ஒரு ஊர்ல - அனக்ரானிஸம் (ஒரு காலமுரண்பாடு)


தாயிழந்தபின் தன்னைத்தானே குடியில் அழித்துக்கொள்ளும் ஒரு இளைஞன் தன் சகோதரனின் குழந்தையில் தன் தாயைக்கண்டு அந்த பாசத்தில் மீண்டும் வாழ முற்படுவதும் அதில் அவன் சந்திக்கும் பிரச்சினைகளும் தான் கதை.
இந்தக்கதையை எழுதும்போதே அதிமேதாவித்தனங்களும் உலகப்பட அறிவின் பறைசாற்றல்களும் நிரம்பித்ததும்பும் தமிழ் சினிமாவின் உபாசகர்கள் வெளிப்படுத்தக்கூடிய அலட்சியக்கூப்பாடுகள் காதுகளில் கேட்டால் ஆச்சர்யமில்லை. இது அவர்களுக்கான படமில்லை. பாசமலர் போன்ற படங்கள் வழக்கொழிந்து போனபின் இது போன்ற படம் வந்திருப்பது ஓர் ஆச்சர்யம் தான்.
பாச்த்தை மைய்யப்படுத்தும்போது, அதை ஒரு குணம் அல்லது குணாதிசயம் மட்டுமே என்ற நிலையில் இருந்து, அது எப்படி ஒரு பாத்திரத்தின் (மனிதனின்) குணாதிசயத்தை மாற்றியமைக்கும் ஒரு சக்தி என்பதை நேர்த்தியாக சொல்லியிருக்கும் இயக்குனருக்கும, தேரி என்னும் பாத்திரமாக மாறி நம்மை சிரிக்கவும் அழவும் வைத்த வெங்கடேஷுக்கும் தனிப்பட்ட நன்றிகள்.
பல பாத்திரங்களாக நிஜ மனிதர்களை நடிகர்களாக பயன்படுத்தியிருப்பதும், கிராமப்புறங்களில் விளையாடும் பகடி நிறைந்த வசனங்களும் முதல் பாதிக்கு சுவை சேர்த்துள்ளன.
பாசம் ஒழுக்கம் இவை இரண்டும் ஒரு ஊறுகாயளவுக்குக்கூட பயன்படுத்தக்கூடாது என்ற நுகர்வுவெறி சமுதாயமாக நாம் மாறிவிட்ட இன்னாளில், இன்றும் நம் ஈர ஆழங்ககளை நினைவுபடுத்தும் ஒரு இயற்கை சக்தியாகவே திகழ்ந்து கொண்டிருக்கும் இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருப்பது மிகவும் சரியாகப்பொருந்தியிருக்கிறது.இளையராஜாவையும் இந்தப்படதையும் ரசிக்கும் தகுதி நமக்கு இல்லை. ஏனென்றால், பெற்ற குழந்தையுடன் நேரம் செலவிடுவதே, வாழ்க்கையின் முடிவு என்ற சலிப்பு மனநிலையில் பணநிலையை மட்டுமே நோக்கி ஓடும் மக்கள் நிறைந்த சமுதாயம் நாம்.

Reply · Report Post