kryes

KRS | கரச · @kryes

26th Aug 2022 from TwitLonger

தாவில் விளக்கம் தரும்!


அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும், தமிழ் திகழ் வணக்கம்!

கடந்த சில நாட்களாக Twitterஇல், இடைவிடாத காவி வெறியாட்டத்தைக் கண்டிருப்பீர்கள்!:)
இஃதொன்றும் எனக்குப் புதிதல்ல ஆயினும், இம்முறை முகமிலிகளின் குரலோடு, பரவலான ஹிந்துத்வ முகங்களும் சேர்ந்து கொண்டு, ஊதிப் பெரிதாக்க முயன்றதையும் அறிவீர்கள்.

இவர்களின் நோக்கம் ’மெய்த்தேடல்’ அல்ல! எப்படியேனும் ’தமிழ்/திராவிடம் சார்ந்த ஆய்வுப் புலங்களையும் அதன் ஆளுமைகளையும் முடக்கி ஒழித்துவிட வேண்டும்’ என்பதே இவர்களின் வேணவா! அதற்கு நானொரு சாக்காகிப் போனேன் இவர்கட்கு!

இவர்களோடு சேர்ந்து கொண்டு, நம்மவர்கள் சிலரும், என் அன்பினிய ஈழத்தவர்கள் சிலரும், தத்தம் கொள்கை முரண்கள் தீர்த்துக் கொள்ள, இதுவே தக்க சமயம் என்று, காவிகளோடு கைக்கோத்துக் கொண்டதையும் கண்டிருப்பீர்கள். இது தான் நெடுநாள் தமிழினத்தின் ஒற்றுமைச் சாபம்.

”பொய்யர் தம் மெய்யும் அஞ்சேன்” என்பது மாணிக்கவாசகப் பெருமானின் திருவாசகம். மெய் போல் தோற்றமளிக்கும் பொய்யர்களின் பூசுவேலைகள், மெய்ம்மயக்கம் தரவல்லன!
பொருந்தாத இடத்திற் தேடி, வலியத் தரப்படும் இணையச் சுட்டிகளைத் ’தரவுகள்’ என்ற பேரில் மயங்கி, நம்மவர்களே குழம்பிக் குமுறும் நிலை வாராதிருக்க, இந்த விளக்கத்தை எழுதுகிறேன்;

எதிரிகட்காக அல்ல, அன்பர்கட்காக!

”எதையும் விளக்க வேண்டாம்; அவர்கள் கேட்டு, நாம் என்ன விளக்குவது? கேட்கும் அதிகாரி அவர்களா? பணியும் அலுவலன் நாமா? கண்டுகொள்ளாது கடந்து செல்லுங்கள்!” என்று சில கெழுதகை நண்பர்கள் அறிவுறுத்தினாலும், அதையும் மீறி இதை எழுதுகிறேன்.
காரணம்: என்னொருவனைக் காரணங்காட்டித் தமிழ்/திராவிட மாண்பு எவ்வகையிலும் குலைக்கப்படாமல் இருக்கவே, இவ்விளக்கம்!

இகல் என்னும் எவ்வநோய் நீக்கின் – தவல் இல்லாத்
தாவில் விளக்கம் தரும் (குறள்)

விளக்கம் என்ற சொல்லே விளக்கில் இருந்து வருவது தான். விளக்கு+அம். எப்படி விளக்கின் ஒளியால், அது கூடுதலோ/குறைச்சலோ, சற்றுத் தெளிவு பெறுகிறோமோ, அது போலவே விளக்கம்!

ஐயன் குறள்படியே தாவில் விளக்கம் தரும்!
--------------------------------------------------------------------------------

நேரடியாகப் பேசுபொருளுக்கு வருகிறேன்; என் ஆய்வுப் புலத்தின் மீது தானே புழுதி கிளப்பல்?

என் முனைவர் பட்ட ஆய்வேட்டின் முழுமையான தலைப்பு: The Comparative Nuances of Drama and Social Justice between the Master Poets – Shakespeare, Shelley, Ilango & Kamban.
தலைப்பின் ஊடு கருப்பொருள்: Comparative Studies of Master Poets: Ilango and Kamban from a Literary and Social Justice standpoint. (இளங்கோ வென்ற தமிழ்; கம்பன் கொன்ற தமிழ்).
ஆண்டு: 2015, பல்கலைக்கழகம்: கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி)

இது தமிழ்த் துறையைச் சார்ந்தது அல்ல! இது ஒப்பியல்! SSEAS (South & South East Asian Studies) தமிழ்த் துறையில் சென்று துழாவித் தேடியுள்ளார்கள் போல? என்ன துழாவினாலும் அங்கே கிட்டாது! துறையே வேறு!

மேலும், என் பல ஆய்வுத் தாள்களை, இணையத்தில் வைக்காமல் (Public Domain), தனியே ஆய்வுத் புலத்தில் (Print) மட்டுமே வைத்துள்ளேன்.
காரணம்: ஒப்பியல் ஆய்வுகளின் நோக்கத்தையும் சீர்மையையும் ஆய்வறிஞர்கள் போல் புரிந்து கொள்ளாது, உணர்ச்சி வயப்படும் மக்களாகவே புரிந்து கொண்டு ஆய்வைச் சிறுமைப்படுத்தாது இருக்கவே இப்பாதுகாப்பு.

’இளங்கோ வென்ற தமிழ்; கம்பன் கொன்ற தமிழ்’ என்பது சும்மா ஒரு உணர்ச்சித் தொடரே (Punch Dialogue போல்). அன்றி, அதுவே ஆய்வுத் தலைப்பாகி விடாது! இந்த ஒரு சொற்றொடருக்காகவே நான் பட்ட பாடுகள் பலப்பல. சொல்லைக் கடந்து வரத் தெரியாது, ஆய்வுப்புல ஒப்பியலைக் கிஞ்சித்தும் நோக்கவே நோக்காது, ஏதோ நம் கவிப்பெருமகன் கம்பனைப் பழித்து விட்டது போல், காலில் சுடுதண்ணீர் ஊற்றிக் கொண்டு எதிர்வினை ஆற்றிய அன்றைய ’பெரு’மகன்களை அறிவேன்!
--------------------------------------------------------------------------------

இது போல் காரணங்களால் தான், பல ஒப்பியல் ஆய்வுகள் பொதுத் தளத்தில் வைக்கப்படுவதில்லை; ஆய்வுப் புலத்தில் மட்டுமே புழங்கும். என்னை விடச் சான்றோர்களான பலப்பல பேராசிரியர்கள் நா.வானமாமலை, தொ.பரமசிவன், வீ. அரசு, ஈழத்துப் பேரா. சிவசேகரம் அய்யா, Richard Beck, Robert Elliot போன்றோரின் பல சீரிய ஆய்வுகளை, இணையத்தில் மட்டுமே தேடிப் பிடித்து விட முடியாது. அவை ஆய்வுப் புலத்தில் மட்டுமே இருப்பவை.

”கூகுளில் இருந்தால் மட்டுமே நம்புவேன், இணையத்தில் இருந்தால் மட்டுமே நம்புவேன்” என்று அவசர கதி காட்டினால், பல மொழியியல் ஒப்பியல் ஆய்வுகள் இல்லாமலேயே போகும். அவ்வளவு ஏன், தமிழின் பல சொற்களே இன்னும் இணையம் ஏறவில்லை என்றும் நீவிர் அறிக.
செறிதேக்கம் (Complexity) என்ற சொல்லைத் தேடிப் பாருங்கள். இணைய அகராதிகள் பல காட்டாது. அதற்காக, அச்சொல்லே தமிழில் இல்லை என்று பொருளாகி விடாது.

பல பெரும் பேராசிரியர்களுக்கு, Google Scholar Profile கூட இருக்காது. காரணம்: Academic Conflict of Interest பொருட்டுத் தங்கள் Research Profile-களை, Private-ஆகவே வைத்திருப்பர். அவர்களின் ஆய்வுத் தாள்களை, மாநாடுகளின் குறிப்புகளில் காணலாம், ஆய்வுப் புலங்களில் காணலாமே அன்றி, பொதுத் தள இணையத்தில் தேடினால் ஒன்றுமே கிட்டாது. அதற்காக, அவர்கள் எல்லோருமே ஏதும் எழுதாதவர்கள் அல்லர்! இவ்வழமை அறிவியல் துறையில் பொருந்தாது. ஆனால் கலையியல் துறைகளில் பெரிதும் பொருந்தும்.

இந்தப் பொருண்மை தான், நானும் Journal சாராத பிற தாள்களைப் பொதுவெளியில் வைக்காததன் காரணம். அயலகப் பல்கலைக்கழகங்கள் பலவற்றில், நம் விருப்பத் தெரிவினைப் பெற்றே, பிறகு இணையத்திலும் வைக்கலாமா? வேண்டாமா? என்று முடிவெடுக்கப்படும்.

இவை எதுவுமே தெரியாது,”இணையத்தில் குறிப்பே இல்லையே?” என்று வீணே புழுதி வாரித் துற்றுவதால் ஒரு பயனுமில்லை; இதை ஆதிக்கம் மிக்க எதிரிகள் செய்யலாம்; சமத்துவம் மிக்க அன்பர்களே செய்தால் எப்படி?

இதனால் தான், இச்சிக்கல் எழுந்த போது, என் முனைவர் பட்டச் சான்றிதழை, இங்குள்ள (தமிழ்நாடு & ஈழம்) சான்றோர்களுக்கு, பார்வைச் சாட்சியாக, ஓர் அறம் சார்ந்த விழுமிய நோக்கில் அனுப்பியும் வைத்தேன்.
பட்டம் பெற்ற போதே, புகைப்படங்களையும், சான்றிதழையும் கூட Twitter-இல் ஒரு மகிழ்ச்சிக்காகப் பகிர்ந்திருந்தேன். பிறகு, நீக்கி விட்டேன்! அதைப் பலரும் அறிவார்கள். பார்த்துள்ளார்கள்.

”உன் பட்டங்களை எல்லாம் பொதுவில் வை” என்று ஆணையிடும் உரிமை பொதுவெளியில் யாருக்கும் உளதா? சொல்லுங்கள்! யாரோ கேட்கிறார்கள் என்று உங்கள் பட்டங்களை நீங்கள் முதலில் வைப்பீர்களா?
பொதுப்பணியில் இருப்போரை வேண்டுமானால் கோரலாம்; தனிப்பட்ட எல்லோரிடமுமே கோர முடியுமா?
கோரும் ”நோக்கம்” தான் என்ன? ஆய்வுப் புலமைக்காகவா? ஆங்கார வெறிக்காகவா?
--------------------------------------------------------------------------------

இதனால் தான், அகவெளி ஆவணங்களைப் பொதுவெளி ஆக்காது, பெருஞ் சான்றோர்கள் என்னை/என் ஆக்கங்கள் குறித்து எழுதியவற்றை மட்டும் பகிர்ந்திருந்தேன்.
உலகப் பெருந்தகைப் பேராசிரியர், என் அன்புக்குரிய அறிஞர் Prof. Dr. George Hart அவர்கள் எனக்களித்த அணிந்துரையையும் இட்டிருந்தேன்.

ஆனால், அவர் துறை (தமிழியல்) வேறு; என் துறை (ஒப்பியல்) வேறு; துறையில்லாத் துறையில் போய்க் கேட்டால், இல்லை என்று தான் சொல்லுவார்கள்; அதற்கெல்லாம் ஒரு கொக்கரிப்பா?

ஒரு கதை உண்டு; கடவுள் உண்டு என்பதை உறுதி செய்ய (நிரூபண பாரம்), ”எல்லாத் தூணிலும் துரும்பிலும் தேடு; அகப்பட்டால், உண்டு எனப் பொருள்” என்று குரு சொன்னமைக்காக,
ஒரு தூணில் தேடி விட்டுக், கிட்டவில்லை என்றவுடனேயே, ”ஆகா, கடவுள் இல்லை” என்று குதித்தானாம்.

உளன்/இலன் என்பதை இப்படியெல்லாமா உறுதி செய்ய முடியும்?
4 பொருந்தாத இடங்களில் தேடி விட்டு, அதனாலேயே இல்லை என்பதும்,
4 பொருந்தாத இடங்களில் தேடி விட்டு, அதனாலேயே உண்டு என்பதுமல்ல!

ஆனால், எதிரிகள் செய்வது இதையே! பொருந்தாத இடங்களில் தேடி விட்டுப்,”பார்த்தீர்களா இங்கில்லை? பார்த்தீர்களா இங்கில்லை?” என்று தங்கள் கொக்கரிப்புக்கு, அதையே ’தரவு’ ஆக்குகிறார்கள்! மாணிக்கவாசகப் பெருமான் குறிப்பிடுவதும் இதையே தான் – பொய்யர் தம் மெய் - என்ற சொல்லாட்சி!
--------------------------------------------------------------------------------

அடுத்ததாக, பாரீசு பல்கலைக்கழகம். Paris 1, Paris 2, .. என்று பல பாரீசு பல்கலைக்கழகங்கள் உள்ளன. Sorbonne பல்கலைகளே மொத்தம் மூன்று உள்ளன.
நான் ஒன்றில் பகுதிநேரம் மட்டுமே (Adjunct). என் முழுநேரப் பணி என்பது வேறு. வருகை தரும் பேராசிரியர்களை எல்லாரையுமே இணையத்தில் குறிப்பதில்லை; அதுவும் ஈற்றுநிலையில் உள்ளவர்களை.

திரு. சுப்ரமண்யன் சுவாமி அவர்கள் வருகை தரும் பேராசிரியராக ஒரு காலத்தில் இருந்தார் Harvard-இல். அவர் பெயரைப் பொறித்திருந்தார்களா என்ன?
தேடத் தெரியாத இடத்தில் தேடிவிட்டு, AUP (American University of Paris), Pantheon-Sorbonne போன்ற தொடர்பே இல்லாத இடங்களில் தேடிவிட்டு, அங்கு இல்லை என்றவுடன், ”பார்த்தீர்களா இல்லை? பார்த்தீர்களா இல்லை?” என்று கொக்கரிக்கப்பது தான் தரவா?

முன்பே சொன்னது போல், இவர்களின் நோக்கம்: மெய்த்தேடல் அல்ல! கொக்கரிப்பே! அதற்காகவே இந்த வெறியாட்டம் ஆடுகிறார்கள்.

இல்லையென்றால், Localization கருதி வெளியிட்ட Center/Centre என்பதெல்லாம் வேண்டுமென்றே உரசிப் பார்த்து,
மாண்பமை உலகத் தமிழறிஞர் Prof. Dr. George Hart, பல பக்கங்கள் கலைஞரின் மேல் எழுதிய அணிந்துரையை, அதற்கு அரசாங்க முத்திரையுடன் கலைஞர் நவின்றுள்ள ஏற்புரையை, கலைஞர் களஞ்சியம் எனும் அரிய அப் புத்தகத்தை அசிங்கப்படுத்தி, ஐய (சந்தேக) விதையெல்லாம் விதைப்பார்களா?
--------------------------------------------------------------------------------

சரி, இவர்களின் கொக்கரிப்பை அடக்க, எல்லாத் தகவல்களையும் பொதுவெளியில் வைத்து விடலாமே?

சில சான்றோர்களுக்கு மட்டும் நான் அனுப்பியிருந்த சான்றிதழை, அப்படியே பொதுவெளியிலும் போட்டு விடலாமே? என் பணி முகவரியை/ மேலாளர் பெயரைக் கூடப் பொதுவில் போட்டு விடலாமே?

போட்டு விடலாம் தான்! ஆனால், இவர்களின் வெறியாட்டம் நிற்குமா?

அடுத்து, என் தகவல்களை வைத்தே, என் துறைக்கு எழுதி, என்னை நீக்கச் சொல்வார்கள். அதற்கு, பிராமண துவேஷி, ஹிந்து மத துவேஷி.. என்றெல்லாம் பொருந்தாத Twitter திரைச்சொட்டு (Screenshot) எடுத்து, இன்னும் வெறியாட்டம் ஆடுவார்கள். இதற்கு முன்பே, பல ’மொட்டைக் கடுதாசி’கள் போட்டவர்கள் தான்!

இச்சூழலில் நான் என்ன செய்யலாம்?
1. போட்டு விட்டுப் பணியை இழக்கலாம்
2. போட்டாலும் போடாவிட்டாலும், அவதூறுகளைத் தொடர்ந்து சுமக்கலாம்
3. என் Twitter-ஐயே அழித்து விடலாம்

நான் என் Twitter-ஐயே Delete செய்தால், தமிழ் சார்ந்த மொழியியல், வரலாறு, பண்பாட்டியல், தொல்லியல், இலக்கியம், இலக்கணம், பன்மொழி ஒப்பீடு என்று பலப் பல சேதிகளும், தரவுகளோடு முன்பே Twitter-இல் சொல்லியுள்ள யாவும் பயனர்கள் இழக்க வேண்டி வரும்.

எத்துணைச் சான்று காட்டினாலும், விளக்கம் அளித்தாலும், இவர்களின் அவதூறுகள் நிற்கப் போவதில்லை. காரணம், இவர்களின் நோக்கம்: மெய்யுணர்வு அல்ல; என்னை ஒழிப்பதன் மூலம், தமிழ்/திராவிடத்தைப் பழிக்குள்ளாக்குவதே!

எனவே.. இம் மூன்றையும் செய்யாது, அப்படியே விட்டது விட்டபடியே, நான் மட்டும் நீங்கிக் கொள்கின்றேன்.
--------------------------------------------------------------------------------

தமிழ்மொழி, மக்களின் சொத்து, பிறகே அறிஞர்களின் சொத்து;

அறிஞ பீடத்திலியே இருந்து விடக் கூடாது என்பதால் தான், என்னால் இயன்ற அளவு உங்களிடமும் மொழியியலைக் (சமூகநீதியோடு) கொண்டு வந்து சேர்த்தேன்.
அது போழ்திலே, சில முரண்களின் பொருட்டு, மொழிமானம் கருதி, உங்களிடம் சினந்திருந்தால், என் தமிழ் சார்ந்த மன்னிப்பைக் கோருகிறேன். உங்கள் அனைவருக்கும் என் கெழுதகை நன்றி!

’சாந்தமு லேகா, செளக்யமு லேது’ என்பது தியாகராஜ கீர்த்தனை. அமைதி இல்லையேல் உடல்நலமே இல்லை என்பது பொருள்; எனவே அமைதியின் பொருட்டு அமைகிறேன்!

சமூகநீதியோடு கூடிய தமிழ் வெல்க! வளர்க! வாழ்க!
--------------------------------------------------------------------------------

தமிழ் மிகு இராமானுசர் எழுதிய சம்ஸ்கிருத ஸ்லோகம் ஒன்றுண்டு!
पूर्वाचार्य सुरक्षिथां, बहुमथि व्याकाथ धूरस्थिथां; பூர்வாசார்ய சுரக்ஷிதாம்; பஹூமதி வியாகாத தூரஸ்திதாம்; (ஸ்ரீ பாஷ்ய மங்கள ஸ்லோகம்).

அது தமிழோ / சம்ஸ்கிருதமோ, முன்னாள் அறிவாசிரியர்கள், நல்ல வண்ணமே சொல்லிப் போனதை மறந்து, நாம் தான் பிழையாக வெறிகள் ஏற்றிக் கொண்டு, அவர்களின் பாதையில் இருந்து வெகுதொலைவு நீங்கிப் பிறழ்ந்து, ’பஹூமதி’களாக நடந்து கொள்கிறோம்;

அப்படிச் சொன்ன காரேய்க் கருணை இராமானுசரையே ’விஷம்’ வைத்துக் கொல்லவும் பார்த்தோம். Defenders becoming the Offenders of their own Faith.

பிராமணனா? திருக்குலத்தாரா? என்றால், திருக்குல அடியார் தொழும்பையே விரும்பிய இராமானுசர். பின் வந்த வள்ளலார், அயோத்திதாசர், அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா.. என்று பல ஆளுமைக் கொள்கைகள் வேறாயினும், ”அடிநாத மானுடம்” இவர்கள் அனைவருக்கும் ஒன்றே!

ஸ்வ-பக்கம், பர-பக்கம் என்று மாற்றார் முரண்களையும் ஒத்திசைவு கொண்டே பயணித்தார்கள், இந்த சமூக அறிவுப் பெரியார்கள்.
கொள்கையின் மாற்றுக்காக, எதிராளியைத் தேடித்தேடி ஒழிப்பது என்பது இராமானுச நெறியும் அல்ல; அறிஞர் அண்ணாவின் நெறியும் அல்ல! எனில்,

அமர ஓர் அங்கம் ஆறும், வேதம் ஓர் நான்கும் ஓதித்
தமர்களில் தலைவராய சாதி அந்தணர்கள் ஏலும்..
நுமர்களைப் பழிப்பர் ஆகில், நொடிப்பது ஓர் அளவில் ஆங்கே
”அவர்கள் தாம் புலையர் போலும்” அரங்க மா நகர் உளானே!

என்று பாடிய புனிதம் மிக்க ஆழ்வாரும் பிராமணத் துவேஷி ஆகி விடுவார். நாலாயிர அருளிச்செயலும் (திவ்ய பிரபந்தம்) துவேஷம் ஆகி விடும்!

If you are accustomed to Privilege, Equality feels like Oppression. வஞ்சம் தீர்க்கும் வன்மத்தை விடுவது, அவரவர் கைகளில் தான் உள்ளது!
--------------------------------------------------------------------------------

நம் மக்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விழைவது ஒன்றே ஒன்று தான்:

எந்நிலை வந்தாலும் உயர் கல்வியைக் கைவிடவே விடாதீர்கள்!
எள்ளல் வரும்; ஏச்சு வரும்;
உங்களைக் கூனிக் குறுக வைத்தாலும், கல்வியை மட்டும் கைவிட்டு விடாதீர்கள்!
என்னைப் பிழையாகச் சோடித்துத், தமிழ்த் திராவிடமே இப்படித் தான்.. என்று எள்ளினாலும், கல்வியை மட்டும் கைவிட்டு விடாதீர்கள்!

Education is the Only Emancipation.
கல்விக் கதவுகளை அனைவருக்கும் திறந்து விட்டது தமிழ் மிகு திராவிடமே! கல்வியே இதன் முதுசொம்; ஆழங்கால் சொத்து!

இந்த விளக்கத்தையே கூட சிலர் எள்ளலாம். மீண்டும் ஏசலாம், பரவாயில்லை.

நம்மவரில் சிலருக்குக் கூட, இவ்விளக்கத்தால் நிறைவடையாது,
இன்னும் கூட ஆதாரம் கொடுக்கலாமே? Link கொடுக்கலாமே? என்றெல்லாம் ஏக்கம் இருக்கலாம்.
ஆனால், ஆதாரமா? பணிப் பாதுகாப்பா? என்றால், நீங்களே எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்?
உங்களுக்கு என் சான்றிதழ் கட்டாயம் தேவையெனில், என்னைத் தொடர்பு கொண்டு பெறும் வழி உங்கட்கே தெரியும்!

பரசுராம சாபம் என்று கர்ணன் கதை ஒன்றுண்டு. அந்தணன் என்று பொய்யுரைத்து, பரசுராமனிடம் அறிவு பெற்ற கர்ணன் கூட, சாபம் பெற்றாலும் இன்றும் கதையாய் நிற்கிறான். அது போலெல்லாம் சோடித்து அறிவு பெறாத என் தமிழும், உங்களுடன் என்றும் நிற்கும்!

தமிழ் ஓதினேன் என்ற ஒரே காரணத்துகாக, நீங்கள் இதுகாறும் என் பால் காட்டிய பண்புக்கு நனி நன்றி.

”நற்றமிழ்ப் பத்தும் வல்லார், நண்ணார் நரகமே”!

Reply · Report Post