annakannan

Annakannan · @annakannan

25th Feb 2017 from TwitLonger

யோசனை: மரக் கன்று நட, புதிய நடைமுறை


ஜெயலலிதாவின், 69ஆவது பிறந்த நாளை ஒட்டி, 69 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம், 2017 பிப்.24 அன்று தொடங்கியது. அதே நேரத்தில், இதற்கு முன், அவரது பிறந்த நாள்களில் நடப்பட்ட, 3.3 கோடி மரக் கன்றுகள் என்னவாயின எனத் தினமலர் கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து, வனத்துறை அதிகாரிகளை கேட்டபோது, 'எங்கள் பணி, மரக்கன்றுகள் நடுவதுடன் சரி. பெரும்பாலான இடங்களில் முறையான பராமரிப்பு மேற்கொள்ள முடிவதில்லை. அதற்கு, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொது மக்களின் ஒத்துழைப்பும் தேவை. சமீப ஆண்டுகளாக, ஊரக வளர்ச்சித் துறையிடம் மரக்கன்றுகளை கொடுத்து விடுகிறோம். அதனால், அவர்கள் தான் பொறுப்பு' எனக் கூறியதாக அந்த நாளேடு தெரிவித்துள்ளது.

பொறுப்புகளைக் கை கழுவுவது, இன்னொருவரைக் கை காட்டுவது, பல மட்டங்களில் வழக்கமாக நடைபெறும் ஒரு நிகழ்வே. இதற்குத் தெளிவான திட்டமிடலும் பொறுப்புகளைப் பகிர்தலும் வலுவான தகவல் தொடர்பும் தேவை. இந்தச் சிக்கலைப் பொறுத்த வரை, மரக் கன்றை நடும் முன்பே, அதனைப் பராமரிக்கும் பொறுப்பினை ஒருவரிடமோ, ஒரு குழுவினரிடமோ ஒப்படைத்திருந்தால், இந்தப் பிரச்சினைகளைத் தவிர்த்திருக்கலாம். தெருவாசிகள், குடியிருப்பு வாசிகள், கல்லூரி மாணவர்கள், ஊழியர்கள், தொண்டர்கள், தன்னார்வலர்கள்.... என மரக் கன்று நடப்படும் இடத்திற்கு ஏற்ப, பொறுப்பாளிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒருவர் தொடர்ந்து கவனிக்க இயலாது எனில், வாரத்துக்கு ஒரு நாள் என எழுவரிடம் ஒப்படைக்கலாம். திங்கள் இவர், செவ்வாய் அவர் என வரிசை முறை அமைக்கலாம். இவர்கள் மரக் கன்றுக்கு நீர் பாய்ச்சுவது, வேலி அமைப்பது, பாதுகாப்பு அளிப்பது ஆகிய பணிகளைச் சுழற்சி முறையில் மேற்கொள்ளலாம்.

ஒப்புக்கொண்டபடி, பொறுப்பாளி ஒருவரால் இதை நிறைவேற்ற முடியாவிட்டால், அவர் இன்னொருவரிடம் இதை ஒப்படைக்கலாம். இன்னொருவர் கிடைக்கும் வரை, அவரே இதை நிறைவேற்ற வேண்டும். தண்ணீர், வேலி, உரம் உள்ளிட்ட உதவிகளுக்கு அவர் வனத் துறை, குடிநீர் வாரியம், மாநகராட்சி / நகராட்சி / ஊராட்சி உள்ளிட்ட துறைகளை அணுகலாம். குப்பையிலிருந்து உரம் தயாரித்து, நகர நிர்வாகமும் இவர்களுக்கு உதவலாம்.

இந்த மரக் கன்றுகளுக்கு எண் இட்டு, புவியிட அமைவைக் குறியிட்டு, இணையத்தில் பட்டியலிட்டு, ஒவ்வொரு நாளும் அதற்கு நீர் வார்த்த பிறகும் பாதுகாப்பை உறுதி செய்த பிறகும் அதை செல்பேசிச் செயலி வாயிலாக உறுதி செய்யலாம்.

நீர்த் தட்டுப்பாடு உள்ள இடங்களில் கழிவு நீரை மறுசுழற்சி செய்து, இவற்றுக்குத் திருப்பி விடலாம். அதுவும் கிடைக்காத இடங்கள் எனில், அங்கிருந்து அவற்றை வேறு இடங்களுக்குப் பெயர்த்து, வேறு பொறுப்பாளிகளிடம் ஒப்படைக்கலாம். பொறுப்பாளிகளே சரிவரக் கிடைக்காத நிலையில் மரக் கன்றுகளை நடுவதைத் தவிர்க்கலாம்.

ஒவ்வொரு மரக் கன்று நடும்போதும் இந்த நடைமுறையைக் கையாண்டால், பின்னர் அவை நன்முறையில் வளர்வதை உறுதி செய்ய முடியும். இந்த முறையில், வெறும் விளம்பரத்திற்காக மரக் கன்று நடுவதும் சடங்காகவும் சம்பிரதாயமாகவும் இதைக் கையாளுவதும் தவிர்க்கப்படும்.

Reply · Report Post