பொன்னியின் செல்வன் - என் பார்வையில்


பாடத்தின் ஆரம்பத்திலேயே கதையை நினைத்துக்கொண்டு படத்தைப் பார்க்கவேண்டாம் என்பது போல ஒரு டிஸ்கி போட்டுவிடுவதால் (குரங்கை நினைத்துக்கொண்டு மருந்தைக் குடிக்காதீர்கள் என்பது போல) கதையை மறந்துவிட்டு படத்தைப் பார்க்கவேண்டியிருக்கிறது.

டிரெய்லரில் வந்த கமலின் குரலோடு கதையின் பின்னணி தொடங்குகிறது. அதோடு அப்படியே இணைந்து போர் நடக்கும் காட்சி பிரமாதமாக ஆரம்பிக்கிறது. அடடா அருமை என்று நிமிர்ந்து உட்காந்தால், போர் முடிந்து, ஆதித்த கரிகாலன் தன் வாளை வந்தியத்தேவனிடம் கொடுத்து, கடம்பூரில் சதி நடப்பதாகச் சொல்லி அது பற்றிய விவரங்களை தஞ்சை சுந்தர சோழரிடமும் தங்கை குந்தவையிடமும் சொல்லச் சொல்கிறான். அறிவாளியும் வீரனுமான கரிகாலன், சதி விவரங்களை திரும்பி தன்னிடம் வந்து சொல்ல ஆணையிடாமல் எதற்கு படுத்த படுக்கையாக இருக்கும் அரசனிடமும் அதிகாரமில்லாத இளவரசியிடமும் இந்த விவரங்களைச் சொல்லக்கோருகிறான் என்று யோசிப்பதற்குள் சட் சட் என்று காட்சிகள் மாறுகின்றன.

தஞ்சைக்கு வரும் வந்தியத்தேவன் சுந்தர சோழரைச் சந்தித்து நாட்டையே உலுக்கக்கூடிய சதி பற்றிய திடுக்கிடும் செய்தியை நேரடியாகச் சொல்கிறான். ஆனால் சு.சோழர் எந்த ரியாக்‌ஷனும் காட்டாமல் ‘தேவி தம்பிக்கு ஒரு டீ சொல்லு’ என்ற ரீதியில் அதைக் கையாள்கிறார். இது ஒரு உதாரணம். அதேபோல பழுவேட்டரையரின் கடுமையான சுரங்கத்திலிருந்து வந்தியத்தேவன் எப்படி வெளியேறினான் என்பதே தெரியவில்லை. அதெல்லாம் கதையில் பாக்கக்கூடாது என்று நாமே சமாதானம் செய்துகொள்ள வேண்டியதுதான். கோரமான கம்சனின் உருவத்தில் முதன்முதலாக வந்தியத்தேவனைப் பார்க்கும் குந்தவை திடுதிப்பென்று அவனிடம் காதல் கொள்கிறாள். திரைக்கதை இப்படி ஜம்ப் செய்து நகர்வது கதையை நன்கு படித்தவர்களுக்கே சிறிது ஜெர்க் குடுக்கும்போது, கதை படிக்காத, குறிப்பாக அயல் மொழிக்காரர்கள் இதை எப்படிப் புரிந்து கொள்வார்கள் என்ற குழப்பத்தைத் தருகிறது.

ஆதித்த கரிகாலன், வந்தியத் தேவன், நந்தினி ஆகியோரின் பாத்திரப் படைப்புகள் நன்றாக வெளிப்பட்டு இருக்கின்றன. அதற்கு அவர்கள் திரையில் தோன்றும் நேரமும் ஒரு முக்கியக் காரணம். மற்றப்பாத்திரங்கள் சட் சட் என்று மறைவதாலோ என்னவோ, அவ்வளவு ஆழமாகப் பதியவில்லை. நல்லவேளையாக கவர்ச்சிக் கன்னியாக வரும் பூங்குழலி ‘நிலா அது வானத்து மேலே’ என்று பாடவில்லை சோழ சாம்ராஜ்யத்தின் முதல் மந்திரியான அநிருத்தர் ஏதோ வாயில் காவலனைப் போல இரண்டொரு சீன்களில் வருகிறார். சுந்தர சோழரின் நெருங்கிய நண்பரான அவரை சோழர் படத்தில் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.

மற்றபடி கலை, உடைகள், சண்டைக்காட்சிகள் ஆகியவை நன்றாகவே இருக்கின்றன. முழுக்கக் கற்பனைக் கதையான பாகுபலியோடெல்லாம் பொசெவை ஒப்பிடுவது அபத்தம். திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் கதை ஒரே சீராக எல்லாருக்கும் புரியும்படி வந்திருக்கும்.

இனி கதை படித்த /வரலாறு அறிந்தவர்களுக்கு….

கல்கி ஒரு மகத்தான கதை சொல்லி. கதையில் அவர் குந்தவையையும் அருண்மொழியையும் ஆதித்த கரிகாலனைச் சந்திக்க வைக்காததற்குக் காரணம் இருக்கிறது. சந்தித்தால் மந்தாகினியைப் பற்றிய உண்மையைச் சொல்லி மதுராந்தகனுக்குப் பட்டம் அளிப்பதை வற்புறுத்துவார்கள் என்பதே அதன் பின்னணி. ஆனால் படத்தில் குந்தவை ஆ.கரிகாலனைச் சந்திப்பது மட்டுமல்லாமல் மூக்குடைபட்டுத் திரும்புகிறாள். இது அந்தப் பாத்திரத்தின் கனத்தைக் குறைக்கிறது. அதே போல சதி விவரம் கதையின் முக்கிய மாந்தர்களுக்கு வெவ்வேறு காலகட்டத்தில்தான் தெரியவருகிறது. அப்போது அவர்களால் ஏதும் செய்ய முடியவில்லை என்பதே கதையின் முடிச்சு. படத்தில் எல்லாருக்கும் ஆரம்பத்திலேயே தெரிந்துவிடுகிறது. ஆனாலும் சும்மா இருக்கிறார்கள். வந்தியத்தேவனைப் போல கதையைச் சீராகக் கொண்டுசெல்லும் ஆழ்வார்க்கடியான் பாத்திரம் காமெடியனாக்கப்பட்டு விட்டது பெரும் குறை.

வீரநாராயணபுரம் கோவிலில் திருமலை பாடும் பாசுரங்கள், சேந்தன் அமுதன் பாடும் திருமுறைகள், செம்பியன் மாதேவியின் கற்றளித் திருப்பணி என்று சோழர் காலத்து ஆன்மிகத்தை கல்கி கதை முழுதும் தெளித்திருப்பார். படத்தில் ஒரு இடத்தில் கூட இந்த விஷயங்கள் வந்துவிடாமல் கவனமாக இருந்திருக்கிறார்கள்.

அதேபோல அருண்மொழியைச் சிறைபிடிக்கச்செல்லும் சோழர் கடற்படையை கதையில் அரபியர்கள் அழிப்பார்கள். பின்னாளில் ராஜராஜன் கடற்படை அமைத்து கடற்கொள்ளையர்களை ஒடுக்க இது காரணம் என்று கல்கி அந்த நிகழ்வை அமைத்திருப்பார். ஆனால் படத்தில் அவர்களைக் காணோம். பாண்டியக் குழந்தையை அமரபுஜங்கன் என்று அறிமுகப்படுத்துகிறான் ரவிதாசன். கதையில் அவன் பெயர் பராங்குச நெடுஞ்செழியன். அமரபுஜங்கன் ராஜராஜனின் சமவயதினன். இதையெல்லாம் சொல்லப்போனல் படத்தைப் படமாகப் பாருங்கள், நாவல் படமாகும் போது திரைக்கதை அமைப்பது கஷ்டம் தெரியுமான்னு ஒரு க்ரூப் வந்துவிடும். ஆகவே இத்தோடு நிறுத்திக்கொள்வோம்.

மொத்தத்தில் கதை பற்றி அவ்வளவாகத் தெரியாதவர்களுக்குப் படம் பிடிக்க வாய்ப்பு இருக்கிறது.

தன் வாழ்வு முழுவதும் மதுவுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்ட கல்கியின் பாத்திரம் ஒன்று குடித்துவிட்டு ஆடுவது போன்ற அந்தக் காட்சியைத் தவிர்த்திருக்கலாம். கல்கியின் படத்தைக் காட்டாவிட்டாலும் அது கல்கிக்குச் செய்யும் மரியாதையாக இருந்திருக்கும்.

Reply · Report Post