சாருநிவேதிதா - தியாகராஜர் - இரந்து வாழ்தல்


எழுத்தாளர் இரந்து வாழ்வது அவர் விழைவு. அவர் வாழ ஈந்து இசைபட வாழ்வது கொடுப்பவர் விருப்பம். இவ்விரண்டோடும் எனக்கு மாற்றுக் கருத்தில்லை என்பதை முதலில் சொல்லிவிடுகிறேன்.

சாரு நிவேதிதா சொல்கிறார்,

>>>>>>>சங்கீகத்தின் அவதாரமான தியாகப் பிரம்மமே பிச்சை எடுத்துத்தானே வாழ்ந்தார்? அவர் என்ன ஏதாவது ஆஃபீஸில் குமாஸ்தா வேலை பார்த்தாரா? ராமா ராமா என்று பாடினார். இசையிலேயே வாழ்ந்தார். இசையையே சுவாசித்தார். தேகத்துக்கும் ஏதாவது போட வேண்டுமே? பிச்சை எடுத்தார். பிச்சை எடுப்பது இந்து தர்மம். <<<<<

முதலில் தியாகராஜர் பிச்சை எடுத்தார் என்ற முடிவுக்கு எப்படி வந்தார்? தியாகராஜரைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றை முதலில் எழுதியவர்கள் வாலாஜாபேட்டை வெங்கடரமண பாகவதரும், அவருடைய மகன் கிருஷ்ணஸ்வாமி பாகவதரும் ஆவர்.

பிற்கால ஹரிகதை வித்வான்களின் கற்பனைப் பூச்சில்லாத குறிப்புகள் இவை.

தமிழில் டி.எஸ்.பார்த்தசாரதி கொடுத்துள்ளார்.

தியாகராஜரின் தந்தையார், மன்னர் துளஜாஜியிடம் பல மானியங்கள் பெற்றவர். பெரிய செல்வந்தரல்லரெனினும் கஷ்ட ஜீவனமில்லை.

தியாகராஜர் சங்கீதமே வாழ்க்கை என்று வாழ்ந்தவர்தான். மன்னர் எவ்வளவோ அழைத்தும் அரண்மனைக்குச் சென்று பாடாதவர்தான். அதற்காக தினமும் பிச்சையெடுத்து உண்டார் என்று அர்த்தமில்லை. குடும்ப சொத்தில் தன் பங்கையும் சகோதரருக்கு விட்டுக் கொடுத்தார் என்கிறது கிருஷ்ணஸ்வாமி பாகவதரின் குறிப்பு. கூடவே சரபோஜி மகாராஜாவின் மாப்பிள்ளையும் மற்ற சமஸ்தான மந்திரிகளும் தியாகராஜரின் வீட்டுக்கு வந்து பஜனைகளைக் கேட்டு ஆனந்திப்பர் என்கிறது அவர் குறிப்பு. வந்தவர்கள் கைவீசி வந்தார்கள் என்று குறிப்பில்லை.

இது போன்ற அரசவையினர், அவரிடம் சங்கீதம் பயின்றவர்கள், அவரை அழைத்து மரியாதை செய்த கோவூர் சுந்தரேசர் போன்றவர்கள் அவர் லௌகீகத் தேவைகளைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடும்.

பொருளில் பெரிய நாட்டம் இல்லாதவர் என்கிற போதும், தன் குடும்பத்தை கவனித்தல், பெண்ணிற்கு திருமணம் செய்து வைத்தல் போன்ற கடைமைகளை செவ்வனே தியாகராஜர் செய்தார் என்றுதான் குறிப்புகள் கூறுகின்றன. அவற்றைச் செய்ய பிச்சையெடுத்தார் என்று குறிப்பெதுவும் இல்லை.

இன்னொரு விஷயம்; பஜனை சம்பிரதாயத்தில் உஞ்சவிருத்தி செய்வதென்பது இல்லாத கஷ்டத்திற்காக பிச்சை எடுப்பதன்ரு. இதற்கு மேல் இதை விளக்கவேண்டாம் என்று நினைக்கிறேன்.

தியாகராஜரை ஆதரித்தது போல, என்னையும் (நான் கேட்காமலே !!!) பார்த்துக் கொள்ளுங்கள் என்று சாரு எதிர்பார்த்தால் தவறில்லை

சாருவுக்கு நிறைய பணம் கிடைக்கட்டும். வருடத்துக்கு நான்கு முறை சிலேவுக்குச் செல்லட்டும்.

பாவம் தியாகராஜர். அவரை விட்டுவிடட்டும்.

அப்படிச் செய்தால் ஒருவேளை தியாகராஜர் அருளில் தற்கால கோவூர் சுந்தரேசர் சாருவுக்கு மின்னஞ்சல் அனுப்புக்கூடுமோ என்னமோ!

Reply · Report Post