KalaignarKarunanidhi · @kalaignar89
18th Jan 2015 from TwitLonger
கேள்வி :- சர்வதேசச் சந்தையில் எண்ணெய் விலைகள் வெகுவாகச் சரிந்துள்ள நிலையில், இந்திய அரசு அவற்றின் மீதான கலால் வரியை உயர்த்திட முடிவு செய்திருக்கிறதே?
பதில் :- பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதைப் போலக் காட்டிக் கொண்டு, அதே நேரத்தில் பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி லிட்டருக்கு இன்று இரண்டு ரூபாய் மேலும் உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் அதன் பலன் மக்களுக்குக் கிடைக்கவிடாமல், பெட்ரோல், டீசல் போன்றவற்றுக்கு கலால் வரியை மத்திய அரசு உயர்த்தி வருகிறது. பெட்ரோல், டீசல் விலையை வெளிப்படையாக உயர்த்தினால் மக்களின் கண்டனத்தைச் சந்திக்க வேண்டு மென்பதற்காக, கெட்டிக்காரத்தனமாக நடந்து கொள்வதைப் போலக் காட்டிக் கொள்ள, அவற்றின் மீதான கலால் வரிகளை உயர்த்திட எண்ணுகிறார்கள். தனியார் எண்ணெய் நிறுவனங்கள் அதிக இலாபம் பெற்றிட வேண்டும் என்பதற்காகவே மத்திய அரசு இவ்வாறு செய்துள்ளது. கலால் வரியை ஏற்கனவே உயர்த்தியதன் மூலம், மத்திய அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு சுமார் 68 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கக் கூடும். தற்போது செய்துள்ள வரி உயர்வின் மூலம் அரசுக்கு மேலும் 20 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதை நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் எல்லாம் கண்டித்திருக்கின்றன. கடந்த நவம்பர் மாதத்திலிருந்து பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி மட்டும் இதுவரை நான்கு முறை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் கச்சா எண்ணெய் விலை 111 டாலராக இருந்தது, தற்போது 46 டாலராக விலை குறைந்துள்ளது; அதாவது 60 சதவிகித அளவுக்குக் குறைந்துள்ளது. ஆனால் இந்த அளவுக்கு பெட்ரோல், டீசல் விலைகளைக் குறைத்து, பலன் முழுவதையும் நுகர்வோருக்கு வழங்கிட மத்திய அரசுக்கு மனமில்லை. மத்திய அரசின் இந்த முடிவுக்கு தி.மு. கழகத்தின் சார்பில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, சர்வதேச சந்தையில் சுமார் 60 சதவிகிதம் வரை கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கும் போது, வெறும் 13 ரூபாய் அளவுக்கு மட்டுமே பெட்ரோலின் விலை குறைக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் 45 ரூபாய் வரை குறைத்திருக்க வேண்டும். அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் வரியோடு சேர்த்து முப்பது ரூபாய்க்குத் தான் விற்க வேண்டும். ஆனால் நேற்றுவரை ஒரு லிட்டர் பெட்ரோல் 63.94 ரூபாய்க்கு விற்றது, இன்று முதல் 61.38 ரூபாய்க்கு வந்துள்ளது. அதைப் போலவே ஒரு லிட்டர் டீசல் விலை 53.78 ரூபாயிலிருந்து இன்று முதல் 51.34க்குக் குறைக்கப்பட்டுள்ளது. இது மேலும் குறைக்கப் பட வேண்டுமென்பது தான் மக்களின் கோரிக்கை. பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பினால் அத்தியாவசியப் பொருள்களின் விலை குறையும் என்பதோடு, தொழில் வளர்ச்சியிலும் முன்னேற்றம் ஏற்படும் என்பதால், மத்திய அரசு நியாய உணர்வோடு பெட்ரோல், டீசல் விலைகளை மறு பரிசீலனை செய்து நடைமுறைப்படுத்த வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.
#DMK #Kalaignar #Karunanidhi.