'The Scholars' by WB Yeats - மூன்றாவது மொழிபெயர்ப்பு


கவிஞர் ஆத்மாநாம் 34 வருடங்களுக்கு முன்பு செய்திருந்த மொழிபெயர்ப்பால் உந்தப் பெற்று திரு செந்தில்நாதன் அதே கவிதையின் இன்னொரு மொழியாக்கத்தை ஒரு பதிவாகத் தந்திருந்தார்.

அவருடைய பதிவை இங்கே படிக்கலாம். https://medium.com/@chenthil_nathan/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-ad0abfd60495#.i3nnrv7bm

இரு மொழியாக்கங்களையும் படித்த பிறகு, நமக்குத் தெரிந்த அணுகுமுறையைக் கொண்டு மொழிபெயர்க்கலாம் என்று தோன்றியது. கவிதை மொழிபெயர்ப்பில் இன்றியமையாதவையாக எனக்குப் படுபவை:

ஊன்றிப் படித்தல்: கவிதையின் ஒவ்வொரு சொல்லும் வரியும் எவ்வாறு பொருள் கொள்கின்றன என்பதைப் பற்றிய துல்லியமான தெளிவு வேண்டும்.

சொற்சிக்கனம்: அடர்த்தியில்லாமல் கவிதையில்லை. எனவே, மொழியாக்கமும் கவிதையாக இருக்கவேண்டுமெனில் சொற்சிக்கனம் மிக அவசியம். கூட்டுதலும் நீட்டுதலும் தவிர்க்கப்பட வேண்டும்.

தாள லயம்: மொழியாக்கத்தில் சொற்களும் அவற்றின் ஒலியும் தொடர்ந்து வரும்போது ஒரு கதி உருவாகவேண்டும். இது மூலத்தில் இருப்பது போன்றே இருக்கவேண்டுமென்பதில்லை. ஆனால் தமிழுக்குரிய ஒத்திசைவோடு அமையவேண்டும். குறைந்தபட்சம் பிசகாமலாவது இருக்கவேண்டும்.

பிறழ்வு தவிர்த்தல்: மூலக் கவிதையில் காணப்படும் சொற்களை இயன்றவரை அப்படியே அவற்றின் பொருள் பிறழாமல் வருமாறு மொழியாக்கம் செய்த்ல் வேண்டும். கவிதை நம் தன்னிலையில் உருவாக்கக்கூடிய மனப்பதிவை மொழிபெயர்த்தால் அது பிறழ்வு. மூலத்துக்கும் மொழியாக்கத்துக்கும் உள்ள தொடர்பு எத்தருணத்திலும், இடத்திலும் துலக்கமாக இருத்தல் வேண்டும்.

மேலே கூறப்பட்டிருக்கும் எல்லா ”நெறிமுறைகளுக்கும்” ஒரு “இயன்றவரை” என்பதை சேர்த்துக்கொள்ளவும். முயல்வதும் இயல்வதும்தான் மொழிபெயர்ப்பின் சாராம்சம்.

இப்போது முலக் கவிதை:

The Scholars

WB Yeats

Bald heads forgetful of their sins,
Old, learned, respectable bald heads
Edit and annotate the lines
That young men, tossing on their beds,
Rhymed out in love’s despair
To flatter beauty’s ignorant ear.
All shuffle there; all cough in ink;
All wear the carpet with their shoes;
All think what other people think;
All know the man their neighbour knows.
Lord, what would they say
Did their Catullus walk that way?

என் மொழியாக்கம்

அறிஞர்கள்

தத்தம் தீவினையை மறந்துவிடும் வழுக்கைத் தலைகள்
வயதில் மூத்த, அறிவிற் சிறந்த, மதிப்புக்குரிய வழுக்கைத் தலைகள்
படுக்கையில் புரண்டு தவிக்கும் வாலிபர்கள்
தம் காதலின் நிராசையில்
அழகின் அறியாச் செவியிடத்தே
இச்சகம் பேசிட இசைத்த வரிகளை
திருத்தி, குறிப்புடன் உரைகள் இயற்றுவர்.

யாவரும்
அங்கே கால் தேய்த்து நடப்பர்; இருமுவர் மசியாய்.;
தத்தம் ஜோடுகளால் தரை விரிப்பை நையச் செய்வர்;
மற்றவர் நினைப்பதையே தாமும் நினைப்பர்;
அடுத்தவர் அறிந்தவனையே தாமும் அறிவர்.
ஆண்டவரே, எதைத்தான் இவர்களால் கூற இயலும்?
அவர்தம் காட்டுலசும் அவ்வழியே நடந்தான் என்றா?

நன்றி

Reply · Report Post