annakannan

Annakannan · @annakannan

1st Feb 2017 from TwitLonger

கடலில் கச்சா எண்ணெய் - சில யோசனைகள்


சென்னை அருகே கடலில் கப்பல்கள் மோதி, கச்சா எண்ணெய் வெகுவாகக் கலந்துள்ளது. இதனை அப்புறப்படுத்தும் பணி மந்தமாக நடைபெற்று வருகிறது. இதைத் திறம்பட நிகழ்த்த, எனக்குத் தோன்றிய சில யோசனைகள்.

எண்ணெய் அடர்த்தியானது என்பதால், கடல் மேல்பரப்பில் மட்டுமே பரவியிருக்கும். ஆனால், நீருக்கடியில் உள்ள உயிரினங்கள் மேற்பரப்பிற்கு வரும்போது, அவை பாதிப்புக்கு உள்ளாகும். எனவே, அவை இன்னும் உயிருடன் இருக்கும் பட்சத்தில், நீரடி வீரர்களை உரிய கவசங்களுடன் அனுப்பி, அவற்றை உடனடியாகப் பிடித்து, வேறு இடங்களில் பாதுகாக்க வேண்டும். இயல்பு நிலை திரும்பியதும் அவற்றை அங்கே மீண்டும் விடலாம். இதற்கென அவசரமாகக் கடல்வாழ் உயிரினச் சரணாலயம் ஒன்றை அமைக்க வேண்டும். இது, நகரும் வாகனங்களாகவும் இருக்கலாம்.

கடற்பரப்பில் எண்ணெய் வேகமாகப் பரவி வருகிறது. உத்தேசமாகப் பத்துக் கடல் மைல் தொலைவு வரை இது பரவியிருப்பதாகக் கொண்டால், இந்தப் பணியைப் பத்துப் பகுதிகளாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு கடல் மைலுக்கும் ஒரு குழு. ஒவ்வொரு குழுவிலும் 30 எந்திரப் படகுகள். ஒவ்வொரு கடல் மைல் சுற்றளவிலும் 30 படகுகள் பணியாற்ற வேண்டும். மொத்தம் 300 படகுகள்.

இவற்றில் பெரிய அளவிலான உறிஞ்சிகளைக் (ஸ்பாஞ்சு) கொண்டு எண்ணெய்ப் படலங்களை உறிஞ்சி, மோட்டார் படகில் உள்ள கலங்களில் எந்திரங்கள் வாயிலாக உடனே பிழிய வேண்டும். நீரும் எண்ணெயும் சேர்ந்து பிழியப்பட்டால், இங்கும் எண்ணெய் மிதக்கும். இதனை வடிகட்டி, நீரை மீண்டும் கடலில் விட வேண்டும். எண்ணெயைச் சேமித்துக் கரைக்குக் கொணரலாம். அல்லது, இன்னொரு பெரிய / சிறிய கப்பலுக்கு ஏற்றலாம்.

இந்தப் பணியை மென்பொருள் மூலம், தானியக்கமாய் ஆக்க முடிந்தால் வேலை இன்னும் சீக்கிரமாய் முடியும்.

இன்னொரு வகையில், டன் கணக்கில் உறிஞ்சிகளை விமானம் / ஹெலிகாப்டர் வழியாக இப்பகுதியில் கொட்ட வேண்டும். இவை அனைத்தையும் படகில் சென்று, திரட்டி வந்து எண்ணெயைப் பிரித்து அகற்றலாம்.

கரையில் படிந்த எண்ணெய் சற்று நிலத்தின் உள்ளும் சென்றிருக்க வாய்ப்பு உண்டு. எனவே ஒட்டுமொத்தமாக இந்தக் கடற்கரைகளை சீல் செய்து, சதுர அடி சதுர அடியாக மண்ணை 5 அடி ஆழத்திற்கு எடுத்து, அதனை நீரில் பல முறைகள் அலசி, மீண்டும் அதே இடத்தில் பதிக்க வேண்டும். இதிலும் எண்ணெயைத் தனியே பிரித்துச் சேமிக்க வேண்டும்.

இதற்கெனத் தனி அமைப்பும் நீர்ச் சுழற்சித் திறனும் கொண்ட வாகனங்களைக் கடற்கரையில் ஆயிரம் எண்ணிக்கையில் நிறுத்த வேண்டும். இவற்றுக்குத் தடையில்லா மின்சாரமும் நீர்ப் பங்கீடும் வழங்க வேண்டும்.

பாறைகளைக் கையாள, தனிக் குழுக்களை அமைக்க வேண்டும்.

சுற்றுச் சூழலுக்கு நெடுநாள் பெரும் கேடு விளையும் என்பதால், இதனை அவசர நிலைப் பணியாக எடுக்க வேண்டும். இதில் பணியாற்றுபவர்களுக்கு இரு மடங்கு ஊதியம் அளிக்க வேண்டும். அத்துடன் மருத்துவ உதவிகளையும் அளிக்க வேண்டும்.

Reply · Report Post