இந்தத் தேர்தல் நம்முடைய கழகம் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்பதற்கான தேர்தல். இந்தத் தேர்தலில் நாம் வெற்றி பெற வேண்டுமென்று மனு தாக்கல் செய்தோர் எண்ணாமல், தி.மு.கழகம் வெற்றி பெற வேண்டும், அண்ணா கண்ட சின்னமாம் - அண்ணா தந்த, அண்ணா வென்ற சின்னமாம் உதயசூரியன் வெற்றி பெற வேண்டுமென்ற அசைக்க முடியாத எண்ணத்தோடு இருக்க வேண்டும்.

விருப்பமனு தாக்கல் செய்தவர்கள் அனைவருமே கழகத்திற்காகப் பாடுபட்டவர்கள்; ஏதோ ஒரு வகையில் கழகத்திற்காக உழைத்தவர்கள்; பல பேர் கழகம் நடத்திய போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றவர்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால் நான் ஏற்கனவே தெரிவித்ததைப் போல ஒரு தொகுதியில் கழகத்தின் சார்பில் ஒருவரைத் தான் நாங்கள் தேர்ந்தெடுக்க முடியும். ஒரு தொகுதியில் கழகத்தின் சார்பில் போட்டியிட பலர் தகுதி உடையவர்களாக இருக்கக் கூடும். அவர்களில் ஒருவருக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கலாம்.அப்படிப்பட்ட வரைத் தேர்ந்தெடுப்பது அதுவும் "சமன் செய்து சீர்தூக்குங் கோல் போல் அமைந்து" தேர்ந்தெடுப்பது என்பது எவ்வளவு கடினமான காரியம் என்பதை நீ நன்றாகவே அறிவாய். எல்லோருக்கும் நல்வாய்ப்பு வரும்; தன்னுடைய சுற்று வரும் வரை காத்திருக்கக் கற்றுக் கொண்டிருப்பவருக்குத்தான் காரியம் கைகூடும் என்பதை மறக்கக் கூடாது. இதைத்தான் அண்ணா அவர்கள் ஆங்கிலத்தில் "We should learn to Wait till our Turn comes” என்று அழகாகச் சொல்லியிருக்கிறார். அண்ணா அவர்கள் இது மட்டுமா கூறினார்? "பீரோ நிறைய ஏராளமான பட்டுப் புடவைகள் இருந்த போதிலும் - இன்று செல்லும் இந்தத் திருமணத்திற்கு இந்தக் கலர் பட்டுப் புடவையை எடுத்துக் கட்டிக் கொள்கிறேன் என்றால், அடுத்து இன்னொரு திருமணத்திற்குச் செல்லும் போது மற்றொரு புடவையை எடுத்துக் கட்டிக் கொள்வேன். இன்று இதனைக் கட்டிக் கொள்வதால் மற்றது எல்லாம் பிடிக்காது என்று அர்த்தமல்ல" என்ற உவமைக் கதையும் அண்ணா தானே சொன்னார்? அதை மறந்து விடலாமா?

விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் நான் விடுக்கும் வேண்டுகோள், இந்தத் தேர்தல் நம்முடைய கழகம் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்பதற்கான தேர்தல். இந்தத் தேர்தலில் நாம் வெற்றி பெற வேண்டுமென்று மனு தாக்கல் செய்தோர் எண்ணாமல், தி.மு.கழகம் வெற்றி பெற வேண்டும், அண்ணா கண்ட சின்னமாம் - அண்ணா தந்த, அண்ணா வென்ற சின்னமாம் உதய சூரியன் வெற்றி பெற வேண்டுமென்ற அசைக்க முடியாத எண்ணத்தோடு இருக்க வேண்டும். போட்டியிட வாய்ப்புக் கிடைத்தோரும், நமக்கு வாய்ப்புக் கிடைத்துவிட்டது, நமக்கு எதிராகப் போட்டியிட மனுச் செய்தவர்களைக் "கவனித்துக்" கொள்ளலாம் என்ற எதிர்மறை நோக்கிலும் போக்கிலும் நடந்து கொள்ளா மல், அனைவரையும் அன்போடு அரவணைத்துச் சேர்த்துக் கொண்டு, கழகத்தின் வெற்றிக்காக முழு மூச்சுடன் பாடுபட வேண்டும்.

Reply · Report Post