என்றும் வாழும் இந்தக் கழகம்!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் 14வது பொதுத் தேர்தல் ஜனநாயக அடிப்படையில் படிப்படியாக முறையாக நடைபெற்று, புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பொதுக் குழு உறுப்பினர்களின் கூட்டம் வரும் 9-1-2015 அன்று வெள்ளிக் கிழமை காலை 9 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது. அன்றையதினம் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோர்களுக்கான தேர்தலும் மற்றும் தணிக்கைக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தலும் நடைபெறவுள்ளது.

கழகத்தின் 13வது பொதுத்தேர்தலில், 35 மாவட்டக் கழகங்களாக இருந்த நிலையை 3-2-2012 அன்று நடைபெற்ற பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, 2-6-2014 அன்று நடைபெற்ற உயர்நிலைச் செயல்திட்டக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட கழக நிர்வாகச் சீர்திருத்தக் குழு பரிந்துரை செய்ததின்பேரில், கழக நிர்வாக அமைப்பில் தற்போது 65 மாவட்டக் கழகங்களாகப் பிரிக்கப்பட்டு, அந்த 65 மாவட்டங்களில் சேலம், ஈரோடு மாவட்டங்கள் நீங்கலாக மற்ற 60 மாவட்டங்களுக்கும், மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், ஊராட்சி உள்ளிட்ட வட்டக் கழகத் தேர்தல்கள் படிப்படியாக நடைபெற்று முடிந்து தற்போது தலைமைக் கழகத்திற்கான தேர்தல்கள் நடைபெறவுள்ளன.

நடைபெற்று முடிந்த இந்த 14வது பொதுத் தேர்தலில் பங்கேற்ற கழக உறுப்பினர்களின் எண்ணிக்கை சுமார் 85 இலட்சம் ஆகும். ஏற்கனவே கிளைக் கழகங்களின் மேல் அமைப்பாக ஒன்றியக் கழகங்கள் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது நடைபெற்று முடிந்த இந்த 14வது பொதுத் தேர்தலில், இந்த அமைப்புகளுக்கிடையே நிர்வாகத் தொடர்பு வசதிகளுக்காக புதிய அமைப்பாக 12,514 "ஊராட்சிக் கழகங்கள்" அறிவிக்கப்பட்டு, அதிலே உள்ள ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 247 வார்டு கிளைகளுக்குத் தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளன.
இந்தத் தேர்தலில் முதற்கட்டமாக ஊராட்சிக் கழகத் தேர்தல்களுக்கான வேட்பு மனுக்கள் நான்கு கட்டமாகப் பெறப்பட்டு, போட்டியிருந்த ஊராட்சிகளுக்கான ஊராட்சிக் கழகத் தேர்தல்கள் ஐந்து கட்டங்களாக நடைபெற்றன. அதில் முதல் கட்டம் 2014 ஜனவரி 26, 27 ஆகிய தேதிகளிலும், இரண்டாவது கட்டம் 2014 ஆகஸ்ட் 12, 13 ஆகிய தேதிகளிலும், மூன்றாவது கட்டம் 2014 ஆகஸ்ட் 18 அன்றும், நான்காவது கட்டம் 2014 ஆகஸ்ட் 26 அன்றும் ஐந்தாவது கட்டம் 2014 செப்டம்பர் 5 அன்றும் நடைபெற்றுள்ளன. அதுபோலவே பேரூர்க் கழகத் தேர்தல் ஐந்து கட்டங்களாகவும், ஒன்றிய, நகரக் கழகத் தேர்தல்கள் எட்டு கட்டங்களாகவும் நடைபெற்று முடிந்துள்ளன.

இந்தத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்கட்சிக் குழப்பம் ஏற்படும், பிரச் சினைகள் உண்டாகும், ஒருவருக்கொருவர் முட்டி மோதிக் கொள்வார்கள், அதை ஊதிப் பெரிதாக்கி, அதிலே குளிர் காயலாம் என்று எதிர்க் கட்சிக்காரர்கள் சிலரும், ஒரு சில இதழாளர்களும் பகல் கனவு கண்டு கற்பனை உலகிலே களிப்போடு சஞ்சரித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் கண்ட கனவு நொறுங்கிப் போனது. ஆங்கிலப் புத்தாண்டு தினத்தையொட்டி என்னைச் சந்திக்க வந்தவர்களின் படங்கள் சில ஏடுகளிலே வந்துள்ளன. அதிலே "மாலைமலர்" நாளேட்டிலே ஒரு படம் வந்துள்ளது. அந்தப் படத்தில், என்னைச் சந்தித்து வாழ்த்த வந்த சென்னை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தம்பி சேகர்பாபுவும், அவருக்குப் பக்கத்தில் அவரை கடுமையாக எதிர்த்து அந்த மாவட்டத்தில் மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்புக்கு நிற்க விரும்பிய தம்பி ரெங்கநாதனும் ஒன்றுபட்டு மகிழ்ச்சியோடு நின்று கொண்டிருப்பதைக் கண்டிருக்கலாம். ஆம், இருவரும் சில நாள்களுக்கு முன்பு மாவட்டக் கழகச் செயலாளராக யார் வருவது என்பதற்காகக் கடுமையாகப் போட்டியிட்டவர்கள். ஆனால் பேச்சுவார்த்தையில், ரெங்கநாதன் மனமுவந்து விட்டுக் கொடுத்து, சேகர்பாபு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு இருவரும் சேர்ந்து ஒன்றாக என்னைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்த போது நான் பெரிதும் மகிழ்ந்தேன். இந்த ஒரு மாவட்டத்தில் மட்டும் நடைபெறும் நிகழ்ச்சியாக இது இருந்து விடக் கூடாது. தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து மாவட்டங்களில், போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள், வெற்றி வாய்ப்பினை இழந்தவர்கள், முதலில் போட்டியிட நினைத்து பின்னர் வாய்ப்பினை விட்டுக் கொடுத்தவர்கள் என்று அனைவரும் உணர்வுபூர்வமாக ஒன்றாக இணைந்து 2016இல் வரவுள்ள சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தலில் நம்மை எதிர்ப்பவர்களைத் தோற்கடிப்பதற்குரிய உறுதியான முயற்சியிலே ஈடுபடுவதுதான், நான் பெரிதும் மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்திருக்கும் செய்தியாகும். இது ஏதோ, தனிப்பட்ட எனக்காகத் தெரிவிக்கப்படும் விருப்பமல்ல. நமது கழகத்திற்கு மேலும் தொடர்ந்து ஆக்கமும், ஊக்கமும் ஊட்டி, வியத்தகு முறையில் வளர்ப்பதற்கு அதுதான் சரியான வழியாகும்.
மாவட்டக் கழகச் செயலாளர்களுக்கான தேர்தல்கள் அனைத்தும் 25-12-2014 முதல் 30-12-2014 ஆகிய ஆறு நாட்களில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்திலும் - இராயபுரம் அறிவகத்திலும் நடத்தி முடிக்கப்பட்டன. மாவட்டக் கழகத் தேர்தல்களை தலைமைக் கழகப் பிரதிநிதிகளாக எல். பலராமன், ஜி. செல்வராஜ், ஆ.த. சதாசிவம், வழக்கறிஞர்கள் இரா.கிரிராஜன், கே.எஸ். ரவிச் சந்திரன், இ. பரந்தாமன் ஆகியோரும், இவர்களுடன் சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக தொ.மு.ச. நிர்வாகிகள் 25 பேரும் இணைந்து நடத்தியிருக்கிறார்கள். ஒரு சில மாவட்டங்களில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்
60 மாவட்டங்களில், மாவட்டக் கழகச் செயலாளர் கள் தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளதில், மாவட்டக் கழகச் செயலாளர்களாகத் தேர்ந்தெடுக் கப்பட்டிருப்பவர்களில் 38 பேர் புதுமுகங்கள், அதாவது
63 சதவிகிதம் பேர் மாவட்டக் கழகச் செயலாளர்களாகப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். எஞ்சிய 22 மாவட்டங்களில்தான் முன்னாள் அமைச்சர்களோ அல்லது முன்னாள் மாவட்டக் கழகச் செயலாளர்களாக இருந்தவர்களோ தேர்ந்தெடுக் கப்பட்டிருக்கிறார்கள். அதிலும் முன்னாள் அமைச் சர்கள் என்று பார்த்தால் 10 பேர் மட்டுமே இந்த 60 மாவட்டங்களில் முன்னாள் அமைச்சர்களாவர். அதாவது 17 சதவிகிதம் பேர் முன்னாள் அமைச் சர்கள். 12 பேர் கடந்த முறை மாவட்டக் கழகச் செயலாளர்களாக இருந்தவர்கள். #DMK #Kalaignar #Karunanidhi #partyelections #DMK #2016 #tamilnadu #politics

கழகத்தின் 14வது பொதுத் தேர்தல் பற்றி கடந்த சில மாதங்களாக நாடும், ஏடும் முறையே நமது கழகத் தேர்தல் பற்றிய செய்திகளை அறியவும், வெளியிடவும் - விபரம் தெரிந்து கொள்ளவும் வாய்ப்புப் பெற்றுள்ளன என்றால், அதற்குக் காரணம் கடந்த 65 ஆண்டுக் காலமாக முறைப்படி 13 பொதுத் தேர்தல்களை நடத்தி விட்டு, தற்போது 14வது பொதுத் தேர்தலை நடத்திக் கொண்டிருக்கிறோம் என்பதுதான். உட்கட்சி ஜனநாயகத்தை உளமாரப் போற்றிக் காப்பாற்றி நாம் கடைப்பிடித்து வருகிறோம் என்பதில் ஒவ்வொரு கழக உடன்பிறப்பும் அடைந்திடும் உள்ள மகிழ்ச்சிக்குத்தான் அளவேது?

1970ஆம் ஆண்டுகளில் தஞ்சை மாவட்டம் ஒன்றுபட்ட ஒரே மாவட்டமாக இருந்த போது, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் மாவட்டக் கழகச் செயலாளராக வரவேண்டு மென்பதற்காக, என்னுடைய சொந்த மாவட்டத்தில் அவ்வாறு வரவேண்டுமென்று விரும்பி, தம்பி தாழை மு. கருணாநிதியை மாவட்டக் கழகச் செயலாள ராகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்க நான் எடுத்துக் கொண்ட முயற்சியும் - அதில் பெற்ற வெற்றியும் அனைவரும் அறிந்ததேயாகும். அடுத்தடுத்துத் திருத்தப்பட்ட நமது கழகச் சட்டதிட்டப் புத்தகத்தில் ஊராட்சிக் கழகம் தொடங்கி தலைமைக் கழகம் வரையில் பொறுப்புகளுக்கு நடைபெறும் தேர்தலில் ஒவ்வொரு அமைப்பிலும் மூன்று பேர் துணைச் செயலாளர்களாகத் தேர்வு செய்யப்பட வேண்டு மென்றும் அவர்களில் கட்டாயமாக ஒருவர் ஆதி திராவிடர் அல்லது மலைவாழ் வகுப்பினராகவும், ஒருவர் பெண்மணியாகவும், ஒருவர் பொதுத் தொகுதியினராகவும் இருக்க வேண்டுமென்றும் குறிக்கப் பெற்று இந்தத் திருத்தம் நடைமுறையில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. எனவே, கழகத்தின் சட்டதிட்டப்படியுள்ள எந்தவொரு அமைப்பிலும் ஆதி திராவிடர்க்கும், மகளிர்க்கும் கட்டாயம் இடம் உண்டு. இந்தமுறை மாவட்டக் கழகச் செயலாளர் களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் இருவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பொறுப்புக்கு வந்திருக்கிறார்கள். அதுபோலவே மூன்று நான்கு மகளிராவது மாவட்டக் கழகச் செயலாளர்களாக வரவேண்டுமென்று நான் எண்ணிய போதிலும், ஒரே ஒரு பெண்மணி மட்டுமே இந்த முறை மாவட்டக் கழகச் செயலாளராக வந்துள்ளார்.

சாதி மதங்களை வைத்து, அந்த அடிப்படையிலே நடைபெறுவதல்ல நம்முடைய இயக்கம். ஆனால் முக்கியப் பொறுப்பான மாவட்டக் கழகச் செயலாளர் களாக வந்திருப்பவர்கள் எந்தெந்த வகுப்புகளைச் சார்ந்தவர்கள் என்று பார்த்தால் முக்குலத்தோர் 14 பேரும், கொங்கு வேளாளர் 8 பேரும், வன்னியர் 8 பேரும், நாயுடு 6 பேரும், இஸ்லாமியர்கள் 4 பேரும், முதலியார் 3 பேரும், உடையார், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பிள்ளைமார், மீனவர், ரெட்டியார் வகுப்பைச் சேர்ந்தவர்கள் தலா 2 பேர்களும், செட்டியார், யாதவர், நாடார், நாடார் கிறித்தவர், கவுடா, முடிதிருத்துவோர், முத்தரையர் ஆகிய வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் தலா ஒருவரும் இடம் பெற்றுள்ளார்கள். எந்தெந்த வகுப்பினைச் சேர்ந்த வர்கள் என்பதைப் பற்றி நாம் எப்போதும் பார்த்த தில்லை என்ற போதிலும், ஒரு சில நாளேடுகள் இந்த வகுப்பாருக்கு இடம் இல்லை, அந்த வகுப்பாருக்கு வாய்ப்புத் தரப்படவில்லை என்றெல்லாம் தவறான செய்திகளை வெளியிட்டதால், தகவலுக்காக இந்த உண்மை விவரங்களை நான் குறிப்பிட்டுள்ளேன்.

போட்டியிட்டுத் தேர்வு பெற்று; மாவட்டக் கழக - மாநகரக் கழக - ஒன்றியக் கழக - நகரக் கழக - பகுதிக் கழக - பேரூர்க் கழக - ஊராட்சிக் கிளை -ஊர்க்கிளை - உட்கிளைக் கழகச் செயலாளர் களாகப் பொறுப்பேற்றுள்ளவர்கள், போட்டியிட்டோ - போட்டியில்லாமலோ பொறுப்பேற்க இருப்பவர்கள் அனைவரையும் தலைமைக் கழகத்தின் சார்பில் மனதாரப் பாராட்டி வாழ்த்துகிறேன். வருகின்ற 9ஆம் தேதி நடைபெறும் பொதுக் குழுவில் நேரில் சந்தித்து வாழ்த்துகின்ற வாய்ப்பையும் பெறுவேன்.
கழகத்தின் இந்த 14வது பொதுத்தேர்தல் நடை பெற்றுள்ள இரண்டாண்டு காலத்தில் அமைப்பு களுக்கான தேர்தல் களத்தில் நின்ற அருமை உடன்பிறப்புக்கள் ஆயிரக்கணக்கானவர்கள் என் முன் வைத்த பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் சந்தர்ப்பங்கள் பலவற்றை நானும், பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் அவர்களும், பொருளாளர் தம்பி மு.க. ஸ்டாலினும், கழக அமைப்புச் செயலாளர்கள் தம்பிகள் டி.கே.எஸ். இளங்கோவன், ஆர்.எஸ். பாரதி ஆகியோரும், தலைமைக் கழகத்தில் மேலாளராகப் பணியாற்றும் பத்மநாபன், ஜெயக்குமார் மற்றும் அலுவலாளர் களும் பெற்றிருந்தது உற்சாகமூட்டக் கூடிய தாகவே இருந்தன.

கோரிக்கையுடன் எங்களிடம் வந்தார்களே, அவர்களுக்கிடையேதான் என்ன பிரச்சினை? கழகப் பணியினை யார் நிறைவேற்றுவது என்பதிலே தான் போட்டி - ஆளுங்கட்சியின் அடக்கு முறைகளைத் தாங்கிக் கொள்வதிலே யார் முந்தி என்பதிலேதான் போட்டி - நம்முடைய இயக்கம் நாளும் வளரும் ஒரு இயக்கம் - வளர்ந்து பக்குவப் பட்டுவிட்ட ஒரு இயக்கம் - மாபெரும் வரலாறு படைத்திட்ட ஒரு இயக்கம் - மேலும் மேலும் வளர்ந்து வருகின்ற ஒரு இயக்கம் - இதிலே வரவேற்கத்தக்க போட்டிகள்தான் இருந்தன. அதனால்தான் இந்தப் போட்டியிலே வென்றவர்களை; நான் வென்றவர்கள் என்று சொல்லாமல், தேர்வு செய்யப்பட்டவர்கள் என்றே சொல்லி, போட்டியின்றிப் பொறுப்பேற்றுள்ளவர்களையும் - போட்டியிட்டுப் பொறுப்பேற்றிருப்பவர்களையும் - போட்டியிட்டும் பொறுப்பேற்க இயலாமற் போனவர் களையும்; பெற்றோர்க்கு எல்லாப் பிள்ளைகளும் தங்கள் பிள்ளைகள்தான் என்ற பாகுபாடற்ற உணர்வும் பாசமும் இருப்பது போல்; கழகத்தின் எல்லா உடன்பிறப்புகளும் என் உயிரினும் மேலான உடன்பிறப்புகள்தான் எனக் கூறி, வாரி அணைத்து, உளமார வரவேற்கிறேன், வாழ்த்துக் கூறுகிறேன். என்றும் வாழும் இந்தக் கழகம்!

இத்துடன் நமது பணி முடிவடைந்துவிட வில்லை. கழகத்தின் பொதுக் குழு வருகின்ற 9ஆம் தேதி சென்னையிலே நடைபெறவுள்ளது. அந்தப் பொதுக் குழுவிலேதான் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு கழகத்தைத் தலைமையேற்று நடத்த வேண்டிய கழகத் தலைவர் யார், கழகப் பொதுச் செயலாளர் யார், கழகப் பொருளாளர் யார் என்பதைத் தீர்மானிக்கும் தேர்தல் நடைபெற வுள்ளது. பல்வேறு மட்டங்களில் உள்ள கழகத்தினரின் வாக்குகளைக் கேட்டுப் பெற்று, பொதுக் குழு உறுப்பினர்களாக, செயற்குழு உறுப்பினர்களாக, ஒன்றியக் கழக, நகரக் கழக, மாவட்டக் கழகச் செயலாளர்களாகப் பொறுப்புக்கு வந்துள்ள நீங்கள் எல்லாம் கழகத்தின் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு வாக்க ளிக்க உள்ளீர்கள். கழகத்தின் வரவு செலவுக் கணக்குகளை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஆய்வு செய்ய வேண்டிய தணிக்கைக் குழு உறுப்பினர் களையும் இந்தப் பொதுக் குழுவிலே தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும் அடுத்து நாம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்துச் சில தீர்மானங்களையும் பொதுக்குழுவிலே வடித் தெடுக்க வேண்டியுள்ளது. இதற்கெல்லாம் தயாராக கழகப் பொதுக் குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரையும் பொதுக் குழுவுக்கு வருகை தந்து சிறப்பிக்க வேண்டுமென்ற என்னுடைய அன்பழைப்பினைத் தெரிவித்து, உங்களையெல்லாம் அங்கே நேரில் சந்திக்க விருக்கிறேன் என்ற பெரு மகிழ்ச்சியினையும் அறிவித்து, அதற்காகக் காத்திருக்கிறேன் என்று கூறி இந்தக் கடிதத்தை நிறைவு செய்கிறேன்.

Reply · Report Post