தசாவதாரம் - கயாஸ் தியரி, பட்டாம்பூச்சி விளைவு


உலகை காப்பது அந்த 10 அவதாரங்கள் அல்ல, அல்லவே அல்ல. கொடிய வைரஸ்களான எபோலா & மார்பர்க் ரெண்டையும் சேர்த்து செய்த ஒரு புதிய காக்டெய்ல் வைரஸிடமிருந்து உலகை காப்பது சுனாமி மட்டுமே.

சரி, சுனாமி எதனால் ஏற்பட்டது? டெக்டானிப் பலகைகள் அசைவதால்.

எப்போதிலிருந்து அசைகிறது? 800 வருடங்களாக. அதாவது 12ஆம் நூற்றாண்டிலிருந்து.

எதனால் அசைகிறது? பெருமாள் சிலை கடலில் விழுந்ததினால்.

இது தான் மேட்டர். இது நடக்குமா நடக்காதா என்றால் இது ஒரு நடக்கக்கூடிய கற்பனை. நடக்க சாத்தியம் இருக்கிறது. ஆனால் இதை கயாஸ் தியரி & பட்டாம்பூச்சி விளைவுடன் தொடர்பு படுத்தப்படவேண்டிய அவசியமில்லை. சுனாமி எதனால் ஏற்பட்டது என தெரியும். அது சாத்தியமா என்றால் சாத்தியம் என்றும் தெரியும். இதில், கயாஸ் தியரி & பட்டாம்பூச்சி விளைவுக்கு வேலையில்லை.

படத்தில், "கதை சொல்லும் நானே கதையின் நாயகன் ஆனேன்" என்று சொல்லும் கோவிந்த், கயாஸ் தியரி & பட்டாம்பூச்சி விளைவு பற்றி முதலும் கடைசியுமாக பேசுவது எப்போது? சரியாக, நம்பி இறந்தபின்பு. நம்பி இறப்பது ஒரு கதை. பின் தற்காலத்தில் நடப்பது முழுக்க பல கதைகள் சேர்ந்த, ஆனால் ஒன்றுக்கொன்று தொடர்புடைய கூட்டு நிகழ்வு. இது, சரியாக, ஆராய்ச்சிக்கூடத்தில் இருந்து கோவிந்த் வைரசை திருடுவதில் ஆரம்பித்து சுனாமியில் முடிகிறது. கோவிந்த் வைரசுடன் ஓடத்துவங்கியவுடன் சீட்டுக்கட்டு விழுவதுபோல், அல்லது, சைக்கிள் ஸ்டாண்டில் முதல் சைக்கிள் விழுவதில் துவங்கி ஒன்றன் பின் ஒன்றாக விழுவது போல் திரைக்கதை நடக்கிறது. இடையில் பல்வேறு புதிய சைக்கிள்களும் (கதைகள்) சேர்ந்து கொண்டு விழுகிறது. இவை அனைத்தும், அல்லது இதில் நடக்கும் சிலபல நிகழ்வுகளையுமே மக்கள், கயாஸ் தியரி & பட்டாம்பூச்சி விளைவு காரணமாகத்தான் நிகழ்கிறது என்று அர்த்தப்படுத்திக்கொண்டார்கள். உதாரணம், கோவிந்த் பாலத்தில் இருந்து திடீரென குதிக்கிறான், தற்செயலாக அங்கு ஒரு லாரி வரவே தப்பித்தான் அல்லது அடிவாங்கி செத்திருப்பான் என்பது போல. ஆனால் இவை எதுவும் கயாஸ் தியரி & பட்டாம்பூச்சி விளைவு என கதாசிரியர் சொல்ல நினைத்தது அல்ல!

அப்படி அர்த்தப்படுத்திக்கொள்ள ஆசைப்பட்டால், கொள்ளலாம்! அவரவர் இஷ்டம்! இப்படி அர்த்தப்படுத்திக்கொண்டதனால் தான், பலரும், "அப்படியென்றால் கயாஸ் தியரி, பட்டாம்பூச்சி விளைவு போன்ற கோட்பாடுகளை எல்லா திரைப்படங்களிலுமே பொருத்தலாமே! தசாவதாரம் மட்டும் எப்படி இந்த கோட்பாடை தனித்து பயன்படுத்திய கதை ஆகும்?" என கேட்டனர்! சிலர், "அப்படிப்பார்த்தால் எல்லாப்படமுமே கயாஸ் தியரி தான்" என முடிவும் கட்டிக்கொண்டனர்!

ஆனால், படத்தில் ஒரு முக்கியமான நிகழ்வு இருக்கிறது. மற்ற அனைத்து நிகழ்வுகளுக்கும், அறிவியல் படி சாத்தியம், அல்லது தற்செயல் நிகழ்வு, அப்படித்தான் கதை, எனவே அப்படி நடக்கிறது என லாஜிக், தர்க்கம் சொல்லலாம்.

ஆனால்....கதையில், 12ஆம் நூற்றாண்டில் இறக்கும் நம்பி, அதே தோற்றமுடைய கோவிந்தாகப்பிறக்கிறான்! மற்ற எந்த அவதாரமுமே அச்சு அசல் கமல் முகம் அல்ல! (அவதார் சிங், பல்ராம் நாயுடு மூக்கு மற்றும் கன்னத்தசைகள் ப்ராஸ்தடிம் மூலம், வேறு முகமாக காட்டப்பட்டது, மற்ற அனைத்தும், முற்றிலும் வேறு முகம் ) அதுமட்டுமா! கோதை ஆண்டாளாகவும், அவள் தந்தையும் அச்சு அசல் அதே முகத்துடனும் பிறக்கின்றனர். அதுவும் அதே வைணவ கலாச்சாரத்திலிவர்கள் இருவரும்!

ஆக, கதைப்படி, 12ஆம் நூற்றாண்டில் இறந்த நம்பியும் கோதையும் 21ஆம் நூற்றாண்டில் கோவிந்த் & ஆண்டாளாக பிறப்பது மட்டுமில்லாமல், தன் முன் ஜென்ம எலும்புகூட்டுக்கு முன்பாகவே ஆண்டாளிடம் ப்ரொபோஸ் செய்கிறான் நம்பி! ஆக, இது எப்படி சாத்தியம் என மக்கள் கேப்பாங்கல்ல? இதற்கு தற்செயல் நிகழ்வு என காரணம் சொல்ல முடியாதுல்ல?! இருவரும் இன்னொரு ஜென்மத்தில் பிறந்து சேரவேண்டும் என்பது கர்மா என பகுத்தறிவுவாதி சொல்லமுடியாதுல்ல?! அதற்குத்தான் தலீவர் வைத்த லாஜிக், கயாஸ் தியரி! பட்டாம்பூச்சி விளைவு! "உலக நிகழ்வுகள் ஒன்றோடொன்று தொடர்புடையவை! சக நிகழ்வுகளின் கோர்வை தான் உலக சரித்திரமே! உலக நிகவுகள் யாவும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை!" அஷ்டே! அதே சமயம், இதை பெருமாளின் செயல், அவர்தான் பிறக்கவைத்து சேர்த்தார் எனவும் அர்த்தபடுத்திக்கொள்ளலாம்! ஆக, மறுபிறப்புக்கும், மறு-சேர்வுக்கும் வைக்கப்பட்ட லாஜிக் தான் கயாஸ் தியரி! பட்டாம்பூச்சி விளைவு! அவர்களுக்கு அந்தக்காரணம், இவர்களுக்கு இந்தக்காரணம்!

Reply · Report Post