maya_twit

Sridhar · @maya_twit

21st Jun 2013 from TwitLonger

ரசனைகள் முடியாதது -மலர்களிலே ஆராதனை -கரும்பு வில் திரைப்படம் .

ஒரு பாடலில் நாம் எப்போது ஒன்றிப்போய் விடுகிறோம் என்பது நமது வரையறைக்கு உட்பட்டதாகவோ அல்லது திட்டமிட்டோ நடைபெறுவதில்லை. மலர்களிலே ஆராதனை பாடல் இன்று மதியத்திலிருந்து என்னை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறது. அப்படிப் பிடித்துக் கொண்ட தருணத்தை முடிந்த வரை சரியாக பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

இதற்கு முன்பு பல முறை கேட்டிருந்தாலும்,இன்று இந்தப் பாடல் கொடுத்த தெளிவும் புதுமையும் இதுவரை கண்டிராதது. இரண்டாவது இடை இசையின் திரன தீம்தனன கோரஸ் முடிந்து வயலினின் உச்ச ஸ்தாயியில் கை கோர்த்துக் கொண்ட கிட்டாரில் ஆரம்பித்த அந்த தருணம் பாடல் முடியும்போது சில நொடி நீட்டிக்கப்பட்ட ஜானகியின் ஆலாபனையுடன் நிறைவடையும் போது தான் எத்தனை மேம்படுகிறது.

வயலினைக் கை விட்டு சந்தூருடன்(அது சந்தூர் தானே?) இணையும்போது எத்தனை லாவகம் அந்த இசைக் கோர்வைகளுக்கு.சந்தூரின் இசைக்குறிப்பு முடிந்து சரணத்திற்கு செல்லும் முன் சில மணித்துளி இடைவெளியில் மீண்டும் வயலினுடன் சேர்ந்து இந்த கிட்டாரின் தொடர்ச்சி ஒற்றை strumming ல் நிறைவடைவது தான் இங்கே எனக்கான தருணம். இந்த சில நொடி இடை வெளியில் ஒற்றை strumming ன் எண்ணிக்கை 12,அதை 8 முறை இசைத்து மீதமிருக்கும் நான்கு எண்ணிக்கைக்கு வேறு இசைக்கருவியோ அல்லது அதே கிட்டாரின் வேறு இசைக் குறிப்போ அதே கால இடைவெளிக்கு வாசித்து விட்டு இரண்டாம் இடையிசையின் நிறைவாக மீண்டும் கிட்டாரின் ஒரே ஒரு strumming உடன் முடிந்து ஜானகி ஆரம்பிக்கும் இடம் தான் படைப்பூக்கத்தின் ஆகச்சிறந்த நிகழ்தகவு .

முதல் இடை இசை பற்றியோ அல்லது பாடல் முழுவதும் மாறிக்கொண்டே இருக்கும் தாளக் கட்டுகளைப் பற்றியெல்லாம் இன்னும் நிறைய எழுதுவதற்கு இருக்கிறது.இந்தப் பாடலின் சிறந்த தேர்வாக மலேசியா வாசுதேவனையே நான் நினைத்துக் கொள்கிறேன். பாடலின் ஒவ்வொரு மெட்டமைப்பும் இவருக்கானதாகவே இருக்கிறது. எனினும் பாடலின் நிறைவில் வரும் அந்த ஜானகியின் ஆலாபனையில் எளிதாக முந்தி சென்று இறுதிக் கோட்டை தொட்டு விடுகிறார்.பாடலின் இரண்டாம் சரணத்தின் இறுதி வரியாக ரசித்தேன் லயித்தேன் நெடுநேரம் -ரசனைகள் முடியாதது என்று மலேசியா வாசுதேவனின் குரலில் முடிவது தான் எத்தனை பொருத்தமாக இருக்கிறது. ஒரு கால வரையறைக்குள் அடங்காத ராஜாவின் இசைக்காக ,ரசித்தேன் லயித்தேன் "நெடுங்காலம்" -ரசனைகள் முடியாதது என்று எழுதுவது சரியான மரியாதையாக இருக்கும்.



Reply · Report Post