கபாலி vs மெட்ராஸ்


கபாலி. படம் வெளிவந்த ஒரு வாரத்தில் ஆயிரக்கணக்கில் விமர்சனங்களை எழுதிக்குவித்திருக்கிறது தமிழ்ச் சமூகம். ரஜினிசார், ஆயிரம் ரூபாய் டிக்கெட், நெருப்புடா, ஒரு நாளில் நூறு கோடி போன்ற விஷயங்களை மீண்டும் அசை போடப் போவதில்லை.

அட்டக்கத்தி வெளிப்படையாக ”அரசியல்” பேசாத படம் இல்லை தான். என்றாலும் வழக்கமாக வீட்டில் ஆக்கிப்போட்டு மாட்டுக்கறி சாப்பிடுகிற ஒரு சமூகத்தின் நிலம், மொழி, காதல் ஆகியவற்றையே நுட்பமாக அந்த படம் நமக்கு காட்டுகிறது. மெட்ராஸ் திரைப்படம் நாம் வாழும் பேட்டைகளுக்கு நடுவே எழும்பியிருக்கும் சுவர்களில் அரசியல் பேசுகிறது. கபாலி நாம் அணிந்துகொண்டிருக்கிற உடைகளில் அரசியல் பேசுகிறது. மனித வாழ்விற்கு இன்றியமையாத உணவு, உடை, உறைவிடம் என எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்திருக்கும் பிரிவினை அரசியல் தான் ரஞ்சித்தின் களம்.
மேலோட்டமாக, தான் தொலைத்த இருபத்தைந்து வருட வாழ்க்கையைத் தேடுவதும், அது தொலையக் காரணமாய் இருந்த சிலரைப் பழிவாங்குகிற சாதாரண ஒருவரிக்கதையாகத் தான் இருக்கிறது. மெட்ராசும் அப்படித்தான். நண்பனைக் கொன்ற அரசியல் எதிரிகளைப் பழிவாங்குகிற சாதாரண வரி. இந்த வரியில் வர்க்க பேதம் உள்ளே நுழைக்கும் போது தான் கதை வலுப் பெறுகிறது. பிரமாதமான இசையும், யதார்த்தமான கதாபாத்திரங்களும் சேரும் போது படம் அடுத்த தளத்திற்கு செல்கிறது.
கபாலி பல இடங்களில் மெட்ராசை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துகிறது. அது மெட்ராசில் நடித்த நடிகர்களால் மட்டும் அல்ல. ஏரியாவில் நிறைய சுவர்கள் இருந்தாலும் மையத்தில் இருக்கிற பிரம்மாண்டமான சுவர் ஒன்றை ஆளும் வர்க்கம் தன்வசப்படுத்தி வைத்திருப்பது தான் மெட்ராசின் அடிநாதம். மலேசியர்கள், சீனர்கள் எல்லோரும் கோட்டும் சூட்டும் அணிந்திருந்தாலும் ஒடுக்கப்படுகிற கபாலி கோட்டும் சூட்டும் போடுவது தான் கபாலியின் அடிநாதம். (கைகளிலும் கழுத்திலும் கிலோ கணக்கில் தங்கமே அணிந்திருந்தாலும் சீனியோ, வீரசேகரனோ கோட் அணிந்திருப்பதாக எங்குமே காட்சிப்படுத்தப்படவில்லை) சுவரைப் போல கோட் என்பது ஒரு facade-ஆகவே பயன்படுத்தப்படுகிறது.

ஆரம்பக் காட்சியில் ரஜினி வாசிக்கிற “My father Balaiah" புத்தகம் ஒன்றினைப் போலவே தீண்டாத வசந்தம் என்கிற புத்தகத்தை கார்த்தி அறிமுகப் பாடலான சென்னை வட சென்னை பாடலில் வாசிக்கிறார். டோனி லீ - மலாய்க்காரர். டோனி லீயின் வலதுகரம் வீரசேகரன் - தமிழர். போலவே மெட்ராசில் கட்சித் தலைவராகவும் சுவரில் வரையப்பட்டிருக்கிற கிருஷ்ணப்பனின் மகனாகவும் வருகிற கண்ணன் பிறப்பால் ஒடுக்கப்படாத சாதியைச் சார்ந்தவராக இருக்கிறார். அவருக்கு பக்கபலமாக இருக்கிற மாரி ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரைப் போலவே சித்தரிக்கப்பட்டிருக்கிறார். கபாலி ஒடுக்கப்படுகிற மலேசியத் தமிழர். போலவே, காளி ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தவர். ரஜினி சொல்கிற “நண்டுக் கதை” தான் இரண்டு படங்களிலுமே விரிவாக பேசப்படுகிறது. இவர்கள் தவிர மெட்ராசில் வரும் விஜி என்கிற கதாபாத்திரம் முக்கியமானது. “உனக்கும் சேர்த்து தாண்டா பேசிகிட்டு இருக்கேன்!” என்று அன்பு எடுத்து சொல்வதற்கு காது கொடுக்காமல் கிருஷ்ணப்பனுக்கு அடியாளாய் வரும் நபர். இந்த விஜியை மாதிரியே எழுதப்பட்டிருப்பது கபாலியின் சீனி. மெட்ராசில் பெரிதும் கவனிக்கப்பட்ட ஜானி கதாபாத்திரத்திற்கும் கபாலியின் ஜீவாவிற்கும் கூட ஒப்புமை சொல்லலாம். இன்னும் சொல்லப்போனால், ”கபாலிண்ணே!” என்று மண்டியிடும் அந்த வாட்ச்மேன் அஞ்சி நடுங்கி உண்மையைச் சொல்வது போல காளி ஹோட்டலில் துரத்திப் பிடிக்கிற நபர் அன்பு ஏன் கொல்லப்பட்டார் என்று சொல்லும் காட்சி கூட ஒரே மாதிரி தான் தெரிகிறது.

அன்பு காளியிடம் இந்த சுவர் எப்படி ஒடுக்குமுறையின் சின்னமாக இருக்கிறது என்று காளி மற்றும் நண்பர்களிடம் சொல்லும் காட்சியைப் போலவே தான் அமீரிடம் கபாலி சொல்லும் அம்பேத்கர் - காந்தி இருவரின் உடை சார்ந்த அரசியலைப் பற்றிய வசனமும் அமைந்திருக்கிறது. ஆரம்பக் காட்சியில் நிகழும் பறவைகள் பற்றிய உரையாடலைத் தொடர்ந்து படம் முழுக்க பின்னணி இசையில் பறவைகளின் சப்தங்கள் கேட்டுக்கொண்டே இருப்பது (பாடல்கள்/ சண்டைக்காட்சிகள் தவிர) ஒரு நுட்பமான காட்சியமைப்பு. எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும், ஏன் சற்று முன் வெளிவந்த லிங்காவிலும் கூட பொதுவாக ரஜினியின் பிறப்பு ஒரு ரகசியமாகவே இருக்கும். அவர் சேரிக் குடிசைகளில் வளர்ந்திருந்தாலும் மாடமாளிகைகளின் மைந்தனாகவே எப்போதும் இருப்பார். கபாலியில் அதற்கு முரணாக அவரது மகளான யோகியின் பிறப்பு/ வளர்ப்பு பற்றிய ரகசியத்தை உடைப்பது என்பது கதையோட்டத்தின் மிக முக்கியமான அம்சமாகவே திரைக்கதை எழுதப்பட்டிருப்பது முத்தாய்ப்பு. அட்டக்கத்தி, மெட்ராஸ் - இரண்டு படங்களிலுமே சம்பிரதாயமாக கதை முடிந்தபின்னர் ஒரு காட்சி ஓட்டத்தில்ருந்து துண்டிக்கப்பட்டு படம் முடியும். அதே மாதிரி தான் கபாலியும் முடிகிறது. மெட்ராசின் இறுதியில் வரும் சமூகநீதிக் கல்விக்கூடத்திற்கும் ஃப்ரீ லைஃப் ஃபவுண்டேஷனுக்கும் கூட நாம் ஒற்றுமைகளைக் காண முடிகிறது.

கற்பி - ஒன்றுசேர் - போராடு. இதுதான் அம்பேத்கரின் கோட்பாடு. கற்பி என்று மெட்ராசில் சொன்ன ரஞ்சித் போராடு என்று கபாலியில் முழங்கியிருக்கிறார். ஒருவேளை தள்ளிப்போடப்பட்ட ஒன்றுசேர் என்பதை அடுத்து வெளிவரவிருக்கிற சூர்யாவின் படத்தில் சொல்வாரா என்று ஆவலுடன் காத்திருக்கிறேன். ஜெய்பீம்.

Reply · Report Post