aravindmano

AM. · @aravindmano

14th Jun 2013 from TwitLonger

இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன்... 75 ஆண்டு கால மலையாளத் திரையுலகின் உன்னதக் கலைஞன். கேன்ஸ், வெனீஸ், பாரீஸ், டொரன்டோ என ‌சினிமாவைக் கொண்டாடும் அத்தனை திரைப்பட விழாக்களிலும் இந்திய சினிமாவை உயர்த்திப் பிடிக்கும் படைப்பாளி. உலகமே கொண்டாடும் திரைக் கலைஞன் என்றாலும், திருவனந்தபுரத்தின் நகரமும் கிராமும் கைகுலுக் கும் ஸ்ரீகார்யத்தில் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர் களுக்குக்கூடத் தெரியாமல் அமைதியாக இருக்கிறார் அடூர்.

''50 வருடத்தில் இதுவரை 11 படங்களை மட்டுமே இயக்கி இருந்தாலும், 16 தேசிய விருதுகள், பத்ம விருதுகள், தாதாசாஹேப் பால்கே விருது, பிரிட்டிஷ், பிரான்ஸ் எனக் கடல் கடந்தும் மிகப் பெரிய அங்கீகாரங்கள். ஆனாலும், இந்த எளிமை கைகூடி வந்தது எப்படி?''

''விருதுகளையும் பாராட்டுகளையும் பெரிதும் மதிக்கிறேன். ஆனால், அந்த மேடைகளைவிட்டு இறங்கும்போதே, அந்த விருதுகளையும் மறந்துவிடுவேன். அதனால், அந்த விருதுகள் என்னிடம் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்துவது இல்லை!''

''உங்கள் படத்தின் கதையைத் தீர்மானிப்பதற்கான அளவுகோல் என்ன?''

''நான் கதையை ஒருபோதும் கற்பனையாக யோசிப்பது இல்லை. பார்த்த சம்பவங்கள், பாதித்த விஷயங்கள், சந்தித்த மனிதர்கள், வாசித்த புத்தகங்கள் என ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லாத புள்ளிகளில் இருந்துதான், என் படத்துக்கான கதை பிறப்பதாக நினைக்கிறேன். என் கதையும் கதாபாத்திரங்களும், என்னுடைய‌ மண்ணையும் மக்களையும் சார்ந் தவையாகவே இருக்கும். நான் பார்க்காத ஓர் உலகத்தை, சந்திக்காத மனிதர்களைப் பற்றி என்னால் கற்பனைகூடச் செய்து பார்க்க முடியாது. என்றோ ஒரு நாள் தூக்குத் தண்டனை நிறைவேற்றும் தொழிலாளியின் பேட்டியை நாளிதழில் படித்தேன். பின்னொரு காலத்தில் அந்தச் சம்பவம் திரைப்படமானது. நான் என் கிராமங்களில் பார்த்த சாதிய வேறுபாடு, பெண்ணடிமைத்தனம், கம்யூ னிஸ்ட் கட்சி கடைநிலைத் தொண்டனின் அசல் வாழ்க்கை ஆகிய உண்மைகளைத்தான் படமாக்கி இருக்கிறேன். ஏனென்றால், கதை எனப்படுவது வெறும் கதையல்ல!''

''உங்கள் படங்களில் நட்சத்திர நடிகர்கள், அறிமுக நடிகர்கள் சரிவிகிதத்தில் நடிக்கிறார்களே... 'இந்தப் பாத்திரத்துக்கு இன்னார்தான் பொருந்துவார்’ என்று எப்படி முடிவுசெய்கிறீர்கள்?''

''நான் இயக்கிய 'அனந்தரம்’, 'மதிலுகள், 'விதேயன்’ ஆகிய மூன்று படங்களில் மம்முட்டியை நடிக்கவைக்கக் காரணம், அந்தப் பாத்திரங்களின் முகங்களும் உடல்மொழிகளும் அவருக்கு அப்படியே பொருந்தின. 'நாலு பெண்ணுகள்’ படத்தில் நந்திதா தாஸ், காவ்யா மாதவன், பத்மப்ரியா ஆகியோர் அந்தந்தப் பாத்திரங்களுக்குக் கச்சிதமாகப் பொருந்தினார்கள். அதே சமயம், சில கதாபாத்திரங்களுக்கு அறிமுக நடிகர்களை நடிக்கவைப்பதுதான் சினிமாவுக்கான நேர்மையாக இருக்கும். கமல்ஹாசனும் மோகன்லாலும் என்னதான் நல்ல நடிகர்கள் என்றாலும், சினிமாவில் அனைத்து வேடங்களிலும் அவர்களையே நடிக்கவைத்துவிட முடியுமா? பத்துப் பதினைந்து நாட்களாகப் பட்டினி கிடக்கும் உடல் மெலிந்த பரதேசி கதாபாத்திரத்துக்கு மம்முட்டி பொருந்துவாரா? உலகில் மிகச் சிறந்த நடிகன் என்று எந்தத் திரைக் கலைஞனையும் கூற முடியாது. ஒரு இயக்குநரைச் 'சிறந்தவர்’ என்று அவரின் ஒரு படத்தைப் பார்த்தே சொல்லிவிடலாம். ஆனால், ஒரு நடிகனை அப்படி இனம் காண முடியாது!''

''இன்றைய மலையாள சினிமாவின் போக்கு திருப்தி அளிக்கிறதா?''

''ஒரு காலத்தில் தமிழ் சினிமா எப்படி மும்பை யைப் பார்த்து கெட்டுப்போய் இருந்ததோ, அப்படி இப்போது மலையாள சினிமா, தமிழ் சினிமாவைப் பார்த்துக் கெட்டுப்போய் இருக்கிறது. தமிழகத்தில் வெளியாகும் நான்காம் தர கமர்ஷியல் படங்களை அப்படியே பிரதியெடுத்து, ஏழாந்தர சினிமாவாக மலையா ளத்தில் வெளியிடுகிறார்கள். ஒரு காலத்தில் நல்ல படங்களை மட்டுமே கொடுத்த கேரள சினிமா, இப்போது பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது. ஆர்ட் படங்கள் முற்றி லுமாகத் தொலைந்துவிட்டன. வேறென்ன சொல்ல?''

''இப்போதைய தமிழ் சினிமாவைக் கவனிக்கிறீர்களா... பிடித்திருக்கிறதா?''

''திண்டுக்கல் காந்தி கிராமப் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் நான் அதிகம் பார்த்தது தமிழ் சினிமாக்களைத்தான். அப்போது எல்லாம் மிக நீளமாகவும், புராணமயமாகவும் இருக்கும். அந்தச் சமயத் தில்தான் கருணாநிதியின் கதை வசனத்தில் 'பராசக்தி’ படம் வெளியானது. சிவாஜி வெகு சிறப்பாக நடித்திருப்பார். அதுவரை வெளியான இந்தியத் திரைப்படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட படம், பராசக்தி. பல முறை ரசித்துப் பார்த்து 'பராசக்தி’ வசனங்களை எல்லாம் மனப்பாடம் செய்துவைத்திருந் தேன். 'வீரபாண்டியக் கட்ட பொம்மன்’ படமும் அவ்வளவு பிடித்தது. ஜெயகாந்தனின் 'உன்னைப் போல் ஒருவன்’, எஸ்.பாலசந்தரின் 'அந்த நாள்’ எனச் சில படங்கள் என் மனதுக்கு மிகவும் பிடித்தவையாக இருந்தன. ஆனால், 80-90 காலகட்டங் களில் தமிழ் சினிமா முழுக்க முழுக்க மும்பையை நோக்கியே இருந்தது. இடையில் மணிரத்னம் வித்தியாசமான ஸ்டைலில் படங்கள் இயக்கினாலும், அவர் சொல்லும் தீர்வுகளில் நான் முரண்பட்டே நிற்கிறேன். இப்போது நிறைய புதிய இயக்குநர்கள் நம்பிக்கை தரும் விதமாகப் படம் எடுப்பதாகக் கேள்விப்படுகிறேன். சமீபத்தில்தான் 'பருத்தி வீரன்’ பார்த்தேன். மதுரை சுற்றுவட்டாரக் கிராம மக்களின் வாழ்க்கையை மிக இயல்பாகப் படமாக்கி இருந்தார் அமீர். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி உண்டா னாலும், படத்தின் முடிவு ஜீரணிக்க முடியாத அளவு கொடூரமானதாக இருந்தது. என்னால், அதுபோன்ற காட்சிகளைக் கனவிலும் படமாக்க முடியாது. அமீரிடம் இன்னும் நல்ல படங்களை எதிர்பார்க்கிறேன்!''

''தமிழ் இயக்குநர்கள் எனக் குறிப்பிட்டு, படங்களை ரசித்தது உண்டா?''

''மகேந்திரன், பாலுமகேந்திராவின் படங்கள் தமிழ் சினிமாவின் இன்னொரு முகத்தைப் பிரதிபலிப்பவை. அவர்களுடைய படங்களின் கதைகள் இலக்கியத் தரம் வாய்ந்தவை. பாலு மகேந்திராவின் 'மூன்றாம் பிறை,’ 'வீடு’ மிக முக்கியமான படைப்புகள். மகேந்திரனின் 'உதிரிப்பூக்கள்’, 'முள்ளும் மலரும்’, மிக நுட்பமான மனித உணர்வுகளைச் சொல்லும் படங்கள். ஒரு கலைப் படைப்புக்குரிய அனைத்துத் தகுதிகளுடனும் ஸ்க்ரிப்ட் எழுதப்பட்டிருந்தாலும் கமர்ஷியல் படங்களைப் போல பாடல் காட்சிகளையும், ஆக்ஷன் காட்சிகளையும் புகுத்தியிருந்தது ஆச்சர்யமாக இருந்தது. ஒருவேளை தயாரிப்பாளர் களின் பிடிவாதத்தினால் அவ்வாறு படமாக்கப்பட்டு இருக்கலாம் என நினைக்கிறேன். என் படங்களில் காதல் காட்சியாக இருந்தாலும் ஆக்ஷன் காட்சிகளாக இருந்தாலும் அதை எல்லாம் கேமராவுக்குப் பின்னால் வைத்துக்கொள்வ தோடு சரி!''

''திரையுலகைச் சேர்ந்தவர்கள் அரசியலுக்கு வருவதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?''

''யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால், அதற்கு முன் அரசியலை நன்றாகப் படித்துவிட்டு, மக்களுக்கு என்ன தேவை என்பதைப் புரிந்துகொண்டு வர வேண்டும். ஆந்திராவிலும் தமிழகத்திலும் சினிமா ஹீரோக்களைத் தலைவர்களாக நினைத்து வழிபடும் அறிவற்ற சூழல் இருக்கிறது.

எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர். ஜெயித்த காலம் வேறு. ஜெயலலிதாவே எம்.ஜி.ஆரின் இதயக்கனி என்பதால்தான் ஆட்சிக்கு வந்தார். தமிழ் நாட்டைப் போல கேரளாவில் நடிகர்கள் அரசியலுக்கு வந்தால், கட்டாயம் தோல்விதான் அவர்களை வரவேற்கும். ஏனென்றால், மலையாள மக்கள் ஒன்றும் அவ்வளவு அப்பாவிகள் அல்ல!''

''ஒரு கலைஞனாக முல்லைப் பெரியாறு விவகாரத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்? கேரள அரசின் அணுகுமுறை சரியா?''

''உண்மை சொல்ல வேண்டுமானால், முல்லைப்பெரியாறு அணை பிரச்னை பற்றி எனக்கு முழுமையாகத் தெரியாது. கேரள அரசின் அணுகுமுறை சரியா... தமிழ்நாட்டின் அணுகுமுறை சரியா என என்னால் ஊர்ஜிதமாகச் சொல்ல முடியாது. ஆனால், எந்தக் காலத்தில் அந்தப் பிரச்னை வெடித்தாலும், அதற்குப் பின் சுயநல அரசியல் கட்டாயம் இருக்கும்.

காலங்காலமாக மலையாள மக்களுக்கும் தமிழக மக்களுக்கும் இடையில் ஓர் ஆழமான நட்புறவு இருந்து வந்திருக்கிறது. அந்த உறவில் எந்தக் காரணம்கொண்டும் விரிசல் விழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், பகைமை பாராட்டுவது மிகவும் எளிது!'

Reply · Report Post