சினிமா விமர்சனம் எழுத நினைத்ததில்லை, இருப்பினும் நடுநிலைவாதிகளுக்கு என் பதில்!


சினமா விமரசனம் எழுதும் எண்ணம் எப்போதும் வந்ததில்லை, நடுநிலைவாதிகள், எனக் கூறிக் கொண்டு, விமர்சனங்கள் செய்பவர்களை ஆட்டு மந்தைகள் என்றும் சுயபுத்தி இல்லாதவர்கள் “சினிமா பார்க்க முதலில் கற்றுக்கொள்ளுங்கள்” என்றும் சொல்கிறவர்களுக்கு என் பதில் அவ்வளவே.

முதல் அரை மணி நேரம் படம் சரியில்லை, நகைச்சுவை எரிச்சல் அடையச் செய்கிறது என நீங்களே ஒத்துக் கொள்கிறீர்கள். முதல் ‘கால் மணி’ நேரம் ரசிகர்களை கொஞ்சமாவது திருப்திப்படுத்தவில்லை என்றால் படம் தோல்வி அடையும் என்பதும் உங்கள் கருத்துதான், ஆக புலி படத்தைப் பற்றி நீங்கள் சொல்ல வருவது என்ன என்று தெளிவாகத் தெரியவில்லை.

சிம்புதேவனுக்கு அறிவுரை வழங்கும் அளவுக்கு உங்களுக்கு (சுய)புத்தி இருக்கிறது. எங்களுக்கு அந்தளவு இல்லை என்றே வைத்துக் கொள்ளுங்கள்.
படத்தின் ஆரம்பத்தில் ஒரு குழந்தையை காட்டினாலே அது ‘கதாநாயகன்’ என சிறு பிள்ளைக்கும் தெரியும்.அதுவும் ஆற்றில் குழந்தை மிதந்து வருவது கர்ணன், மோசே, ஏன்.. (தளபதி)சூர்யா, (பாகுபலி)சிவடு வரை பார்த்துப் புளித்த ஒன்றுதான்.

56 கிராமங்களில் உள்ளவர்களில் கதாநாயகியை மட்டும் தேர்வு செய்து கடைசி நர பலிக்கு கடத்திச் செல்வது கூட சரியென இருக்கட்டும், காதல் மனைவியை எதிரிகள் கடத்திச் சென்ற பிறகும் கூட ஏதோ சுற்றுலா செல்வதைப் போல குஷியாகச் செல்வதும், இளவரசி கூட ஆடிப் பாடுவது எல்லாம் லாஜிக் முரண்பாடு.

மிகத் தெளிவான 'ஃபாண்டசி' திரைப்படத்தில் லாஜிக் பார்க்க கூடாதுதான். மேலே சொன்ன அனைத்தும் நடுநிலை (சுய)புத்திசாலிகள் ஒத்துக் கொண்டவைகள், அதிலும் 100% சரியான படம் இல்லை, 50% மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என சதவீதக் கணக்குகள் வேறு.

‘சுய புத்தி’ இல்லாதவர்கள் என நீங்கள் சொல்பவர்கள் கூட இந்த அளவு படத்தை குறை சொல்லவில்லை.
நடுநிலைவாதியான உங்கள் பார்வைக்கு இத்தனை விடயங்கள் கண்ணில் பட்டது ஆச்சரியமில்லைதான் ஆனால்.. ஹாலிவுட் படத்தின் காட்சியை படத்தில் பயன் படுத்தியதைப் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லையே ஏன்? ஹாலிவுட் படங்கள் பார்ப்பதில்லையே அல்லது 'Gulliver's Travels' ‘BRAVEHEART’ படங்கள் பார்த்தில்லையா?

'Tales of Gulliver' கதைகளோட தாக்கத்தில் உருவாக்கிய 'Lilliput' கதாப்பாத்திரக் காட்சிகள். ‘லிட்டில் ஜான்’ வரிசையில் தமிழ் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிச்சியிருக்கு.. நல்ல விடயமும் கூட.. ஆனால் ‘சிறு வயதில் கதாநாயகனின் கல்லால் குறி பார்த்து எறியும் திறன்’, ‘சிறுவயது கதாநாயகி (காதலி) பூ கொடுப்பது’, ‘மாலை நேரம் குதிரையில் வந்து கதாநாயகியின் பெற்றோரிடம் கதாநாயகியைக் குதிரைச் சவாரிக்கு அழைத்துச் செல்ல தைரியமா(!) அனுமதி கேட்கும் காட்சி.’ ‘காதலி வீட்டு கதவில் கல் எறிவது, இரண்டாவது கல் காதலி மேல் படுவது’, காட்டில் காதலர்கள் சந்திப்பு, கோவிலில் ரகசியத் திருமணம், ‘தீச்சுவாலை பற்றி எரிய குதிரையின் மீது இரு (வெற்றுக்)கைகளை ஏந்தி வந்து.. பின்பு இரு கைகளையும் தலைக்கு பின்னால் சரண் அடைவதுபோல் கொண்டு சென்று மறைத்து வைத்து இருக்கும் கடிவாளம், (வாள், அரிவாள்) இப்படி எதையாவது எடுத்து தாக்கி சண்டை போடுகிற காட்சி இதற்க்கு முன் எந்தப் படத்திலும் பார்ததில்லையா?

அட.. ‘BRAVEHEART’ மற்றும் பாலிவுட் படத்தைக் கூட விடுங்க.. ‘இரணியன்’ ‘வின்னர்’ ஏன் (எங்க ஊரு)‘கோவில்பட்டி வீரலெட்சுமி’ படத்துல கூட அந்த குதிரை (சண்டை)காட்சி வருமே..! பார்த்ததில்லையா?

விமர்சனம் எல்லா தரப்பு மக்களும் எல்லா சூழ்நிலையிலும் செய்கிறதுதான். தெருக்கூத்து, கரகாட்டம், நாடகம் இருந்த காலத்தில் இருந்தே இருக்கிறதுதான.. இணையம் வந்ததும் அதிகம் ஆகிட்டு அவ்வளவுதான். கேலி, கிண்டல், நையாண்டி இதெல்லாம் ‘தெருக்கூத்து கோமாளிகள்’ கிட்ட இருந்து கத்துக் கொண்ட ஒன்றுதான். இப்போ கூட ‘MEME’ உருவாக்குறவங்க ஒரு கதாநாயகனையோ இல்லை காமெடி நடிகனோட படத்தையோ, வசனத்தையோ வைத்துதான உருவாக்குறாங்க.. நீங்க சொல்லுற ‘சுய புத்தி’ இல்லாதவங்களுக்கு அந்த அளவுதான் புத்தி வேலை செய்யும்

உங்கள மாதிரி அறிவுஜீவிக்கு வேணும்னா படத்தை மட்டமா குறை சொல்லி.. அதே நேரம் விமரசனம் பண்ணுகிறவங்களயும் குறை சொல்லி கடைசியில் நடிகனுக்கும் இயக்குனருக்கும் வாழ்த்து சொல்லி முடிக்கிற பக்குவம் திறமை இருக்கும், எங்களுக்கு இல்லை.!

எங்களுக்குன்னு என்னையும் இதில் சேர்த்துக் கொள்ளக் காரணம் நானும் அக்கா பசங்க கூட ‘கோவில்பட்டி சண்முகா’ தியேட்டடர்ல படம் பார்த்துகிட்டு இருக்கும் போதே என் கருத்தை பதிவு பண்ணினேன். அந்த ஒரு காரணம்தான் என்னை இந்தப் பதிவை எழுத வைத்தது.

ரசிகர்கள் இல்லை என்றால் நீங்க சொல்லுகிற ‘மாஸ் ஒப்பனிங்’, ‘நூறு கோடி’ வசூல் இதெல்லாம் சாத்தியம் இல்லாத ஒன்று. அதே நேரத்தில் ரசிகர்கள் சண்டையும் தவிர்க்க முடியாத விடயம் ஆகி விட்டது. வாதம், விதாண்டாவாதங்களை மீறி அநாகரீகமாக பேசி சண்டை போடுவதில் எனக்கும் உடன்பாடு இல்லைதான், படத்தைப் பற்றி தவறான கருத்துகளை இணையத்தில் பதிவதால் படத்தின் வெற்றி தோல்வி மாறிவிடும் எனச் சொல்வதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது.

படம் நல்லா இருந்தா கண்டிப்பா மக்கள் தியேட்டர் வந்து படம் பார்பாங்க.. அதுவும் சிறுவர்களுக்கு படம் பிடிச்சியிருந்தா.. FDFS’க்கு ‘அம்மா அலாரம் வச்சி எழுப்பி விட்டு’, ‘அப்பா பணம் குடுத்து, தங்கச்சி போயிட்டு வான்னு சொல்ல மாட்டாங்க எல்லாரும் சேர்ந்துதான் அந்த சிறுவனை படத்துக்கு கூட்டிட்டு போவாங்க... சிறுவர்களுக்கு ஒரு படம் பிடிச்சா அந்த படம் கண்டிப்பா வெற்றி அடையும். (பி.கு- சிறுவர்கள் டிவிட்டர், பேஸ்புக் அதிகம் உபயோகிப்பது இல்லை) இளைஞர்கள் படம் பார்க்கவோ இல்லை நீங்கள் சொல்லுகிற மாதிரி குறை சொல்லாவோ கண்டிப்பா தியேட்டர் வருவாங்க.

இன்னொரு விடயம், நடிகர்கள், மற்ற அரசியல்வாதிகளை கிண்டல் பண்ணுகிற மாதிரி ஏன் முதலைச்சர் செல்வி.ஜெ.ஜெயலிதாவ கிண்டல் பண்ணுறதில்லை! வழக்கு பாயும்னு பயமான்னு சொல்லுறது நியாயம்தான். அதுக்கு MEME கிரியேட் பண்ணுறவங்கதான் பதில் சொல்லணும்.. சொல்லுங்கப்பா.. இவ்வளவு திறமை வச்சி இருக்கிறவங்க மக்கள் பிரச்சினைகளையும் MEME பண்ணி வெளியிடுங்க.!

கடைசியாக இது விமரசனம் இல்லை என்றாலும் (அட.. நான் விமர்சனம் பண்ணவில்லை!) என்னோட கருத்துக்களை கூறி முடிக்க விரும்புகிறேன்.

'புலி புலி', 'ஜிங்கிலியா' பாடல்களுக்கு விஜயின் நடனம் அருமை, ‘ஸ்ரீதேவி’ மகாராணிக்கு சரியான தேர்வு. ‘சுதீப்’ மற்றும் ‘புலி வேந்தன்’ சமபந்தப் பட்ட காட்சிகளை இன்னும் கொஞ்சம் அதிகப் படுத்தி இருக்கலாம். மற்ற அனைவரும் வந்து போகிறார்கள் (ஸ்ருதி, ஹன்சிகா உட்பட) நகைச்சுவை ஏமாற்றம், பின்னணி இசை மற்றும் திரைக்கதையில் அதிக கவனம் செலுத்தி இருந்தால் படம் சிறப்பாக அமைந்து இருக்கும். குழந்தைகளுக்கு படம் பிடித்து இருக்கிறது. 'ஃபாண்டசி’ கதையைக் கேட்டு நடிக்க ஒத்துக் கொண்ட விஜய பாராட்டலாம், தமிழில் இப்படி ஒரு படத்தை எடுத்த சிம்புதேவனுக்கு பாராட்டுகள், ஏன் நன்றி கூட சொல்லலாம்.
-நிலா

Reply · Report Post