வெகு நாளைக்குப் பிறகு எனது பதிவு இது.

வந்தார்கள் வென்றார்கள் – இது மதனின் புத்தகம். தமிழகத்தின் best seller வரிசையில் இடம் பிடித்தது. கஜினி முகமது நாடு பிடிக்க வேண்டும் என்ற ஆசையில் வந்திருந்தால் அப்போதைய அந்த மன்னனின் வலிமையில் இந்தியாவை எளிதாக பிடித்திருக்கலாம். இலங்கையில் உழைத்து உழைத்து தமிழர்கள் சேர்த்து வைத்த பொருட்களை எல்லாம் இடைவெளிவிட்டு கொள்ளை அடித்த சிங்களவர்கள் போல் இடைவெளிவிட்டு இந்தியர்கள் சேர்த்துவைத்த பொருட்களைக் கொள்ளை அடித்தவன் கஜினி முகமது.

சிங்களவர்களுக்கு கடவுள் புத்தர்.. அகிம்சையை போதித்தவர். கஜினி முகமதுவுக்கு பின்னால் ஒட்டிக்கொண்டிருக்கின்ற ”முகமது” என்ற நபி போதித்தது குர்-ஆன். குர்-ஆனில் கொள்ளையடிக்கலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறதா? நீங்கள் கஜினி முகமதுவை சரி என்கிறீர்களா? தவறென்கிறீர்களா?

சோமனாதபுரத்தில், அன்றைக்கிருந்த அதி நவீன விஞ்ஞான அறிவால் சிவலிங்கம் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்ததை, மனித வலிமையால் உடைத்தெரிந்தவன் கஜினி முகமது. நபிகள் நாயகத்தின் வரலாற்றில் வானுலகத்தில் இருந்து குர்-ஆன் இறங்கியது. ஒரு ஹிந்துவாக “குர்-ஆன், பாகம்:9 அத்:7 அல்ஃரோஃப் வசனம் 196 – இந்த வேதத்தை இறக்கியருளிய இறைவனே திண்ணமாக, எனக்குப் பாதுகாப்பு அளிப்பவனாவான். மேலும், அவனே நல்லவர்களுக்கு பாதுகாப்பு நல்குகின்றான்” என்பதை நம்புகிறேன்.

Mr. & Mrs. Iyer என்ற திரைப்படத்தில் ஒரு ஹிந்துப் பெண் ஒரு இஸ்லாமிய இளைஞனை கணவன் என்று சொல்லி காப்பாற்றுவதை எப்படி நீங்கள் ஒத்துக்கொண்டீர்கள்? அது மத நல்லிணக்கமா இல்லை வேறா? அதே படத்தில் ஒரு யூதன் ஒரு முஸ்லிமை காட்டிக்கொடுப்பதைப் பற்றி எந்த இஸ்லாமிய அமைப்புக்களாவது பேசி இருக்கிறதா?

ஆப்ரகாமின் வழித்தோன்றளாகிய நீங்கள் பாலஸ்தீனமாகி, இஸ்ரேலுடன் சண்டைப்போட்டுக் கொண்டே இருக்கிறீர்கள். ஆனால், நீங்கள் போரிட்டு பிடித்த நாடான இந்தியாவில் அதைப்பிரிக்க வேண்டுமென்று திரு. ஜின்னா தலைமையிலான தலைவர்கள் முடிவு செய்தபோது, அதை பிரித்துத்தந்தது காந்தி என்ற ஹிந்து. அப்போதே காந்தியின் மீது வைத்த நம்பிக்கையால் தான் இன்றைய இந்திய முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு போகாமல் இருந்தீர்கள். உங்களால் காஷ்மீரை முழுமையாக பிடித்திருக்க முடியும். நீங்கள் ஏவிய பட்டாணியர்களின் கொள்ளைத்தனத்தால் காஷ்மீரின் பெரும் பகுதியை வல்லபாய் பட்டேல் இந்தியாவுக்கு தக்கவைத்துக் கொண்டார்.

The Man Who Divided India என்ற புத்தகத்தில் பாகிஸ்தானின் தந்தை ஜின்னாவை ஒரு மதுப் பிரியராக சித்தரிக்கப்பட்டிருக்கிறார். குர்-ஆனை தெய்வமாக தொழும் ஒரு நாட்டின் தந்தை, உங்களால் விலக்கப்பட்ட ஒரு பொருளை பயன்படுத்தினார் என்பதே வேதத்திற்கு எதிரான செயல் அல்லவா. அது மனிதனின் பலவீனம் என்று நீங்கள் சொன்னால், மனிதனின் பலத்தையும், பலவீனத்தையும் காட்சிப்படுத்துபவன் தானே கலைஞன். இந்த வரலாறு தவறென்றால் நீங்களெல்லாம் கொதித்திருக்க வேண்டாமா? இவற்றை எல்லாம் எரித்திருக்க வேண்டாமா?

கோவையின் சம்பவத்தை மையமாகக் கொண்டு ஒரு மலையாளத் திரைப்படம் வந்தது. இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களின் குண்டு வெடிப்பினால் தன் உறவுகளை இழந்த ஒரு இஸ்லாமிய இளைஞன், இஸ்லாமிய தீவிரவாதிகளை வேரறுக்கும் கதை அது. படத்தின் பெயர் ”அன்வர்”. கதானாயகன் “ப்ரித்விராஜ்”. ஹிந்தியில் வெளிவந்த The Wednesday தான் தமிழில் வெளிவந்த ”உன்னைப் போல் ஒருவன்”. அதில் சிறையில் இருந்த இஸ்லாமிய தீவிரவாதிகளை வெளியே கொண்டுவந்து கொலை செய்வது நஸ்ருதீன் ஷா என்ற ஒரு நடிகர். படத்தில் கூட “பீவி” என்ற வசனத்தின் மூலம் அவர் ஒரு இஸ்லாமியராகவே சித்தரிக்கப்பட்டிருப்பார்.

வீர சவர்க்கார், வா.வே.சு. ஐயர், மதன் திங்காரா இவர்கள் எல்லோரும் லண்டனில், India Houseல் ஆங்கில ஏகாதிபத்யதிற்கு எதிரா திட்டமிட்டுக் கொண்டிருந்த போது தான் காந்தி அகிம்சைக்கு திட்டமிட்டுக் கொண்டிருந்தார். இந்தியாவில் காந்தி சவுரி சவுரா கலவரத்துக்குப் பின் மக்கள் கூடினால் வன்முறை என்பதை உணர்ந்து கொண்டார். ஜெயகாந்த்தன் கூட ”ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்” என்ற புத்தகத்தில் அண்ணா சாலையில் தான் அழைத்துச் சென்ற அமைதி ஊர்வலம் எப்படி வன்முறைக் கூட்டமாக மாறியது என்பதை விவரித்திருப்பார். மேலே குறிப்பிட்ட வா.வே.சு. ஐயர் பாண்டிச்சேரியில் ஆஷ் துரையைக் கொன்ற வாஞ்சிநாதனுக்கு துப்பாக்கி பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்த போது தான் காந்தி அகிம்சையோடு போராடிக்கொண்டிருந்தார்.

வங்காளக் கலவரத்துக்குப் பின் காந்தி இந்திய நாட்டில் இருந்த இஸ்லாமியர்களுக்காக நடைப் பயணம் மேற்கொண்டார். இந்தியா சுதந்திரம் அடைந்த போது கல்கத்தாவில் ஒரு முஸ்லிம் வீட்டில் நூல் நூற்றுக்கொண்டிருந்தார். பத்திரிக்கையாளர்கள் ”என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். “சொல்வதற்கு ஒன்றும் இல்லை” என்று சொன்னார் சுதந்திரம் அடைந்த பிறகு பாகிஸ்தானுக்கு கொடுப்பதாகச் சொன்ன பணத்தை வாங்கிக் கொடுக்கப் போராடினார். வாங்கிக் கொடுத்தார். ஹிந்துக்களுக்கு எதிராக இருப்பதாக நினைத்துக் கொண்டு காந்தியை சுட்டது கோட்சே என்ற ஹிந்து. லண்டனில் சவர்க்கர் ஏற்பாடு செய்த ஒரு விருந்தில் விருந்தினர்கள் சாப்பிட்ட தட்டுக்களை கழுவிய காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் சவர்க்கர் தான் முதல் குற்றவாளி. இந்துவத்திலும் வன்முறை இருந்து கொண்டுதான் இருக்கிறது. மறுக்கவில்லை.

நான் கீதையை படித்த போது, “அர்ஜூனா வில்லை எடுத்து அவர்களை கொல்” என்று சொன்னபோது நான் அதிர்ந்து போனேன் என்று பதிவு செய்திருக்கிறார் மகாத்மா காந்தி. காந்தி அகிம்சையை போதித்தார். என் வணக்கத்திற்குரிய கலைஞர் கமலஹாசன் ”அன்பே சிவம்” மூலம் அன்பை போதித்தார்.

“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்” என மனிதருக்கு சொன்னது குறள். அதை, “சுப்பிரமணி” என்கிற நாய்க்கும் உரித்தாக்கிய மாபெரும் கலைஞன் கமல். “அன்பே சிவம்” என்றவனுக்குள் அழுக்கிருக்க முடியாது. அன்பே சிவம் போன்ற ஒரு படத்தை இனிமேல் எவனும் தரவும் முடியாது.
எங்கள் குடும்பம் கலைக்குடும்பம். அறிவு தான் எங்கள் மதம்.
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.

இது திருவள்ளுவரின் காமத்துப் பால். ஒண்தொடி என்பது பெண். எங்களுக்கு பெண் என்பது சினிமா. நாங்கள் ஊடகங்களின் மூலமாக கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்றறிந்த வரலாற்றை திரைப்படமாக்கியது திரு. கமலஹாசனின் தவறா?
அவர் வீட்டை இழக்கலாம், நாட்டை இழக்கலாம், நீங்கள் ஒரு நல்ல கலைஞனை இழக்கலாம், “அன்பே சிவம்” என்று சொன்ன அருமையான மனிதனை இழக்கலாமா?

புத்தம் பரவிய நாடு தான் அணு குண்டில் வல்லமை பெற்ற நாடு. வேதம் அளவில்லா கருணையாளன் என்று சொல்கிறது அல்லாவை. அதை படித்தவர்கள் தான் இன்றைய தீவிரவாதிகள் சிலர். ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு என்று சொன்ன ஏசுவின் வழி நடப்பவர்கள் தான் இன்றைய வல்லரசு. காந்தி அகிம்சையை போதித்த நாட்டில் தான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

வேதமும், உபநிடமும், என்று பிறந்தது என்று தெரியாத வார்த்தை ஜாலமும் கொண்ட இந்தியாவில் வர்ணாசிர தர்மத்தை பேசிய மனுவில் இருந்து வர்ணாசிர தர்மத்தை உடைத்த ராஜா ராம் மோகன் ராய், பகவான் ராம கிருஷ்ணர், விவேகானந்தர், கொஞ்சம் காந்தி, நிறைய பெரியார் இவர்களெல்லாம் ஒரு கோழியாய் பிறந்து, ஒரே ஒரு முட்டை இட்டு, அதை அடை காத்து, ஒரு குஞ்சு பொரித்து, அந்த குஞ்சுக்கு ”கமலஹாசன்” என்று இயற்கை பெயர் வைத்திருக்கிறது. அதனை நான் வணங்கும் ஆண்டவன் ஆசீர்வதித்திருக்கிறான். அதனை நான் வணங்கும் மதங்களின் மதவாத சக்திகளே, நீங்கள் காலை ஒடித்தாலும் அதற்கு பறப்பதற்கு இறக்கைகள் உண்டு.

Mr. Kamal, please fly abroad seeking a secular place.

ஆசீவகமும், யாதும் ஊரே யாவரும் கேளீர் என்றும் பேசிய தமிழ் தான் சமணர்களை கழுவில் ஏற்றியது. யாயும், ஞாயும் யாராகியரோ என்று பேசிய தமிழ்தான் காதலர்களுக்கு ஜாதி பார்க்கிறது. இன்றைய தினத்தில் ஊடகங்களில் நடைபெற்ற அத்தனை விவாதங்களையும் கவனித்தவன் நான். உணர்ந்து சொல்கிறேன். உங்களுக்கு பொது நலன் தான் வேண்டுமென்றால் புறப்பட்டுவிடுங்கள். அன்னை தெரெசா எங்கிருந்தோ இங்கு புறப்பட்டு வந்த மாதிரி. இங்கிருந்து எங்கோ உலக நாயகனாக அல்ல, அப்பாவாக. வசூல் ராஜாவில் ஒரு வசனம் சொல்வீர்கள் உங்களையே நீங்கள் வீணடித்து விட்டதாக.

எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்பது தொல்காப்பியம். கமலஹாசன் என்ற சொல்லுக்கு பொருள் உலகம் அறியவில்லை.

அன்புடன்,
அகத்தியன்

Reply · Report Post