பாடல் தந்த சுகம் : சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோன்றுதடி

கமல்ஹாசனுக்கு மிகப்பெரும் வர்த்தக ரீதியான களத்தைக் காட்டியதில் கல்யாணராமன் படத்தின் பங்கு முக்கியமானது. அந்தப் படத்தின் இயக்குனர் ஜி.என்.ரங்கராஜன், எஸ்.பி.முத்துராமனின் உதவி இயக்குனராக இருந்தவர். கமலுடைய ஆரம்பகாலத்தில் ஒரு பெரும் வெற்றிப்படத்தை அளித்த ஜி.என்.ரங்கராஜனுக்காக மகராசன் படத்திலும் கெளரவ வேடத்தில் நடித்துக் கொடுத்தவர்.
ஜி.என்.ரங்கராஜன் நிறையப் படங்களை இயக்கியிருந்தாலும், கல்யாணராமனுக்குப் பின் பேர் சொல்ல ஒரு படம் என்றால் அது மீண்டும் கோகிலா தான். கமல், ஶ்ரீதேவி, சுதாகர், தீபா போன்ற அன்றைய முன்னணி நட்சத்திரங்கள் நடித்தது. கண்ணைச் சிமிட்டியபடியே நடிகை மேல் சபலம் கொள்ளும் சாதா குடும்பஸ்தராக கமலுக்கு வேடம். இந்தப் படம் நடிகை ஶ்ரீதேவிக்கு பிலிம்பேர் விருதையும் சம்பாதித்துக் கொடுத்தது.

இந்தப் படத்தின் எல்லாப் பாடல்களுமே அருமை என்ற வழக்கமான பல்லவியுடன் நான் இங்கே பகிர்வது "சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோன்றுதடி பாடல்". கண்ணதாசனின் வரிகளுக்கு கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.பி.சைலஜா பாடியிருக்கிறார்கள். இந்தப்பாடலில் சாஸ்திரீய சங்கீதத்தில் குழையும் ஜேசுதாஸ் குரல் இதே படத்தில் வரும் இன்னொரு அழகான பாடல் "பொன்னான மேனி" பாடலில் எஸ்.ஜானகியோடு ஜீன்ஸ் போட்டு ஆடும். இரண்டுமே வித்தியாச அனுபவங்கள்.

ஒரு பாடலை அந்தப் பாடலின் உள்ளார்த்தம், இசையமைக்கப்பட்ட பாங்கு எல்லாவற்றையும் உள்வாங்கிக் காட்சிப் படுத்திய பாடல்கள் மிக அரிது. அந்த அரிதில் இதுவுமொன்று. பெண் பார்க்க வந்த கமலுக்காக பாடலை ஹம் செய்து கொண்டே குனிந்த தலை நிமிரா வெட்கம் அப்பிய ஶ்ரீதேவி வீணையேந்திப் பாட, கதிரையில் இருந்து கண்சிமிட்டி ரசிக்கும் கமல், கூடவே இருந்து காட்சியின் போக்குக்கேற்ப தன் முகபாவங்களைக் காட்டும் புரோகிதரின் பங்கு, பாக்கு உரலை இடித்து வெற்றிலை குதப்பும் பாட்டி, தாத்தா, பாடல் ஒருபுறம் நடக்க, இன்னொரு புறம் வந்த விருந்தினருக்கு தேநீர் விருந்தளிக்கும் தாய், இடையில் பாடலை ஶ்ரீதேவி மறந்து விட அந்த விட்ட இடத்தில் இருந்து கமல் பாட ஒரு வெட்கப் புன்னகை உதிர்க்கும் ஶ்ரீதேவி,பாடலின் இடையே சமயம் உணராது மிருதங்கத்தைச் சரிபார்க்கும் மச்சினன் தன் தவறை உணர அது தவறே இல்லை என்னுமாற்போல "சபாஷ்""மேல" என கமலுக்குள் ஜேசுதாசின் இயக்கம். தாளத்துக்கேற்ப தலையில் தப்பும் சிறுவர்,
"வெள்ளிப்பனி உருகி மடியில் வீழ்ந்தது போல் இருந்தேன்" என கமல் பாடும் கணம் மடியில் இருந்த சிறுவன் உச்சா போக அதையும் இலாவகமாகப் பிரதிபலித்து மாறும் குரல். இவையெல்லாவற்றையும் வைத்துப் பார்க்கும் போது இந்தப் பாடலில் இன்ன இன்ன அம்சங்கள் வரவேண்டுமென முதலிலேயே அணு அணுவாக இயக்குனர் செதுக்கியிருந்திருக்க வேண்டும்.

"கள்ளத்தனம் என்னடி எனக்கோர் காவியம் சொல்லு என்றார்" என்று கமல் ஆரம்பிக்கும் போது புரோகிதரைப் பார்த்து எப்பிடி என்று தலையாட்டுவதாகட்டும், கமல் தடுமாறும் இடத்தில் மெலிதான சிரிப்போடு ஶ்ரீதேவி பாடுவதாகட்டும் இவையெல்லாம் குட்டிக் குட்டிக் கவிதைகள்.

அதெல்லாம் சரி, பெண் பார்க்கப் போலும் போது பாட்டுப் பாடுவதை சினிமாவில் பார்த்திருக்கிறேன். நிஜ வாழ்வில் கண்டதில்லை. சம்சாரம் அது மின்சாரம் படத்திலும் "ஜானகி தேவி ராமனைத் தேடி" என்று பெண்பார்க்கும் படலத்தில் வரும் பாட்டு வரும். உங்கள் வாழ்க்கையில் கண்டிருக்கிறீர்களா? :-)
அதுவும் இந்தக் காலத்தில் பாடக் கேட்டால் என்ன கிடைக்கும் :-)

ஆனாலும் பாடலில் ஒரு அழகியலை ஏற்படுத்திய விதத்தில் இந்தப் பாடல் தனித்துவமும் மகத்துவமும் மிக்கது.

http://www.youtube.com/watch?v=t09r97wbLMg&sns=tw

Reply · Report Post