பெரும்பாலும் , அந்த பங்களாவா?? அங்க அடிக்கடி ஒரு பெண் உருவம் ஜன்னலருகே தெரியும்!! பேய் நடமாட்டம் இருக்குன்னு சொல்லி கேள்விப்பட்டு இருக்கிறோம் தானே?!

நானும் கேள்வி பட்டதுண்டு ! பயத்தில் நடுங்கியதும்கூட உண்டு.
சரி! நமக்கேன் வம்பு என வாழ்க்கையை கவனிக்கலாகினேன். வருடங்கள் உருண்டோடின, மணப்பெண்ணானேன். நளினமும்,பவ்யமும், கூடவே உள்ளூற சிறிய படபடப்பும் கூட ஒட்டிக்கொண்டது... முதல் முறை நெல் தட்டி,வலது கால் எடுத்து வைத்து மாட விளக்கேற்றிட!!

பட்டாம்பூச்சி வாழ்வென அயல்நாட்டு வாழ்க்கை
இருவருக்கும் கைநிறைய சம்பளம் , ஆஹா! எண்ணிலடங்கா சந்தோஷம்.

அடுத்தக்கட்டமாய் பிள்ளையும் பெற்றாயிற்று !! அதுவும் வெளிநாட்டில் வளர்ப்பதென்பது அரும்பாடு. தனி ஒருத்தியாய் அவனை பார்த்துக்கொள்வது அத்தனை சிரமம்தான்,எனினும் தாய்மை உணர்ந்த தருணங்கள் அவை!

அவன் பள்ளி சேரும் நாளும் வந்தது ... தயக்கம் சிறிதுமின்றி பள்ளிக்குள் சென்ற காட்சி .. ஏதோ இப்பொழுது நடந்தது போலிருக்கிறது!!

பின் எனக்கான பிடிப்பாய் சமையலறை அமைந்தது . என் சந்தோஷம்,துக்கம்,அழுகை,கோபம் என பெரும்பாலும் என்னை நன்கறிந்தவை சமையற்கட்டின் சுவர்களே! 5 மணி தொடங்கி இரவு 1 மணி வரை ஏதாகிலும் ஓர் வேலை இருந்துகொண்டே தான் இருக்கும்!! அப்படியாகத் தான் அது நடந்தது! எப்பொழுதும் , எழுந்தவுடன் ஜன்னல் திரைகளை நீக்கும் கணவர் அன்று மறந்திருந்தார்! தூசி தட்டியவாரே ஜன்னல் திரையை விலக்க... மெல்லிய வெயில் என் மேல்பட... இதமாய் இருந்தது அத்தருணம். அப்படியே ஜன்னலோடு சாய்ந்து கொல்லைப்புற மரங்களை பார்த்து நின்றேன்! நேரம் போனதே தெரியவில்லை! எப்படியோ சுதாரித்துக்கொண்டதில் அந்த நாள் இனிதே முடிந்தது!!

தினமும் ஜன்னல் நேரங்கள் வாடிக்கையானது எனக்கு. அன்பான கணவர், அறிவான பிள்ளை , குறையில்லா வாழ்வு "அப்புறம் ?? ஒன்றுமில்லை " என நினைத்தபடியே ஒரு நிம்மதிப் பெருமூச்சு!!

ஜன்னல்களின் மகத்துவம் நாம் அறிந்ததே!! நாம் ஒரு புறமிருக்க, நாம் காணும் காட்சிகளின் ஊடே நம் எண்ணமும் பயணப்படும்!! அப்படி ஒரு ஜென்நிலை!

அது போலவே தான் நானும் கண்ணாடி ஜன்னலில் என் பிம்பமும் நின்றிருந்தோம்!! நல்ல மகள் , செல்ல அக்கா, பொறுப்பான மனைவி,சிறந்த தாய் ..ஹ்ம்ம் இந்த உலகத்தின் அத்துனை கதாபாத்திரமும் சிறப்பாய் செயலாற்றிக் கொண்டிருந்தேன் எதிரே நிற்பவளுக்கு மட்டும் நான் யார் என்று புலப்படவில்லை போலும் எள்ளி நகைத்து கொண்டிருந்தாள்!

சரியே!! நான் அவளில்லே! ஏன் நான் நானேயில்லை! பெண்ணெனும் பிறப்பு தியாகத்தில் தான் முழுமை பெறுகிறது. அதை உணர்ந்ததாலோ என்னவோ என் அம்மாவிற்கோ ஏன் அம்மாயிக்கோ கூட விருப்பம் என தனியே இருந்ததில்லை! இப்பொழுது எனக்கும் அப்படித்தான்! எனது சந்தோஷம் என்பது முகம்வாடா கணவரிடத்தும் முயற்சிகளில் துவண்டு விடா என் மகனிடத்துமே உள்ளது என்றே உணர்ந்திருக்கிறேன்! எனினும் கண்ணாடி ஜன்னலின் பிம்பத்தில் என்னையே காண அவ்வளவு ஆனந்தம்!

எத்தனை பிழைகள் கடந்து வந்திருப்பேன் , எத்தனை பிடிவாதங்கள், கணக்கில்லா கோவம்! சாப்பிட்ட தட்டை கூட எடுத்துவைக்காத நான்!! அடடே நானே தான் ... ஏளனச் சிரிப்புடன் நகர்ந்து சென்றேன்!


இன்று மிக முக்கியமான நாள்! என் மகனின் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்! கடவுளே நல்லா மார்க் கிடைக்கணும் என் வேண்டிய படியே ஜன்னல் ஓரமாய் இருந்த இலைகளையும் தூசியையும் அகற்றினேன்!

வந்தது! அந்த நாளும் வந்தது!! "ஏம்ப்பா இப்படி பண்ணுற" கேட்டவுடன் "உனக்கு என்னம்மா தெரியும்.. நீ பேசாம போ" என்றே சொல்லிவிட்டான்!! இத்துனை இத்துனை தியாகமும் அவன் ஒருவனுக்காகவே செய்தேன்!! எனக்கென்ன தெரியும்! ஆமாம்!! பெரிய சயிண்டிஸ்டாக வேண்டும் என்ற கனவை வயதை காரணம் காட்டி கல்யாணம் பறித்தது! அருமையான ஐடி வேலை , எனினும் தாய்மை பறித்து கொண்டது ! உங்களுக்காக என்னை ... என் கனவுகளை இழந்த எனக்கு உங்களை பற்றி எப்படி தெரியும் ? கடவுளே என்ன எடுத்துக்க மாட்டியா?? அழுதபடியே திறந்த ஜன்னல்களை முதன் முறை மூடினேன்!! தனிமையும், அமைதியும்,இருளும் நிறையவே தேவைப்பட்டது!! ப்ப்ப்ச்ச்ச்ச்ச்!! :(((

வெகு நாள் ஆயிற்று!! மீண்டும் ஜன்னலோரமாய் நான்!! சந்தோஷமாய் ஒரு பெண் குழந்தை பள்ளிப்பேருந்திற்காக காத்திருந்தாள்!! வந்தவுடன் குழந்தையின் அம்மா "ஜன்னலோரமா உக்காராதம்மா" என்ற அக்கறையுடன் சொல்லுவும் விருக்கென சிரித்துவிட்டேன் !

அட அசடே! ஜன்னல் நல்லது என நினைத்துக்கொண்டே காஃபி குடிக்க சமையலறை செல்ல வெளியே வந்த எனக்கு திடுக்கிட்டது! ஒருவரையும் காணவில்லை ! ஒரே இருள்! கடவுளே பயந்து வருதே அந்த LIGHTஐ போடுவோம் என நினைக்கையில் தான் ஹாலில் இருந்த என் புகைப்படம் காட்டிக் கொடுத்தது பிறப்பு -இறப்பு வாசகத்துடன்!!

ம்ம்ம்ம்ஹ்ஹ்ம்ம்!! என்ன செய்வது மீண்டும் ஜன்னலோரமே அமர்ந்தேன் இம்முறை எனக்காக! நானாக!! ரசித்தபடி ! வாழ்ந்தபடி!! புன்முறுவல்களுடன்... இதோ அன்று சொன்ன பங்களா பெண் ஜன்னலோர அமானுஷ்யங்கள் புலப்பட !!

Reply · Report Post