இளைஞர்களின் ஆதர்சமான 'ஸ்டைல்' கமல்!!


via @venkkiram

முப்பது வருடங்களுக்கு முன்பு நான் வளர்ந்த கிராமப் புறங்களில் கமல் ரசிகர்களிடையே நிகழும் உரையாடலை கவனித்தால் ரெண்டு விஷயங்கள் தென்படும். 1) கட்டான உடல் அமைப்பு 2) உடைகள். கிராமங்களில் ஏதாவது ஒரு மூலையில் உடற்பயிற்சிக்கென இரும்பிலான இணை குழாய்கள் ஊன்றப்பட்டிருக்கும். காலை மாலை வேளைகளில் இளைஞர்கள் வேர்க்க விறுவிறுக்க உடற்பயிற்சி அதுவும் அந்தக் குழாய்களின் ஒரு முனையிலிருந்து எதிர் முனைவரை அங்கும் இங்கும் சென்று கொண்டு இருப்பார்கள். இடைவேளைகளில் கமலின் புஜங்கள் பற்றியெல்லாம் சிலாகிப்பார்கள். காக்கிச் சட்டை படம் வெளிவந்த காலம் அது. ஒரு கையை மட்டும் தரையில் ஊன்றி புஷ் அப்ஸ் செய்வார். தியேட்டரிலேயே க்ளாப்ஸ் விழும். படம் பார்த்த அடுத்தநாளே இவர்களும் அதுபோல செய்துபார்ப்பார்கள். காக்கிச்சட்டை பூபோட்டத் தாவணி பாடல் காட்சிகளில் ஒரு சில இடங்களில் பக்கவாட்டு போசில் கைகளை முறுக்கேற்றி பாடுவார், நடனமிடுவார். அதெல்லாம் அப்போதைய பொங்கல் வாழ்த்து அட்டைகளாக வரும். இளைஞர்கள் அதைப் பற்றியெல்லாம் பேசியிருக்கிறார்கள். உடல் விஷயத்தில் இன்றுவரை ஒரு உதாரண புருஷராக இருப்பது கடினமான இலக்குதான். ஆனால் அதை சாத்தியப்படுத்திக் கொண்டெ வருவது கமல். உடற்பயிற்சி மட்டுமே பிரதானமாக எடுத்துக்கொண்டு அங்கங்கே தசைகள் புடைத்துக்கொண்டு இருக்கும் அர்னால்டு போன்ற மனிதர் அல்ல கமல். உடை விஷயத்தில் கமலுக்கு எந்தவிதமான வகைகளும் அப்படி பொருந்தும். அவர் அணியும் நவீன டீஷர்ட் டிசைன்களை பற்றியெல்லாம் சிலாகிப்பார்கள். அந்த ஈர்ப்பில் இவர்களும் தேடித் தேடி புதுவிதமான உடைகளை அணிந்து கொள்வார்கள். வணிக ரீதியில் அமைந்த படங்களில் வகை வகையான உடைகளில் வலம் வருவார் கமல். தூங்காதே தம்பி தூங்காதே படத்தில் அயல்நாட்டிலிருந்து வரும் (போதை மருந்துக்கு அடிமையாக இருக்கும் ) கமலின் உடைகள் அவ்வளவு அழகாக காட்டும் அவரை. காக்கிச் சட்டை 'பட்டுக்கன்னம்' பாடலில் ரோமாபுரி அரசர் உடையில் வருவார். எனக்குத் தெரிந்து அந்த உடை இருவருக்கு மட்டுமே சிறப்பு. ஒன்று வாத்தியார், இன்னொருவர் கமல். கால சக்கரம் ஓடிக்கொண்டே செல்கிறது. 'அக்கடான்னு நாங்க' பாடலில் இந்திய உடையில் கொஞ்ச நேரம் Fashion Show Ramp Walk செய்வது போல வந்துபோவார். அப்படியொரு ஆளுமை, மேனரிசம், பர்சனாலிட்டி. ஆண்டு 2001. மௌண்ட் ரோட் சாந்தி தியேட்டர் பேருந்து நிறுத்தத்திற்கு அருகே பெரிதாக ஒரு பேனரில் பம்மல் கே சம்பந்தம் விளம்பர பலகையில் கோட்-சூட் உடையோடு கம்பீரமாக கமல் நிற்கிறார். பிரமிப்பு அடங்கவே வெகுநேரம் ஆகியது. கொஞ்ச நேரம் நகராமல் அப்படியே ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். உடைகள் கமலுக்காகவே பிறப்பு எடுத்திருப்பது போலத் தோன்றியது. அழகு - கம்பீரம் - கமல்!

Reply · Report Post