பழகிய பாதையெங்கும் முட்கள்
பட்டாம்பூச்சிகளைக் காணவில்லை..
நீயற்ற வெறுமை..கையறு நிலை.
நாட்களில் சொல்லிச்சென்றாய்
நான் நொடிகளில் எண்ணிக்கொண்டு..

ஒருபக்கமாய் உருகும் மெழுகுவர்த்தி
தன்பாதம் தொடுமுன் உறைகின்றது.!
உன் அழைப்பென்றெண்ணி எடுத்த
அலைபேசியில் அழைத்தது
யாரென்றாலும்...யாரோதான்.

இனி பூக்காது என்றானதும்
கனகாம்பரச் செடிகள் பிடுங்கப்பட்டுவிட்டன..பாவம்
"ஏன் ஒருமாதிரியா இருக்க'?என்பவர்களுக்கு
இன்றுமட்டும்தான் சிரித்துவைப்பேன்.
விரோதிகளின் எண்ணிக்கை கூடுகிறது.

இன்று எறும்புகளின் பயணம்
நேர்கோட்டில் இல்லை...என் போல.
சீக்கிரம் வா
உன் விடுமுறையின் ஒருநாள்
என்னைச் சமாதானம் செய்யத்தேவைப்படும்.

Reply · Report Post