இலக்கியாவின் அப்பா தவளையான கதை

இலக்கியாவிடம் எதைக் கொடுத்தாலும் சாப்பிடத்தான் கொடுக்கிறார் போல என்று எடுத்து வாயில் வைப்பதால் இது நாள் வரை எங்கள் வீட்டில் இலக்கியாவின் கையில் அகப்படாத மட்டுப்படுத்தப்பட்ட விளையாட்டு உபகரணமே உண்டு.

இந்த வார இறுதியில் தேர்ந்தெடுத்த ஒலியெழுப்பும் சில விளையாட்டுப் பொருள்களை வாங்கி வைத்திருந்தோம்.
அதில் ஒன்று தவளை, குருவி, போன்று ஒலியெழுப்பும். இலக்கியாவின் கையில் அதைக் கொடுத்துவிட்டுப் பக்கத்தில் இருந்து வேடிக்கை பார்த்தேன். அந்த விளையாட்டுப் பொருளைச் முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்தார். கையால் பட படவென்று அடி போட்டார். எவ்வளவு அடிச்சாலும் தாங்குறானே என்பது போல அந்த விளையாட்டுப் பொருளையும், என்னையும் மாறி மாறிப் பார்த்தார் இலக்கியா.

நான் அந்த விளையாட்டுப் பொருளில் தவளைச் சத்தம் எழுப்பும் பொத்தானை அழுத்தினேன்.
"கொர்க்கு கொர்க்கு" என்றது அந்தத் தவளை முகம்.
என்னடா இவ்வளவு நேரமும் பேசாமல் கிடந்தவன் சத்தம் போடுறானே என்பது போல அந்த விளையாட்டுப் பொருளைக் கொஞ்சம் திகைப்போடு பார்த்தார் இலக்கியா. பார்வை என் பக்கமும் திரும்பி "என்னய்யா நடக்குது இங்க" என்றது போலப் பார்த்தார்.

"கொர்க்கு கொர்க்கு" இப்போது நான் தவளை போலக் கத்தினேன் இலக்கியாவைப் பார்த்து.
அதுவரை திரு திரு துறு துறு என்று முழித்துக் கொண்டிருந்த இலக்கியா,
இருந்த இடத்திலிருந்து குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க ஆரம்பித்தார்.

சரி இனி அந்த விளையாட்டுப் பொருளில் உள்ள தவளை முகத்தின் மேல் இலக்கியாவின் பிஞ்சு விரல்களை எடுத்து
மெதுவாக அழுத்தினேன்.
"கொர்க்கு கொர்க்கு" என்று அந்தத் தவளை மீண்டும் கத்த, இலக்கியா மீண்டும் பழையபடி திகில் முகத்தோடு.

"கொர்க்கு கொர்க்கு" மீண்டும் நான் தவளை அவதாரம் போட
இலக்கியா விழுந்து விழுந்து சிரிக்க
திரும்பவும் "கொர்க்கு கொர்க்கு" அவ்வ்வ் இப்பவும் நானே தான்.
மீண்டும் இலக்கியா காமேஸ்வரன் கணக்காகச் சிரிக்க.
வீடு முழுக்க ஒரே தொடர் தவளைச் சத்தம்.

தவளை மூஞ்சி விளையாட்டுப் பொருள் ஒரு மூலையில் கேட்பாரற்றுக் கிடக்குது.

Reply · Report Post