நம்மில் அழிந்து வரும் 'வெள்ளந்தி மனசு' (மூதாதையர்)களை நினைவூட்டவே இந்த சிறுகதை!


' வெள்ளந்தி மனசு'
காலம் கடந்து கொண்டிருந்ததே தவிர வண்டிகள் வருவதாக தெரியவில்லை. ஊரின் பொதுவிடமான நூலகத்துக்கு முன்பு பெரியவர்கள் என சொல்லிக் கொள்பவர்கள் எல்லாரும் பெஞ்சில் உட்கார்ந்து இருக்க சின்ன மனிதர்கள் என சொல்லப் படுகிறவர்கள் அங்காங்கே நின்று கொண்டு இருந்தார்கள்.மகா சின்ன மனிதர்கள் 'வரவேற்பு வளைவை' கட்டுவதிலும், வரப்போகிற அதிகாரிகளுக்கு நாற்காலி தூக்கிப் போடுவதிலும் கவனமாய் இருந்தார்கள்.இந்த சின்ன மனிதர்களில் பெரும்பாலோர், வயல் வரப்புகளிலும் தீப்பெட்டி ஆலையிலும் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்... அவர்கள் ஏன் வரவில்லை. ஏன் வரவேண்டுமா? அவர்களுக்காகத்தானே அதிகாரிகள் வருகிறார்கள்!

மனுநீதி நாளோ, குறை தீர்க்கும் திட்டமோ ஏதோ ஒண்ணு, அதிகாரிகள் வந்து குறைகளை கேட்டு முடிந்தவரையில் அங்கயே சரி செய்ய போவதாக ஆட்டோவில் ‘மைக் செட்’ கட்டி பஞ்சாயத்து முழுவதும் சொல்லியாகிவிட்டது.

எல்லாரும் அதிகாரிகளை எதிர்பார்த்து இருந்தபோது, நான்கைந்து பேர் தலையில் புல்லுக்கட்டோடும் விறகுக்கட்டோடும் நடந்து வந்தார்கள். “எவன் வந்தாலும் நம்ப பொளப்பு மாறவா போகுது.. வெரசா நடங்கடி” என கூடத்தில் ஒரு விவசாயி முணுமுணுக்க.. தலையில் விறகு வைத்திருந்த லிங்கம்மா பாட்டி மட்டும் கூட்டத்தை நிமிர்ந்து பார்த்தாள். அறுபது வயது விதவை, சொந்த பந்தம் யாரும் இல்லை. மாலை நேரம் வடை சுட்டு பொளப்ப ஓட்டுது. லிங்கம்மா பாட்டியைப் பார்த்துவிட்ட காண்ட்ராக்டர் சண்முகம், “லிங்கம்மா... செத்த நில்லு... ஒனக்கு விடிவு காலம் பிறக்கப் போகுது...” என்றார்.

“தலையில் விறகுக்கட்டு தடுமாற ஆச்சரியமாய் “எனக்கா!” என கேட்டபோது “ஆமாம் பாட்டி ஆபிசர்மாருங்க ஊர்ப்பிரச்சனையைத் தீர்க்க வாரங்க.. ஓனக்கு முதியோர் பென்ஷன் கொடுக்க ஏற்பாடு பண்ணலாம், தாசில்தார்கிட்ட நீயும் சொல்லு நானும் சொல்லுறேன்.”

அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் விறகுக்கட்டை கீழே போட்டுவிட்டு நைந்துபோன புடவையை கையில் பிடித்துக் கொண்டு நின்றாள்.பெரிய மனிதர் ஒருவர் சண்முகத்தை முறைக்க.. “சொம்மா கிடயும் நாமும் ஏழைபாளைகளை சேத்திருக்கோம்னு தெரியாண்டாமா?” என சொல்லிவிட்டு மேற்கொண்டு பேசப்போனவர் சட்டென எழுந்தார்.

வண்டிச் சத்தம் கேட்டது, ஐந்தாறு வண்டிகள் வந்தன. ஒவ்வொன்றிலும் ஏழெட்டு அதிகாரிகள்...

தயாராய் நின்று இருந்த பெரிய மனிதர்களின் சின்னப் பிள்ளைகள் சந்தன தட்டையும் கற்கண்டு தாம்பாளத்தையும் காட்டின. பூசிக்கொண்டும் மென்று கொண்டும் அதிகாரிகள் தயாராக இருந்த நாற்காலியில் அமர்ந்தார்கள்.
பஞ்சாயத்து தலைவர் அடுக்கு மொழியில் வாழ்த்திப் பேசினார். அதிகாரிகள் முகத்தில் பெருமிதம்.

லிங்கம்மா பாட்டிக்கு மகிழ்ச்சி. ஆபிசர்மார்கள் சிரிக்கிறதைப் பார்த்தால், தனக்கு பென்ஷன் கிடைத்து விடும் என நம்பினாள். ‘மாசா மாசாம் வருமாமே.. எப்படியோ கூரைய மாத்தி சின்னதா ஒரு தாவாரம் போடணும்.’

அதிகாரிகளிளல் ஒருவர் “பட்டுப்பட்டுன்னு ஒங்க குறையைச் சொல்லுங்க” என்றார்.

ஊர் பிரமுகர் ஒருவர். “பள்ளிக் கூடத்துல மழை வந்தா ஒழுகுது, வேற கட்டிடம் கட்டிக்கொடுக்கணும்” என்று ஆரம்பிக்க... அதற்க்கு மாவட்ட கல்வி அதிகாரி “தனியார் பள்ளிக் கூடத்துக்கு நாங்க கட்டிடம் கட்ட முடியாது’ என்றார்.

பள்ளி மானேஜர் பிரமுகரை முறைத்துவிட்டு அதிகாரிகளைப் பார்த்து இளித்தார். எல்லோரும் பள்ளிக் கூடத்தைப் பற்றி பேசினால் மானேஜர் ராமசுப்பு கவலைப் படுவார். நம்ம ஊர்க்காரன். கூட்டத்தில் மௌனம்.

லிங்கம்மா பாட்டி பென்ஷனைப் பற்றி பேசப் போனாள். பிறகு யோசித்து விட்டு ‘ஊர் விவகாரந்தான் முக்கியம். பள்ளிக் கூடத்தப் பத்தி ஏதோ கேட்டாக அப்புறம் ஏன் பேசாம இருக்காக.. நாமளாவது யோசன சொல்லுவோம் பாவம். ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆகிட்டா பச்ச மண்ணுக செத்துடப்படாது பாரு...’
பாட்டி சத்தம் போட்டே பேசினாள்.

“ஏன் சாமி யோசிக்கிய? ராமசுப்பு பள்ளிக்கூடத்துக்கு கட்டிடம் கட்ட முடியாதுன்னா அதுவே சின்னப் பிள்ளிய எல்லாத்துக்கும் சமாதியா ஆயிடும். நீங்களே கூசாலிபட்டியில இருக்கது மாதிரி ஒரு பள்ளிக்கூடத்த ஆரம்பிக்கக் கூடாதா? பிள்ளியளுக்கும் மத்தியானச்சோறு கொஞ்சமாவது கிடைக்கும். ராமசுப்புவும் என்ன பண்ணுவான்? அவ்வளவு வாத்தியாருக்கும் சம்பளம் கொடுக்கதுக்கே படாதபாடு படுறான்.”

எல்லாரும் லிங்கம்மாவைப் பார்த்தார்கள். ராமசுப்பு பல்லைக் கடித்தார். ‘கிழவி சம்பளம் சரியாகக் கொடுக்காதது, மத்தியானச் சாப்பாடு போடாதது வரை சொல்லிட்டாளே, கிழட்டுச் செறுக்கி... இருடி இரு...’

திகைத்துப் பார்த்த அதிகாரிகளைக் கவனித்த ஊர்த் தலைவர் “பாவம் ஏழைக்கிழவி எதையும் தெரியாமல் பேசுவாள்” என்றார். அதிகாரிகள் அதிர்ச்சியோடு சிரித்தார்கள்.

பாட்டி யோசித்தாள். ‘பென்ஷனைப் பற்றிப் பேச, இதான் சாக்கு, பேசவா... தப்பு. ஊர் விவகாரம் முதல்ல முடியட்டும்.’

பள்ளிக்கட்டிடத்தைப் பற்றி பைசல் பண்ணாமலையே, ‘ரேசன் கடையில எல்லாப் பொருளும் சரியா கிடைக்குதா?” என்றார் ஒரு அதிகாரி. “எல்லாம் கிடைக்குது எப்பவும் கிடைக்குது” என்றார் கூட்டத்தில் ஒரு பிரமுகர்.
நீண்ட மௌனத்தை பாட்டி கலைத்தாள்.

“எங்க சாமி கிடைக்குது? கோபாலுதான் என்ன பண்ணுவான்? அசலூருல இருக்க ஓட்டல்காரங்க கூட, அவன் கிட்டவந்து நச்சரிக்காங்க, இவங்க உபத்திரம் தாங்க முடியாம, நேத்துக்கூட ஒரு மூட்டை சர்க்கரையை வண்டில ஏத்தி அனுப்புறான். நீங்க நிறைய கொடுத்தால் ஊர்சனத்துக்கும் அவன் ஏதோ கொடுப்பான்... இல்லியா...? அதிகமா கொடுங்க சாமி.”
பெரிய மனிதர்கள், பாட்டியை கோவத்துடன் பார்த்தார்கள். ‘கிழவி திட்டம் போட்டுப் பேசுகிறாளா? யாரும் தயார் பண்ணி விட்டிருக்காங்களா?’
லிங்கம்மா பாட்டி சிறிது தைரியம் வந்தவளாய் கூட்டத்திற்கு முன்னால் வந்து நின்று கொண்டாள்.

அதிகாரி ஒருவர் ஏதோ சொல்ல முயன்ற போது பிரமுகர் ஒருவர் சுதாரித்துக் கொண்டார்.

“நம்ம லிங்கம்மா... திக்கில்லாத கிழவி. முதியோர் பென்ஷன் கொடுக்கணும். பாட்டி விவரமா... அய்யாமாருங்க கிட்ட ஒன்னப் பத்திச் சொல்லு...”
பாட்டி விவரமாகச் சொல்லப் போனாள். பேசத் தலையை நிமிர்த்தியபோது, சற்று தொலைவில் முனியாண்டி தள்ளாடி குனிந்து போவது தெரிந்தது. ‘எப்படி இருந்தவன் இப்போ இப்படி ஆகிட்டானே’ நாமாவது வடை வித்து பொழைப்போம். அவன் வேலைக்கு கீலைக்கு போக முடியாமல் கிடக்கான்... அவன் விவகாரத்த மொதல்ல பேசுவோம்.
பாட்டி அங்க இருந்தே கத்தினாள்.

“ஏலே... முனியாண்டி... யாரும் ஒன்ன அடிக்க மாட்டாங்க, சும்மா வாடா, பன்னாடப்பய மவன்... பாக்கான் பாரு, வாடா... ஒனக்கு நல்ல காலம் பிறந்துட்டு... ஓடியாடா... ஓடியா...”

எல்லாரும் அவளை எரித்து விடுவது போல் பார்த்தார்கள். முப்பது வயது முனியாண்டி முதலில் யோசித்து விட்டு, பிறகு பாட்டியின் பேச்சுக்கு கட்டுப் பட்டவன் போல் பாட்டியை நோக்கி வந்தான். வந்தவனின் கையப் பிடித்துக் கொண்டே பாட்டி பேசினாள்.

“பாருங்க சாமி ஆறு மாசத்துக்கு முன்னால... வவுறு வலின்னு ஆஸ்பத்திரிக்கு போனவன கட்டி இருக்குன்னு அறுத்து எடுத்து விட்டாங்க, வீட்டுக்கு வந்தவன் வலிக்குன்னு துடிச்சான். ஆஸ்பத்திரிக்கு பல தடவ போனான். நாளைக்கு வா... நாளைக்கு வான்னு சொல்லி இப்போ நாதி அத்து கிடக்கான். ஏதாவது பண்ணுங்க சாமி புள்ள குட்டிக்காரன். கிறுக்குப்பய மவனே.. எசமாங்ககிட்ட சொல்லேண்டா...”

முனியாண்டி பேச முடியாமல் தலையைச் சொறிய, பெரிய மனிதர் ஒருவர் எதுவும் சொல்லாதே என்பதுபோல், தான் வாயில் ஆள் காட்டி விரலால் அடித்தார். முனியாண்டிக்கு புரிந்து விட்டது. எதுவும் புரியாத பாட்டி பரிந்து பேசினாள்.

“பயப்படுறான் சாமி... போன வாரம், இவங்க காலனிக்கும்... எங்களுக்கும் சின்னத் தகராறு இவங்கள இந்தப் பக்கம் வரப்படாதுன்னு சொல்லிட்டாங்க...இவன் எப்படியோ வந்துட்டான். நீங்கதான் இந்த விவகாரத்தையும் தீர்த்து வைக்கணும். இல்லைனா சண்டை வந்து, பத்து கொலையாவது விழும். ஏல... முனியா... அய்யாமாருங்ககிட்ட சொல்லுடா இப்போ சொல்லாட்டா ஒன் குறை எப்போ தீரும். ஊருக்குள்ள வந்ததுக்கு ஒன்னிய எங்க ஆளுங்க அடிக்க மாட்டாங்க சொல்லுடா...”

பெரிய மனிதர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.கிழட்டுச் செறுக்கிக்கு என்ன திமிரு இருந்தால், இப்படி பேசுவாள்... ஊர்க்காரங்களையே காட்டிக் கொடுக்காளே...”

ஊர் பிரமுகர் ஒருவர் கனிவாக பேசினார்.
“அடடே... நேரமாகிட்டே... மொதல்ல சாப்பிட்டுட்டு வந்துடுவோம். அப்புறம் பேசலாம்.”

எல்லாரும் எழுந்து சந்தோஷமாக கோழிக் குளம்பு மனத்த வீட்டைப் பார்த்து மெல்ல நடந்தார்கள்.
கூட்டம் மெள்ளக் கரைந்தது.

லிங்கம்மா பாட்டி விறகுக்கட்டை ஓரமாக வைத்து விட்டு, ஒரு கல்மேல் உட்கார்ந்தாள். முனியாண்டி, பாட்டி பக்கத்தில் உட்கார்ந்தான். கோழி விருந்துக்கு போக முடியாத சிலர், அவர்களை கோவமாக முறைத்தார்கள். பாட்டிக்கு ஒன்றும் புரியவில்லை. ‘தான் பேச்சுக்கு ஏன் யாரும் பதில் பேசல... பாவம் பசில வந்திருப்பாங்க... சாப்பிட்டுட்டு வரட்டும். இந்த முனியாண்டி பயலப் பத்தி ‘அடிச்சுப்’ பேசணும், நம்ம பென்ஷனப் பத்தியும் பேசணும்.’
ஒரு மணி நேரம் ஆகிவிட்டது, நகரப்போன முனியாண்டியை “ இருடா... இப்போ... வந்துடுவாங்க...” என்றாள்.

சிறிது நேரம் சென்று எழுந்து நின்று எட்டிப் பார்த்தாள், ‘அதோ... அதிகாரிகள் வாசலுக்கு வெளியே வந்துட்டாங்க... ஏல மாயாண்டி நீயும் ஒன் நிலமைய எடுத்து சொல்லுடா... என்ன இது... ஜீப்பு வண்டிங்க.. ஊரவிட்டு போகுது, ஒருவேளை... சாயங்காலம் வருவாங்களோ... பாவம் வெயிலாச்சே...’
லிங்கம்மா பாட்டி போகலாமா என யோசித்த போது, ஊர்ப் பிரமுகர்கள் கூட்டம், அவளை நோக்கி வந்தது. பாட்டி வெள்ளந்தியாய் கேட்டாள்.

“சாயங்காலம் வருவாங்களா...?”
தலைவர் உடனே பதிலளித்தார்.
“ஆமாம். ஒன்னப் பார்க்க சாயங்காலம் வாராங்க. ஒனக்கு மாசம் ஆயிரம் ரூபாய் பென்ஷன் தருவாங்களாம்.”

லிங்கம்மா பாட்டிக்கு நம்ப முடியவில்லை. ‘ஆயிரம் ரூபாயா... இருக்கன்குடி மாரியாத்தா... தெய்வமே.. நீ நிசமாவே தெய்வந்தாண்டி’ அந்த மூதாட்டி, வயது வித்தியாசத்தைப் பார்க்காமல், தலைவர் காலில் விழப்போனாள். உடம்பு இருந்த சோர்வில், அவளால் அப்படி செய்ய முடியவில்லை. மனம்விட்டு கூவினாள்.
“ஏதோ.. ஒன் புண்ணியம் ராசா... இந்த முனியாண்டிப் பயலுக்கும்...”
“தனி ஆஸ்பத்திரியில... காட்டி, இவனை மட்டும் கவனிக்கப் போறாங்களாம். சாயங்காலம் வரப்போறாங்க... எங்கயும் போயிடாதீங்க...”

“ரொம்பச் சந்தோசம் சாமி...”

“அறிவு கெட்ட முண்ட... இருக்க இடம் கொடுத்தால், படுக்க இடமா கேக்குற...? திருட்டுச் செறுக்கி...”

லிங்கம்மாள் பாட்டி திடுக்கிட்டாள். அதிர்ச்சியுடன் தலைவரைப் பார்த்தாள். அவர் பற்கள் நறநறத்தன. ஊர்ப் பிரமுகர்கள் வாய்க்கு வந்தபடி கேட்டார்கள்.

“ஒன்ன... எவன் பேசச் சொன்னான்? சர்க்கரையைப் பத்தி எதுக்குடி பேசுற? போட்டா என்ன.. போடாட்டி ஒனகென்ன நாயே...? கைநாட்டு போடுற செறுக்கிக்கு பள்ளிக் கூடத்தப்பத்தி பேச என்ன யோக்கிய இருக்கு? காலனி பசங்கள வரவிடாம வழிய அடச்சத... எதுக்குழா சொன்னே? ஏல... மாயாண்டி எதுக்குல..
ஊருக்குள்ள வந்தே...? ஓடுல...”

லிங்கம்மா பாட்டிக்கு ஒன்றுமே புரியவில்லை. ‘எதுக்காக திட்டுதாவ. என்னத்த அப்படிப் பேசிப்பிட்டேன். இதனால யாருக்கு நஷ்டம்? அட மாரியாத்தா... நான் என்னத்தடி அப்படிப் பேசிப்பிட்டேன். இதுவரைக்கும் ஒரு சொல்கூட வாங்காத என்னை, ஒரேயடியா வாங்க வச்சுட்டியேடி...’

தலைவர்களில் ஒருவர் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்த மாயாண்டியப் பார்த்து “இப்ப மட்டும் இந்தப் பயலால எப்படி ஓட முடியுது? இம்புட்டு நாளும் நடிச்சிருக்கான். இந்த கிழட்டுச் செறுக்கியும் எப்டி நடிச்சிட்டாள் பாருங்க...” என்றார்.

கண்கள் திறந்து இருந்தாலும் எல்லாம் இருட்டாகிப் போனது போல ஒரு உணர்வு.
எவரோ ஒருவர் லிங்கம்மா பாட்டியை அடிக்கப் போனார். இன்னொருவர் அவரைப் பிடிக்கப் போனார். காண்ட்ராக்டர் சண்முகம் “ஏய் கிழட்டுச் செறுக்கி! என் நிலத்துல போட்டுருக்க குடிசைய ராத்திரியோட ராத்திரியா எடுத்துடணும். இல்லன்னா... அங்கயே வச்சு... ஒன்னை எரிச்சுடுவேன்.” சிறிது அமைதி... பிறகு எல்லோரும் போய் விட்டார்கள் ஒற்றுமையாக.

அறுபது ஆண்டுகால, உயிர் அங்கயே பிரிந்து போனதுபோல், நிலையிழந்து நின்றாள். சிறிது நேரம் கழித்து விறகுக் கட்டைப் பார்த்தாள் அதுவும் அவள் கூறிய உண்மையைப் போல, மரத்துக் கிடந்தது.

விறகுக்கட்டை தூக்கி தலையில் வைத்துக் கொண்டு மெல்ல நடை போட்டாள். ‘எதுக்காவ, பேய்ப்பயலுவ பேய்மாதிரி ஆடுறானுவ? என்ன நடந்தது இப்போ? நானா வரலியே. அவன்தான கூப்பிட்டான்... பேசுனதுல இது இது தப்புன்னு சொன்னால் அர்த்தம் இருக்கு... அர்த்தமே இல்லாம திட்டுறதுல என்ன இருக்கு? குடிசைய வேற எரிப்பேன்னு மிரட்டுறான். எரிச்சால் எரிக்கட்டுமே, ஈமச் செலவு மிச்சம்.’
-/-
அ.வளர்மதி

Reply · Report Post