தமிழ்நாட்டில் சாதிய எதிர்ப்பு


ஜூன் மாத இறுதியில் தலித்துக்களுக்கு எதிரான சாதிய வெறியின் அடிப்படையில் இரு வன்முறைச் சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடந்தேறின.

இராமநாதபுரத்தில் தலித்தை மணந்த இளம்பெண் கௌரவக் கொலைக்கு உள்ளான சம்பவம்: http://www.thehindu.com/news/cities/Madurai/womans-marriage-with-dalit-leads-to-honour-killing/article6149006.ece

கரூர் அருகில் 17 வயது தலித் பெண் வன்புணர்வுக்கு உள்ளாகி பின்னர் கொலை செய்யப்பட்ட சம்பவம்: http://www.thehindu.com/news/national/tamil-nadu/karur-rape-dalits-demand-arrest-of-culprits/article6145289.ece

ஆனால் இந்த இரண்டு சாதிய வன்முறைச் சம்பவங்களுக்கும் தமிழ்ச் சமூகத்தில் எவ்விதமான எதிர்வினையையும் உண்டாக்கவில்லை. அரசியல் தலைவர்களோ, சமூகப் போராளிகளோ, அறிவுஜீவி/எழுத்தாளப் பெருமக்களோ, நாளும் சமூகநீதி காத்திடும் பெரியாரிஸ்டுகளோ ஊடகங்களோ எவரும் இந்த சாதியத்தை எதிர்த்து குரல் கொடுத்ததாகத் தெரியவில்லை. இவை சாதிய வன்முறை என்ற அளவில் பொதுச்சமூகத்தின் கவனத்துக்கே வரவில்லை அல்லது எடுத்துச்செல்லப்படவில்லை. இணையத்திலும் பலத்த மௌனமே நிலவுகிறது.

சாதியத்தை எதிர்க்கும் தமிழ்நாட்டு குடிமைச் சமூகம் ஏன் இந்த சாதியக் கொலைகளை இவ்வளவு கேஷுவலாக எடுத்துக்கொள்கிறது என்ற கேள்வி எழுகிறது.

அதே சமயம், அண்மைக்காலத்தில் ”சாதியத்துக்கு” எதிராக குரல் எழுந்த சம்பவங்களையும் பார்க்கலாம்.

ஒன்று: இந்து பத்திரிகை சிற்றுண்டி கூடத்தில் புலால் உணவுகள் தடை செய்யப்பட்ட சம்பவம். ஊழியர்களின் உரிமை மறுக்கப்பட்டது என்பது தவிர அந்தப் பிரச்சினையை சாதிய சட்டகத்துக்கு கொண்டுவரத் தேவை ஏதுமில்லை. தடை சாதியத்தின் அடிப்படையிலும் இல்லை. இருந்தாலும் நிறுவன உரிமையாளர்களின் பிறப்படையாளத்தைச் சாக்காகக் கொண்டு ‘இனவெறியாளர்கள், அப்படி, இப்படி’ என்றெல்லாம் பொங்கித் தீர்த்தனர்.

இரண்டு: 81-வயது அசோகமித்திரனின் படைப்புகள் பற்றிய கருத்தரங்கம் அறிவிக்கப்பட்டபோது பன்னிரண்டு ஆண்டுகளுக்குமுன் அவர் சொன்னதாக இரண்டாம் நபர்கள் எழுதியதை - அவரே மறுத்ததை - வைத்துக்கொண்டு, பார்ப்பனீயம் அது, இது என்று சாமியாடினார்கள். அவருடைய படைப்புகளிலிருந்து அவருடைய சாதியப் பார்வையை அவர்களால் நிறுவ முடியவில்லை.

(கருத்தரங்குக்கு தமிழ்ச் சமூகத்தில் சாதி வேறுபாடுகளைக் கடந்த வரவேற்பிருந்தது; அது வெற்றிகரமாகவே நடந்து முடிந்தது என்பது வேறு விஷயம்.)

===

இந்த இருவகைத் தருணங்களையும் முன்வைத்து நான் பதிவு செய்ய விரும்புவது:

‘வரிந்து கட்டிக்கொண்ட சாதிய அடையாளங்கள் எதிர்க்கப்பட்டே தீரும்’ என்று முழங்கியவர்களும் பார்ப்பனீயம் பற்றி விவாதிக்கத் துடித்தவர்களும் தங்களுடைய சாதிய எதிர்ப்பு எந்த ஸ்திதியில் இருக்கிறது என்பதை சிந்தித்து அறிந்துகொள்ள மேற்கூறிய அசலான சாதிய வன்முறைச் சம்பவங்களை ஒரு வாய்ப்பாகக் கொள்ளலாம்.

இன்றைய தமிழ்நாட்டில் திராவிட இயக்கப் பாரம்பரியம் சாதியத்தைத்தான் தூக்கி நிறுத்துகிறது; சாதிய எதிர்ப்பையல்ல. இதற்கு இவர்களே ஒரு சான்றாக செயல்பட்டு வருகிறார்கள்.

எனினும், அவர்களுக்கு தெரியாதது மற்றவர்களுக்கு தெரியாதிருக்கவேண்டும் என்பதில்லை. அதனால்தான் அசோகமித்திரன் கருத்தரங்கு குறித்து எழுந்த குரல்களை அத்தருணத்திலேயே இவை முற்போக்கல்ல, வெறும் புண்ணாக்கு என்று கூற நேர்ந்தது.

நன்றி.


Reply · Report Post