Thanks to Venkat. @donion on tfmpage/dhool - SOTD "தென்றல் வந்து தீண்டும்போது"
தேவகானம் என்று தமிழில் ஒரு வார்த்தை உண்டு; அதை வரையறுக்க யாரவது கேட்டால் இந்தப் பாடலைக் காட்டுங்கள். என்னால் இந்தப்பாடலைப் பற்றி மணிக்கணக்காகப் பேச முடியும். மேற்கத்திய இசையின் counterpoint, harmony, போன்ற விஷயங்களை வைத்துக்கொண்டும், கர்நாடக இசையின் பல்லவி, அனுபல்லவி, ராகம் அமைப்பு இவற்றை வைத்துக்கொண்டும், நாட்டார் இசையின் கூறுகளைக் கொண்டும், ஹிந்துஸ்தானி இசையின் இரவல்களைக் காட்டியும் விளக்கமுடியும். இவற்றைச் செய்வதற்கு இங்கு பலரும் இருக்கிறார்கள். இந்தப்பாடலை வேறு ஒரு கோணத்தில் அணுகிப்பார்க்கலாம்.
தமிழில் செவ்விலக்கிய பரிச்சயம் உள்ளவர்களுக்கு, வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா இவற்றைப் பற்றியும் அவற்றின் ஓசை நயங்களைப் பற்றியும் தெரிந்திருக்கும். பல நூற்றாண்டுகளாக எழுதப்பட்டு வரும் இந்தப் பாவகைகளில் 95% வெண்பா, ஆசிரியப்பாவில் அடங்கும், வஞ்சிப்பா கிட்டத்தட்ட 1% க்கும் குறைவு. நானும் முயற்சி செய்திருக்கிறேன், கலிப்பாவில் என்னால் எழுதமுடியும், வஞ்சிப்பாவில் எழுத எனக்கு அருகதை கிடையாது.
தமிழிசையின் அடிப்படை அசை (நேர்(1), நிரை(2) - ஆமாம், |நே(ர்)|, நி|ரை, ஓரசை ஈரசை). பிறகு அந்த அசைகளைக் கோர்த்து வார்த்தைகள் அமையும். தே|மா,(1,1), புளி|மா(2,1), கூ|விளம்(1|2), கருவிளம்(2|2), மிகவும் கடினமாது மூவசைகளாலும் (தே|மாங்|காய்) நாலசைகளாலும் (தே|மாந்|தன்|பூ) கோர்த்துப் பாடல்கள் எழுதுவது: வஞ்சிப்பாக்களின் உயிர். கம்பராமாயணத்தில் பலபாடல்கள் வஞ்சிப்பாக்களைச் சேர்ந்தவை. தமிழ்ப் பாக்களுக்கு ஓசைநயம் இயல்பாக உண்டு (வெண்பா - செப்பலோசை, உரையாடைப் போன்ற ஓசை, ஆசிரியப்பா - அகவல் ஓசை, சொற்பொழிவு ஆற்றுவதைப் போன்றது, கலிப்பா - துள்ளல்ஓசை, வஞ்சிப்பா - தூங்கல் ஓசை). இயல்பால் வஞ்சிப்பாவில் இசை நயம் அதிகம் உண்டும் (உரையாடல், சொற்பொழிவைக் காட்டிலும் தூங்கல் இசைநயமானதுதானே!).
கவிஞர் வாலி எனக்குத் தெரிந்தவகையில் இருபதாம் நூற்றாண்டின் வஞ்சிப்பா மன்னர்.

பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ
பாவையென்னும் பேரில்வரும் தேவன்மகன் நீயோ
பொன்னின்நிறம் பிள்ளைமனம் வள்ளல்குணம் யாரோ
மன்னன்எனும் தேரில்வரும் தேவன்மகன் நீயோ

இந்தப் பாடலை
பச்|சைக்|கிளி முத்|துச்|சரம் முல்|லைக்|கொடி யா|ரோ
112 112 112 11
பா|வை|யெனும் பே|ரில்|வரும் தே|வன்|மகன் நீ|யோ
பொன்|னின்|நிறம் பிள்|ளை|மனம் வள்|ளல்|குணம் யா|ரோ
மன்|னன்|எனும் தே|ரில்|வரும் தே|வன்|மகன் நீ|யோ

இந்தப்பாடல் தமிழ்த்திரையிசையின் உன்னதமான பாடல்களில் ஒன்று (விஸ்வநாதன் பெரும்பாலும் மெட்டுக்களில் செலுத்தும் கவனத்தை orchesteration-ல் செலுத்துவதில்லை. அவரது உதவியாளர்களான ஹென்றி டானியல், கோவர்த்தனம் போன்றவர்களின் துறை அது). ஆனால் இளையராஜா தமிழ்த் திரையுலகின் ஒரு (ஒரேயொரு) முழுமையான இசையமைப்பாளர் என்று சொன்னால் அது மிகையில்லை. அவருக்கு கர்நாடக இசை, மேற்கத்திய இசை, நாட்டார் இசை, தமிழ் இலக்கியம் (இளையராஜா முற்றிலும் வெண்பாக்காளால் ஆன ஒரு நூலை எழுதியிருக்கிறார் என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்). எல்லாவற்றுக்கும் மேலாக அவருக்குத் தெரிந்த அனைத்துத் துறைகளிலும் அவர் பரிசோதனைகளை நிகழ்த்திப் பார்க்கிறார், கடலின் கரையில் நின்று, கை நிறைய மண்ணை எடுத்து வாயில் போட்டு ருசிக்கும் ஒரு சிறு குழந்தையைப்போல அவரால் விளையாடிப்பார்க்க முடிகிறது. இந்தப்பாடல் அது, மண்ணின் ருசி.
வரிகளின் அமைப்பைப் பாருங்கள்,

{தென்றல்வந்து தீண்டும்போது என்னவண்ணமோ மனசிலே
திங்கள்வந்து காயும்போது என்னவண்ணமோ நெனைப்பிலே

வந்துவந்து போகுதம்மா, எண்ணமெல்லாம் வண்ணமம்மா

எண்ணங்களுக் கேத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா!

உண்மையம்மா உள்ளத நானுஞ்சொன்னேன்பொன்னம்மா சின்னக்கண்ணே}
(தென்றல்..)

{எவருஞ் சொல்லாமலே பூக்களும் வாசம்வீசுது
ஒ(உ)றவும் இல்லாமலே இருமன(ம்) (மே)தோபேசுது

எவருஞ் சொல்லாமலே குயிலெல்லாம் தேனாபாடுது
எதுவு (மி)ல்லாமலே மனசெல்லா(ம்) (னி)இனிப்பாயினிக்குது

ஓடைநீரோடை இந்தஉலகம் அதுபோல

ஓடு(ம்அ)மதுஓடும் இந்தக்காலம் அதுபோல

நெலையாஇல்லாது நினைவில்வரும் நெறங்களே}
(தென்றல்)

{ஈரம்விழுந்தாலே நிலத்திலே எல்லாந்துளிர்க்குது
நேசம்பொறந்தாலே உடம்பெல்லாம் ஏனோசிலிர்க்குது

ஆலம் விழுதாக ஆசைகள் ஊஞ்சலாடுது
அலையும் மனம்போலே அழகெல்லாம் கோலம்போடுது

குயிலே குயிலினமே அந்தஇசையால் கூவுதம்மா

கிளியெ கிளியினமே அதக்கதையாய் பேசுதம்மா

கதையாய் விடுகதையாய் ஆவதில்லையே அன்புதான்}

{இளையராஜா}
{2(ஜானகி)2(இ) -1(ஜா)1(இ) - 1(ஜா)}
{2(இ)2(ஜா) - 1(இ)1(ஜா) - 1(இ)}

நம்முடைய (கர்நாடக)இசை மரபில் மனிதனின் குரல் ஒரு வாத்தியம்; அது ஒரு அடிப்படை வாத்தியம் (பக்கவாத்தியம் மாதிரியல்ல). அந்த வாத்தியத்தை harmony - counterpoint இவற்றுக்குப் பயன்படுத்தியிருப்பதைப் பாருங்கள். இதன் அடித்தளத்தில் வாத்தியங்களால் ஆன orchesteration-ல் counterpoint இழையோடுவதையும் கேளுங்கள்.

வார்த்தைகளின் அமைப்பில்,
ஒவ்வொரு சோடி வரிகளும் ஒரே நெடில் எழுத்து (ஓ, உ, ஆ) ஓசைகொண்டு முடிகிறது. வார்த்தைகள் எல்லாம் பெரும்பாலும் மூவசைகளாலும் நாலசைகளாலும் ஆனவை. ஒரு சில விதி விலக்குகளைத் தவிர.
ஓடைநீரோடை இந்தஉலகம் அதுபோல
ஓடு(ம்அ)மதுஓடும் இந்தக்காலம் அதுபோல
ஆனால் முற்றிலும் இலக்கண இரும்புப் பெட்டிக்குள் அடைபடமால் திமிறிவரும் வார்த்தைகள்தான் இந்தப்பாடலின் விந்தை உணர்வை நிலைநாட்ட உதவுகின்றன). இசையைப் பொருத்தவரை அந்த விலகல்கள் பத்திகளுக்கு இடையில் வார்த்தையின்றி வரும் தனியிசையால் சாத்தியப்படுவதைப் பார்க்கலாம் (அது இளையராஜாவின் முத்திரை). குறிப்பாக 'எவரும் சொல்லாமலே' பத்திக்கு முன் வரும் ஊடு இசையில் ஒரு விடிவின் துவக்கத்தை உணரலாம்.
பாடலில் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தைகளைப் பட்டியல் இட்டுப்பாருங்கள்; தென்றல், திங்கள், பூக்கள், தேன், குயில், கோலம், ஊஞ்சல், இனிப்பு, ஈரம், நேசம், குயில், கிளி, துளிர்ப்பு, சிலிர்ப்பு,... அவற்றுடன் இடையிடைவரும் முரண் இசைக்கு ஆழம் சேர்க்கிறது; உண்மை (எப்பொழுதும் கசப்பு), நெலையா இல்லாது, அலையும் மனம், விடுகதை. இந்த முரண்கள் பாடலில் சேர்ந்தவாறு வராமல் நெடுகிலும் தூவப்பட்டிருப்பதைக் காணுங்கள்.
இளையராஜா - ஜானகி குரல் அவற்றில் இழையோடும் மெல்லிய சேர்ந்திசை - இடையிடையே இளையராஜாவின் இசைப்பிறழல்கள் பாடலுக்கு இன்னுமொரு தளத்தில் ஆழம் சேர்க்கின்றன. இசையில் குறிப்பாகச் சொல்லப்பட வேண்டிய விஷயம் - ட்ரம்ஸைக் கையாண்டிருக்கும் விதம், அது பாடலின் ஓசை நயத்திற்கு நங்கூரமிட்டு நிறுத்துகிறது. ஆனால் இசையைப் பற்றி எழுத வேறு விடிகாலை எனக்கு வேண்டும்.

Reply · Report Post