கழகத்தின் பொதுச் செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எனது இளைய அண்ணன் இனமானப் பேராசிரியர் அவர்களே, பொருளாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தளபதி தம்பி மு.க. ஸ்டாலின் அவர்களே,முதன்மைச் செயலாளர், தம்பி துரைமுருகன் அவர்களே, துணைப் பொதுச் செயலாளர்களே, கழகத்தின் 14வது தேர்தலில், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாவட்டக் கழகத்தின் செயலாளர்களே, செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களே, இந்தப் பொதுக்குழுவுக்கு வந்துள்ள உங்களையெல்லாம் வரவேற்பதிலும், சந்தித்து மகிழ்வதிலும் நான் மிகுந்த பெருமை அடைகின்றேன். ஏனென்றால் பேராசிரியர் அவர்களுடைய பெருமிதம் மிக்க உரையிலே குறிப்பிட்டதைப் போல, காணும் தலைகள் எல்லாம், திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய உணர்வை, உணர்ச்சியை உயிரோட்டமாக வெளிப்படுத்தக் கூடிய ஒளி மிகுந்த கண்களைப் படைத்த தலைகள் என்பதை நானும் உணர்ந்து அந்தத் தலைகளுக்குரிய பெருமையைப் பெற்றுள்ள உங்களை வாழ்த்தக் கடமைப்பட்டிருக்கிறேன்.

கழகத்தினுடைய தேர்தல் அடிமட்டத்திலேயிருந்து உயர் மட்டம் வரையிலே நடைபெற்று, அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், பெற இயலாத வர்கள், இருவருமே இணைந்து தமிழகத்திலே திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஜனநாயகத்தைக் காப்பாற்றியிருக்கிறோம், மற்றவர்களுக்கெல்லாம் வழி காட்டியிருக்கிறோம் என்ற பெருமையோடு நாம் இந்த நாளில் இங்கே குழுமி யிருக்கிறோம். பேராசிரியர் அவர்களுடைய உரையில் என்னைப் பாராட்டி மகிழ்ந்தார். அதைப் போல கழகத்தின் காவலர்களை யெல்லாம் பாராட்டி அவர்களை யெல்லாம் புகழ்ந்து பெருமைப்படுத்தி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிறப்பு என்ன, கழகத்தினுடைய வலிவு என்ன என்பதையெல்லாம் இங்கே விளக்கிச் சொன்னார். ஆனால் அவருடைய பேச்சில் அடிநாதமாக விளங்கிய திராவிட இயக்க உணர்வு, பகுத்தறிவு உணர்வு,சுயமரியாதை உணர்வு இவைகள் எல்லாம் நம்மை யெல்லாம் எந்த அளவுக்கு கவர்ந்தன என்பதை நான் இங்கே விரிவாக விளக்கிட விரும்பவில்லை. காரணம் நேரம் அதிகமாகி விட்டது. அவர்கள் எடுத்துச் சொன்ன கருத்துகளை உங்களுக்கு நான் விளக்குவ தென்றால் மேலும் உங்களுக்கு நேரம் அதிகமாகி விடும் என்பதால், அவற்றை யெல்லாம் விடுத்து, இங்கே நம்முடைய கழகத்தின் காவலர்களிலே ஒருவராக இருந்து தி.மு. கழகத்தை வழி நடத்திச் செல்லக் கூடிய பக்குவத்தைப் பெற்றுள்ள தம்பி மு.க. ஸ்டாலின் அவர்களும், நான் இதைச் சொல்கிற வரையிலே உங்களுக்கு ஸ்டாலின் மீது நம்பிக்கை இல்லை போலும், நான் சொன்ன பிறகு தான் அவ்வளவு பேரும் சேர்ந்து கை தட்டுகிறீர்கள். நான் இந்த நம்பிக்கையை இன்றைக்கு அல்ல, பேராசிரியர் இன்றைக்குச் சொன்னாரே, அதற்குப் பிறகு அல்ல, ஒரு ஏழு மாதங்களுக்கு முன்பே, ஸ்டாலினைப் பற்றி நான் குறிப்பிடும்போதே "உழைப்பு - உழைப்பு - உழைப்பு - அதற்குப் பெயர் தான் ஸ்டாலின்" என்று நான் சொல்லியிருக் கிறேன். அவருடைய உழைப்பின் தன்மையை, அந்த உழைப்பின் மேன்மையை, அந்த உழைப்பின் வலிமையை நீங்கள் இன்று உணர்ந்து கொண்டிருக்கிறீர்கள். அது மாத்திரமல்ல; வன்மை, தன்மையை மாத்திரமல்ல; மென்மையும் அவரிடத்திலே உண்டு. அந்த மென்மை தான் ஒரு இயக்கத்திலே நானும் அல்லது நம்முடைய அருமைப் பேராசிரியர் அவர்களும் அல்லது நம்முடைய கழகத்திலே இருக்கின்ற துரைமுருகனைப் போன்றவர்களும், கழகத்திலே இருக்கின்ற பல்வேறு அமைப்பினரும் கட்டிக் காக்க வேண்டிய ஒன்றாகும். எளிமை, இனிமை, மென்மை இவைகளை யெல்லாம் ஒன்று சேர்த்து, இந்த இயக்கத்தை எல்லோரும் சேர்ந்து வலிமைப் படுத்த வேண்டியவர்களாக, வளர்க்க வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம். இப்போது நடை பெறுவது 14வது கழகத் தேர்தலையொட்டி நடைபெறுகின்ற பொதுக்குழு. இந்தப் பொதுக் குழுவில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய சபதம் என்ன? அது தான் இந்தப் பொதுக் குழுவிலே மிக முக்கியமாகப் பேச வேண்டிய ஒன்றாகும்.

என்னைப் பொறுத்தவரையிலே இந்தப் பொதுக்குழுவிலே காலையிலே வந்து கலந்து கொள்ள முடியுமா என்ற நிலைமையிலே தான் இருந்தேன். காரணம், விடியற்காலையில் என்னுடைய உடல்நிலை சீர்குலைந்து, கெட்டு, நானே அச்சத் திற்காளாகி, அதைப் பற்றிக் கவலைப்படாமல் எப்படியும் இந்தப் பொதுக் குழு வுக்கு வந்தே தீர வேண்டுமென்ற அக்கறையோடு, அந்த அடிப்படை உணர்வோடு உங்களையெல்லாம் இங்கே சந்திக்கின்ற அந்த வாய்ப்பைப் பெற்றிருக் கிறேன் என்று சொன்னால், அது என்ன என்பதை என்னுடைய குடும்ப மருத்துவரைக் கேட்டால் சொல்வார். என்னுடைய குடும்பத்திலே பணியாற்றிக் கொண்டிருக்கின்ற என்னுடைய அன்புத் தோழன், நித்யாவைக் கேட்டால் சொல்வார். அப்படிப்பட்ட ஒரு நிலையில் இன்று காலையில் பொதுக்குழுவிற்கு வர முடியுமா என்ற கேள்விக்குறிக்கிடையே எழுந்து - ஆனால் கடைசியாக இருக்கின்ற உயிர் ஒன்று, அது போகப் போவதும் ஒரு முறைதான், அது இந்த நல்ல காரியத் திற்காகப் போனால் என்ன என்ற அந்த உறுதியோடு பொதுக்குழுவுக்கு நான் வந்தேன். எனவே நீண்ட நேரம் என்னால் இந்தப் பொதுக் குழுவிலே நம்முடைய பேராசிரியர் அவர்கள் வழங்கியதைப் போன்ற அரிய விளக்கங்களை, ஆணித் தரமான வாதங்களை எடுத்து வைக்க இயலவில்லை.

உங்களையெல்லாம் வந்து பார்க்க வேண்டும், உங்களோடு கலந்து பழக வேண்டும், உங்களையெல்லாம் சந்தித்து உரையாட வேண்டும் என்ற அந்த ஒரே எண்ணம் தான், ஒரே நினைவு தான்! இப்படி நான் சொல்லும் போதே சில தாய்மார்களுடைய கண்கள் கண்ணீரைப் பொழிகின்ற காட்சியைப் பார்க்கிறேன். எனவே இதற்கு மேல் அது பற்றி வளர்க்காமல் விஷயத்திற்கு வருகிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பற்றி நம்முடைய பேராசிரியர் அவர்கள் எடுத்துச் சொன்னார்கள். வழி நடத்த வேண்டிய பெரும் பொறுப்பை அவரும், நானும் , இந்தக் கழகத்திலே இருக்கின்ற பல்வேறு அமைப்புகளும், தோழர்களும், தொண்டர்களும் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். இந்தக் கழகத்திலே இருப்பவர் கள் எப்படிப்பட்டவர்கள்? இன்றையதினம் காலையிலே நம்முடைய கழகத்தின் தேர்தலை நடத்தி வைத்தாரே, சற்குணப் பாண்டியன் - அவர் யார்? சற்குணப்பாண்டியன் என்றால் நேற்று வரையிலே, இன்றைக்குத் தெரிந்த அளவுக்கு, விவரமாகத் தெரியாது. நான் சொல்லவிருக்கின்ற செய்தியைக் கேட்டால் ஓ, இவர் தானா சற்குணப் பாண்டியன் என்று மூக்கிலே விரல் வைப்பீர்கள். ஒரு காலத்தில், பல ஆண்டுகளுக்கு முன்பு சின்னஞ்சிறு சிறுமியாக - பாவாடை கூடக் கட்டத் தெரியாத அளவுக்கு - பச்சைக் குழந்தையாக உலவிக் கொண்டிருந்தவர்தான் சற்குணப் பாண்டியன் என்கிற அந்தக் குழந்தை. அந்தக் குழந்தையை ஆரம்பம் முதலே அவருடைய பெற்றோர்கள் எப்படி வளர்த் தார்கள் என்பதை நான் அருகேயிருந்து பார்த்தவன். எவ்வளவு அன்பைப் பொழிந்தார்கள் என்பதை யெல்லாம் நான் நேரிலே கண்டவன். சற்குணப் பாண்டியன், இன்றைக்கு கணவருக்கு மனைவியாகி, குழந்தைக்குத் தாயாகி, நமக்கெல்லாம் திராவிட இயக்கத்தினுடைய ஒரு பெருமை மிக்கப் பெண்ணாகி, மகளிர் அணி யின் மங்காத விளக்குகளில் ஒன்று என்ற நிலை பெற்றிருக்கின்ற அந்தச் சற்குணப் பாண்டியன் - கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு உயிரைக் காக்க, அறுவை சிகிச்சை செய்யப்பட்டுப் போராடியவர். அந்தப் போராட்டத்தின் போது நானும், பேராசிரியரும், நம்முடைய தம்பி ஸ்டாலினும், துரைமுருகனைப் போன்றவர்களும், கட்சியிலே உள்ள தோழர்கள் அனைவரும் மருத்துவ மனையையே வீடாக ஆக்கிக் கொண்டு, நாங்கள் அங்கேயே இருந்து, அந்தப் பெண்மணியைக் காப்பாற்றினோம். நினைத்துக் கூடப் பார்க்க வில்லை. சற்குணப் பாண்டியன் மீண்டும் நம்மிடையே வருவார், வந்து நாம் நடத்துகின்ற பொதுக் குழுவிலே தேர்தல் ஆணையாளராக அமர்ந்து, தேர்தல் நடத்துவார் என்று யாரும் எண்ணிக் கூடப் பார்க்க வில்லை. எப்படி வந்தது? ஏன் இந்தப் பெருமை? இந்த அளவிற்குப் பேசக் கூடிய பெருமை எப்படி சற்குணப் பாண்டியனால் பெற முடிந்தது? அவர் சிந்திய கண்ணீர், செய்த தியாகம், அவர் காட்டிய தீவிரம் எத்தகையது? ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், இந்த இயக்கத்திலே இருப்பவர்கள், யாராக இருந்தாலும், அவர்கள் பெண்ணாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும், சுயநலத்திற்கு சிறிதும் இடம் தராமல் பொது நலமே தங்களுடைய வாழ்க்கையின் குறிக்கோள் என்ற அந்த உணர்வோடு - எதற்கும் தயார், எந்தத் தியாகத்திற்கும் தயார் என்ற எண்ணத்தோடு யார் ஒருவர் உழைக்கிறாரோ அவர்களுக்கு இன்றைக்கு சற்குணப் பாண்டியனுக்கு கிடைத்த பெருமை எதிர்காலத்தில் நிச்சயமாகக் கிடைக்கும் என்பதை மாத்திரம் அவர்களுக்கெல்லாம் சொல்லி வைக்கிறேன்.

இதைச் சொல்வதற்குக் காரணம், இந்தக் கட்சிக்குப் போனால் என்ன ஆகும்? என்று கட்சியையே உதாசீனப்படுத்திடக் கருதுகிறவர்கள், அப்படிக் கருதக் கூடாது என்பதற்காகத் தான். இந்த இயக்கம் யாரையும் கை விட்டு விடாது. இந்த இயக்கம் எல்லோருக்கும் துணை நிற்கும். எல்லோருக்கும் பெருமை அளிக்கும். எல்லோ ருக்கும் வாழ்வளிக்கும். எல்லோரையும் நம்முடைய குடும்பத்திலே ஒருவராகக் கருதுவோம்.

என்னுடைய உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே, நான் சொல்வது அலங்கார வார்த்தைகள் அல்ல. நம்முடைய பேராசிரியரோ, மற்றவர்களோ, "சகோதரிகளே" என்று அழைப்பது அலங்காரச் சொல் அல்ல. நாங்கள் அவ்வாறு அழைப்பது, எங்களோடு உங்களையும் சேர்த்துக் கொண்டு பேசுவது என்றென்றும் இந்தக் கழகம் இருந்தாலும், வாழ்ந்தாலும் நாம் ஒரே குடும்பம் என்ற அந்த உணர்வை வெளிப்படுத்தத் தான். அப்படிப்பட்ட இந்த இயக்கத்தில் தற்போது ஊடுருவுகின்ற அன்னியச் சக்திகளைப் பற்றி நாம் விவாதித்துக் கொண்டிருக்கிறோம். நம்முடைய பேராசிரியர் இங்கே பேசும்போது அதைப் பற்றிச் சொன்னார். எப்படியெல்லாம் நம்முடைய மொழிக்கு ஆபத்து வந்திருக் கிறது? வந்து வந்து எட்டிப் பார்க்கிறது என்பதையெல்லாம் எடுத்துச் சொன்னார்கள். நான் ஒன்றிரண்டை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். என்னைப் பொறுத்தவரையில் நான் இன்று நேற்றல்ல, ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கு முன்பே, சின்னஞ்சிறு இளைஞனாக இருந்த அந்தக் காலத்திலேயே திராவிட இயக்கத்திலே பற்று கொண்டு, திராவிட இயக்கத்தின் பகுத்தறிவு பகுதியில் என்னையும் ஒருவனாக ஆக்கிக் கொண்டு, என்னுடைய தந்தையார் முத்துவேலர் ஆனாலும், என்னுடைய குடும்பத்தார் ஆனாலும் அவர்கள் எல்லாம் இந்த இயக்கத்தினுடைய தாக்கத்தால் எப்படி பிற்படுத்தப்பட்ட மக்களை, மிகவும் பின் தங்கிய மக்களை முன்னேற்ற முடியும் என்று தந்தை பெரியார் அவர்களால், நீதிக் கட்சித் தலைவர்களால் திட்டம் தீட்டப்பட்டு, அந்தத் திட்டத்தை நிறைவேற்ற சமுதாய ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், சமுதாயத்தில் உள்ள இழிவு களைத் துடைக்க வேண்டும், அதற்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்று எப்படி அன்றைக்கு நாம் வழி நடைப் பயணத்தை நடத்தி னோமோ, அதைத் தான் இன்றைக்கும் தொடருகிறோம்.

ஏதோ திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலிலே தோற்றுவிட்டது, ஆகவே அதற்கு இனி எதிர் காலம் இல்லை என்று ஆலமரத்தடி ஜோஸ்யனைப் போல, சில அரசியல் கட்சிக்காரர்கள் நமக்கு ஜாதகம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் அந்த ஜாதகத்தை நம்பியல்ல, இன்றைக்கு இந்த இயக்கத்தை நடத்துவது. நாம் நம்மை நம்பித் தான் இந்த இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். இது ஆணவத்தோடு சொல்லப்படுகின்ற வார்த்தையல்ல. நம்மை நம்பி இந்த இயக்கத்தை நடத்துகிறோம் என்றால், இந்த இயக்கத்தை வாழ வைப்பதற்காக நாம் நம்முடைய உயிரையும் கொடுப்போம் என்ற அந்த உறுதியை நாம் பெற்றி ருக்கின்ற காரணத்தால் தான் இந்த இயக்கத்தை நாம் நடத்துகின்ற அந்தப் பணி யிலே தொடர்ந்து நடை போட்டு வருகிறோம்.
தி.மு. கழகத்தைப் பொறுத்த வரையில் நான் உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் மறந்து விடக்கூடாது. இந்த இயக்கத்தை அழித்து விடலாம், ஒழித்து விடலாம், பூண்டற்றுப் போகும்படி செய்து விடலாம் என்று எண்ணி யார் யாரோ முயற்சித்தார்கள். அவர்களுடைய முயற்சி எதுவும் பலிக்கவும் இல்லை. பலிக்கப் போவதும் இல்லை. அப்படிப்பட்ட வலிமையான இயக்கம், வல்லமை கொண்ட இயக்கம், இந்த இயக்கத்தை - நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தை எங்கிருந்தோ வந்தவர்கள், புதிதாக வந்தவர்கள், பெரிய பெரிய விளம்பரப் பதாகைகளைத் துhக்கிக் கொண்டு வந்தவர்கள், அழித்து விடலாமென்று கருது கிறார்கள். நாம் நம்முடைய தீர்மானத்திலே இன்றைக்கு கோடிட்டுக் காட்டி யிருக்கிறோம். இன்றைய பொதுக் குழு தீர்மானத்தின் தொடக்கத்திலே பா.ஜ.க. வினர், திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சாதாரணமாக கருதி, நம்மை வென்று விடலாமென்று அவர்களும் திட்டம் போட்டு, அந்தத் திட்டம் கடைத் தெருவுக்கு வந்து, அந்தத் திட்டத்தை நிறைவேற்ற எத்தனையோ வழிமுறை களை அவர்கள் கையாண்டும் கூட, அது முடியாது, அது இயலாது என்ற ஒரு நிலையை அவர்கள் கண்டிருக்கிறார்கள். ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் எத்தனையோ பேரால், எத்தனையோ போர் முனைகளில், எத்தனையோ கட்சிகளின் தாக்குதலால், எத்தனையோ எதிர்ப்புகளால், பகைவர்களால் சுருண்டு போய் விடும், அழிந்து போய் விடும் என்றெல்லாம் திட்டம் போட்டு, காயை நகர்த்திய போது, அந்தக் காயை வெட்டி நாம் அந்தப் பந்தயத்திலே வெற்றி பெற்றிருக்கிறோமே அல்லாமல் நாம் அதிலே தோல்வி கண்டு விடவில்லை. தோல்வி காணப் போவதும் இல்லை. ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், அவர்கள் முதலிலே திராவிட முன்னேற்றக் கழகத்தை, தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அழித்து விடலாம், ஒழித்து விடலாம் என்று ஏதேதோ காய்களை யெல்லாம் நகர்த்தினார்கள். ஆனால் அது சரிப்பட்டு வர வில்லை என்றதும், வரும்போதே நூற்றுக்கணக்கான திட்டங்களை, நம்மை யெல்லாம் வசீகரிக்கக் கூடிய திட்டங்களை, நம்முடைய மக்களுக்கு உரிய திட்டங்கள் என்று நம்பப்படுகின்ற திட்டங்களை யெல்லாம் கொண்டு வந்து குவித்து, இன்றைக்கு நாம் ஏமாந்தது தான் மிச்சம். நான் பச்சையாகவே, பகிரங்கமாகவே, வெளிப்படையாகவே சொல்கிறேன். பா.ஜ.க. ஆட்சி இன்றைக்கு காலூன்றி இருக்கிறது. அப்படி காலுhன்றி இருக்கின்ற இந்த ஆட்சி யில் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுகின்ற காரியங்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இன்னும் சொல்லப் போனால், ஜெயலலிதாவை விட -ஏமாற்றுத் தந்திரம் கற்றவர்கள் மத்தியில்இன்றைக்கு நம்மை ஆளுவதற்காக வந்திருப்பதாகச் சொல்லிக் கொண்டு நோட்டம் பார்க்கிறார்கள். ஆகவே நாம் அவர்களிடத்திலே ஏமாந்து விடக் கூடாது.

நாம் நிறைவேற்றிய தீர்மானத்திலேயே ஒரு வரி குறிப்பிட்டிருக்கிறோம். என்ன வரி என்றால், தி.மு. கழகத்தைப் பொறுத்தவரையில் நாங்கள் என்றைக்கும், யாருக்கும் அடி பணிந்து எங்கள் கொள்கைகளை விட்டுத் தர மாட்டோம், எங்கள் இலட்சியங்களை விட்டுத் தர மாட்டோம். அப்படியொரு நிலைமை ஏற்பட்டால், நாங்களும் சேர்ந்து அழிவோமே தவிர, அந்தக் கொள்கை களுக்கு அழிவுநேர நாங்கள் சம்மதிக்க மாட்டோம் என்பதை மீண்டும்மீண்டும் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். ஏனென்றால் நம்முடைய கழகத்திலே உள்ள இந்தக் கொள்கைகள் புனிதமானவை. இந்தக் கொள்கை கள் புடம் போட்டு எடுக்கப்பட்ட தங்கங்கள். அப்படிப்பட்ட கொள்கைகளுக்கு உரிய நாம், அவைகளை யெல்லாம் கை விட்டு விட்டு யாருக்கோ சரணடைந்து, யாருக்கோ சாமரம் வீசி, யாருக்கோ அடிமைகளாகி நம்மை விற்றுக் கொள்ள நாம் தயாராக இல்லை. ஆகவே தான் நான் இங்கே கூடியிருக்கும் நம்முடைய தமிழ்த் தோழர்கள், தமிழ் இயக்கத் தோழர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

ஒன்றை ஞாபகப்படுத்துகிறேன். இந்த இயக்கம் நீதிக் கட்சி என்று தொடங்கப்பட்டு, சுயமரியாதை இயக்கம் என்று சுடர்விட்டு, அதற்குப் பிறகு இந்த இயக்கத்தை எப்படியெல்லாம் வளர்க்கலாம் என்பதற்காக அரும்பாடுபட்ட தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணா அவர்களும், பட்டுக்கோட்டை அழகிரிசாமி அவர்களும் தியாகம் செய்து வளர்த்த இந்த இயக்கத்தை நாம் கட்டிக் காப்போம் என்று நாம் எடுக்கின்ற உறுதியை நிறைவேற்ற நம்மிடத்திலே ஏராளமான இளைஞர்கள் இருக்கிறார்கள். இன்னமும் வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த இளைஞர்களின் எழுச்சி தடைபடா குருதியோட்டமாக பொங்கி வழிந்து கொண்டிருக்கிறது. ஆகவே அந்த எழுச்சியைப் பயன்படுத்தி இந்த இயக்கத்தை மேலும் மேலும் வளர்ப்போம் என்ற உறுதியை உங்களுக்கு எடுத்துச் சொல்லி, அந்த உறுதியை அடைவதென்று மானம் காப்போம், தன்மானம் காப்போம், தமிழர்களுடைய மானத்தைக் காப்போம், தமிழன் தமிழன் என்று பேசி, தமிழ்நாடு தமிழருக்கே என்ற அளவிற்கே நம்முடைய விடுதலை இயக்கத்தைக் கட்டிக் காத்து, தமிழ்நாடு என்ற அந்தப் பெயருக்கு ஒரு உணர்வை, உணர்ச்சியை உண்டாக்கியிருக்கிறோம். அந்த உணர்ச்சி பட்டுப் போகாமல், தமிழ்நாடு தமிழருக்கே என்று ஆகா விட்டாலும், அந்தத் தமிழ் நாட்டை உடனடியாகப் பெற முடியா விட்டாலும், தமிழ்நாட்டைப் பெறுகின்ற அளவுக்கு தமிழன், தமிழ், தமிழ் மொழியைக் காப்பாற்றுகின்ற அளவுக்கு நாம் உறுதி கொண்டவர்களாக - உண்மையான கழகப் பற்றும், நாட்டுப் பற்றும், மொழிப் பற்றும் கொண்டவர் களாக நம்முடைய இயக்கத்தைக் கட்டிக் காப்போம், கட்டிக் காப்போம் என்று சூளுரைத்து, உங்களுக்கு என்னுடைய வணக்கத்தையும் வாழ்த்தையும் தெரி வித்து விடைபெறுகிறேன்.#DMK #Kalaignar #DMKelections #Karunanidhi #Politics #Tamilnadu

Reply · Report Post