teakkadai1

டீ · @teakkadai1

17th Jul 2016 from TwitLonger

தளபதி படம் பார்க்கப் போனது பற்றி, அந்தப் படம் அளித்த அனுபவம் பற்றி, அதன் சிறப்புகள் பற்றி கடந்த 20 ஆண்டுகளில் பலரும் எழுதிவிட்டார்கள். அதுவும் இணையத்தில் தமிழ் வந்த பின்னால், கடந்த ஆறேழு ஆண்டுகளில் இந்த மேட்டரை சக்கையாகப் பிழிந்து விட்டார்கள். நானும் சில மாதங்களாகவே தளபதி படத்தைப் பற்றி எழுதலாம் என்று நினைத்தாலே, அப்படத்தைப் பற்றி மலையளவு குவிந்திருக்கும் கட்டுரைகள் அந்த எண்ணத்தை அழித்துவிடும்.


திடீரென்று நேற்று, மேல்நிலை வகுப்பில் படித்த ஆங்கிலப் பாடம் ஞாபகம் வந்தது. தாஜ்மஹாலின் சிறப்புகளைப் பற்றிச் சொல்லும் அந்தப் பாடத்தில், “எத்தனையோ புகைப்படக்காரர்கள் தாஜ்மஹாலைப் படமெடுத்து விட்டார்கள், என்ன என்ன சாத்தியப்பட்ட கோணங்களோ அனைத்திலும் எடுத்துவிட்டார்கள், எத்தனையோ கவிஞர்கள் தாஜ்மஹாலைக் கருப்பொருளாகக் கொண்டு கவிதைகள் பாடிவிட்டார்கள். ஆனாலும் இன்னும் யாரேனும் அதைப் படமெடுத்துக் கொண்டோ, பாடிக் கொண்டோ தான் இருக்கிறார்கள்” என்று ஒரு வரி வரும்.

அடடா, அப்போ நாமும் தளபதி பற்றி எழுதினால் தப்பில்லை என்று தோன்றியது. வாழ்க்கையில் ஒரு வாய்ப்பு கிடைத்து, டெல்லிக்கு நான் சுற்றுலா போனால், தாஜ்மஹால் முன் நின்று போட்டோ எடுக்காமல் திரும்பி வருவேனா? என்ன?


முதன் முதலில், தளபதியின் பாடல்கள் வெளியாகும் போதே எங்கள் ஊரான வத்தலக்குண்டில் கொண்டாட்டங்கள் தொடங்கி விட்டது. ”ராஜ பந்தா ரஜினிகாந்த்” மன்றத்தைச் சேர்ந்தவர்கள், எங்கள் ஊருக்கு மாலைதான் கேசட் வந்து சேரும் என்பதால், மதுரைக்கு கிளம்பினார்கள். காலை 11 மணிக்கு மதுரையில் இருந்து கிளம்பும் “பார்வதி ட்ரான்ஸ்போர்ட்” வண்டியில் முதல் நாளே சொல்லி வைத்து விட்டார்கள். “கேசட் வாங்கிட்டு நம்ம வண்டியில நாங்க 20 பேர் வருவோம். எங்க கேசட் மட்டும் தான் வண்டியில பாடணும்” என்று. 10.30க்கு ஏராளமான கேசட்டுகளையும், சாக்லேட்டுகளையும் வாங்கிக் கொண்டு பஸ்ஸில் ஏறினார்கள்.


பஸ்ஸே அதகளப் பட்டது. பிரயாணிகள் அனைவருக்கும் சாக்லேட் கொடுத்து கொண்டாடினார்கள். வத்தலக்குண்டு பஸ் ஸ்டாண்டுக்கு பஸ் வந்ததும், வெடி வெடித்து கேசட்டை வரவேற்றார்கள். எல்லா மியூசிக்கல் கடைகளுக்கும் ரசிகர் மன்றம் சார்பிலேயே கேசட் வழங்கப்பட்டது.

அப்போது தளபதியுடன் ரிலீசாகவிருந்த குணா, பிரம்மா, தாலாட்டு கேட்குதம்மா பட கேசட்களும் முன் பின்னாக வெளிவந்தன. கேசட் கடைகளில் எல்லாம் தளபதி-குணா, தளபதி-பிரம்மா, தளபதி-தாலாட்டு கேட்குதம்மா என்றே 60 நிமிட காம்பினேசன் கேசட்டுகள் பதியப் பெற்றன. அதுவும் தளபதியின் எல்லாப் பாடல்களும், மற்றும் மீதமிருக்கும் இடத்திலேயே மற்ற படங்களின் பாடல்கள். இன்னும் சிலர் தளபதி-தளபதி யே பதிந்தார்கள். எல்லாப் பாடல்களும் போக மீதமிருக்கும் இடத்தில் ராக்கம்மாவும், காட்டுக்குயிலும்.


அடுத்த கட்ட நடவடிக்கை, பட ரிலீஸாகும் தியேட்டர்கள் மற்றும் ஊரின் முக்கிய இடங்களில் தட்டி போர்டு வைப்பது. இப்போது போல பிளக்ஸ் காலம் இல்லை அது. நடிகர்களின் பெரிய சைஸ் படங்களும், சின்ன சைஸ் படங்களும் ரசிகர் மன்ற இதழ்களின் மூலமாகவே கிடைக்கும். அந்தப் படங்களை அழகாக வெட்டி தட்டியில் ஆங்காங்கே ஒட்ட வேண்டும். இதற்காகவே எங்கள் ஊரில் ரஜினி ரசிகன், மய்யம், புரட்சிகலைஞர் விஜய்காந்த் போன்ற இதழ்களை வாங்குவார்கள். மய்யம் தவிர மற்ற புத்தகங்களில் நிச்சயம் புளோ-அஃப் இருக்கும்.


இப்போது கூட அக்‌ஷயா பதிப்பகம் அஜீத் ரசிகன், விஜய் ரசிகன் ஆகிய புத்தகங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அன்றும் இன்றும் தொடர்ந்து வெளிவரும் ரசிகர்களுக்கான இதழில் எம்ஜியாரின் இதயக்கனி க்கு தனி இடம் உண்டு.


நக்கீரன் ஆசிரியர் கோபால் தான் ரஜினி ரசிகனையும் நடத்தி வந்தார். அவரின் மற்ற எல்லா இதழ்கள் கொடுக்கும் மொத்த லாபத்தை விட ரஜினி ரசிகனே அவருக்கு அதிக லாபம் கொடுத்தது. அப்போதே அந்த இதழ் 10 ரூபாய்க்கும், சிறப்பிதழ் 20 ரூபாய்க்கும் விற்றது.

தளபதி ரிலீஸின் போது சிறப்பு புளோ அஃப்களுடன் பல புத்தகங்கள் வந்தன. ஹைலைட்டாக தினமலர் தீபாவளி மலருடன் சாமுராய் ஸ்டைல் ரஜினியின் புளோ அஃப் வந்தது. தீபாவளிக்கு ஒரு வாரம் முன்னரே ஏராளமான தட்டிகள் அந்த புளோ அஃப்களை ஒட்டி தயாராகின.


திண்டுக்கல் நாகா லட்சுமி திரையரங்குகளில் தளபதி ரிலீஸ். ரசிகர் மன்ற ஷோவுக்கான 50 டிக்கட்களை எங்கள் ஏரியா மன்றத்தினர் வாங்கி வந்திருந்தனர். அப்போதே ஒரு டிக்கட் ரூ 100. அதுபோக திண்டுக்கலுக்கு சென்று வர ஏற்பாடு செய்யும் வேன், மதிய சாப்பாடு செலவு எல்லாம் தனியாக கொடுத்து விட வேண்டும். நானும் ஒரு டிக்கட்டை அடித்துப் பிடித்து வாங்கி விட்டேன். தீபாவளிக்கு இரண்டு நாள் முன்னர், மன்றத்தாரிடம், ”என்னப்பா, கேசட் ரிலீஸுக்கே சாக்லேட் கொடுத்தீங்க, பட ரிலீஸுக்கு என்னய்யா?” என்று கேட்க. தியேட்டர்ல ஓப்பனிங் ஷோ வர்ற எல்லாருக்கும் லட்டு என அறிவித்தார் மன்ற தலைவர் முருகேசன்.

ஊரில் இனிப்பு வகைகள் செய்வதில் வித்தகரான, கைலாசம் அவர்களிடம் 2000 லட்டு செய்ய ஆர்டர் அளிக்கப்பட்டது.


தீபாவளிக்கு முதல் நாள் மன்றத்தார் பணம் வசூல் செய்து, லட்டு செய்யும் முஸ்தீபுகளில் இருக்க, ஏற்பாடுகளையெல்லாம் பார்த்து, வயிறு எரிந்த என்னுடன் சேர்ந்த கமல் ரசிகர்கள் சிலருடன் மதுரைக்கு ஷாப்பிங் கிளம்பினேன். மதுரை நேதாஜி ரோட்டில் ஆரம்பித்து விளக்குதூண், கீழவாசல் வரை நீளும் தீபாவளி ஸ்பெசல் நடைபாதைக் கடைகளை பார்வையிட்டுக் கொண்டே நடந்தோம். ஆங்காங்கே கடைகளில் ஸ்பீக்கர்களில் ராக்கம்மா பாடல் ஒலித்துக் கொண்டேயிருந்தது. பாடலுக்கு இடையில் கடை சம்பந்தமான விளம்பரம். எந்தப் பக்கம் திரும்பினாலும் தளபதி டி சர்ட், முண்டா பனியன் போட்டவர்கள் தெரிகிறார்கள்.


என்னடா ஒரு பக்கி கூட நம்மாளு பாட்ட போட மாட்டேன்கிறான் என கடுப்பாகி, எதுவும் வாங்காமலே திரும்பினோம். பஸ்ஸிலும் திரும்ப திரும்ப ரஜினி பாடல்கள்.


தீபாவளியன்று காலை 6 மணிக்கு, மூன்று மெட்டடார் வேன்களில் ரசிகர் படை கிளம்பியது. வேனின் டாப்பில் ஏராளமான தட்டி போர்டுகள். ஒரு வேனின் பாதி கொள்ளளவில் லட்டு கூடைகள்.


7 மணி அளவில் திண்டுக்கல் சென்றடைந்தோம். தியேட்டரில் 5 மணி சிறப்பு காட்சி ஓடிக் கொண்டிருந்தது. தியேட்டரைச் சுற்றி மீத மிருக்கும் இடங்களில் எல்லாம் எங்கள் ஊர் மன்ற தட்டிகள் வைக்கப்பட்டன. தியேட்டர் மேனெஜரிடம் சொல்லி, ரசிகர்கள் உள்ளே நுழையும் போது, லட்டு கொடுக்க ஏற்பாடு செய்தார்கள்.


படம் தொடங்கியது. சின்னத்தாயவள் பாட்டு ஒலிக்கத் தொடங்கியதும், என்னையறியாமல் படத்துக்குள் சென்றுவிட்டேன். ராக்கம்மாவுக்கும், காட்டுக்குயிலுக்கும் எல்லோரும் எழுந்து ஆடியபோது, ஏக்கமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். வயிற்றெரிச்சலை மீறி, மனதிற்குள் ஒரு மெல்லிய சோகம்.


படம் முடிந்ததும், திண்டுக்கலில் எல்லோரும் வான்கோழி பிரியாணி சாப்பிட்டுவிட்டு பயணத்தைத் தொடங்கினோம். அந்த சீன் சூப்பர், இப்படி திரும்புவாரு பாரு என்று நண்பர்கள் சுற்றிலும் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த உற்சாகத்தில் முழுமனதோடு பங்கேற்க முடியவில்லையே என மனதில் உறுத்திக் கொண்டேயிருந்தது.


சிவாஜி, எந்திரன் படங்களின் ரிலீஸின் போது சென்னையில் இருந்திருக்கிறேன். ஆனால் தளபதி படத்திற்கு ஏற்பட்ட எதிர்பார்ப்பு, ரசிகர்களின் தயாரிப்புகளுக்கு முன்னால் மேற்கண்ட படங்களின் ரிலீஸ் கோலாகலம் ஒரு மாற்றுக் குறைவே.கமல் ரசிகராக இருக்கும் இந்த 30 ஆண்டுகளில், நாம ரஜினி ரசிகரா இருந்திருந்தா எவ்வளவு நல்லாயிருக்கும்? என்று மூன்று முறை நினைத்திருக்கிறேன். அதில் தளபதி ரிலீஸ் நேரமும் ஒன்று.


Reply · Report Post