புரிந்துகொள் புயலே...


ஒவ்வொரு மரமும்
ஒரு ‘பச்சை’க் குழந்தையென்று சொன்னபின்னும்
எப்படித்தான்
பிள்ளைக்கறி யுண்டாயோ பெரும்புயலே!

இலை விழுந்தாலும்
இழவு கேட்கும் சமூகம் நாங்கள்
வனமே பிணமாயின் தாங்குவ தெங்ஙனம்?

எங்கள் குடும்ப அட்டைகளில்
குறிக்காத உறுப்பினர்க்கு
மரங்கள் என்று பெயர்

இன்று
ஒவ்வொரு தெருவிலும் ஒப்பாரி

விருட்சங்களின் பட்சிமொழி
புயலுக்குப் புரியாமலும்
புயலின் ஓநாய்மொழி
விருட்சங்கள் அறியாமலும்
பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த பிறகு
தொடங்கிற்று யுத்தம்

முகிலினம் இடிபட
பகல்வெயில் இருள்பட
பெருமழை தரைதொட
பேய்ப்புயல் கரைதொட

வேர்கள் பிரிந்தன மண்ணை;
வீழ்ந்து கிடந்தது சென்னை

கவிதையைத் தப்புத் தப்பாய்
வாசிக்கிறாயே வார்தாவே

போரிடும் உலகத்தை
வேரொடு சாய்க்கச் சொன்னால்
வேரிடும் உலகத்தைப்
போரொடு சாய்த்துப் போய்விட்டாயே

பிராணன் பறித்ததும் காற்றுதான்
பிராண வாயுவும் காற்றுதான்
வெறுக்க மாட்டோம்; வெற்றி கொள்வோம்
ஒரு மரமிழப்பின் இருமரம் நடுவோம்

நாய்கள் கனவுகண்டால்
எலும்புமழை பொழியும்
நாங்கள் கனவுகண்டால்
விதையோடு மழைபொழியும்

வீதிகள் தோறும் வனம் செய்குவோம்
ஊரெங்கும் இந்த
ஒற்றைக்கால் தவங்களை
உற்பத்தி செய்குவோம்

புரிந்துகொள் புயலே
வீழ்த்துவதுன் விளையாட்டென்பதையும்
எழுவது எம் பொழுதுபோக்கென்பதையும்

Reply · Report Post