KalaignarKarunanidhi · @kalaignar89
3rd Jan 2015 from TwitLonger
மிலாதுநபித் திருநாள் வாழ்த்துச் செய்தி
அண்ணல் நபிகள் நாயகம் பிறந்த நன்னாள் ஆண்டுதோறும் "மிலாது நபி" திருநாளாக இஸ்லாமிய மக்களால் நிறைந்த மகிழ்ச்சியோடும் மிகுந்த எழுச்சியோடும் கொண்டாடப்படுகிறது.
நபிகள் நாயகம் அவர்கள் இஸ்லாமியத் தத்துவத்தை ஒரு வாழ்க்கை நெறியாக மக்களுக்குப் போதித்தார்; போதித்தபடியே வாழ்ந்து காட்டினார். அவர் தமது வாழ்நாளில் பொய் பேசியதில்லை; வாக்குறுதிகளில் இருந்து மாறியது இல்லை; மது அருந்தியதில்லை; சூதாடியதில்லை; ஏசிப்பேசி, இகழ்ந்து
பிறர் மனத்தைப் புண்படுத்தி இழிவு செய்ததில்லை; புறங்கூறிப் பழி தூற்றியதுமில்லை; எவரையும் சபித்ததும் இல்லை; தனக்குத் துன்பம் இழைத்தவர்களைப் பழிவாங்கியதும் இல்லை; அவர் எப்பொழுதும் ஏழைகளுக்காக இரக்கப்பட்டார்; அனாதைகளுக்கு ஆதரவு தந்தார்; இவற்றின் காரணமாகவே நபிகள் பெருமானாரிடம் அன்பு கொண்ட பொதுமக்கள் அவரை "நம்பிக்கைக்குரியவர்", "அடைக்கலம் அளிப்பவர்", "வாய்மையாளர்" எனப் பொருள்படும், "அல் அமீன்" எனும் சிறப்புப் பெயர் கொண்டு அழைத்தனர்.
இத்தகைய சிறப்புகளுக்கெல்லாம் உரிய அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த நாளாகிய "மிலாது நபி" நன்னாளை இஸ்லாமியச் சகோதரர்கள் மகிழ்ந்து கொண்டாட வேண்டும் என்பதற்காக முதன்முதலாக நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற 1969ஆம் ஆண்டிலேயே விடுமுறை நாளாகஅறிவித்துச் செயல்படுத்தினேன். அந்த மிலாது நபி நாள் விடுமுறையை 2001இல் அதிமுக அரசு ரத்து செய்ததது. 2006இல் கழக அரசு அமைந்தபோது, மிலாது
நபித் திருநாளுக்கு மீண்டும் "அரசு விடுமுறை" வழங்கியது, அரசு வேலைவாய்ப்புகளிலும், கல்வி நிறுவனங்களிலும் இஸ்லாமியர்க்கு மூன்றரை விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியது உட்பட பல்வேறு சலுகைகளை நல்கி, தமிழகத்தில் வாழும் இஸ்லாமிய சமுதாய மக்களின் நலன் காத்து என்றும்
இஸ்லாமிய சமுதாயத்துடன் தோழமை கொண்டுள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த மிலாது நபித் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கின்றேன். #DMK #Kalaignar #Karunanidhi #miladunnabi #muslim