//@writercsk க்கு !//

@kolaaruக்கு,

//என்னை முதல்முறையாக டிவிட்லாங்கர் எழுத வைத்த பெருமை உங்களையே சாரும், சந்திக்கும்போது மறக்காமல் வருத்தம் தெரிவிக்கவும்//

வருத்தமெல்லாம் எதற்கு? ஆப்டிமிஸ்டாக இதுவே கடைசி ட்விட்லாங்கராக இருக்க வாழ்த்து தெரிவித்து விடுகிறேன்!

//நீங்க சொன்ன அத்தனைக்கும் எளிதாக பதில் சொல்லிவிடலாம்,விஸ்வரூபத்துக்கு பதிலாக நரசிம்மா என்றும் ஆஃப்கானிஸ்தானுக்கு பாகிஸ்தான் என்றும் மாற்றிக் கொண்டால் போதும்.ஸ்ரீமன் தான் எப்படி தீவிரவாதியானார் கேப்டன் எப்படி திறுத்துகிறார் என க்ளைமாஸ் அதிரிபுதிரியாக தீவிரவாதி மேல் இரக்கம் கொள்ள வைக்கும்,புறாக் காலில் மைக் எனத் திடுக்கிடும் திருப்பங்களும்..கதக் ஆடியபடி ரெண்டாம் தம்புரானை கொன்று கேப்டன் யார் யாரென சிபிஐ முதற்கொண்டு முதல் பகுதி முழுக்க பரபரக்க வைத்து,இடைவேளையில் தீவிரவாதியை அழிக்க தீவிரவாதியாக அவதாரமெடுத்த ஒன்மேன் ஆர்மி என ரகுவரன் சொல்வார்,நமக்கெல்லாம் தூக்கி வாரிப்போடும் இதிலும் கதக் ஆடிக் கொண்டிருந்த கமல் செர்லாக்ஹோம்ஸ் சண்டை முடித்ததும் அப்படிதான்.சரிவிடுங்க நம்ம டுவிட்டுக்கு வருவோம்//

மிக மிகத் தட்டையான ஒப்பீடு. பெரியாரும் மூட நம்பிக்கையை வலியுறுத்தினார், விவேக்கும் (தன் படங்களில்) வலியுறுத்துகிறார். அதனால் இருவரின் சமூகப் பங்களிப்பும் ஒன்று தான் என்று சொல்லி விடுவீர்கள் போலிருக்கிறதே. பாரதியும் காதல் கவிதை எழுதி இருக்கிறார், தபூ சங்கரும் எழுதுகிறார். இருவரும் ஒன்று தான் என்று கூட சொல்லலாம்.

இது காமெடிக்காக செய்யும் ஒப்பீடு என்றால் பரஸ்பரம் சிரித்தபடி கடந்து நடப்போம். ஆனால் உங்கள் சீரியஸ் எண்ணமே அது தான் என்றால் நிச்சயம் நீங்கள் நிறைய விஷயங்களை தவற விட்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். உலகம் பைனரியானது அல்ல. பல ifs and butsல் ஆனது. மேலோட்டமாய்ப் பார்த்தால் நீங்கள் சொல்வது உண்மையாக இருக்கலாம். ஆனால் அந்தப் படங்கள் நமக்குள் உருவாக்கும் moodம், அந்த‌ impactன் தீவிரமும் சமமானதா? கொஞ்சம் யோசியுங்களேன்.

//ஆனால் நீங்கள் சொல்வது போல் சிறுவன்-வாலிபன் ஊஞ்சல் காட்சி தரமானதுதான் ஆனால் அவர் சொல்ல நினைத்ததை சப்டெக்ஸ்ட்டாக வைத்து அதன் ஜீவனை சாவடிக்கிறார் (அமெரிக்கர்கள் குழந்தை பெண்களை கொல்ல மாட்டார்கள்). விழித்துக்கொண்டே குறட்டைவிடுவது போல நேர்த்தியான இயக்குனராக பல ஷாட்களில் தெரிகிறார் கமல் ஆனால் எல்லாம் மீறி இது ஒரு சுயதம்பட்ட அமெரிக்க துதிபாடல் ஹாலிவுட் இண்ட்வியூகான மலிவான resumeதான் இது !//

எனக்கும் அமெரிக்க ஆதரவு நிலைப்பாடு உவப்பில்லை தான். ஆனால் அது கமல் என்ற கலைஞனின் அரசியல் நிலைப்பாடு என்றோ அல்லது ஆஸ்கர் வின்னிங் ஃபார்முலா என்றோ தான் எடுத்துக் கொள்ள வேண்டும். உங்கள் எதிர்ப்பு அந்த அரசியலை நோக்கி. ஆனால் நாம் பேசுவது விஸ்வரூபத்தின் கலாப்பூர்வம் பற்றி. இரண்டையும் குழப்பிக் கொள்ளலாகா. விஸ்வரூபத்தின் கலை பற்றிய விமர்சனத்தையும், அது பேசும் ஆபத்தான அரசியல் பற்றிய விமர்சனத்தையும் தனித்தனியாக வைக்க வேண்டும். எனக்குத் தெரிந்த வரை நீங்களும் தோட்டாவும் காலையில் அரசியல் சர்ச்சை செய்ததாய்த் தெரியவில்லை. ஒரு திரைப்படமாக அதன் கலை பற்றிய விவாதமாகவே எடுத்துக் கொள்ள வேண்டி இருந்தது. அதை (மட்டும்) தான் தீவிரமாக ஆதரித்துப் பேசினேன்.

//டெக்னிகல் எக்செலன்ஸ் என எதை கூறுகிறீர்கள் எனத் தெரியவில்லை (டைம் ஸ்லைஸ் யுக்தியா)அதுவும் இதில் சிறப்பாக இல்லை என்றே கூறுகிறேன்.//

முதல்தர ஒளிப்பதிவு, பிர‌மாதமான ஆக்ஷன் கொரியோகிராஃபி, பிசிறற்ற காட்சிக் கோர்வை (ஒருவகையில் எடிட்டிங், ஒருவகையில் திரைக்கதை), கச்சிதமான கோஆர்டினேஷன் (இயக்கம் & மேக்கிங்), சில காட்சிகள் தவிர உறுத்தல் இல்லாத க்ராஃபிக்ஸ், இதெல்லாம் டெக்னிகல் எக்செலன்ஸ் இல்லையா? கிராஃபிக்ஸ் தவிர எந்திரனை எல்லா விஷயத்திலும் விஞ்சி நிற்கிறது விஸ்வரூபம். தமிழ் சினிமாவில் சிறந்த மேக்கிங் கொண்ட படங்கள் என்று எடுத்தால் விஸ்வரூபம் முன்னணியில் இருக்கும் (இதற்கு இணையாக ராவணன் படத்தின் சில காட்சிகள் ம‌ட்டுமே நினைவுக்கு வருகிறது, அப்புறம் கொஞ்சம் வேட்டையாடு விளையாடு, ஆரண்ய காண்டம், பில்லா 2). பெரும்பாலான இந்திப் படங்களுடனே கூட மிக அசால்ட்டாக ஒப்பிட்டு கெத்தாகக் காலரைத் தூக்கி விடலாம். இதற்கு மேல் என்ன டெக்னிகல் எக்செலன்ஸ் வேண்டும் என நினைக்கிறீர்கள்?

//அப்புறம் படத்தில் சரிகாக காட்சி படுத்தாதை நீங்களே அற்புதமான வார்த்தையில் சொன்னீர்கள் “துன்பியல் கவிதை”,துன்பியல் கவிதை என்றதும் எனக்கு இந்த படம் ஞாபகம் வந்தது விஸ்வரூபத்துக்கும் அதற்கும் சம்பந்தமில்லை நேரமிருந்தால் பாருங்கள்.
http://www.imdb.com/title/tt0445620/ //

பார்க்கிறேன். ஆனால் படத்தில் அந்த ஸ்லீப்பர் செல் ஆசாமியின் கடைசி நாளை ஏன் துன்பியல் கவிதை என்கிறேன் எனச் சொல்ல விரும்புகிறேன். படத்தின் மையச்சரடிலிருந்து வழுவாமல் அவன் சம்மந்தப்பட்ட காட்சிகளுக்கு அழுத்தம் தர முடிந்திருக்கிறது படத்தின் இயக்குநரால். அன்று அவன் இறந்து போவான் என அவனுக்குத் தெரியும். அன்று காலை தான் அவனுக்கு அழைப்பு / உத்தரவு வருகிறது. இவ்வளவு சீக்கிரம் எதிர்பார்க்கவில்லை என்கிறான். எவ்வளவு வலுவான வசனம் அது! அவன் ஜிகாத்துக்கு உயிர் தரக் கடமைப்பட்டவன். அதை அவனே நம்புகிறான். ஆனாலும் உண்மையில் அந்தக் கணம் வரும் போது வாழும் இச்சையுடன் செய்ய வேண்டிய விஷயங்களை நினைத்து உயிராசையில் (அது நப்பாசையும் கூட) அப்படித் தயக்கமான கேள்வி அவனிடமிருந்து வெளிப்படுகிறது. அதற்கு பதிலாய் கொக்கி போட்டாற் போல் நீ தயார் இல்லையா என்று எள்ளல் தொனிக்கக் கேட்கப்படுகிறது. அது தான் ஆயுதம். ஈகோவைத் தூண்டுகிற ஆயுதம். அவன் பிறப்பே ஜிகாத்துக்கு உயிர் கொடுக்க என நம்ப வைக்கப்பட்டு வளர்க்கப்பட்டவன் அவன். அந்தக் கொக்கிக்கு உடனடியாக பலியாகி, அவசரமாக அதை மறுத்து அந்த வேலையை ஏற்கிறான். அடுத்தது தன் கடைசி தினத்த்தை அவன் எப்படி எதிர்கொள்கிறான் என கவனியுங்கள்! தனக்குப் பிடித்தமான கறி போன்றவற்றை கடைக்குச் சென்று வாங்கி வந்து சமைத்து உண்ண‌ எத்தனிக்கிறான். தனக்குப் பிடித்தமான பாரம்பரிய‌ உடைகளை அணிந்து கொள்கிறான். பிறப்புறுப்பு உட்பட தன் தேகம் முழுக்க ஷேவ் செய்கிறான். எதற்கு? அது ஜிகாதிகளின் நம்பிக்கை. suicide bomberஆகப் போகிறவர்கள் அனைவரும் இதைச் செய்வார்கள். அப்போது தான் சுத்தமாக சொர்க்கத்துள் நுழைய முடியும் என்ற மத நம்பிக்கை அது. பொதுவாகவே முஸ்லிம்களில் இறந்தவர்கள் உடலை க்ளீன் ஷேவ் செய்து அடக்கம் செய்வதே வழக்கம். ஜிகாதி தற்கொலைப்படையில் இருப்பவன் உடல் யாருக்குக் கிடைக்கப் போகிறது? கிடைத்தாலும் துண்டு துண்டு சதையாகக் கிடைக்கலாம். யார் சிரைப்பார்கள்? அதனால் தான் அந்த ஜிகாதி தனக்குத் தானே ஷேவ் செய்து கொள்கிறான். அது எத்தனை பெரிய துயரம்? தன் இறப்புக்குப் பின் மற்றவர்கள் தன் பூதவுடலில் செய்ய வேண்டிய மதச் சடங்களை சூழ்நிலையினால் தனக்குத் தானே செய்ய நேர்வது அந்த மதத்தில் ஊறியவனுக்கு எவ்வளவு மனப்போராட்டத்தைத் தரும்? அவன் முகம் அந்தக் காட்சிகள் முழுமைக்கும் அத்தனை இறுகியே காணப்படும். படத்தில் காட்டப்படும் மற்ற ஜிகாதிகளுக்கும் இவனுக்கும் இயக்குநர் இப்படி நுட்பமாக வித்தியாசப்படுத்துகிறார். எல்லாவற்றையும் தாண்டி கவித்துவம் எங்கே நுழைகிறது எனில் அவன் விரும்பிச் சமைத்த உணவை உண்ணாமலேயே பரிதாபமாகச் செத்துப் போகிறான், தவிர அவன் சமைக்க முயற்சித்ததே குண்டு வெடிக்க விடாமல் தடுத்து விடுகிறது. அவன் தியாகம் பயனற்றுப் போகிறது. அவன‌து ஆசையே அவன் உயிர் பலியை வீணாக்கி அவன் ஜிகாதி கடமையை நிராகரிக்கிறது. இது துன்பியல் கவிதை இல்லையா? மனுஷ்யபுத்திரனின் பத்துக் கவிதைகளுக்குச் சமானம் இந்தக்காட்சிகள். இவ்வளவு விரிவாய் இக்காட்சிகளைக் காட்ட வேண்டும் என்பதே இல்லை. நீங்கள் சொல்லும் நரசிம்மா போன்ற மசாலா படம் எடுக்க இவ்வளவு சிந்திக்க வேண்டியதே இல்லை. ஆனால் கமல் இதைத் தேடிப் புரிந்து, காட்சிகளில் தேவையான‌ உணர்ச்சிகளை நுழைத்து வைத்திருக்கிறார். தமிழில் எந்த இயக்குநன் என் கமல்ஹாசன் அளவுக்கு இத்தனை நுணுக்கமாய்க் காட்சிகள் வைக்கத் திறமை யுள்ளவன்? கலைஞன‌ய்யா அவன். மகாகலைஞன்.

//கீழ் வரும் ஒரு வரிக்குதான் இந்த மொத்த டுவிட் லாங்கருமே "விஸ்வரூபத்தின் விஸ்வரூபத்தை வாமனனாகக் குறுக்கிக் காட்டும் மறைமுக முயற்சியே என்றி வேறில்லை". சினிமா ரசிகனாக இல்லாமல் கமல் ரசிகனாக மல்லுகட்ட நினைத்து சுத்தி சுத்தி சொன்னதையே பதிலாக நீளமாக சொல்லிக் கொண்டே போனீர்களானால் நான் எதையும் பகிர்ந்துகொள்ளாத நண்பனாகவே இருந்துவிட்டு போகிறேன். கமல்-ரஜினி-சிம்பு டுவீட்கள் பொழுதை போக்கும் பகடிகளே அதை லாஜிக்குகளை இட்டுகட்டி நியாயந்தானே என கூற விரும்பவில்லை.ஆனால் பகடி தொடரும் நீங்கள் புண்பட்டால் நான் பொறுப்பல்ல ! //

நான் புண்பட ஏதுமில்லை. உங்களை விட அதிகமாக கமல் மேல் எனக்கு விமர்சனங்கள் உண்டு. அதை வெளிப்படுத்தியும் வந்திருக்கிறேன். 90 மதிப்பவனைத் தான் 100 ஏன் எடுக்கவில்லை என அதட்ட முடியும். அப்படித் தான் நான் கமலை விமர்சிப்பதும். constructive criticism. ஆனால் அந்த விமர்சனங்களை எல்லாம் தாண்டி எனக்கு கமல்ஹாசனின் கலையின் விஸ்தீரணம் நன்கு புரியும். நீங்கள் அதை முழுக்க உணராமலோ அல்லது மேலோட்டமாகப் பகடி செய்து நிராகரிப்பது போல் பேசியதாலோ நான் விளக்க முற்பட்டேன். உங்கள் ட்வீட்களிலிருந்து உங்கள் மேல் மதிப்பு இருப்பதாலும், நேர்ப்பேச்சில் அது உறுதிப்பட்டதாலும், மேலும் உங்கள் பணிப்பின்புலம் காரணமாகவும் அதை உங்கள் முன் எடுத்து வைத்தேன். மற்றபடி direct to heart எடுக்க இதில் எதுவுமே இல்லை. நான் போற்றினாலும் நீங்கள் தூற்றினாலும் அவன் இடம் அவனுக்கு உண்டு.

எதையும் பகிராமல் நண்பன் எதற்கு? சண்டையும் சர்ச்சையும் இல்லாமல் என்னய்யா புடலங்காய் நட்பு!

Reply · Report Post