உங்களால் சாதியவாதி என அறியப்படும் நான்.


நானொரு தலித் என்பதை என் வாழ்நாள் எல்லாம் நான் அவமானவாகவே உணர்கிறேன். என்னுடைய கோபமெல்லாம் இந்த சமூகத்தின் மீதுதான்.

கல்லூரியில் ஸ்காலர்சிப் வாங்க SC பசங்கள்ளாம் பிரின்சிபல் ரூமுக்கு வாங்க என்றதும். மொத்த வகுப்பும் என்னை ஒருமாதிரி பார்த்த போது, பின் புறக்கணித்த போது வந்த கோபம் இது..

பொதுவெளியில் என்ன சாதியென ஓராயிரம் பேரால் கேட்கப்பட்டு தொண்டைக்குள்ளாகவே முழுங்கிக் கொண்ட போதெல்லாம் வந்த கோபமிது..

வேலைக்கு சென்ற இடத்தில் வீட்டுக்கு வருகிறேன் என சொன்ன நண்பர்களையெல்லாம் அழைத்துச்சென்ற மறுவினாடி பிறகெப்படி பார்க்கப்படுவேனோ என்கிற தாழ்வு மனப்பான்மையால் வந்த கோபமிது.

என் மொத்த அவமானகரமான வாழ்வில் இந்த தளத்தில் மட்டும்தான் நான் என் சாதி அநீதிகளுக்காக குரல் கொடுக்க முடிந்தது. முதல் முறையாக இங்கேதான் என் அடையாளத்தை மறைக்க கூடாதெனும் போராட வேண்டும்மென்னும் நம்பிக்கையை இந்த தளத்தில்தான் என்னால் மீட்டெடுக்க முடிந்தது.

என் பாவப்பட்ட இனத்தின் குரலாக வந்த படத்தை தாங்குதாங்கென தாங்கி கொண்டாடும் தைரியத்தையும், ஆவலையும் இந்த தளம்தான் தந்தது.

ஆம், உண்மைதான். உங்களால் கொண்டாடப்படும் உங்கள் மேட்டுக்குடி ஆளுமைகளை வெறுக்கிறேன்தான். அதற்கு உணர்வுப்பூர்வமாக என்னிடம் நிறையக்காரணமிருக்கிறது.

நீங்கள் மூளையிலிருந்து சிந்தித்தால் நான் இதயத்திலிருந்துதான் சிந்திக்கிறேன்.

ஒவ்வொரு முறையும் என்னை முடக்கிப்போட முனையும் உங்களிடம் சொல்ல இறுதியாக ஒன்றுதான் இருக்கிறதும்.

நான் என் தலைமுறையின் முதல் எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சியாளன்.

நாம் என் தலைமுறையின் முதல்
+2 தேர்ச்சியாளன்.

நான் என் தலைமுறையின் முதல் பட்டதாரி.

நான் என் தலைமுறையின் முதல் சமூக வலைதள வாசி…

உங்களால் சாதியவாதியாக சாதிப்பெருமை பேசுபவனாக பார்க்கப்படும் அதே நான்தான் ஒவ்வொரு நொடியும் என் பிறப்பிற்காக அவமானமுறுகிறேன் என்பதையும். அதில் என் தவறு எதுவும் இல்லை என்பதையும்
தயவு கூர்ந்து புரிந்துகொள்ளுங்கள் என மன்றாடிவிட்டு இந்த கணக்கை முறித்துக்கொள்கிறேன்.

நாளை என் மகளோ,மகனோ இங்கே வரக்கூடும் அவர்களது உரிமைகளை அவர்கள் மீட்டெடுக்கவோ, விவாதம் செய்யவோ, அவர்தம் பிறப்பு நிலையால் கோபம் வந்து உங்கள் சாதி ஆளுமைகளையோ..படைப்புகளையோ புறக்கணிக்க முனையும் பொழுதுகளிலெல்லாம் அவர்களையாவது முடக்கிவிடாமல். அவர்களுக்கு அந்த உரிமைகளை விட்டுக்குடுங்கள் தோழர்களே.

பெரும்பான்மையான உங்கள் விருப்படியே நாளைமுதல் ஒடுங்கிக்கொள்கிறேன்.

என்னுடைய சாதி அபிமானம் என்பது பெருமையல்ல அது என் வரலாற்றுத்துயரம் என்பதை இதை வாசித்து புரிந்துகொள்வீர்கள் என்கிற நம்பிக்கையுடனும்,
ஒரேயொருமுறை நீங்கள் அனுமதியளிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடனும் சொல்லிக்கொள்கிறேன்.

ஜெய்பீம்.

நன்றி வணக்கம்.

தோழமையுடன்

கர்ணாசக்தி என்கிற சக்கிலியன்.

Reply · Report Post