என் தோழியின் வாழ்கையில் நடந்த உண்மைச் சம்பவமே இந்த “செங்கன்னி” சிறுகதை.


“செங்கன்னி”

இருண்ட திரையை விலக்கிக் கொண்டு வெளிச்சம் வெளியே வந்தது.
விடிந்து வெகு நேரமாகி விட்டது.விடியலைக் கண்டு கொள்ளாமல் மூலையில் சுருண்டு கிடந்தது ‘அது’.

எழ எத்தனித்தது. முடியவில்லை. பிடித்தமின்றிப் பாதிக் கண்ணைத் திறந்தது. பக்கத்தில் எந்த ஆடும் இல்லை.தன்னை விட்டுவிட்டு எல்லாமே மேய்ச்சலுக்குச் சென்று விட்டதா? எப்பவும் இதுதான் உசுப்பி விடும்.இன்னைக்கு ‘இது’க்கு என்னாச்சி?

மெதுவாய் எழும்ப முயன்றது.’அந்த’ ‘செங்கன்னி’ ஆடு. மூச்சுத் திணறியது. தலைச் சுற்றியது. விந்தி விந்தித்தான் நடக்க முடிந்தது.

‘சளப் சளப்’பென்ற சத்தம், வீட்டுக்காரம்மா முற்றம் தெளிக்கிறாள் என தெரிந்தது. ஒரு தாளத்தோடு சரியான இடைவெளியில் வரும் அந்த சத்தம் ‘அது’க்கு ரொம்பப் பிடிக்கும்.

எதிர் வீட்டுப் ‘பால்கன்னி ‘கிடா’ மீது ‘அது’க்கு கொள்ளப் பிரியம். இது ‘செங்கன்னி’ போலவே ‘கன்னி’ இன ஆடு தான். கோவில்பட்டி சுற்று வட்டாரத்தில் ‘கன்னி’ இன ஆடுகள் தான் அதிகம் . பல நாள் இராத்திரியில் அதன் நினைவு வந்து பாடாய் படுத்தும். தூக்கம் தொலைந்து கொட்டக் கொட்ட முழிச்சிட்டு இருக்கும். அந்த மாதிரி நாட்களில் விடிந்தும் விடியாமலும் வெளியில் வந்து இரண்டே தாவலில் கோட்டை சுவரில் ஏறி நின்று கொண்டு ‘மச்சானை’ எதிர் பார்க்கும். நேரம் செல்லச் செல்லப் பல வீட்டிலிருந்து பல பேர் முற்றம் தெளிக்கும் சத்தம் எல்லாம் ஒன்றாய் சேர்ந்துக் கரகரப்பாய் ஒலிக்கும். அத்தனை சத்தத்திலும் வீட்டுக்காரம்மா தெளிப்பது மட்டும் தனியாக விலகி இனிமையாகாக் கேட்கும்.
இன்னைக்கு அந்த சத்தம் கூட சலிப்பாகக் கேட்டது.

கொமட்டலுடன் உமிழ்நீர் சுரந்த வண்ணம் இருந்தது. மச்சானைப் பார்த்தால் இந்த மந்தத் தன்மை குறைந்து போகும், குஷியாகவும் இருக்கும். சீக்கிரம் போக வேண்டும். இந்த நேரத்துக்குத் தன்னைக் காணாமல் மச்சான் தவித்துப் போகுமே.

முடிந்தவரை நடையை வேகப் படுத்திக் கம்மாக்கரை வேலியோரம் வந்து சேர்ந்தது.
பக்கத்து வீட்டுப் ‘புல்லைபோரை’ ஆடு, தெற்கு வீட்டுச் ‘செம்போரை’ ஆடு, கீழ வீட்டுக் கிழட்டுப் ‘போரை’ ஆடு, எல்லாமே அங்கு இருந்ததன. அந்தப் பக்கம் குள்ளப் 'பள்ளை ஆடு’ அலமேலு கூட அதிசியமாக அங்கு இருந்தது. மச்சானை மட்டும் அங்கு காணவில்லை. ஒரு வேளை தெற்குப் பக்கம் போயிருக்குமோ? வாய்ப்பேயில்லை. அங்கு கொழுப்புப் பிடித்த ‘போரைக் கிடா’க்கள் அதிகமாம் எல்லாமே முரட்டு மூர்க்கன்கலாம். அலமேலுதான் சொல்லியது.

‘மச்சான்’ வந்ததா இல்லையா யாரிடம் கேட்பது? கவலையாய் இருந்தது. அலமேலுவைக் கேட்கலாமா? கேலி பேசுமே, பேசிவிட்டுப் போகட்டும். வேறு வழியில்லை. ‘புல்லைபோரை’ பரட்டை ஆடும், ‘செம்போரை’ சண்டி ஆடும் இதனைப் பார்த்ததும் ஏளனமாக சிரித்து விட்டு ரொம்ப மும்முரமாய் மேயத் தொடங்கின. மச்சானோடு இந்த இரு ‘போரை’ இன ஆடும் பார்த்த இடத்தில் எல்லாம் முட்டிக் கொகொள்ளும். ‘அது’. மச்சானோடு பேசுவது இதுகளுக்கு பிடிக்காது.

‘பள்ளை’ அலமேலு ஆடு அலுப்பாய் திரும்பிப் பார்த்தது. அப்பொழுதுதான் சடைச் சடையாகாக் காய்த்துத் தொங்கிய கருவேலங்காய் கொப்பு ஒன்று வசமாகச் சிக்கியிருந்தது. ‘பள்ளை’ இன ஆடுகள் குட்டையாக இருக்கும். ரொம்பக் கஷ்டப் பட்டுத்தான் அந்தக் கொப்பு ‘இந்த’ குள்ள அலமேலுவுக்குச் சிக்கியிருக்கும். கொப்பை நழுவ விடாமல் வசதியாய் முன்னங்காலால் மிதித்துக் கொண்டு எரிச்சலாய் கேட்டது. “என்ன விசயம்?”
“எங்க மச்சான் இந்தப் பக்கம் வந்தாரா?”
“உங்க மச்சானா?”
“ஹம் ,தெரியாதாக்கும். எங்க ‘பால்கன்னி’ மச்சானத் தான் சொல்லுறேன்.”
“நா பாக்கல.” பேச்சை வெட்டிவிட்டு கருவேலங்காயை ருசிப்பதில் கவனம் செலுத்தியது.

‘அது’க்கு முகம் சுருங்கிப் போனது. உடம்பில் சோம்பல் அதிகமாகிக் கொண்டு வந்தது. மச்சானின் மீது கோபமாய் வந்தது.அழுகை வந்து விடும் போல இருந்தது. தடுமாற்றத்துடன் வீட்டை நோக்கி நடந்தது.
வழியில் இரண்டு 'நாட்டு ஆடுகள்’ பேசிக் கொண்டு இருந்தன. ‘அது’ நடந்து கொண்டே பேச்சைக் கவனித்தது.
“இன்னிக்கு ரொம்ப அசதியா இருக்கு எதுக்குன்னு தெரியல!”
“எத்தனை மாசம்?”
“நாலு மாசம்.”
“ஈத்துக்கு இன்னும் ஒரு மாசந்தான இருக்கு பொறுத்துக்கோ.”
இந்தப் பேச்சைக் கேட்டதும் பெருமூச்சு விட்டது. விசயம் புரியத் தொடங்கியது. அதேதான்! சந்தேகமில்லை. ‘சினையாயிருப்பது அதற்க்குத் தெரிந்தது. அதனால்தான் இந்த புரியாத அவஸ்தை வேதனையிலும் மகிழ்ச்சி கசிந்தது.
மச்சானுக்குத் தெரிந்தால் நிச்சயம் சந்தோஷப்படும். இப்போதே போய் சொல்லியாக வேண்டும்.

மச்சானைச் சிநேகம் பிடிப்பதற்கு முன் ‘அது’ ரொம்பச் சிரமப் பட்டது. ‘போரை’ இன ஆடுகள்தான் அதிகம். நீண்ட கழுத்து, உயரமான கால், ஒல்லியான உடம்பு, வெள்ளை நிறத்துல கருப்பு மையை அள்ளி தெளிச்சது போல இருக்குற ஆடுகளை, 'கரும்போரை’ அல்லது 'புல்லைபோரை’னும்... வெள்ளை நிறத்துல செந்நிறம் கலந்து இருந்தா 'செம்போரை’னும் சொல்வாங்க. அந்த தெருவில் இந்த ‘கன்னி’ இன 'செங்கன்னி’ மட்டும் சற்று வித்தியாசப்பட்டு அழகாய் இருந்தது. கருமைப் பூசினாற் போல பளபளப்பு. கோதிவிடத் தூண்டுகிற உருளைக்கிழங்கு உடம்பு. தலையில முன்பக்கமா ரெண்டு செம்பழுப்பு நிறக் கோடுகள், காதுகள்லயும் ரெண்டு செம்பழுப்பு நிறக் கோடுகள் நல்லா தெரியும். வயித்தோட அடிப்பகுதி, கால் குளம்பின் மேல்பகுதி செம்பழுப்பு நிறத்தில் இருக்கும். செம்பழுப்பு நிறத்திற்குப் பதிலாக ‘வெண்மை’ நிறம் கொண்ட ‘கன்னி’ இன ஆடு ‘பால்கன்னி’

’செங்கன்னிக்கு’ தெருவில் மவுசு அதிகம். ’இது’ எப்போது வெளியே வரும்? என்று ‘பரட்டையும்’ ‘சண்டியும்’ மணிக்கணக்கில் மல்லுக் கட்டிக்கொண்டு காத்து கிடக்கும். கொஞ்சநாள் இரண்டும் விரட்டி விரட்டிப் பார்த்தன. ‘அது’ மசிவதாயில்லை.

மச்சானிடம் மட்டும் சொக்கிப் போனது. இட்லி விற்கும் ராக்கம்மா வீட்டு ‘பால்கன்னி’ ஆடு அது. கருப்பு நிறம், சீவி விட்ட மாதிரி கொம்புகள். தலையில் கிரீடம் மாதிரி வெள்ளை கோடுகள். கால்களின் உட்புறத்தில் வெள்ளைநிறம், ‘கன்னி’ இன ஆடுகள் மந்தையா நடந்து போறப்ப, கால் அசைவுகளைப் பாத்தா.. பட்டாளத்து சிப்பாய்ங்க வரிசையாப் போற மாதிரி இருக்கும். ’செங்கன்னி’ சொக்கிப் போனதில் ஆச்சரியமில்லை.

ஒரு நாள் பராக்குப் பார்த்துக் கொண்டு நடந்து சென்றப் போது ‘பரட்டை’ பக்கத்தில் வர, ‘அது’ திடுக்கிட்டுப் போயிற்று. தப்பிக்க வழியில்லையோ என்று தவித்தது. நல்ல வேளை. மச்சான் தருணத்தில் வந்தது. செமத்தியாக நாலு முட்டு முட்டி பரட்டை ஆட்டை பதறி ஓட வைத்தது. அதைக் கேள்விப்பட்டு வம்பு செய்த கிடாவெல்லாம் இதனைக் கண்டால் வழிவிட்டு ஒதுங்கிக் கொண்டன.
‘அது’ மச்சானை அவ்வப்போது வீட்டுக்கு அழைத்து வரும். தனக்குப் போடப் படும் புல்லைத் தின்ன வைக்கும். ராக்கம்மா பெரிய கருமி.அதனால் அடிக்கடி அதன் புல்லை மச்சானுடன் பகிர்ந்து கொண்டது. இப்படித் தான் இருவருக்கும் பிடித்துப் போயிற்று.

"கம்மாக்கரை, அரளிப்பூத் தோட்டம், கருவேலங் காடு என மச்சானோடு சந்தோசமாக சுற்றித்திரிந்தது. மேய்ச்சலுக்கு சென்ற இடத்தில் மனதை மேய விட்டது.

கம்மாக்கரை வெறிச்சிட்டது. தன்னை மறந்து எங்கே போயிருக்கும்? ஒருவேளை வீட்டுக்குத் திரும்பிப் போன நேரத்தில் வந்திருக்குமோ? இருக்காது சற்று தாமதம் ஆனால் கூடத் தேடி வீட்டுக்கே வந்து விடுமே. கவலையோடு சுற்று முற்றும் பார்த்தது. அலமேலுவும் இல்லை. சற்று தூரத்தில் கிழட்டுப் போரை ’13 மாதக் குட்டி ஆடு’ ஒன்றை கவரும் காரியத்தில் கருத்தாய் இருந்தது.
‘அது’ அதிர்ச்சியுடன் முகத்தைத் திருப்பிக் கொண்டது. இது போன்ற கிடாக்களிடம் இருந்து தப்பிப் பிழைக்க எம்புட்டு கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது. அம்மா தன்னை வளர்க்க எவ்வளவு கஷ்டப்பட்டது. அப்பப்பா..! எத்தனை தடவை ஆபத்தில் அகப்பட்டிருக்கிறது..! நினைத்தால் புல்லரிக்கிறது.

ஒரு சமயம் ஊரை ஒட்டி இருக்கிற ‘மடத்துப்பட்டி’ ஓடையத் தாண்டி மேய்ச்சலுக்குப் போயிருந்தது.திடீரென்று பலத்த மழை திமுதிமுவென்று வெள்ளம்.ஓடையில் இரண்டு குட்டி ஆடுகள் மூழ்கிப் போயின. அதில் ஒன்று இதோடு பிறந்த குட்டி ஆடும் ஒன்று. மற்ற ஆடுகள் இந்தப் பக்கம் வராததால் தப்பித்து விட்டிருந்தன. ‘அது’ ஓடிச் சென்று ஒரு செடிக்கடியில் ஒதுங்கிக் கொண்டது. ரொம்ப நேரம் அழுது நடுங்கிக் கொண்டு இருந்தது கூடப் பிறந்த ஆடு கண் முன்னால் வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டதை அதனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. குளிரில் உடல் நடுங்கியது. இருள் சூழ ஆரம்பித்தது. பயம் தொற்றிக் கொண்டது. ‘ம்மே.. ம்மே..’ என ‘அது’ கத்திப் பார்த்தது. பலனில்லை. ‘ம்மே.. ம்மே.. ம்மே.. ம்மே.. என நிறுத்தாமல் தொடர்ந்து கத்தியது. சற்று நேரத்தில் டார்ச் லைட்டின் வெளிச்சம் தெரிந்தது. மிலிட்டரிகாரரின் மகன் தான் அருகில் பதுங்கி வந்து அதைப் பிடித்து, வீட்டுக்குக் கொண்டு வந்தான். அதன் பிறகு வருடக்கணக்காக வீடு இருண்டு போனது.அதைப் போல நிறைய அனுபவம். நரியிடம் இருந்து, ஓநாய்களிடம் இருந்து தப்பித்ததெல்லாம் சகஜமான விசயம்.

மச்சான் தட்டுப் படாதது கவலை அளித்தது. நெஞ்சுக்குள் தீப் பற்றி எரிந்தது. கால்களில் வெந்நீர் ஊற்றியது போல நிலை கொள்ளாமல் துடித்தன. மச்சானின் வீட்டுப் பக்கம் ஒரு எட்டு பார்த்து வரலாம் என்று கிளம்பியது.
அக்கம் பக்கத்தில் இருந்தாலும் சத்தம் கேட்டு வரட்டும் என்று “ம்ம்மே ம்ம்ம்மேஹ் ம்ம்மே” என கத்தியபடி சென்றது. வீட்டில் அரவமே இல்லை. கோட்டை சுவர் மீது தாவி நின்று கத்திப் பார்த்தது.பயனில்லை. மறுபடியும் கீழே இறங்கி கம்மாக்கரைக்கு வந்தது.

வலு வத்திப் போனது. கத்துவதை நிறுத்திக் கொண்டது. தெற்குப் பக்கம் போய் தேடவா வேண்டாமா என்று யோசனையாய் இருந்தபோது.. ‘குள்ள அலமேலு’ தெற்குப் பக்கத்தில் இருந்து நாலு கால் பாய்ச்சலில் தலைதெறிக்க ஓடி வந்தது. மூச்சிரைக்க அழுகையும் கண்ணீருமாக அது கூறியதைக் கேட்டதும் ஒரு நிமிடம் இதயத் துடிப்பு நின்று விட்டது. அலமேலு பின்னால் தள்ளாடியபடி நடந்து தெற்குத் தெருவை அடைந்தது.

மச்சானேதான்.!
‘இரு வெள்ளைக் கோடு உள்ள தலை...!’
‘வெள்ளை வயிறு கொண்ட கருத்த உடல்...!’
‘குளம்பின் மேல்பகுதி வெள்ளையா இருந்த கால்...!’
‘இவை எல்லாம் தனித்தனியாகச் சிதறிக் கிடந்தது, கூடவே இரத்தக் கறையுடன் கத்தி...!’
‘பக்கத்தில் பரட்டையையும், சண்டியையும் கட்டிப் போட்டு இருந்தார்கள்.’

‘அது’ பரிதாபத்துடன் அங்கும் இங்கும் கத்தியபடி ஓடியது. மூலையில் சிந்தி இருந்த மச்சானுடைய இரத்தத்தை பார்த்ததும் அழுகைப் பீறிட்டு ஆக்ரோஷமாய் ஆரம்பித்தது.வெகுநேரம் பதறிப் பதறி உருகி உருகிக் கதறியபடியே இருந்தது.
----------------------------------------------------------------/--------------------------------------------------------------

இதயமில்லா ‘பரட்டை, சண்டி’ இருவரின் 'இன' வன்மத்திற்குப் பலியான காதலனை நினைத்து நித்தமும் உருகுகிக் கொண்டு இருக்கிறாள் என் தோழி ஜெயா...!
‘அந்த’ ‘செங்கன்னி’ ஆடு ‘ஜெயா’வின் கண்ணீரை இன்றும் துடைத்துக் கொன்டிருக்கிறது, ‘இந்த’ ‘குள்ள ஆடு’ அலமேலு.

நன்றி._/|\_

இப்படிக்கு..
குள்ள அலமேலு (வளர்மதி)

Reply · Report Post