாக வெள்ள நீர் மூழ்கடித்துக்கொண்டே தங்களை நோக்கி முன்னேறியதை பீதியுடன் பார்த்ததாக நண்பர் ஒருவர் பயத்துடன் விவரித்தார். மழையே பெய்யாத ஐந்து நாட்களும் கொஞ்சம் கொஞ்சமாக ஏரிகளை திறந்துவிட்டிருந்தால் இப்படி ஊருக்குள் சுனாமி போல வெள்ள நீர் புகுந்திருக்காது. இவ்வளவு சேதமும் ஏற்பட்டிருக்கிறாது.
"கனமழை பெய்யும் என 15நாளுக்கு முன்பே அரசிடம் தெரிவித்தோம் ஆனால் அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதையும் செய்யவில்லை," என இஸ்ரோ இயக்குனர் சிவன் கூறியுள்ளாரே இதைப் பற்றி விவாதம் நடத்தினீர்களா? உங்களுக்கு எப்படி இதற்கெல்லாம் நேரமிருக்கும். ஐகோர்ட் ஆலோசனையின்படி பேருந்துகளை இலவசமாக்கி இருக்கிறது தமிழக அரசு. ஆனால் அதை ஜெயலலிதாவின் தாயுள்ளம் போல சித்தரிக்கவே உங்களுக்கு நேரம் போதவில்லையே! இந்த நியாயத்தை எல்லாம் உங்களிடம் எதிர்பார்க்க முடியுமா!

அரசியல்வாதிகளை விட மோசமானவர்களாக அல்லவா நீங்கள் இருக்கிறீர்கள்! அரசியல்வாதிகளையாவது மக்கள் ஐந்தாண்டுக்கு ஒருமுறை மாற்றி பழிதீர்த்துக் கொள்கிறார்கள். மக்களை பச்சையாக ஏமாற்றி பிழைப்பு நடத்தும் உங்களுக்கெல்லாம் என்ன தண்டனை?

ஊடகங்களான நீங்கள் ஆளுங்கட்சியின் ப்ரோக்கர்களாக செயல்படும்வரை எந்த பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தவே முடியாது. ஆளுங்கட்சியை உங்களின் எஜமானர்களாக நினைக்காமல், மக்களை உங்கள் நண்பர்களாக நினைத்து அவர்களிடம் உண்மையாக இருந்தால் மட்டுமே மாற்றம் என்பது சாத்தியம். அதுவரை தயவுசெய்து டிவிக்களில் கோட்சூட் போட்டுக்கொண்டு உலக நியாயம் பேசாதீர்கள். கசாப்புக்கடைக்காரன் ஜீவகாருண்யம் பேசுவதைப் போல அருவெறுப்பாக இருக்கிறது.

-டான் அசோக்

Reply · Report Post