என்னைப் பொறுத்த வரையில் இந்த நிகழ்வை மிகுந்த பதட்டத்துடனும், வேதனையுடனும் உணர்கிறேன்.
இன்று மகனுக்குப் பள்ளியில் ஒரு செயல்முறைக்காக சில பொருட்கள் எடுத்துச்செல்ல வேண்டி இருந்தது.
பள்ளிப்பையுடன் சேர்த்து இன்னொரு உபரிப்பை கொடுக்க வேண்டியதானது. வீட்டில் ஒரு பை நன்றாக ஜிப் போட்டு மூடுகிற வசதி உடையது. அதைக்கொடுத்தேன். என் பையன் அது வேண்டாம் என்று மறுத்து ஒரு பாடாவதி பிளாஸ்டிக் பையில் பொருட்களை அடைத்துக் கொண்டு இருந்தான். எனக்கு என்ன ஏதென்று புரியாமல் "ஏன் இந்தப் பைக்கு என்ன?" என்று கேட்டேன். அப்போது தான் என்னை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கிய அந்தப் பதிலைச் சொன்னான்.
"அந்தப்பையில் தமிழில் எழுதி இருக்கிறது; வகுப்பில் கிண்டல் செய்வார்கள்"
எனக்குச் சற்று நேரம் பேச்சே வரவில்லை. அப்போது தான் கவனித்தேன்; அந்தப்பையில் சரவணா ஸ்டோர்ஸ் என்று எழுதி இருந்தது. ஏதோ துணி வாங்கிய போது கிடைத்தது போலும்.
சற்று துருவி விசாரித்ததில், வகுப்பில் இருக்கும் சொற்ப தமிழ் மாணவர்களை சக மாணவர்கள் கிண்டல் செய்வதாகப் புரிந்தது.(உண்மை நிலைமை தெரியவில்லை; அவன் சொன்னதில் எனக்குப் புரிந்ததை அப்படியே எழுதி இருக்கிறேன்.) அதனால் தமிழில் எழுத்த்துகள் இருக்கும் ஒரு பையை கையில் எடுத்துப் போக வெட்கப்படுகிறான் பையன் (இந்த வரியை எழுதும் போது கை கூசிப்போகிறேன்)
நாங்கள் பிழைக்க வெளிமாநிலம் (அதுவும் கர்நாடகா :> ) வந்தவர்கள். அடுத்த சில வரிகளை எனது வாக்குமூலமாகப் படித்துகொள்ளுங்கள்.
எங்கள் வீட்டில் தமிழில் தான் பேசிக்கொள்கிறோம். தமிழ் நிகழ்ச்சிகள் தான் பார்க்கிறோம். தமிழ்ப் பத்திரிகைகள் வாங்கி வாசிக்கிறோம்.பிள்ளைகளுடன் தமிழில் தான் உரையாடுகிறோம். பிள்ளைகள் எங்களை அம்மா/அப்பா என்று தான் அழைக்கிறார்கள். மம்மி டாடி என்று எல்லாம் பழக்கவில்லை. அவர்களாகவே மம்மி டாடி என்று ஆரம்பித்தால் கூட அதை ஆதரிப்பதில்லை. என் இரண்டு வயது பெண் பேச ஆரம்பித்த நாளாக அவளுக்கு அம்மா இங்கே வா வா, நிலா நிலா ஓடி வா, அணிலே அணிலே, ஆனை ஆனை என்று தமிழ்ப்பாடல்கள் தான் கற்றுக்கொடுத்து வருகிறோம். பாப்பா பிறந்த பிரசவ விடுப்பில், எனக்கு ஒரு "ப்ராஜக்ட்" ஆகக் கருதி என் பையனுக்கு (அப்போது அவனுக்கு ஐந்தரை வயது), தமிழ் எழுத்துக் கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்து இருக்கிறேன். இப்போதும் ஏதாவது தமிழ் வார்த்தைகளைக் காட்டி வாசிக்க வைத்து, அவனுக்கு மறந்து விடாமல் இருக்க முயல்கிறேன்.என் மாமனார் மிகுந்த தமிழார்வம், தமிழ் நூல்கள் வாசிப்புப் பழக்கம்/ வாசிப்பு அனுபவம் உள்ளவர். மேடைப்பேச்சாளர்களுக்கு எழுதிக் கொடுக்கும் திறன் உள்ளவர். என் பையனின் விடுமுறையில் விளையாட்டாக அவனுக்கு திருக்குறள் மனனம் செய்ய பயிற்சி அளிப்பார்., அவனுக்கு முதல் நான்கு அதிகாரங்கள் மனப்பாடமாகச் சொல்ல முடியும். என் மகளே நான்கு குறட்கள் சொல்கிறாள்.
இதை எல்லாம் ஏன் இங்கே சொல்கிறேன் என்றால், தமிழ்நாட்டைத் தாண்டித் தமிழில்லா சூழலில் வாழ நேரும் போது குழந்தைகளுக்கு ஓரளவுக்குத் தமிழறிமுகம் செய்ய முயலும் எங்களுக்கு மேலே சொன்ன அனுபவம் நிகழும் போது மற்றவர்களின் நிலையை நினைக்கவே முடியலை. சகமாணவர்களின் கிண்டல் என்பதே முதல் அதிர்ச்சி. அந்தக் கிண்டலைச் சமாளிக்கவோ, அலட்சியம் செய்யவோ, பதிலடி கொடுக்கவோ தேவையான "என் மொழி சிறந்தது" என்ற அந்த நம்பிக்கை என் பையனுக்கு ஏன் இல்லை? அதை விடுத்து தமிழ் எழுத்துப் பையை மறைக்க முயல்கிறானே! என்பதே என் பதட்டத்துக்குக் காரணம். இந்த விஷயத்தில் நான் எதைச் சரியாகச் செய்யாமல் விட்டேன்? என்று குழம்பி இருக்கிறேன்.
பதட்டத்தில் என்ன பேசுகிறோம் என்று யோசிக்காமல் "ஒரு வேளை உங்கம்மாவை(அதாவது என்னை) யாரேனும் அசிங்கமாக இருக்கிறார்கள்" என்று கிண்டல் செய்தால் என்னை மறைக்கவா செய்வாய்? எங்கம்மா தான் எனக்கு அழகு என்று சொல்ல மாட்டியா? அதே மாதிரி தான் தாய்மொழியும்" என்று அவனைக் கத்தி விட்டேன். நான் சொன்னது என் பையனுக்குப் புரிந்து இருக்ககூட வாய்ப்பில்லை. அம்மா ஏதோ திட்டுகிறார்கள் என்று தான் நினைத்திருப்பான்.
இந்தப் பிரச்சனைக்காக மூட்டையைக் கட்டிக் கொண்டு தமிழ்நாட்டுக்குத் திரும்புவதென்பது நடைமுறையில் சாத்தியமில்லை.
ஏற்கனவே "டீனேஜ்" வயது வரம்பின் ஆரம்ப வயதை ஏழு ஆக்கி விட்டார்களோ என்று நான் ஐயப்படும் அளவிற்கு பெரும்பாலான விஷயங்களில் நானும் என் பையனும் ஏற்கனவே கருத்து வேறுபடுகிறோம். சண்டை போடுகிறோம்.
இதில் நான் "தமிழ் சிறந்த மொழி", "முன் தோன்றிய மூத்த குடி" "சுந்தரத்தமிழ்" "அணுவைத் துளைத்து...." என்றெல்லாம் விளக்கினால் அவன் நம்பக்கூட மாட்டான். பள்ளிக் கல்வியின் அழுத்தம், தேர்வு நெருக்கடிகளிக்கிடையில் "அவனாகவே தமிழ்ச் சுவை அறிந்து கொள்ளும் அவகாசம்" அவனுக்குக் கிடைக்கப் போவதுமில்லை.
இதன் விளைவு எனக்கு பூதாகரமாகத் தோன்றுகிறது. நமக்குப் பிறகு நமது சந்த்ததியில் தமிழ் இருக்காதோ என்று யோசிக்கக் கூட முடிய வில்லை. இதே போன்ற சவால்களை சமாளித்த/சமாளிக்கும் சக பெற்றோர் அறிவுரை இருந்தால் கூறுங்கள். இல்லையேல் ஆறுதலாவது சொல்லுங்கள்.

Reply · Report Post