2014-2015ஆம் ஆண்டு கரும்பு அரைவைப் பருவம் தொடங்கி மூன்று மாதங்கள் முடிந்துள்ள நிலையிலும், அ.தி.மு.க அரசு இந்த ஆண்டுக்குரிய கரும்புக்கான குறைந்த பட்ச ஆதார விலையை, இதுவரை அறிவிக்காதது
குறித்துக் கரும்பு விவசாயிகள் பெரிதும் கவலை கொண்டுள்ளனர்.

“கரும்புக்கான குறைந்த பட்ச ஆதார விலையை நிர்ணயிப்பதற்காகக் கடந்த தி.மு.க. ஆட்சியில் வேளாண்மைத்துறை அமைச்சர் தலைமையில், விவசாயச் சங்கங்கள், ஆலை நிர்வாகத்தினர், அரசு அதிகாரிகள் அடங்கிய முத்தரப்புக் கூட்டம் நடத்தப்படும். இந்த கூட்டத்தின் மூலம் கரும்பு விவசாயிகளும் ஆலை நிர்வாகத்தினரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் நியாயமான விலை நிர்ணயிக்கப்படும்.

ஆனால் அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்றதில் இருந்து முத்தரப்புக் கூட்டத்தை நடத்துவதில்லை” என்று விவசாயிகள் சங்க நிர்வாகிகள் தமது மனக்குமுறலை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

தமிழகத்தில் 27 தனியார் சர்க்கரை ஆலைகளும், 2 பொதுத் துறை ஆலைகளும், 13 கூட்டுறவுத் துறை ஆலைகளும் இயங்கி வருகின்றன. கரும்பு விவசாயத்தில் 3 லட்சம் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழகத்தில்
ஆண்டு தோறும் 8.6 லட்சம் ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது.

கடந்த 2013-2014ஆம் ஆண்டில் கரும்பு கொள்முதல் விலையாக டன்னுக்கு 2,650 ரூபாய் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவித்தன. இதில் போக்குவரத்து செலவினங்களுக்காக 100 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டது. இந்த 2,650 ரூபாய் என்ற கொள்முதல் விலை தங்களுக்குக் கட்டுபடியானதல்ல என்று விவசாயிகள் குரல் கொடுத்தார்கள்.
2005-2006ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் டன் ஒன்றுக்கு 1014 ரூபாய் என்று விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதை 2010-2011ஆம் ஆண்டு, தி.மு. கழக ஆட்சியில் டன் ஒன்றுக்கு ரூ. 2,000 என உயர்த்தப்பட்டது.

ஆனால் இப்போது என்ன நிலைமை? தமிழகத்தில் நடைபெற்று வரும் ஜனநாயக விரோத ஆட்சியில், ஜனநாயக ரீதியிலான கலந்தாலோசனைகளுக்குச் சிறிதும் இடமில்லாததால், முத்தரப்புக் கூட்டமே நடத்தப்படாமல், ஒருதலைப்
பட்சமாக கரும்புக்குக் கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

அதுவும் இந்த ஆண்டு அரைவைப் பருவம் தொடங்கி மூன்று மாதங்கள் கடந்ததற்குப் பிறகும், மாநில அரசின் பரிந்துரை விலை அறிவிக்கப்படாததால், பழைய விலையான டன் ஒன்றுக்கு 2,550 ரூபாய் தான் வழங்கப்படுகிறது.
தனியார் சர்க்கரை ஆலைகள் 2,300 ரூபாய் முதல் 2,400 வரை மட்டுமே வழங்கி வருகின்றன. கரும்பு விவசாயிகளைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் நடவடிக்கைகளுக்கிடையே, மத்திய அரசு அறிவித்துள்ள விலையான டன் ஒன்றுக்கு 2,200 ரூபாய் வழங்க தமிழக அரசின் சர்க்கரைத்துறை இயக்குனர், சர்க்கரை ஆலைகளுக்குக் கடிதம் அனுப்பி உள்ளதாக இன்று (29-12-2014) செய்தி வெளிவந்துள்ளது.

இது குறித்து, கரும்பு பயிரிடுவோர் சங்கத்தினர், “டன் ஒன்றுக்கு 2,200 ரூபாய்தான் என்ற முடிவுக்கு நாங்கள் கடும் ஆட்சேபம் தெரிவிக்கிறோம். உரச் செலவு, பூச்சி மருந்து, ஆள் கூலி ஆகியவை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், ஏற்கனவே வழங்கிய 2,650 ரூபாய் என்பதிலிருந்து, தற்போது 2,200 ரூபாய் என்று 450 ரூபாய் குறைத்து வழங்குவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.

மத்திய அரசின் விலையை மட்டும் வழங்க வேண்டுமென்ற சர்க்கரைத்துறை ஆணையரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இந்த விலை அறிவிப்பு, தனியார் ஆலைகளுக்கு ஆதரவாகச் செயல்படுவது போல் உள்ளது. எனவே இந்த ஆண்டு கரும்பு கொள்முதல் விலையை டன் ஒன்றுக்கு 3,500 ரூபாய் என நிர்ணயிக்க வேண்டும். உடனடியாக முத்தரப்புக் கூட்டத்தைக் கூட்டி, கரும்பு விவசாயிகளுக்கு நியாயமான விலையை அறிவிக்காவிட்டால் சர்க்கரை ஆலைகள் முன் போராட்டம் நடத்தப்படும்” என்று போர்க் குரல் கொடுத்துள்ளனர்.

மேலும், கடந்த 2013-2014ஆம் ஆண்டுக்கான அரைவைப் பருவத்தில் கொள்முதல் செய்யப்பட்ட கரும்புக்கான நிலுவைத் தொகை பல பகுதிகளில் இன்னும் வழங்கப்படாமல் உள்ளது. கரும்பு கொள்முதல் செய்யப்பட்ட 15
நாட்களுக்குள்ளேயே அந்தத் தொகை வழங்கப்பட்டிருக்க வேண்டும். 2013-14ஆம் ஆண்டுக்கான 200 கோடி ரூபாய் கரும்பு விவசாயிகளுக்கு இன்னும் வழங்கப்படாமல் நிலுவையாக உள்ளதெனத் தெரிகிறது.

எனவே, அ.தி.மு.க. அரசு உடனடியாக முத்தரப்புக் கூட்டத்தைக் கூட்டி கரும்புக்கான மாநில அரசின் பரிந்துரை விலையை டன் ஒன்றுக்கு 3500 ரூபாய்க்குக் குறையாமல் நிர்ணயித்து வழங்கிட வேண்டும் என்றும்; கரும்பு
விவசாயிகளுக்குச் சேர வேண்டிய நிலுவைத் தொகை 200 கோடி ரூபாயை உடனடியாகச் செலுத்திடத்தக்க அவசரகால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் வலியுறுத்துகிறேன்.

இஃதன்னியில், பொதுத்துறை மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர்கள், ஊதிய உயர்வு கோரி கடந்த 9ஆம் தேதி முதல் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். தஞ்சை மாவட்டம் குருங்குளம், அரசு அண்ணா
சர்க்கரை ஆலைத் தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். இந்தச் சர்க்கரை ஆலையில் அரைவைப் பணி முடங்கியுள்ளதால், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டக் கரும்பு விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகளின் பிரதிநிதிகள் சந்தித்து முறையிட்டதோடு, அவரை முற்றுகையிட்டு, தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள். அதைப் போலவே தர்மபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் நீடித்து வரும் நிலையில், அந்த மாவட்டத்திலும் முற்றிய கரும்பு காய்ந்து வருவதால் விவசாயிகள் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். கடலூர் மாவட்டத்தில் கூட்டுறவு மற்றும் பொதுத் துறை சர்க்கரை ஆலை ஊழியர்களும், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தொழிலாளர்களும் ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி, ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

நாடு தழுவிய கரும்பு விவசாயிகள் மற்றும் சர்க்கரை ஆலைத் தொழிலாளர்கள் பற்றிய முக்கியமான இந்தப் பிரச்சினைகள் குறித்து தமிழக அரசின் முதல் அமைச்சரோ ஏனைய அமைச்சர்களோ, அதிகாரிகளோ
கிஞ்சிற்றும் கவலை கொண்டதாகத் தெரியவில்லை. அரசு என்று ஒன்று முறையாக இயங்கினால் தானே, மக்கள் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்து வைத்திட வேண்டும் என்ற அக்கறை ஏற்படும்!

Reply · Report Post