KalaignarKarunanidhi · @kalaignar89
12th Jan 2015 from TwitLonger
ஜல்லிக்கட்டு- தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் !!
தமிழர் திருநாள், பொங்கல் நாள், புத்தாண்டு தொடக்கம் என்பதையொட்டி, தமிழர்களின் பண் டைய வீரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் “ஜல்லிக்கட்டு” விளையாட்டு தமிழகத்தில் பன்னெடுங் காலமாக நடைபெற்று வந்தது.
தி.மு.கழகம் ஆட்சியில் இருந்தபோது 2007ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு போட்டிகள் அரசு நிர்வாகத்தின் கண்காணிப்பில் நடத்தப்பட்டன. அதைப்போலவே 2008ஆம் ஆண்டும் கழக அரசால் முழுவீச்சில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உச்ச நீதிமன்றம் விதித்திருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
2009ஆம் ஆண்டு கழக ஆட்சியில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நெறிப்படுத்துவதற்கெனச் சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இந்த விளையாட்டு குறித்து, இந்திய உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்கில், பிராணிகள் நல அமைப்புகள் முறையிட்டுக் கொண்டதன் அடிப்படையில், ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவதற்குத் தடை விதிக்கப்படுகிறது என்று
தீர்ப்பளித்ததோடு, கழக ஆட்சியில் நிறை வேற்றப்பட்ட சட்டத்தையும் உச்ச நீதி மன்றம் ரத்து செய்து விட்டது.
ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தும் விழாக் குழுவினர் உள்ளிட்ட தமிழ் மக்கள் அனைவரின் வேண்டுகோளையும்,உணர்வுகளையும் மதித்தும்; ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு விதிக்கப்படும்
தடையினால் ஏற்படும் சட்டம் - ஒழுங்கு விளைவுகளை எண்ணிப் பார்த்தும்; தமிழர்களின் பண்பாட்டுப் பாரம்பரியத்தின் அடையாளத்தைக் காப்பாற்றுவதற்காகவும்; மத்திய, மாநில அரசுகள் இந்தப் பிரச்சினையிலே உடனடியாகத் தலையிட்டு, ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தொடர்ந்து நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை அவசியம் செய்ய வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். #DMK #Kalaignar #Karunanidhi #jallikaattu #tamilculture #pongal #festival