தமிழ்நாட்டு அறிவுஜீவிகளின் வரலாறு பற்றிய கவனம் பற்றி முகநூலில் அ. மார்க்ஸ்:

” வரலாறு என்பது நமக்கு வேத, சங்க காலங்களுடனோ, இராமயண, மகாபாரதங்களுடனோ, இல்லை பவுத்த, சமண, சோழ காலங்களுடனோ முடிந்துவிடவில்லை. இன்றைய இந்திய உருவாக்கத்தில் இந்தக் காலங்களைப் போலவே பதினைந்தாம் நூற்றாண்டுக்குப் பிந்திய காலங்களும் மிக மிக முக்கியமானவை. எனினும் நாம் அதற்குரிய முக்கியத்துவத்தை அளிப்பதில்லை. ஏராளமான இலக்கியங்கள், வரலாறு எழுது முயற்சிகள், மத, தத்துவச் சொல்லாடல்கள், சகல துறைகளிலும் வெளிநாட்டாரின் தொடர்புகள் நிகழ்ந்த இக்காலகட்டம் மிகமிக முக்கியமான ஒன்று.”

ஏன் என்பதைப் பற்றி திரு அ.மார்க்ஸ் கேள்வியெழுப்பவில்லை. அவ்வாறு எழுப்பியிருந்தால் பதில் இதுதான்.

”திராவிட இயக்கத்தின் மையக் கொள்கைக்கும் அரசியல் நோக்கங்களுக்கும் தேவையான ’வரலாற்றை’ மட்டுமே அரைகுறையாகப் பயின்றால் போதும். நமக்கு தமிழகத்தின் உண்மையான சமூக வரலாறு, அதாவது இன்றைய சமூக அமைப்புக்கு நேரடியான தொடர்புடைய வரலாறு பற்றி எந்த அக்கறையும் இல்லை. அந்த உண்மைகள் நம் நோக்கங்களுக்கு இடையூறாக இருக்கும் வாய்ப்பு அதிகம். இதனால்தான் நாம் வரலாற்றால் என்றோ காலாவதியாகி, காலனியர்களால் அவர்களுடைய நோக்கங்களுக்காக முன்நிறுத்தப்பட்ட மனுஸ்மிருதி பற்றியும், அசுவமேத யாகத்தின் வன்முறை பற்றியும், மூன்றாம் நூற்றாண்டின் வைதிகத்தின் ஊடுருவல் பற்றியும், என்றோ இருந்ததாகச் சொல்லக்கூடிய ‘தமிழ்’ அடையாளம் பற்றியும், எட்டாம் நூற்றாண்டில் நடந்த சமணர்கள் கழுவேற்றம் பற்றியும் பேசிக்கொண்டு வருகிறோம். அதுதான் நம் இயக்கத்திற்கு நன்மை பயக்கும்.”

ஃபூக்கோ ஹோலோகாஸ்ட் பற்றி எழுதினார். உண்மைதான். ஏனெனில், அவர் வாழ்ந்த சமூகம் யூத இனப் படுகொலையைச் சாத்தியமாக்கி நிகழ்த்திய ஐரோப்பியச் சமூகத்துடன் நேரடித் தொடர்ச்சி பெற்றிருந்தது. அவர் ஜோன் ஆஃப் ஆர்க்கை நெருப்பிலிட்டு கொளுத்திய மத்திய கால கிருத்துவ வன்முறைக்காக கழிவிரக்கப்படுங்கள் என்று தம் சக ஐரோப்பிய பிரஜைகளிடன் மாய்மாலம் செய்யவில்லை. ஏனெனில் ஃபூக்கோ உண்மையான அறிஞர்.

திராவிட இயக்கம் ஒரு அரசியல் இயக்கம், அறிவார்ந்த இயக்கமல்ல.முறையான, துல்லியமான வரலாற்றறிவு அவர்களுடைய நோக்கமாக என்றும் இருந்ததில்லை. தமிழர்கள் அவர்களிடமிருந்து தம் வரலாற்றை மீட்டு அதை முறையாகக் கட்டமைக்கவேண்டும். அதன்பின் உண்மையான பகுத்தறிவின் அடிப்படையில் மாற்று அரசியல் நோக்கங்களும் இயக்கங்களூம் உருவாகக்கூடும்.

Reply · Report Post