மத்திய அரசு, மாநில அரசு என்ற இந்த இரு அரசுகளின் நிர்வாகங்களையும் செயல்பாடுகளை யும் விமர்சித்து நடைபெறுகின்ற இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் உங்களையெல்லாம் சந்திக் கின்ற நல்ல வாய்ப்புக் கிடைத்தமைக்காக பெருமகிழ்ச்சியடைகின்றேன்.

இதே இடத்தில், இதே பகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பல செய்திகளைப் பரிமாறிக் கொண்டு தொடர்ந்து உங்களைச் சந்திக்கும் போதெல்லாம் புதிய புதிய நிலைகளை ஆராய்ந்தும், நாம் நம்முடைய கழகத்தின் சார்பில் சந்திக்கின்ற பல்வேறு திட்டங்களை, பல்வேறு நிகழ்ச்சிகளை, பல்வேறு செய்திகளை பரிமாறிக் கொள்கின்ற அத்தகைய பெரும் பொறுப்பை நிறைவேற்றக் கூடிய வகையிலும், எத்தனையோ முறை இதே இடத்தில் உங்களையெல்லாம் சந்திக் கின்ற நல்லவாய்ப்பினை நான் பெற்றிருக்கின்றேன்.

கழகத்தின் பெரும் கடமையை
நினைவூட்டப் பயன்படும் கூட்டம்

ஆனால் இன்றைக்கு நான் பெற்றிருக்கின்ற வாய்ப்பு திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இந்த ஜனநாயகப் பேரியக்கத்தின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றை விளக்கி தொடர்ந்து நடைபெற்று வருகின்ற இந்த இயக்கத்தின் வரலாற்றை அறிந்து கொண்டுள்ள உங்களுக்கு மேலும் நினைவூட்ட ஒரு பெரும் கடமை எனக்கு ஏற்பட்டிருக்கின்றது என்பதை இந்த நேரத்திலே நினைவூட்டி உங்களையெல்லாம் வழி நடத்துகின்ற செயல்வீரர்கள், ஆக்கப் பணி புரிகின்ற அருமைத் தோழர்கள் அவர்களையெல்லாம் வாழ்த்தவும், அவர்களுக்கெல்லாம் புதிய ஊக்கம் தரவும் இந்த நாள் பயன்படும் என்கின்ற அந்தப் பெருமிதத்தோடு உங்களை நான் இன்றைக்குச் சந்திக்கின்றேன்.

திராவிட முன்னேற்றக் கழகம் என்பது, ஏதோ "வால்போஸ்டர்" ஒட்டுகின்ற கட்சிகளிலே ஒன்று அல்ல. பத்திரிகைகளிலே விளம்பரம் கொடுத்து, நாங்கள் இந்தக் கட்சி நடத்துகின்றோம் என்று மக்களுக்குச் சொல்லுகின்ற ஒரு இயக்கம் அல்ல. இந்த இயக்கம் இங்கே குழுமியிருக்கின்ற தமிழர் களின் ஜீவநாடி. திராவிட முன்னேற்றக் கழகம் என்றால் திராவிட இன உணர்வுப் பெட்டகம். திராவிட இன உணர்வு என்றாலே, சீறி எழுகின்ற, சீற்றம் கொள்கின்ற ஒரு கூட்டத்திற்குப் பாடம் போதிக்கின்ற, பகுத்தறிவுக் கூட்டம் திராவிட முன்னேற்றக் கழகம். இந்தக் கழகத்தைக் கண்டாலே சீறுகின்ற, சீற்றம் கொள்கின்ற, இந்தக் கழகத்தைத் தொடர்ந்து நீடிக்க விடக்கூடாது என்று எண்ணுகின்ற ஒரு சிலர் தமிழ்நாட்டிலே இருக்கத் தான் செய்கிறார்கள். அது தமிழ்நாடு செய்த தவப் பயனா? அல்லது தமிழ்நாட்டிற்கு வரப்போகின்ற கேடுகளை உணர்த்துகின்ற அத்தகைய சகுனக் குறிப்பா என்பதையெல்லாம் நான் உங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

நாட்டை முன்னேற்ற, மக்களை நெறிப்படுத்த
தியாகத்தில் மூழ்கிய இயக்கம் தி.மு.க.

இந்த இயக்கத்தை திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரால் அல்ல, "தென்னிந்திய நல உரிமைச் சங்கம்" என்ற பெயரால் தொடங்கி, தமிழ்நாட்டு மக்களுடைய வரலாற்றை மேலும் புதுமையாக்க, மேலும் மேலும் இந்த வரலாற்றுக்கு வண்ணம் பூச, இந்த வரலாற்றுக்கு விடிவு காலம் தோன்ற எத்தகைய எழுச்சிகளையெல்லாம் ஏற்படுத்த வேண்டுமோ அதையெல்லாம் ஏற்படுத்தி இந்த இயக்கத்தை இன்றளவும் வளர்த்து வெற்றிகள், தோல்விகள், வீழ்ச்சிகள் அவற்றைப் பற்றியெல் லாம் கவலைப்படாமல், எல்லா நிலையையும் சமநிலையாகவே கருதி இந்த இயக்கத்தை தியாகத் தில் மூழ்கிய இயக்கமாக ஆக்கி வைத்தவர்கள்தான் இங்கே வீற்றிருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடலேறுகள். அத்தகைய கூட்டம்தான் இந்தக் கூட்டம். இந்தக் கூட்டத்தை நாம் பயன் படுத்திக் கொண்டு நம்முடைய இயக்கத் திற்கு மேலும் எழுச்சியை உருவாக்க, மேலும் வளர்ச்சியை ஏற்படுத்த ஒவ்வொரு முறையும் பல்வேறு கருத்துக் களை, தேவையான கருத்துக்களை எடுத்துச் சொல்லி, இந்த நாட்டை முன்னேற்றவும், அப்படி முன்னேற்றுகின்ற நேரத்தில் நாட்டில் உள்ள மக்களை நெறிப்படுத்தவும், அந்த மக்களுக்குத் தேவையானவற்றை எடுத்துக் காட்டவும், அப்படிக் காட்டப்பட்ட கருத்துக்கள் மேலும் மேலும் பண் பாடோடு, ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தப் படவும், திராவிட முன்னேற்றக் கழகத்தை நாங்கள் நடத்திக் கொண்டிருக்கின்றோம். மன்னிக்க வேண்டும், ``நாங்கள் நடத்திக்கொண்டிருக்கின்றோம்’’ என்று சொன்னால் அது கூட திருத்தப்பட வேண்டிய ஒன்று. நாம் நடத்திக் கொண்டிருக்கின்றோம்.

என்னைப் பொறுத்தவரையில், இது நமது கழகம் என்றுதான் சொல்லிப் பழக்கப்பட்டிருக்கிறேனே தவிர, என்னுடைய கழகம், என்னுடைய இயக்கம், என்னுடைய கட்சி என்று நான் என்றைக்கும் சொன்னதில்லை. நம்முடைய கழகம், நம்முடைய கட்சி, நம்முடைய இயக்கம் என்று சொல்லித்தான் பழக்கப்பட்டிருக்கிறோம். அப்படிப்பட்ட நம்முடைய இந்த இயக்கத்தை வளர்க்க வேண்டிய பெரும் கடமை நமக்கு இருக்கின்றது. ஏன்? இந்தக் கழகத்தை வளர்க்க வேண்டும் என்பதற்காக அல்ல. நம்முடைய கழகத்தை வளர்ப்பது, நம்முடைய குடும்பத்தை வளர்ப்பதைப் போல. நம்முடைய இனத்தை வளர்ப்பதைப் போல், நம்முடைய இயக்கத்தை வளர்ப்பது நம்முடைய மக்களை வளர்ப்பதைப் போல. நம்முடைய மக்களை வளர்ப்பது, நம்முடைய கழகத்தினுடைய கொள்கை களை வளர்ப்பது என்ற அந்த அளவில், தமிழ் நாட்டிலே என்னைப் பொறுத்தவரையில் நான் இந்த இயக்கத்திலே ஏறத்தாழ 90 வயது வரையிலே உங்களோடு இருந்து, இந்த இயக்கத்தினுடைய வளர்ச்சி, வீழ்ச்சி, தொய்வு, தொடர்ச்சி என்ற நிலைகள் அனைத்திலும் பங்கு பெற்றவன். எதிர் காலத்திலும் பங்கு பெற இருப்பவன். அப்படிப் பட்ட நம்பிக்கையோடு உங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கின்ற எனக்கு நீங்கள் தருகின்ற ஆதரவு, என்னைப் போல நம்முடைய பேராசிரியப் பெருந்தகை அன்பழகனார் அவர்களுக்குத் தருகின்ற ஆதரவு, ஏதோ இரண்டு பேருக்கு தனிப்பட்ட முறையிலே தருகின்ற ஆதரவு அல்ல. `நாம்’ என்று சொல்லும்பொழுதுதான் ஒற்றுமையினுடைய அடையாளம் தெரியும். என்னுடைய கழகம், என்னு டைய கட்சி என்று சொன்னால், அதிலே உள்ள தன்மை வேறு. நம்முடைய கழகம் என்று சொன்னால் அதிலே இருக்கின்ற ஒற்றுமை யாரும் புரிந்து கொள்ள முடியாது. நீங்கள் சொல்லிப் பாருங்கள், நம்முடைய கட்சி என்று சொன்னால், ``நம்’’ என்று சொல்லும்போது, ``நாம்’’ என்று சொல்லும்போது இரு உதடுகளும் ஒட்டும். ‘என்னுடைய’ என்று சொல்லும்போது உதடுகள் ஒட்டாது. ஆகவே, உதடுகள் ஒட்டுகின்ற அந்த நிலையைப் போல, இந்தக் கழகத்தைப் பற்றிப் பேசு கின்றபோது, `நம்முடைய’ என்று சொன்னாலும், `நாம்’ என்று சொன்னாலும் உதடுகள் ஒட்டுவதைப் போல, நம்முடைய ஒற்றுமையைக் காட்டுவது அந்தப் பெயர், அந்த சுட்டிக்காட்டுகின்ற நிலை, இவைகளெல்லாம் `நாம்’ என்பதை விட, `நம்மு டைய’ என்பதை விட, `என்னுடைய’ என்பதிலே இருப்பதில்லை. ஆகவேதான் நமது கழகம் இன்று நேற்றல்ல, எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு தந்தை பெரியார் அவர்களால், அவர் வழியில் பேரறிஞர் அண்ணா அவர்களால் உருவாக்கப்பட்ட கொள்கைகள், அவர்களால் ஏற்றுக் கொள்ளப் பட்ட, இயக்கப்பட்ட இந்த இயக்கத்தினுடைய பல்வேறு அம்சங்கள், இந்த இயக்கத்தை வளர்ப்பது மாத்திரமல்ல, இந்த இயக்கத்தினுடைய பெயரிலே அமைந்துள்ள திராவிடர்களை, தமிழர்களை, ஆட்சி முடிகின்ற வரையிலே ஆட்டிப் படைத்த எதிரிகளை எல்லாம் வீழ்த்தி, அந்த எதிரிகளுக்குப் பாடம் கற்பிக்கின்ற வகையிலே இந்நாள் வரையிலே இந்தக் கழகத்தை நாம் வளர்த்து இருக்கின்றோம். மேலும் வளர்த்தும் வருகிறோம். அப்படிப்பட்ட கழகம் எந்த வகையிலே வந்தாலும் அதை நடமாட விடக்கூடாது என்று நமக்கு நாசம் விளைவிக்கக் கருதும் ஒரு கூட்டம் தமிழ்நாட்டிலே இருக்கின்றது. அந்தக் கூட்டத்திலே சில பேருடைய கையில் சிக்கியிருக்கின்ற விளம்பர சாதனங்கள், பத்திரிகைச் சாதனங்கள், செய்தி சாதனங்கள் இவைகளெல்லாம் இன்றளவும் நமக்கு எதிரிகளாகத்தான் இருக் கின்றன என்பதை மறந்து விடக் கூடாது.

நம்மையெல்லாம் பயிற்றுவிக்கும் பாசறைதான்
தி.மு.க. என்பதை ஒருபோதும் மறந்திடாதீர்!

இந்தக் கூட்டத்திலே நீங்கள் இவ்வளவு பேர், இத்தனை ஆயிரம் பேர் குழுமியிருக்கின்றீர்கள் என்றால் என்ன காரணம்? இது உங்களுடைய நன்மைக்காக, உங்களுடைய இனத்தின் உணர்வு களை வளர்ப்பதற்காக, நீங்களும் நாங்களும் சேர்ந்து இந்த நாட்டை மேலும் செழிப்படையச் செய்வதற் காக நம்மை பயிற்றுவிக்கக்கூடிய பாசறைதான் திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை யாரும் மறந்து விடக் கூடாது.
இந்த இயக்கத்தை நாம் வளர்க்கின்ற அதே நேரத்தில் இதற்கு வருகின்ற சங்கடங்கள், எதிர்ப்பு கள் எவை எவை என்பதைப் பற்றியெல்லாம் எனக்கு முன்னால் உரையாற்றிய தம்பி ஸ்டாலினும், நம்முடைய அருமைத் தம்பிகளும், திராவிட முன் னேற்றக் கழகத்தினுடைய பொறுப்பு வாய்ந்த கடமைகளை, செயல்களை, எவ்வாறு நிறைவேற்ற வேண்டும், எந்தெந்த வகைகளிலெல்லாம் நிறை வேற்ற வேண்டும் என்ற வகையிலே எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள், மேலும் செயல்களில் காட்டவும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட இயக் கத்தில் ஏதோ அங்கொன்றும் இங்கொன்று மாக, ஓரிரு தோல்விகள் இந்த இயக்கத் திற்கு ஏற்பட்டா லும் கூட, அந்தத் தோல்விகளையெல் லாம் இடறி எறிந்து விட்டு, வெற்றிப் பாதையிலே இன்னமும் நாம் நடந்து கொண்டிருக்கின்றோம்.

நம்மை வீழ்த்த நினைப்பவர்கள்தான்
வீழ்ந்து போவார்கள்!

திராவிட முன்னேற்றக் கழகத்தை அமைத்த அந்தக் காலத்தில், நம்முடைய ஆசான் தந்தை பெரியார் அவர்களால் உருவாக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா அவர்கள் கடமை, கண்ணியம், கட்டுப் பாடு என்ற இந்த மூன்று தாரக மந்திரங்களை நம்முடைய நெஞ்சிலே பதிய வைத்து, அந்த பதிய வைக்கப்பட்ட அந்த மந்திரங்களை நம்மை வளர்க் கின்ற பெரும் பேறுகளாக ஆக்கி இந்தக் கழகத்தை இந்த அளவில் இன்றைக்கு உயர்த்தியிருக் கிறார்கள் என்பதை நன்றியுள்ள நாம் யாரும் மறந்து விட மாட்டோம்.

இந்தக் கழகம் இன்றைய தினம் மயிலை மாங் கொல்லையில் இவ்வளவு பெரிய பொதுக் கூட்டத் தைக் கண்டு வெற்றியைக் கொண்டாடுகின்ற நேரத்தில் - நான் வெற்றி என்று சொல்வதற்குக் காரணம், நாம் பல கட்டங்களில், பல நேரங்களில், பல நிகழ்வுகளில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் என்றாலும்கூட, அந்த வெற்றி வாய்ப்பை இழந்த நேரத்திலே கூட, அது தமிழர்களுக்கு, திராவிடர் களுக்கு உணர்ச்சியை ஊட்டக் கூடிய சாதனம்தான் என்ற நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத்தை நாம் இன்றைக்கு வளர்த்துக் கொண்டிருக்கின் றோம்.
இன்றைக்கு இதைப் பயன்படுத்தி, இந்த இயக்கத்தை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று எண்ணுகின்ற சிலரை நாம் காண முடிகிறது. ஆனால், நான் சொல்லுகின்றேன்; நம்மை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள். நம்மை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள்.

இந்த எழுச்சிமிக்க இன உணர்வுக்
கூட்டத்தை வீழ்த்த சிலர் கையாளும் தந்திரம்!

மயிலையிலே இவ்வளவு பெரிய கூட்டம், இவ்வளவு பெருந்திரள், இந்தக் கூட்டத்திலே எவ்வளவு பெரிய எழுச்சி காணப்படுகிறது! ஆனால், நாளைக்குப் பத்திரிகைகளிலே பார்த்தால், ஒரு சில பத்திரிகைகள், நான் எல்லாப் பத்திரிகைகளையும் சொல்லவில்லை. வயிறு எரிகின்ற சில பத்திரிகைக் காரர்கள் என்ன எழுதுவார்கள், என்ன செய்தி போடுவார்கள்? ``நேற்று மயிலாப்பூரில் நடைபெற்ற கருணாநிதி கூட்டத்தில் மக்களே வரவில்லை’’ என்று சொல்லுவார்கள். அதைப் பற்றி நாம் கவலைப்படக் கூடாது. மக்கள் வரவில்லை என்றால், அவர்களுடைய பாஷையில் தேவர்கள் வந்தார்கள் போலும் என்று கருதிக் கொள்ள வேண்டும். அதை நாம் பெருமையாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆட்களே வரவில்லை என்று சொல்வது - இன்னொரு கட்சியை, இன்னொரு கூட்டத்தை தாங்கள் எந்தக் கூட்டத்தை வளர்க்க வேண்டும் என்று கருதுகிறார்களோ, அந்தக் கூட்டத்தை வளர்ப்பதற்காக! இந்த எழுச்சிமிக்க கூட்டத்தை, இன உணர்வுக் கூட்டத்தை வீழ்த்துவதற்காக அவர் கள் கையாளுகின்ற தந்திரம்.

நான் இன்றைக்குச் சொல்லுகின்றேன். நம்மு டைய தோழர்கள், நம்முடைய கட்சியின் தலை வர்கள், தொண்டர்கள், என்னையும் பேராசிரியரை யும், மற்றவர்களையும் பார்க்கும் போது, ``இப்படியே புளுகித் தள்ளுகிறார்களே, இல்லாததும் பொல்லாத துமாக எழுதுகிறார்களே, இதற்குப் பரிகாரமே இல்லையா?’’ என்று அவர்கள் கேட்பதும், அவர் கள் வாயினால் கேட்கா விட்டாலும் கூட, ஜாடை யாக எங்களுக்கு உணர்த்துவதும், எங்களுக்குப் புரியாத விஷயங்கள் அல்ல. அவர்களுக்கு நான் சொல்வது, பொறுமையாக இருங்கள்! பொறுத்துக் கொள்ளுங்கள்! எவ்வளவுதான் கேவலமாக, நம்மைப் பற்றி பொய்களை எடுத்துச் சொன்னாலுங் கூட, அந்தப் பொய்களையெல்லாம் நாம் ஏற்க வில்லை என்பதை, நம்பவில்லை என்பதை, நம்மைப் போல பொதுமக்களே பலரும் நம்பக் கூடாது என்பதை அழுத்தந்திருத்தமாகத்தான் நாம் சொல்லி வருகின்றோம். அதற்கு நிச்சயம் பலன் உண்டு. அந்தப் பலனை விரைவில் நாம் காண்போம்.

இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எழுச்சியா? வீழ்ச்சியா? என்ற இந்தக் கேள்விக்கு விடை காண வேண்டுமென்றால், "இரண்டு நாளைக்கு முன்பு நடைபெற்ற பொதுக் குழுத் தீர்மானங்களைப் பற்றி விரிவாக, விளக்கமாகப் பேச விருக்கிறோம், வாருங்கள் மைலாப்பூருக்கு!" என்று அறிவித்த மாத்திரத்தில், இத்தனை ஆயிரம் பேர் இங்கே குழுமியிருக்கிறீர்கள் என்றால், இது ஒன்றே போதும், திராவிட முன்னேற்றக் கழகத்தை யாராலும் அசைக்க முடியாது. யாராலும் வீழ்த்த முடியாது. யாராலும் புறக்கணிக்க முடியாது.

புளுகு மூட்டையை அவிழ்த்து விடுவோர்க்கு
‘திருவாரூர் கருணாநிதியாக’ நான் கூறுவது!

புளுகர்களால், பொய் மூட்டைகளால், கருணாநிதியும், ஸ்டாலினும் மோதிக் கொண் டார்கள் என்று பெரிய புளுகை மைலாப்பூர் மாங்கொல்லையில் அவிழ்த்து விடுவதால், உடனே நாங்கள் மோதிக் கொள்ள மாட்டோம். நாங்கள் யாரை மோத விட வேண்டுமோ, அவர்களை மோத விடுவதில் பல ஆண்டுக் காலமாக சமர்த்தர்கள். ஆகவே எங்களை மோத விட்டுப் பார்த்து இல்லாத தையும், பொல்லாததையும் சொல்லி, எங்களைப் பற்றி, எங்களுடைய குடும்பத்தைப் பற்றி, எங்களு டைய நட்பைப் பற்றி, எங்களுடைய இயக்கத்தி னுடைய உண்மையான தன்மையைப் பற்றித் திசை திருப்புகின்ற காரியத்திலே யார் ஈடு பட்டாலும் நான் அவர்களுக்குச் சொல்லுகிறேன்; இப்போது நான் மைலாப்பூர் கருணாநிதியாக அல்ல; அந்தக் காலத்து திருவாரூர் கருணா நிதியாக பதில் கூறு கிறேன். திருவாரூர் கருணாநிதி எப்படிப்பட்ட வன் என்பதை அவர்களுக்கு நான் ஞாபகப்படுத்து வேன்.

திருவாரூர் கருணாநிதி, பட்டுக்கோட்டை அழகிரிசாமியிடத்தில் பயின்றவன். ஈரோடு பெரியாரிடம் பயின்றவன் மாத்திரமல்ல, பட்டுக் கோட்டை அழகிரியை முதன் முதலாகத் தளபதி யாக ஏற்றுக் கொண்டவன். அந்தத் தளபதி அழகிரி யின் வழியில் இந்த இயக்கம் பீடு நடை போட்ட அந்தக் காலத்தை இவர்கள் எல்லாம் மறந்து போயிருப்பார்கள். எனவே புளுகி, புளுகி, பத்திரி கைகளில் எதையெதையோ எழுதி எழுதி, திராவிட முன்னேற்றக் கழகத்தை அழித்து விடுவோம், பத்திரிகைகளில் பொய்ச் செய்திகளை வெளியிட்டு, வெளியிட்டு இந்தக் கழகத்தைப் பூண்டற்றுப் போகும்படியாகச் செய்திடுவோம் என்று சொல்வீர் களேயானால், நான் அவர்களுக்குச் சொல்வேன், இப்படியே தொடர்ந்தால் நாங்கள் உங்களை விட வல்லவர்களாக மாறவும் செய்வோம் என்பதை, அவர்களுக்கு சூளுரைத்துச் சொல்லுகிறேன்.
தாய் தந்தை நலன், உற்றார் உறவினர், பொருள்,

புகழை இழந்து நாங்கள் வளர்த்த இயக்கம்!

கருணாநிதியும், அன்பழகனும் ஒருவருக்கொரு வர் தகராறு செய்து கொண்டார்கள் என்று நீங்கள் எழுதினால், எங்களுக்கு அதை விட இன்னும் அதிகமாகப் பொய் சொல்லி உங்களைத் திசை திருப்ப முடியும். ஆனால் நாங்கள் அப்படி நடக்க மாட்டோம். அந்த வழியிலே எங்களை இயங்க விடாதீர்கள். அந்தக் கலை எங்களுக்குத் தெரியும். ஆனால் நாங்கள் அதைப் பயன்படுத்தியதில்லை. எங்களுக்குத் தெரிந்த, நாங்கள் கடைப்பிடிக்காத அந்தக் கலையை, நாங்கள் பின்பற்ற வேண்டு மென்று எந்தக் கட்சிக்காரர்களாக இருந்தாலும், அவர்கள் விரும்பினால், அவர்களுக்கு எச்சரிக்கை யாகவும், இனிமையாகவும், வேண்டுகோளாகவும் தெரிவித்துக் கொள்கிறேன்; பொய் சொல்லி, எழுதி ஒரு இயக்கத்தை அழித்து விடலாம் என்றால், நாங் கள் அந்தப் பொய்யை மறைத்து, உண்மைகளைச் சொல்லக்கூடிய சமர்த்தர்களாக மாறுவோம். அதை மறந்து விடாதீர்கள். எங்களால் அதையும் செய்ய முடியும். எங்களால் உங்களை எந்த வகையில் சந்திக்க வேண்டுமோ, அதற்கான சாதனங்களை உருவாக்க முடியும். ஏனென்றால் இந்த இயக்கத்தை நாங்கள் அரும்பாடுபட்டு வளர்த்திருக்கிறோம். இந்த இயக்கத்தை நாங்கள் பெரும் கஷ்டங்களுக் கிடையே வளர்த்திருக்கிறோம். இந்த இயக்கத்தை நாங்கள் தண்டவாளத்திலே தலை வைத்துப் படுத்து வளர்த்திருக்கிறோம். இந்த இயக்கத்தை
வெங்கொடுமைச் சாக்காட்டிலே இருந்து வளர்த் திருக்கிறோம். இந்த இயக்கத்தை கட்டிக் காக்க அரும்பாடு பட்டிருக்கிறோம். இந்த இயக்கத்தை வளர்ப் பதற்காக எங்களுடைய பாட்டன், பூட்டன், தாய் தந்தை இவர்களுடைய நலன்களையெல்லாம் புறம் தள்ளி விட்டு வளர்த்திருக்கிறோம். இந்த இயக் கத்தை வளர்ப்பதற்கு நாங்கள் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. எங்களுடைய உற்றார் உறவினர்களை யெல்லாம் இழந்திருக்கிறோம். எங்களுடைய பொருள், புகழ் இவற்றையெல்லாம் நாங்கள் அறைகூவல் விட்டு, அந்த இயக்கத்தைக் காப்பாற்று வதற்கு நாங்கள் அரும்பாடு பட்டிருக்கி றோம். ஆகவே இரத்தம் சிந்தி வளர்த்த இந்த இயக்கத்தை, தியாகம் செய்து வளர்த்த இந்த இயக்கத்தை, அவ்வளவு சுலபமாக அழித்து விடலாம், சில பொய்ப்பித்தர்களால் அதைச் செய்ய முடியுமென்று கருதுவீர்களேயானால், அந்தப் பத்திரிகைகளை வளர்க்க வேண்டுமென்று நினைக்கிறார்கள் என் பதைத் தவிர நான் வேறு எதுவும் சொல்லத் தயாராக இல்லை.

நீங்கள் மக்களை ஏமாற்றி, அதன் மூலம் இந்த இயக்கத்தை அழித்து விடலாம் என்று கருதுகின்ற அந்த எண்ணத்தால் வெற்றி பெற்று விட முடியாது. எங்கள் இயக்கம் பொட்டுப் பூச்சி அல்ல, புன்மைத் தேரை அல்ல, இது! வளர்ந்திருக்கின்ற ஆல கால விருட்சங்களையெல்லாம் வெற்றி கொள்ளக்கூடிய அரும் மருந்து திராவிட முன்னேற்றக் கழகம். அந்தக் கழகத்தை வெகு எளிதாகக் கிள்ளி எறிந்து விடலாமென்று நினைத்தால், நஷ்டம் கிள்ளுகின்ற உங்களுடைய நகங்களுக்குத்தான், இதை வீழ்த்தி விடலாம் என்று எண்ணுகின்ற உங்கள் நினைப்பு களுக்குத்தான் நஷ்டம். ஆகவே தி.மு.க. என்பது தன்னை வளர்த்துக் கொள்ளுகின்ற சுயநலமிக்க ஒரு இயக்கம் அல்ல, தி.மு.க. என்பது இந்தியா விலே இருக்கின்ற ஒரு இனம். தமிழ் இனம், திராவிட இனம். அந்த இனத்தை மேலும் மேலும் வளம் பெறச் செய்து, மேலும் மேலும் இந்த இனத்திற்கு செழிப்பூட்டி, மேலும் மேலும் இந்த இனத்தை வீறு கொள்ளச் செய்கிற அந்தத் திண்மை எங்களுக்கு உண்டு. எங்கள் வளர்ச்சியை மடக்க, ஒடுக்க யாரும் வீண் கனவு காணாதீர்கள் என்று பத்திரிகை நடத்து கின்ற யாராக இருந்தாலும், வேறு கட்சிகளை நடத்துகின்றவர்களாக இருந்தாலும், யாரும் கனவு காண வேண்டாம், அந்தக் கனவு பலிக்காது, காரணம் நாங்கள் விஷப் பூண்டுகளை அழிக்கக் கூடிய திறமை மிக்க, செயலாற்றக் கூடிய வீறு கொண்டு எழுந்து நிற்கக் கூடிய ஒரு இயக்கம்.

எங்களுடைய முயற்சி, திட்டங்களை
உருக்குலைக்க நினைக்கும் கனவு ஈடேறாது!

தமிழ்நாட்டிலே இன்றைக்கு ஆட்சி நடக்கிறதா என்று நண்பர்கள் பேசும்போது கேட்டார்கள். ஆட்சி இன்றைக்கு நடக்கவில்லை. எப்படி ஆட்சி நடக்கும்? ஆட்சி அமைத்து, மக்களைக் காப்பாற்ற வேண்டுமென்ற எண்ணத்தோடு வந்திருந்தால், ஆட்சி நடந்திருக்கும். ஆனால் இன்றைக்கு நடப் பது ஆட்சி அல்ல. ஒரு காட்சி. அந்தக் காட்சியை அறவே அழித்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகளை அரியணையிலே ஏறச்செய்து, தி.மு. கழகத்தைத் தொடங்குவதற்கு ஆதரவாக இருந்த அந்த இலட்சியங்களை வளம் பெறச் செய்து, அந்த இலட்சியங்களை வெற்றி பெறச் செய்வது தான் எங்களின் நோக்கம், எங்களுடைய முயற்சி, எங்க ளுடைய திட்டம். இந்தத் திட்டங்களை உருக் குலைக்கலாம் என்று யார் எண்ணினாலும், அவர்களுடைய கனவு பலிக்காது, பலிக்காது என்பதை திட்டவட்டமாகச் சொல்லிக் கொண்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தை வலுப்படுத்து வதற்கு நம்முடைய உழைப்பையெல்லாம் தரு வோம், நம்முடைய முயற்சிகளையெல்லாம் கூட்டு முயற்சியாக ஆக்குவோம், அந்த முயற்சிகளை வெற்றியடையச் செய்வோம். நம்முடைய எண்ணம் பலிக்க, நம்முடைய வளர்ச்சி ஒன்றுதான் இந்தக் கழகத்தை மேலும் மேலும் வளம் உடையதாக ஆக்கச் செய்வதாகும். எனவே இந்த வளத்தை உரு வாக்க அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்போம் என்று நான் கேட்டுக் கொண்ட, இந்த அருமையான வாய்ப்பை, உங்களையெல்லாம் சந்திக்கின்ற இந்தச் சந்தர்ப்பத்தைப் பெற்றமைக்காக என்னுடைய வாழ்த்துகளை உங்களுக்கும் இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்த நண்பர்களுக்கும், என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்களுக்கும் மீண்டும் மீண்டும் என்னுடைய வாழ்த்துகiளையும், வணக் கங்களையும் தெரிவித்து விடைபெற்றுக் கொள் கிறேன்.

Reply · Report Post