**கமுதி, வழிவிட்ட அய்யனார் கோவில்** **ஆசீவகம் Vs சமண மோதல்**



ஐயனார் கோயில்கள் எங்கெங்கு உள்ளதோ அவையெல்லாமே தமிழர் சமயமாம் ஆசீவகத்திற்கு உரியன. சாஸ்தா, சாத்தன், ஐயனார், ஐயப்பன், அரிஹர புத்திரன் என்று பல்வேறு பெயர்களால் இந்த ஐயனார்கள் பல்வேறு அடைமொழிகளோடு அழைக்கப்படுகிறார்கள். இதே நோக்கில்தான் கமுதி வழிவிட்ட ஐயனார் கோயிலையும் அணுகினேன். பூரணை மற்றும் புட்கலை என்ற இரு மனைவியரோடு மேற்கு நோக்கி வீற்றிருக்கிறார். ஏராளமான ஆசீவகத்தின் குறியீடுகள் இக்கோயிலில் நிறைந்துள்ளன. முதலில் ஆசீவகக் கோயில்களை எவ்வாறு அடையாளம் காண்பது என்பதில் ஆரம்பிப்போம். பேரா.க.நெடுஞ்செழியன் அவர்கள் தனது "ஆசீவகமும் ஐயனார் வரலாறும்" என்ற ஆய்வு நூலில் கீழ்க்கண்ட அடையாளங்களை ஆசீவகத்தின் சின்னங்களாகக் குறிப்பிடுகிறார்.

1) திருநிலை: திருநிலைக்கென்று (கஜலட்சுமி) எந்தக் கோயில்களில் எல்லாம் தனிச்சன்னதி உள்ளதோ அந்தக் கோயில்கள் எல்லாம் ஆசீவகர்கட்கு உரியன. திருநிலை என்பது முதல் வாசலில் வைக்கப்படும் தாமரை மலர்மீது அமர்ந்திருக்கும் திருமகளின் மீது இருபுறமும் யானைகள் நீர் சொறியும் காட்சி. இதனை ஆசீவகர்கள் மங்கல நாணிலும் கோர்த்து அணிவார்கள்.

2) யானை, காளை, குதிரை சின்னங்கள். யானை மற்றும் குதிரை ஐயனாருக்கும், காளை பார்சவநாதருக்கும் உரியன. சில இடங்களில் ஐந்தலைப் பாம்பின் சின்னமும் இருக்கலாம். இது பார்சவநாதரின் குறியீடு.

ஆசீவகர்கள் எடுத்த கோயில்களில் ஆதிநாதருக்குரிய காளைச் சின்னமும், அறப்பெயர் சாத்தனுக்குரிய யானைச் சின்னமும் ஒரே கல்லில் உருவமாய்ப் பொறிக்கப்படுவது வழக்கம். இந்த அடையாளம் எந்தக் கோயிலில் இருந்தாலும், அக்கோயில் ஆசீவகர்க்கு உரியதாக இருந்தது என்பது உறுதி.

3) யானையைச் சிங்கம் அல்லது யாளி தாக்கி அழிப்பது போன்ற சிற்பங்கள் காணப்படலாம். அக்கோயில்கள் யானையை அடையாளமாகக் கொண்ட ஆசீவகர்கட்கு உரியதாக இருந்து பின்னர் சிங்கத்தை/யாளியை அடையாளமாகக் கொண்ட சமயத்தவர்களால் கைப்பற்றப்பட்டது என்று பொருள்.

4) முதலையின் பிடியிலுள்ள யானையைக் காக்கப் பருந்தில் விரையும் நரசிம்ம மூர்த்தி சிற்பம்.

5) பதினெட்டுப் படிகள். பதினெட்டுக் குற்றங்களைக் களைந்தவர் என்பது பொருள். பசி, நீர்வேட்டல், பயம், வெகுளி, உவகை, வேண்டல், நினைப்பு, உறக்கம், நரை, திரை, மூப்பு, பிறப்பு, மதம், இன்பம், அதிசயம், வியர்த்தல், கேதம், கையறவு ஆகிய 18 குற்றங்களைக் களைந்தவராக ஆதிநாதர் விளங்குகிறார்.

6) ஸ்வஸ்திக் எனப்படும் முடிவற்ற சுழற்குறி

7)போரில் உயிர் துறந்த வீரர்கள் கருப்புகளாக இடம்பெற்றிருக்கலாம். பல்வேறு கருப்பணசாமி, காத்தவராயன், மதுரைவீரன் உட்பட பல்வேறு சிலைகள். மற்றும் பல...

கமுதி வழிவிட்ட அய்யனார் கோயிலில் கிடைத்த ஆசீவகச் சான்றுகளில் முதன்மையானது கருவறையின் திருநிலை. தாமரையில் திருமகள் அமர்ந்திருக்க இருபுறமும் யானைகள் நீர்சொறிய, தேவமாதர் இருபுறமும் வெண்சாமரம் வீசும் வகையிலான புடைப்புச் சிற்பம். அடுத்ததாக கோயிலுக்கு வெளியே அமைந்துள்ள மூன்று யானைகளின் சிற்பம். இது அய்யனாருக்கு உரியவை. இங்கு வியப்பிற்குரிய மற்றொரு அம்சம் யானைகளின் பின்னே சமணக் கழுவேற்றத் தூண் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

இதன் அருகிலேயே மற்றொரு பீடத்தில் காளைகள் மற்றும் ஐந்தலைப் பாம்பின் சின்னமும் இடம்பெற்றுள்ளது. இந்த காளையின் சிற்பம் ஆதிநாதர் என்ற ரிஷபத்தேவரின் குறியீடு. ஐந்தலைப் பாம்பு பார்சவநாதரின் குறியீடு என்பது குறிப்பிடத்தக்கது.

ஐயனாருக்கு வலதுபுறத்தில் கருப்பணசாமி இருக்கிறார். பல்வேறு காலங்களில் நடைபெற்ற போர்களில் வீரமரணமடைந்த வீரர்களுக்கு எடுக்கப்படும் நடுகல் வழிபாட்டின் மேம்பட்ட நிலைதான் இந்த கருப்பணசாமி, மதுரைவீரன், சந்திவீரன் போன்றோர். இவர்கள் அனைவரும் ஆசீவகத்தின் அங்கத்தினரே.

சமண மரபில் மகாவீரரோடு சேர்த்து 24 தீர்த்தங்கரர்கள் உள்ள நிலையில் ஆசீவகத்தில் ஆதிநாதர் மற்றும் பார்சவநாதருடன் ஐயனார் என்றழைக்கப்படும் மற்கலி கோசாலர் மட்டுமே இடம்பெறுகிறார்கள். ஆகையால் மகாவீரருக்குரிய அடையாளமாகிய சிம்மம் எதுவும் இங்கில்லை.

ஆசீவகம் மற்றும் சமணத்திற்கு இடையே ஏற்பட்ட மோதலில் சமண தீர்த்தங்கரரான மகாவீரரின் சிலைகள் இங்கிருந்து வெளியே தூக்கிப் போடப்பட்டதாகத் தெரிகிறது. இதற்கான சான்றுகளாக கோயிலிலிருந்து சுமார் ஒரு கிமீ தொலைவில் ஒரு மகாவீரர் சிலை முகம் சிதைந்த நிலையிலும் மற்றொரு சிலை கமுதியிலிருந்து சுமார் நான்கு கிமீ தொலைவில் பசும்பொன் எனுமிடத்திலும் காணப்படுகிறது. இந்த இரு சிலைகளும் ஒரே அளவினதாகவும் இரு சிலைகளிலும் இரு புறங்களிலும் பிரம்ம யட்சர்கள் அமையப்பெற்றும் வயல்வெளியில் காணப்படுகின்றன.

சமணத்தில் இணைந்து செயல்பட்ட மகாவீரருக்கும் மற்கலி கோசாலர் என்ற ஐயனாருக்கும் இடையே ஏற்பட்ட பகைமையினால் மற்கலி கோசாலர் தனியே ஆசீவகம் என்ற பிரிவைத் தோற்றுவித்தபோது இந்த சமய மோதல்கள் நிகழ்ந்திருக்கலாம். அந்நாளைய கோசல நாட்டின் தலைநகரமான சாவத்தி நகரில் ஆலகாலா என்ற குயவப் பெண்ணின் வீட்டினைத் தலைமையிடமாகக் கொண்டு ஆசீவகச் சங்கத்தினை மற்கலி துவங்கியுள்ளார்.

கோயிலின் வலதுபுற வாயிலின் மேற்பகுதியில் சுதையால் அமைக்கப்பட்ட அமர்ந்த நிலையிலான ஐயனார் சிலைகள் காணப்படுகின்றன. இவை பழமையானவையாகவும் சில சிதைந்த நிலையிலும் காணப்படுகின்றன.

ஆசீவகத்தின் தோற்றுநர்களாக மாசாத்தனார் (மற்கலி கோசாலர்), பூரணர் மற்றும் கணிநந்தாசிரியன் ஆகிய மூவரைக் குறிப்பிடுகிறார் பேரா.க.நெடுஞ்செழியன். இதை கமுதி வழிவிட்ட ஐயனார் கோயிலுக்கும் பொருத்திப் பார்க்கும் வகையில் இக்கோயிலின் தலவரலாறு ஒரு செய்தியினை வழங்குகிறது. அதாவது இக்கோயிலில் குடிகொண்டுள்ளவர் கழுகுமலையிலிருந்து இடம்பெயர்ந்து வந்தவ அரிக்கேசவ வழிவிட்ட ஐயனார் எனவும் இவரது தம்பிகளாக நிறைகுளத்து அய்யனார் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் கழுகுமலை ஐயனார் ஆகியோரையும் குறிப்பிடுகிறது. மேற்கண்ட மூவருள் இம்மூவர் யார் என்பது கேள்விக்குரியது.

இந்த ஐயனாருக்கு நேரெதிரில் ஒரு நந்தி சிலையும் உள்ளது. பிற்காலத்தில் நந்தியுடைய ஐயனார் கோயில்களையெல்லாம் சிவன் கோயில்களாகவே மாற்றிக் கொண்டனர். இவ்வளவு ஏன் ஐயனாரையே சிவனாகக் கருதும் நிலைதான் இன்றுள்ளது.

நந்தி ஐயனாரின் தத்துவத் தந்தையாகக் கருதப்படும் ஆதிநாதருடையது. இவர் ரிக்வேத காலத்திற்கும் முன்பே வாழ்ந்தவர். அதனால்தான் ரிக்வேதத்தில் ரிஷபத்தேவரைப் போற்றி 12 இடங்களில் சுலோகங்கள் இடம்பெற்றுள்ளன. ஆதிநாதரை சமணமும், ஆசீவகமும் ஹரிஹரன் என்கின்றன. இதன் காரணமாகவே ஐயனாரை அரிகர புத்திரன் என்று போற்றிப் பாடுகின்றன ஆசீவக/சமண இலக்கியங்கள்.

"பிண்டி வாமனினிய தொண்டர் நாயகனெனப்
பீடுய ருமாதி பகவன்"

இப்பாடலில் வரும் ஆதிபகவன் ஐயனாரின் தத்துவத் தந்தையான ஆதிபகவன்தான் திருக்குறளிலும் வரும் ஆதிபகவன் என்பவராக இருக்கலாம்.

ஐயனாரை ஆதிநாதரின் மகன் எனும் பொருளில் குறிப்பிடுகையில் அரிகரன் மகன் என்று இலக்கியங்கள் குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது.

"ஆதிபுரத்துறை அரிகர புத்திரன்"

"சதுமறை அபய அரிகர குமரா"

"புனித னரிகர புத்திரன்"

ஐயன், சாத்தன், சாஸ்தா, ஐயப்பன் என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் ஐயப்பனுக்கு அரிகர புத்திரன் என்று பெயர் வரக் காரணமும் இதுதான். இதுவே பிற்காலத்திய இந்துமத இலக்கியங்கள் வலிந்து சிவனுக்கும் திருமாலுக்கும் பிறந்த ஐயப்பன் என்ற கதை உருவாகக் காரணமாகவும் அமைந்துவிட்டன.

ஆதிநாதரிடமிருந்தே அரியின் வைணவமும் அரனின் சைவமும் தோன்றியிருக்கலாம். அதன் காரணமாகவே வேதகாலத்திற்கு முந்தைய ஆதிநாதரை அரிகரன் என்று சமண, ஆசீவக இலக்கியங்கள் போற்றுகின்றன போலும். இதுகுறித்த ஏராளமான இலக்கிய, தொல்லியல் மற்றும் வழக்காற்றியல் சான்றுகளும் காணக் கிடைக்கின்றன.

சமணத்தின் மகாவீரரை வழிவிட்ட ஐயனார் கோயிலுக்கு வெளியே ஒதுக்கி விட்டாலும். திருவிழாவின்போது மட்டும் சமண மா மகாமுனி என்று அவரை பிற்காலத்தில் வழிபாட்டில் சேர்த்துக் கொண்டார்கள்.

இந்தக் கோயிலின் இன்னுமொரு ஆசீவகக் குறியீடு வேளார்கள் இங்கு பூசாரிகளாக இருப்பதுதான். ஆசீவகத்தின் தலைவரான மற்கலி கோசாலர் தனது சீடர் ஆலாகலா என்ற குயவப் பெண்ணின் வீட்டிலிருந்து தனது புதிய சங்கத்தைத் தொடங்கினார் என்று சொன்னோம் அல்லவா. அதன் தொடர்ச்சியாகக்கூட இது இருக்கலாம். ஐயனாரின் வாகனமான குதிரையைச் செய்பவர்களும் இவர்கள்தான். புரவி எடுத்தல் என்பது ஐயனார் வழிபாடுகளில் குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வின்போது வேளார்களின் பங்களிப்பு கவனத்திற்குரியது.

தமிழரின் அறிவுசார் மதமான ஆசீவகம் ஐயனார் வழிபாட்டின் வடிவில் தொடர்ந்து உயிரோட்டத்துடன் விளங்குவது மகிழ்ச்சிக்குரியது. எத்தனை வரலாறுகள் இன்னும் யாருக்கும் புலப்படாமல் புதைந்து கிடக்கின்றனவோ! தேடல் ஒன்றே இப்புதிர்களை விடுவிக்கும்.!

விக்கிரமாதித்தன்

Reply · Report Post