KalaignarKarunanidhi · @kalaignar89
9th Jan 2015 from TwitLonger
தி.மு. கழகத்தைப் பொறுத்த வரையில் நான் உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் மறந்து விடக்கூடாது. இந்த இயக்கத்தை அழித்து விடலாம், ஒழித்து விடலாம், பூண்டற்றுப் போகும்படி செய்து விடலாம் என்று எண்ணி யார் யாரோ முயற்சித்தார்கள். அவர்களுடைய முயற்சி எதுவும் பலிக்கவும் இல்லை. பலிக்கப் போவதும் இல்லை. அப்படிப்பட்ட வலிமையான இயக்கம், வல்லமை கொண்ட இயக்கம், இந்த இயக்கத்தை - நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தை எங்கிருந்தோ வந்தவர்கள், புதிதாக வந்தவர்கள், பெரிய பெரிய விளம்பரப் பதாகைகளைத் தூக்கிக் கொண்டு வந்தவர்கள், அழித்து விடலாமென்று கருதுகிறார்கள். நாம் நம்முடைய தீர்மானத்திலே இன்றைக்கு கோடிட்டுக் காட்டியிருக்கிறோம். இன்றைய பொதுக் குழு தீர்மானத்தின் தொடக்கத்திலே பா.ஜ.க. வினர், திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சாதாரணமாக கருதி, நம்மை வென்று விடலாமென்று அவர்களும் திட்டம் போட்டு, அந்தத் திட்டம் கடைத் தெருவுக்கு வந்து, அந்தத் திட்டத்தை நிறைவேற்ற எத்தனையோ வழிமுறை களை அவர்கள் கையாண்டும் கூட, அது முடியாது, அது இயலாது என்ற ஒரு நிலையை அவர்கள் கண்டிருக்கிறார்கள். ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் எத்தனையோ பேரால், எத்தனையோ போர் முனைகளில், எத்தனையோ கட்சிகளின் தாக்குதலால், எத்தனையோ எதிர்ப்புகளால், பகைவர்களால் சுருண்டு போய் விடும், அழிந்து போய் விடும் என்றெல்லாம் திட்டம் போட்டு, காயை நகர்த்திய போது, அந்தக் காயை வெட்டி நாம் அந்தப் பந்தயத்திலே வெற்றி பெற்றிருக்கிறோமே அல்லாமல் நாம் அதிலே தோல்வி கண்டு விடவில்லை. தோல்வி காணப் போவதும் இல்லை. ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், அவர்கள் முதலிலே திராவிட முன்னேற்றக் கழகத்தை, தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அழித்து விடலாம், ஒழித்து விடலாம் என்று ஏதேதோ காய்களை யெல்லாம் நகர்த்தினார்கள். ஆனால் அது சரிப்பட்டு வர வில்லை என்றதும், வரும்போதே நூற்றுக்கணக்கான திட்டங்களை, நம்மை யெல்லாம் வசீகரிக்கக் கூடிய திட்டங்களை, நம்முடைய மக்களுக்கு உரிய திட்டங்கள் என்று நம்பப்படுகின்ற திட்டங்களை யெல்லாம் கொண்டு வந்து குவித்து, இன்றைக்கு நாம் ஏமாந்தது தான் மிச்சம். நான் பச்சையாகவே, பகிரங்கமாகவே, வெளிப்படையாகவே சொல்கிறேன். #BJP பா.ஜ.க. ஆட்சி இன்றைக்கு காலூன்றி இருக்கிறது. அப்படி காலூன்றி இருக்கின்ற இந்த ஆட்சி யில் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுகின்ற காரியங்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இன்னும் சொல்லப் போனால், ஜெயலலிதாவை விட -ஏமாற்றுத் தந்திரம் கற்றவர்கள் மத்தியில் இன்றைக்கு நம்மை ஆளுவதற்காக வந்திருப்பதாகச் சொல்லிக் கொண்டு நோட்டம் பார்க்கிறார்கள். ஆகவே நாம் அவர்களிடத்திலே ஏமாந்து விடக் கூடாது..#DMK #Kalaignar #DMKelections #Karunanidhi #Politics #Tamilnadu