KalaignarKarunanidhi · @kalaignar89
18th Jan 2015 from TwitLonger
கேள்வி :- நாட்டிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில், சிமெண்ட் குறைந்த விலையில் விற்கும் திட்டம் திருச்சியில் 5-1-2015 அன்று தொடங்கி வைக்கப்பட்டதாக அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறதே?
பதில் :- 26-9-2014 அன்று முதலமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது, தமிழகத்தில் "அம்மா சிமெண்ட்" திட்டத்தை அறிவித்து, ஒரு மூட்டை சிமெண்ட் 190 ரூபாய்க்குப் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்தார். இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட செய்தியை வெளியிட்ட "தினமலர்" நாளேடு, "கருணாநிதி கொண்டு வந்த திட்டம்" என்ற தலைப்பில் தி.மு.க. ஆட்சியில், மக்களுக்கு மலிவு விலையில் சிமெண்ட் வழங்க, 13 தனியார் நிறுவனங்களிடம், ஒரு மூட்டை 200 ரூபாய் என, கொள்முதல் செய்து, அதே விலைக்கு விற்கும் திட்டத்தை கருணாநிதி துவக்கினார். அதைப் பின்பற்றி தற்போது முதல்வர், "அம்மா சிமெண்ட்" திட்டத்தை அறிவித்துள்ளார்" என்று அப்போதே பெட்டிச் செய்தி வெளியிட்டிருந்தது. ஜெயலலிதாவினால் திட்டம் அறிவிக்கப்பட்டு மூன்று மாதங்கள் முடிந்து விட்டன. தற்போதுதான் அந்தத் திட்டம் திருச்சியிலே தொடங்கப்பட்டுள்ளது.
இது ஒன்றுமாத்திரமல்ல; 18-12-2014 அன்று வெளிவந்துள்ள நாளேடுகளில், கட்டுமானப் பணியின் போது உயிரிழந்தால் ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்க தமிழக அரசு உத்தரவிட் டிருப்பதாகச் செய்தி வந்தது. ஆனால் 12-8-2014 அன்று முதல் அமைச்சராக இருந்த ஜெயலலிதா தமிழகச் சட்டப்பேரவையில் 110வது விதியின் கீழ் படித்த அறிக்கையிலேயே இது பற்றிய அறிவிப் பினைச் செய்து விட்டார். கேட்டால், " இந்தத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு மாதக் கணக்கில் ஆனாலும், குறைந்தபட்சம் அதைத் தொடங்கு வதாக அறிவிக்கிறோம் அல்லவா? மற்ற திட்டங்கள் எல்லாம் தொடங்கப்படவே இல்லையே, அதற்கென்ன சொல்கிறீர்கள்?" என்று கேட்பார்கள்!
#DMK #Kalaignar #Karunanidhi