பூமணியும் அஞ்ஞாடியும் - சில அறிமுகத் தகவல்கள்


பூமணி தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டியைச் சேர்ந்தவர். கோவில்பட்டிக்கருகே ஒரு கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். ‘நள்ளிரவின் குழந்தைகள்’ என்று அழைக்கப்படும் தலைமுறையின் முதல் வருகைகளில் ஒருவர்.

ஊழலுக்குப் பேர்போன தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையில் ஏறக்குறைய 30 ஆண்டுகள் நேர்மையாகப் பணிபுரிந்துவிட்டு 2006இல் ‘அஞ்ஞாடி’ நாவலை எழுதுவதற்காக விருப்ப ஒய்வு பெற்றவர்.

பூமணி, தன் இளமைக் காலத்தில் தீவிர இடதுசாரி அரசியலில் ஈடுபாடுடையவராகவும் புரட்சி இயக்கங்களுடன் தொடர்புடையவராகவும் இருந்தார். மார்க்சிய கருத்தியலில் பயிற்சி உடையவர்.

இயல்புவாத எழுத்தில் தன் அபாரமான கலைநுட்பத்தின் வழியாக ஒரு புதிய தடத்தையே உருவாக்கியவர். தற்காலத் தமிழ் இலக்கியத்தில் இவருடைய முதல் இரண்டு நாவல்களான ‘பிறகு’ மற்றும் ‘வெக்கை’ தமிழ் நாவல் வெளியில் அரிய சாதனைகளாக இன்றும் கொண்டாடப்பட்டு வருகின்றன.

புனைவிலக்கிய களத்தில் தன் ‘முன்னத்தி ஏர்’ என்று இவரால் கொண்டாடப்படுபவர், கோவில்பட்டிக்கருகே இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்த கி இராஜநாராயணன்.

இவரைப் பற்றி அரசியல்ரீதியாக இரண்டு விடயங்களைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.

1. தலித் எழுத்தாளர் என்று வகைப்படுத்தப்படுவதை திட்டவட்டமாக மறுத்தவர். ‘சமூகத்தில் ஒரு அங்கமாகப் பிறந்து அப்படியேதான் வாழ்ந்து வருகிறேன். என்னை எந்த அடையாளத்தின் பேரிலும் வகைமைப்படுத்தி வெளியே நிறுத்திவைப்பதை ஒப்பமாட்டேன்’ என்ற நிலைப்பாட்டை எடுத்தவர். இதை நம் தமிழ்சூழலில் எல்லோரும் - குறிப்பாக, பெரியாரிஸ்டுகள் - கடும் முயற்சி எடுத்துப் புரிந்துகொள்வதே அவருக்குச் செய்யும் மரியாதை.

2. தமிழ்நாட்டின் பல முக்கிய எழுத்தாளர்களைப் போலவே இவரும் திராவிட இயக்கத்தின் கருதுகோள்கள், கருத்தியல்கள், கருத்தாக்கங்கள் ஆகியவற்றை விட்டுத் தூரவிலகியிருப்பவர்.

‘பெரியாரைப் படித்திருக்கிறீர்களா?’ என்று கேட்டேன்.

‘படிச்சுருக்கேன்ல? எல்லாத் தொகுதியும் படிச்சுருக்கேன்’ என்றார்.

‘என்ன நினைக்கிறீங்க?’ என்றேன்.

கண்ணியமான ஒற்றைச்சொல் விமர்சனத்துடன் நிறுத்திக்கொண்டார். இதைப் பற்றி ஒரு கட்டுரைத் தொடர் எழுதிக்கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். Watch this space.

===

’அஞ்ஞாடி’, நான்கு வருடங்கள் களத்திலும் ஆவணக் காப்பகங்களிலும் ஆய்வு செய்து எழுதப்பட்ட படைப்பு. பூமணியின் கையெழுத்துப் பிரதியை தட்டச்சு வடிவில் உருவாக்கம் செய்து பிழை திருத்து எடிட் செய்து வடிவமத்துப் பதிப்பித்த க்ரியா ராமகிருஷ்ணனின் உழைப்பும் அபாரமானது.

அஞ்ஞாடியை பற்றி விரிவான விமர்சனங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. மேலும் எழுதப்படும் என்பதில் ஐயமில்லை.

என்னைப் பொறுத்தவரை அஞ்ஞாடியின் பல சிறப்புகளில் ஒன்று, அது வரலாற்றையொட்டிய புனைவு என்பதுதான். ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் கடந்த மூன்று நூற்றாண்டுகளாக தமிழ் மக்கள் வாழ்ந்த வாழ்க்கையை சமூக வரலாறாகச் சொல்லிப் போகிறார், பூமணி. நிகழ்ந்துகொண்டிருப்பதையே நிகழ்வாகக் கருதக்கூடாது என்று தம் வசதி கருதி அறிவுறுத்தும் 'திராவிட அறிஞர்களிடையே ஒரு பூமணி தோன்றியிருப்பது தமிழ்மக்களாகிய நாம் பெற்ற நற்பேறு.

தமிழ் மண்ணில் வாழ்ந்த பல வகுப்பினர்களைப் பற்றியும் நில உடைமை, வணிக, சேவை சாதியினருக்கே இருந்த உறவுமுறை பற்றியும் சாதிப் படிநிலையினால் வந்த தீமைகள், வன்கொடுமைகள், போராட்டங்கள் பற்றியும் நம்பகமான தரவுகளின் அடிப்படையில் எளிய புனைவு நடையில் எழுதிச் செல்கிறார் ஆசிரியர். திராவிட இயக்க அறிஞர்கள் கண்டுகொள்ளாமல் இருட்டடிப்பு செய்துவரும் வரலாறு இது.

’அஞ்ஞாடி’-யை எல்லோரும் படிக்கவேண்டும். வரலாற்றை மட்டுமல்ல, நம் சமூகத்தையும் சமூகநீதியையும் பற்றி பொய்மை விடுத்த புதிய சிந்தனைகளைத் தூண்டுவதாக இருக்கும் இப்ப்டைப்பு.

நண்பர் பூமணிக்கு மீண்டும் என் வாழ்த்துகளைக் கூறி முடித்துக்கொள்கிறேன்.

நன்றி.

Reply · Report Post