தேவர் மகன் - சாதி ஒழிப்புப் பிரச்சாரமா/ சாதி ஆணவத்தின் சின்னமா?


தேவர் மகன் - 2 அறிவிப்பு வந்திருக்கிற வேளையில், முதல் பாகம் பற்றி அண்மையில் பல நண்பர்களுடன் விவாதித்த புள்ளிகளை கோத்து வைக்கவேண்டி எழுதிய ட்விட்லாங்கர். மதுரைக்கு வந்த எவரும் நாற்காலியில் சிவாஜி அமர்ந்திருக்க கமலஹாசன் பின்னால் கைகட்டி நின்றிருக்கிற படத்தில் சிவாஜி முகத்தில் முத்துராமலிங்கத் தேவரின் படத்தையும், கமலின் முகத்திற்கு பதில் ஃப்ளெக்ஸ் பேனர் அடிக்கிற சல்லிப்பயல்களின் முகத்தையும் ஒட்டி பேனர் கட்டி மைக்செட்டில் போற்றிப் பாடடி பெண்ணே என்று மஞ்சள் நீராட்டு விழாக்களைக் கூட அலறவிடுவதைப் பார்க்க நேரிடுவது இயல்பான நிகழ்ச்சி.

தேவர் மகன் தமிழின் மிக முக்கியமான படம். கமலஹாசனின் சாதி ஒழிப்புக் கருத்தியலில் நேர்மை இல்லாமல் இல்லை. ஆனால், படத்தின் பாதிப்பை முற்றிலுமாக “அரசியல் சூழ்ச்சி” என்று புறந்தள்ளுவதும் ஏற்புடையதல்ல.

எஸ்.எஸ்.ஆர் நடிப்பதாக இருந்து பின்னர் சிவாஜி கணேசன் முடிவானதும், பரதன் இயக்குவதாக இருந்து பல்வேறு கருத்து வேறுபாடுகளால் அவர் பாதியில் பிரிந்து சென்றது வரைக்கும் அனைவரும் அறிந்ததே.

தேவர் மகன் - காட்ஃபாதரின் அடிநாதமான unlikely succesor என்கிற சரத்தை மையமாகக் கொண்ட படமே. அண்ணன் தலைவாசல் விஜய் காட்ஃபாதரின் சான்னி கால்லியோனி போல தலைமைபண்பின்றி சுற்றித் திரிவதால் வேறு வழியின்றி கமலஹாசன் பெரியதேவரின் நாற்காலியில் அமர நேர்கிறது. நிற்க.

இளையராஜா செய்த மாபெரும் வரலாற்றுப் பிழை போற்றிப் பாடடி பெண்ணே, அது எங்கெல்லாம் யாரையெல்லாம் இழித்து பாடப்படுகிறது என்பதற்குள்ளெல்லாம் போகக்கூட தேவையில்லை.

“பெரியத்தேவர் மகன்” என்பதைத்தான் சக்தி படத்தில் பத்து இடங்களிலாவது சொல்கிறார். அதைச்சொல்லும் போது அவருக்கு சாதிய அடையாளம் குறித்த பிரக்ஞை இருப்பதாகவோ, அதைக் களைய அவர் முற்படுவதாகவோ கூட தெரியவில்லை. கௌதமியை அறிமுகப்படுத்துகையில் கூட, ராஜு நம்ம தேவருக்கு சமமான சாதி என்று குறிப்பிட்டு அதை ஒரு மதிப்பீடாகவே, ஒரு அடையாளமாகவே வெளிநாட்டில் படித்த சக்தி முன்னிறுத்துகிறார். சக்தியின் இந்த நிலைப்பாட்டிற்கும் கள்ளர் ஓய் நீர் என்று சொல்லும் மதன் பாப்பிடம் மறவன் என்று மீசை முறுக்கும் சாதிவெறியர் நாசருக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?

படத்தின் மிக முக்கியக் காட்சியாக - ராஜா போ.பா.பெ-வுக்கு நேரெதிர்மாறாக, அதே தொனியில் ஒலிக்கிற பின்னணி இசையின் ஊடே தேவாலயங்களில் எழும் மணியோசை சகிதம், “baptism" ஞானஸ்நானம் அடைந்து Godfather துணையுடன் பெயர்சூட்டப்படுகிற சக்திவேல் தேவராக முழுதாக தன்னை ஒப்பனை செய்துகொண்டு காட்சி தருகிற இடத்தை நான் பார்க்கிறேன். அந்தத் தருணத்தில் நிகழ்கிற ரசவாதம் என்ன? பார்வையாளருக்கு கடத்தப்படுகிற உணர்வு என்ன? பெரியத்தேவரின் ஆகப்பெரும் வழித்தோன்றலாகத் தானே கமல் அந்த இடத்தில் தன்னை நிறுத்திக்கொள்கிறார்? முகச்சவரம் செய்து வவ்வால் மீசை, அங்கவஸ்திரம் என்று தனது ஃபங்க்-தாடி-ஜீன்ஸ் அடையாளத்தை முற்றும் துறந்து முழுக்க தன்னை பெரியத்தேவரின் இடத்தில் செலுத்திக்கொள்கிறார்.

இதே இசை சில நிமிடங்களுக்கு முன்னால் சோககீதமாக பெரியத்தேவரின் மரணத்திலும் “வானம் தொட்டுப் போன” என்று ஒலிக்கும். ஆக, சிவாஜியின் மறு உருவம் கமல் என்பது சேதி. அவர் கடைசி ரீலில் சொல்லும் கல்வி இதே இசைக்கோவையில் ”வெட்டருவா தாங்கி வீசுகிற ஊரில்” என்று சொல்வது முத்தாய்ப்பான திரைக்கதையாக்கம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அப்போதும் அய்யனார் அரிவாளால் மாயன் தலையை வாங்கிக்கொண்டு நிற்கும் சக்தியிடமிருந்து பார்வையாளனுக்கு மிகவும் குழப்பமான ஈசாப் நீதிக்கதை தான் கிடைக்கிறது. அந்த இடத்திலும் தேவர் காலடி மண்ணே என்றுதான் படம் முடிந்துவேறு தொலைக்கிறது.

படத்தின் அட்டகாசமான நடிப்பு, பின்னணி இசை, ஒளிப்பதிவு, திரைக்கதை, வசனம் - இன்னும் பல படிமங்கள் - பஞ்சபூதங்களையும் கதையம்சமாகக் கொண்டிருப்பது பற்றி கூட பதிவுகள் உண்டு (நிலம் - வேலிச்சண்டை, காற்று - சாந்துபொட்டு பாட்டில் கூட நுட்பமாக சேர்க்கப்பட்ட சிலம்பு சண்டை ஒலி, நெருப்பு - தேரோட்டத்தில் வெடி, நீர் - பல குடியிருப்புகளை மாயன் மூழ்கடிப்பது) என்று நுணுக்கங்களை ஆயிரம் முறை சிலாகிக்கலாம். ஆனால், படத்தினால் கடத்தப்படுகிற சாதி ஒழிப்புக் கூறுகள் நீர்த்துப் போனவையாகவும், அதன் சாதி ஆணவக்கூறுகள் மிக வலுவானதாகவும் இருப்பதை மறுப்பதற்கில்லை.

Reply · Report Post