நான் அன்றாடம் பார்த்த,படித்தறிந்த தகவல்களை தழுவி எழுதியதே இந்த -சண்டைக் கோழிகள்


"சண்டைக் கோழிகள்"

இன்னும் பழையதாகவே இருக்கும் புதுபட்டியில், ‘வளராத’ வடக்குத் தெருவில் கெங்கம்மா – ரங்கம்மாவின் மகாயுத்தம், இதோ நடந்து கொண்டு இருக்கிறது.
இந்தச் சந்துப் பகுதியில், இந்த மாதத்தில் இருவருக்கும் இடையே நடைபெறும் மூன்றாவது மகாயுத்தமாகும் இது. இந்தச் சண்டையின் காரணத்தை கண்டுபிடிப்பவர்களுக்கு டாக்டர் பட்டமே வழங்கலாம். ஆனாலும் ஐம்பது வயது மெலிந்த ஆசாமி “தீக்கொளுத்தி!” சின்னவயசுல அம்மா கோவில் கொடைக்கு தோசை சுட்டுத் தரவில்லை என்ற கோபத்தில், வீட்டுக்கூரைக்கு தீ வைத்ததால் இந்த வயதிலும் குழந்தைகள் உட்பட எல்லாரும் ‘தீக்கொளுத்தி” என்று அவருக்கு தெரியாமல் கூப்பிடுகிறார்கள்.

வெளியூர் எண்ணெய் வியாபாரியிடம் சண்டையின் காரண காரியங்களை விளக்கிக் கொண்டு இருக்கிறார்.
அதாவது.. நாற்பது வயது கெங்கம்மா, வீட்டுத் தொழுவத்தில் கிடந்த மாட்டுச் சாணத்தையும,வைக்கோல் கழிவுகளையும் சாணிக் கூடையில் அள்ளிக்கொண்டு வடக்குப் பக்கமாக இருக்கிற தன்னோட எருக்குழியில் போட வந்தாளாம். வந்தாளா? வந்தாள். அப்போது அதே வயது ரங்கம்மா தன் வீட்டுக்குத் தெற்குப் பக்கமாய் நின்னாளாம். காறிக் காறித் துப்பினாளாம். கிழவிபட்டியில் பிறவியிலேயே நெருங்கிய சொந்தக்காரியான கெங்கம்மாவை ஒரக்கண்ணால் பார்த்தபடியே, அவள், தம்மேல கூடத் துப்பிக் கொண்டாளாம்.
அந்த நேரத்தில், கெங்கம்மா பக்கத்தில் வாலையாட்டி நின்ற ‘மாடசாமியின்’ ராஜபாளைய நாய்க்கு, தும்மல் வந்துச்சாம், தும்மும்போது அதோட வாய் துப்புறது மாதிரி இருந்துச்சாம், உடனே இந்த கெங்கம்மா, ரங்கம்மாவை பார்த்தபடியே சாடை பேசினாளாம். எப்படி?

“பய நாயி.. காறித் துப்புது பாரு காறி.. என்னமோ சொன்னான் கதையில.. எலி ரவுக்கை கேட்டுதாம்.. சபையில.. நீ ராசபாளையமா இருந்தாலும், நாயி நாயிதான்..”

ரங்கம்மா, லேசுல விடுவாளா? விடவில்லை.
“யாரைப் பாத்துழா நாயின்னு சொல்லுதே நாயே...!”

“நீ எதுக்குழா என்னைப் பாத்து துப்புனவ..”

“நீ.. வாரத்துக்கு முன்னே, இங்கின நின்னு துப்பிகிட்டு இருக்கேன்... ஒனக்கு கண்ணுதான் அவிஞ்சிட்டு... காதுமா செவிடாகிட்டு...”

“நான் வருவேன்னு தெரிஞ்சே... முன்னாடியே வந்து நின்னு துப்புறியா? அம்புட்டு திமிராடி உனக்கு...?”

“ஆமாம். நீ அழகு ராணி.. ரம்ப... ரதி... நீ வருவன்னு வந்து நிக்கேன். ஒய்யார கொண்டையாம் தாழம்பூவாம்... உள்ளே இருக்குமாம் ஈறும் பேனும்.”

“ஏழா ஜாக்கிரதையா பேசு... இல்லன்னா கொண்டைய அறுத்துப்புடுவேன்.”

“ஒனக்கு கொண்ட போட முடியிலன்னன்னாழா இப்படி பேசுற.. மொட்டச்சி... மூதேவிக்கு திமுரப் பாரு... என்னத் திரும்பித் திரும்பிப் பாத்து நீ துப்புறதுக்கு... எத்தனாவது சட்டத்துலழா எடமிருக்கு?”

“சீ... நாய்கூட ஒன்னத் திரும்பிப் பாக்காது. நானா திரும்பிப் பாப்பேன்.”

“ஏய்... நண்டுப் பய பொண்டாட்டியே.. நீ இருந்த இருப்பு தெரியாதாழா.. நடந்த நடப்பு மறந்துட்டாழா...”

“ஏடி... நீ நல்லவான்னா... என் இருப்பச் சொல்லு... என் நடப்பச் சொல்லு...”

“நான் எதுக்குழா சொல்லணும்? படியும் தராசும் ஊர்ல.. கைப்புண்ணுக்கு கண்ணாடியா... ஏகேன்னானாம். எம்.ஆர்.ராதா .”

“ஊர்ல வேணும்னா கேட்டுப் பார்ப்போமாழா... வெங்கப்பய பொண்டாட்டி... நான் நடந்து போற தூசில... அறுந்து போற தூசிக்கு பெறுவியாழா நீ...?”

கெங்கம்மா – ரங்கம்மா வசவுவ் போரைக் கண்ட, கேட்ட அக்கம் பக்கத்துக்காரிகளும்,காரர்களும், ரசனையோடு, தத்தம் திண்ணையில் வந்து உட்கார்ந்து கொண்டார்கள். ‘தீக்கொளுத்தி’ சாய்ந்து கிடந்த வாகை மரத்தில் சாய்ந்தபடியே செய்யது பீடியைக் கொளுத்தினார்.

மூல வீட்டு 'மாரியப்ப அண்ணாச்சி' மூக்குப்பொடியை உறுஞ்சியபடி “ஏழுழா பேசிக்கிட்டே இருக்கியே... புடிச்சி பொறளுங்களா.. சேவல் சண்டை மாதிரி கோழிச் சண்டையும் நடக்கட்டும்.” என்றார் குதூகலத்தோடு.

வடக்கு மூலையில் பல சரக்கு கடை நடத்தும் பரமன் ‘படியும் தராசும் ஊர்ல’ என்ற வார்த்தையை கேட்டதும் எடுத்த தராசை கீழே போட்டு விட்டார்.

அந்த மளிகைக் கடைக்கும், இந்த எருக்குழிக்கும் இடையே இருந்த திட்டில், பீடிச் சுற்றிக் கொண்டு இருந்த ஐந்தாறு ‘குமரிப் பிள்ளைகள்’ இருவர் பேச்சிலும் ஆவி பறக்க வந்த ‘ஆபாச’ வார்த்தைகளை கேட்க பிடிக்காதவர்கள் போல பாவலா பண்ணி காதுகளை லேசாய் பொத்திக் கொண்டு, இடையிடையே தலையை சரி செய்வது போல் கைகளை எடுத்து போரில் தாராளமாய் புரண்ட ‘ஏ’ராளமான வார்த்தைகளை, காதுகளில் அள்ளி அள்ளிப் போட்டுக் கொண்டார்கள்.
அதேசமயம், ஒப்புக்கு முகஞ்சுழித்து ‘நீராவது இந்தச் சண்டைய நிறுத்தும்’ என்பதுமாதிரி தீக்கொளுத்தியையும் ‘நிறுத்திட்டாதயும்’ என்பது போல மாரியப்ப அண்ணாச்சியையும், சாடையாக பார்த்தார்கள்.

கெங்கம்மாவோ, ரங்கம்மாவோ இவர்களைப் பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. தன் வீட்டு எல்லைக் கோடான எருக்குழியில் இருந்து மூன்றடி முன்னேறியபடியே, திட்டிக் கொண்டு போவாள். ரங்கம்மா பதில் பேசும் போது அதை உற்றுக் கேட்டுவிட்டு, முறைத்துக் கொண்டே நான்கடி பின்னே நடப்பாள். ரங்கம்மா கதையும் இதுதான்.

“கை நீட்டலாமுன்னு பாக்கியா... உனக்கு திராணி இருந்தா இந்த எருக்குழியத் தாண்டி வாழா பாக்கலாம்.”

“நீ... முடிஞ்சா இந்த முருங்கை மரத்த தாண்டுழா பாக்கலாம்...”

இப்படி , இவர்கள், எருக்குழியத் தாண்டாமலும் முருங்கை மரத்தை மீறாமலும் எச்சரிக்கையான இடை வெளியில் வஞ்சிகிட்டு இருக்கும் போது..
ரங்கம்மாவின் வீட்டுக்காரர் செல்லையா வயலில் உழுதுவிட்டு வந்தவர், மாட்டைக் கட்டிப் போட்டுவிட்டு எபோதும் போல் தன் மனைவியை அடக்கப் போனார். அந்த சமயத்தில் கெங்கம்மா, ஒரு ஏவுகணையை ஏவி விட்டாள்.
“ஒன் அல்பப் புத்திக்குதான், ஒன் புருஷன் காஞ்சான், இருக்கிற நிலத்த ஒவ்வொன்னா விக்கான்.”

“சரி.. என் புத்தியால இந்த மனுஷன் கெட்டது போதும்.. நீ வேணும்னா என் புருசன திருத்து...” என சென்சார் வார்தையோடு சேர்த்து சொல்ல..
பீடி சுற்றும் சின்னஞ் சிறுசுகள், நிஜமாகவே காதுகளைப் பொத்திக் கொண்டார்கள். மாரியப்ப அண்ணாச்சி ‘ஏழா ஏழா... ’ என்று எச்சரித்துவிட்டு துண்டை உதறியபடியே அங்குமிங்குமாய் நடந்தார். இதற்குள், வாய் வலித்த போராளிகள், கீழே குனிந்து மண்ணை அள்ளி, எதிர்திசையை நோக்கி வீச வீச, மண் துகள்கள் ஆகாயத்தை நோக்கிப் பறந்தன.

இந்தச் சமயத்தில் அதிகாலையில் நாலு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குருமலைக்குப் போய் விறகு வெட்டி, கட்டைத் தலையில் வைத்து நடந்து வந்த பூங்கனி, மற்போரிடும் அம்மாக்காரியை முறைத்தபடியே விறகுக் கட்டை பொத்தென்று போட்டாள். தலையில் ‘சிம்மாடு’ போல் சுருண்டு இருந்த முந்தானையை உதறிவிட்டு முதுகுவலியைப் போக்க முதுகை முன்னாலும் பின்னாலும் ஆட்டிவிட்டு, சண்டையை சட்டை பண்ணாமல் வீட்டுக்குள் போனபோது..
மண்ணைத் தூவி கைவலித்த கெங்கம்மா, எதிராளியின் சேதி ஒன்றை இலைமறைவு காயாக வெளிப்படுத்தினாள்:
“எங்க.. அக்கா... தங்கச்சி எவளும் கண்டவங் கூட ஓடிப்போகல...”
“குத்திக் காட்டுறியாக்கும் குத்தி.. ஓடிப்போன எங்க அக்காவ.. பிடிச்சியாந்து எங்கய்யா ராத்திரியோட ராத்திரியா எரிச்சசாரு.. இவ்வளவு நீ பேசுன பிறவு.. இந்த ரங்கம்மா யாருன்னு காட்டுறேன் பாரு.. மாப்பிள்ள வீட்டுக்காரங்க கிட்ட ஒன் மவள், தபால்காரன்கிட்ட ஆடுன ஆட்டத்தையும், பாடுன பாட்டையும் சினிமாவுல வாரது மாதிரி சொல்லப் போறேன்.. ஒன் மவள் கல்யாணத்த கருமாந்திரமாய் மாத்திக் காட்டாட்டால்.. என் பேர மாத்திக் கூப்பிடுழா...”
கெங்கம்மா அதிர்ந்து போனாள். துடித்து பதறிப் போனவளாய் ரங்கம்மாவை அடிக்கப் போனாள். கால்கள் நகரவில்லை. மண் அள்ளப் போனாள் கைகள் வரவில்லை. ரங்கம்மாவின் பார்வையை விலக்க முடியாமல் சிலையாய் நின்றாள். ரங்கம்மா வெற்றி பெற்றவளாய் அக்கம் பக்கம் பார்த்தாள். பீடிப் பெண்களால் ரங்கம்மாவின் கடைசி அஸ்த்திரத்தை சகிக்க முடியவில்லை. அதில் ஒருத்தி அந்தப் பெண்கள் சார்பில் குரலிட்டாள்.

“ஏய்... ரங்கம்மா சித்தி.. ஒனக்கு மூள பிசகிட்டா...? முன்னப் பின்ன யோசித்துப் பேசு.. வீட்ல ஆம்பளப் புள்ளங்க இருக்கிற தைரியத்துல பேசப்படாது.. கெங்கம்மா பாட்டியை என்ன வேணுமுன்னாலும் பேசு.. அவா மவள... ஏழுழா நாக்கு மேல பல்லுப் போட்டு பேசுறே...? வாய் அழுவிடப் போவுது...”

“சரிதான் போங்கடி... சண்டை ஆரம்பத்துல வரமாட்டிய..?” அதுவா முடியும்போது வருவியே... ஓங்க சங்கதிகளும் தெரியும்...”

ரங்கம்மாவின் தாக்குதலை தாக்குப் பிடிக்க முடியாமல், தலை குனிந்தார்கள்.
புயலுக்குப் பின் ஏற்பட்ட அமைதி..

கெங்கம்மா, வீட்டுக்குள்போய் கும்பாவை எடுத்தாள், மண்பானையை மூடி இருந்த ‘உல மூடியை’ அகற்றிவிட்டு, கம்மங்கஞ்சியை கும்பாவில் ஊற்றி வெட்டிய வெங்காயத்தை அள்ளிப் போட்டாள், அஞ்சாறு மோர் வத்தலை கையில் எடுத்து முற்றத்தில் ஆகாயத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டு இருந்த பூங்கனி முன் வைத்தாள். கும்பாவோட உரசல் சத்தத்தில் குனிந்தவளின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது. கெங்கம்மா தன்னைச் சமாளித்துக் கொண்டு மகளுக்கு ஆறுதல் கூறினாள்:
“ஏழுழா ... அழுவுற...? அந்த ஆக்கங்கெட்ட கூவை சொன்னான்னா புலம்புற...? நீ ஒரு தப்பும் பண்ணல.. இந்த வயசுல இது சகஜம். தபால்காரன் ஒன்ன நிசமா விரும்புறான்னு லேசாய் இடம் கொடுத்தேன்... ஆனாலும், எப்போ அந்தப் பயல் சாராயம் குடிக்கிறவன்... எல்லாப் பொட்டப் பிள்ளியட்டவும் ஒன்கிட்ட ஆச வார்த்த காட்டுனது மாதி காட்டுறான்னு தெரிஞ்சதும் நீ விலகுன பாரு அதுதான் பெரிசு... மத்தது சிறுசு..”

“ரங்கம்மா மயினி லேசுப்பட்டவள் இல்லியே...”

“அவளப் போய் ஏழுழா... மயினிங்கிற.. ‘சுடலமாடன்’ பாத்துப்பான் சும்மாக் கிடழா.. அப்படியே இந்த மாப்புள போனால் இன்னொரு மாப்புள.. விடு கழுதய..”
கெங்கம்மா மகளை தட்டிக் கொடுத்தாலும் உள்ளே உதறலோடுதான் இருந்தாள். ரங்கம்மா சீவி சிங்காரித்து எங்கேயாவது புறப்படும் போதெல்லாம் மாப்பிள்ளை வீட்டுக்குத் தான் போகிறாளோ என இவள் பதறினாள். போதாக்குறைக்கு, இந்த ரங்கம்மா தான் மகனைப் பார்த்து” பொறு பொறு .. ஒன் பவுசு ஒரு வாரத்துல தெரியும்..” ‘துள்ளாத துள்ளாத ஆட்டுக்குட்டி.. என்கிட்ட இருக்குது சூரிக்கத்தி..’ என்று லயத்தோடு ஜாடை போட்டாள்.

கெங்கம்மா, பொருமினாள். ‘மாபிள்ளை நல்ல இடம், தங்கமான பையன்.. பாவி மொட்ட கெடுத்துடப்படாதே.. என் செல்ல மகள் வாழ்கை போயிடப்படாதே..’
ஒரு வாரம் ஓடியது. மறுவாரம் திங்கள் கிழமை பிறந்தது.

பூங்கனி, தனக்கு வரப்போகிறவனையும், அவனை வரவிடாமல் தடுப்பதாக சபதம் போட்ட ரங்கம்மா மயினியையும் நினைந்தபடி, சாய்ந்து கிடந்தாள்.தங்கம்மா சோர்ந்து கிடந்த மகளையே வைத்தகண் மாறாமல் பார்த்துக் கொண்டிருந்தபோது..
திடுதிப்பென்று இருபது இருபத்தைந்து ஆண்களும் பெண்களும் உள்ளே வந்தார்கள். ஒவ்வொருத்தி இடுப்பிலும் கொட்டாப் பெட்டி.. அதிலே நான்கைந்து கிலோ அரிசி, எல்லாரும் கொண்டு வந்த அரிசியை மூலையில் அம்பாரமாக்கினார்கள். தீக்கொளுத்தி ஒரு வெள்ளாட்டை தலையைப் பிடித்து இழுத்தபோது, மாரியப்ப அண்ணாச்சி அந்த ஆட்டை பின்னால் இருந்து தள்ளினார். அண்ணாச்சி கெங்கம்மாவை அதட்டினார்.

“என்ன மயினி.. கப்பல் கவுந்தாலும் கன்னத்துல கை வைக்கலாம...? பூங்கன்னிக்கு, இன்னைக்கி சொக்காரங்க ஆக்கிப் போட.. வாரது தெரியாதது மாதிரி முழிக்கே? ஏழா... ராசாத்தி... முட்டாப்பய மவளுக்கு பேரு மட்டும் பெரிசு.. ஊர்க்கிணத்துல போயி தண்ணியெடுத்துட்டு வாங்க... ஏல ராமசுப்பு... மாடசாமிய ஆட்டை அறுக்க கூட்டிட்டு வா... நான் சந்தையில போயி மஞ்சமசாலா வாங்கிட்டு வாறேன்.. உம் சீக்கிரம்... ஏழா.. இன்னைக்கு பீடி சுத்தி கிழிச்சது போதும் குடத்த எடுங்களா...”

அண்ணாச்சியின் ஆணைக்குப் பயந்து பெண்கள் குடங்களையும், தவலைப் பானைகளையும் தூக்கிக் கொண்டு துள்ளி நடந்தார்கள். ஒருத்தி அம்மியை கழுவ, இன்னொருத்தி அரிசியைப் ‘புடைக்கப்’ போனாள். ஒரே குடும்பத்தை சேர்ந்த பங்காளிகளான சொக்காரர்கள், தங்கள் குடும்பத்தில் கல்யாணம் ஆகப் போகிற பெண்ணுக்கு தத்தம் வீட்டில் இருந்து அரிசி கொண்டு வந்து, கூட்டாக ஆடு வாங்கி அறுத்து, மொத்தமாக சாப்பிடுவார்கள்.

கடந்த ஒரு வாரமாய் தனிமையில் கிடந்த கெங்கம்மா கூட்டத்தை பாசத்தோடு பார்த்தாள். அந்த கூட்டத்தில் ‘பாவி மொட்டை’ ரங்கம்மா இருக்காளா என நோட்டம் விட்டாள் கண் வலித்ததுதான் மிச்சம். அவள் வராதது கெங்கம்மாவின் கவலையை அதிகமாக்கியது. அதைப் பார்த்த அண்ணாச்சி பொதுவாக பேசுவது போல், குறிப்பிட்டு பேசினார்.

“எந்த நாயி சந்தைக்குப் போனால் உனக்கென்ன மயினி...? வந்தால் வாராள் வராட்டால் போறாள், அன்னைக்கு அவள் சபதம் போட்டதைப் பத்தி யோசிக்கியளா.. அப்படி அவள் செய்தாள்னா.. அவ குடலை உருவி தோள்ல மாலையா போட்டுக்கிட மாட்டனா ..? கவலைப்படாதிய. ஏழா.. முத்துமாரி ! ‘பூங்கனி’ கல்யாணப் பெண்.. வார ஞாயிறுல கல்யாணம் அவள ஏழுழா அடுப்புப் பக்கம் அனுப்புற? ‘ஆக்கிப் போட’ வந்த லட்சணத்த பாரு... நீங்க ஏன் மயினி கவலைப்படுதிய...? அவள் வராட்டால், நாம அவ வீட்டுக்கு எட்டுக்கோ ஏழவுக்கோ போவ மாட்டோம் .. தபால்காரன பத்திச் சொன்னான்னா அவ குடல உருவி...”

இந்த மனுசன், கல்யாணத்தை நடத்திக் காட்டுறேன்னு சொல்ல மாட்டக்கானே.. அந்த தட்டுகெட்ட ரங்கம்மா குடல் யாருக்கு வேணு? இப்பவே என் பொண்ணு ராத்திரியில திடீர்னு எழுந்து உட்காருறாள்.. பரக்க பரக்க விழிக்காள். பையைப் பைய அழுவுறாள். இந்த தட்டுகெட்ட செறுக்கியால, கல்யாணம் நின்னுட்டால், என் மவ ஆத்துலயோ.. குளத்துலயோ... அரைமுழக் கயித்துலயோ...
கெங்கம்மா, மூக்கைச் சிந்தியபோது-
இடுப்பில் வலது கை சுற்றிப்பிடித்த, கொட்டாப் பெட்டியில் அரிசி குலுங்க, இடது கை சுற்றிப்பிடித்த பெரிய விறகு கட்டோடு உள்ளே வந்தாள் ரங்கம்மா. விறகுக் கட்டை பொத்தென்று கீழே போட்டுவிட்டு அட்டகாசமாக கேட்டாள்.

“ஏழுழா... உங்களுக்கு அறிவு இருக்கா? இவளு பேருக்கும் ஆக்குறதுக்கு ‘கெங்கம்மா அத்த’ வீட்ல நிறையா விறகு இருக்குமான்னு யோசித்து பார்த்திகளா... ‘தீக்கொளுத்தி’ மச்சான்.. அய்யோ உம்ம அப்படி கூப்பிட கூடாதுதான் ஆனாலும் அடுப்புல தீக்கொளுத்துறதுக்கு முன்ன நீரும் கொஞ்சம் விறகு வெட்டிகிட்டு வந்துடும்...”
--------------------------------------------------------------/----------------------------------------------------------------


கிராமங்களில் இப்போது இது போன்ற சண்டைகள் குறைந்து வருகிறது. மண் வாசணைக்காக மட்டும் இந்தக் கதையை எழுதவில்லை. அடித்தள மக்கள் எந்த வேகத்தில் சண்டை போடுகிறார்களோ அதே வேகத்தில் மறந்தும் விடுகிறார்கள். இந்தச் சண்டையில் மனக் கஷ்டங்களை இறக்கி வைக்கும் சுமைதாங்கிகளே எதிர்தரப்பினர், சண்டை முடிந்ததும் அவரவர் சுமைகளை அவர்களே தாங்கிக் கொள்வார்கள்.
நன்றி_/|\_

அன்புடன்,
உங்கள் நிலா.
(அ.வளர்மதி)

Reply · Report Post