#Ilayaraja


நினைவுச்சித்திரம்


” என் கால இயந்திரம் “


- செழியன்


தொடர்ச்சி..

அப்போது ராக்கிங் கடுமையாக இருக்கும். சீனியர் மாணவர்களிடம் மாட்டிக்கொள்ளாமலிருக்க இருட்டுக்குள் ஓடி ஒளியவேண்டும். ஒரு நாள் நான் மாட்டிகொண்டேன். ‘டான்ஸ் ஆட்த்தெரியுமா? தெரியாது என்று சொன்னால் வேறு ஏதாவது வினோதமாகச் செய்யவேண்டி இருக்கும். எனவே ‘தெரியும்’ என்றேன். “இளையநிலா பாட்டுத் தெரியுமா?” ‘தெரியும்’. ‘எங்க பாடிக்கிட்டே ஆடு. இந்தா கிட்டார் வச்சுக்க’ என்று அறையில் கிடந்த பெருக்குமாரைக் கொடுத்தார்கள். ‘இந்தப் பாட்டுக்கு ஆட முடியாது சார்..’ ‘ஆடுறான்னா..’ அந்தப் பாட்டுக்கு அப்படி ஒரு ஆட்டம் ஆடியது நானாகத்தான் இருக்கும். அவர்களுக்கே சிரிப்புத் தாங்காமல் அத்துடன் அனுப்பி விட்டார்கள்.

மாலைப் பொழுதுகளில் கல்லூரி விடுதியில் ஒலிபெருக்கி வைத்துப் பாட்டுப் போடுவார்கள். அங்கேயும் இளையராஜாதான் . "சலங்கை ஓலி"யின் பாட்டுக்கு நண்பர் மாரிமுத்து பாரதம் ஆடுவார். இசையின் எந்த ஒரு பகுதியையும் விட்டுவிடாமல் பரதம் ஆடுவார். அவருக்கு நடனமே தெரியாது. சிரித்த வயிறு புண்ணாகி விடும். வருடத்தின் இறுதியில் பாட்டுப்போட்டி நடக்கும். சிமிண்ட் பெஞ்சுகளும் சிமிண்ட் இருக்கைகளும் இருக்கும். மெஸ்ஸில்தான் போட்டி நடந்தது. நான் "வைகறையில் வைகைக்கரையில் .." பாடினேன். நண்பன் ஒருவன் "கோடைகாலக் காற்றே.." பாடினான். எனக்கு முதல் பரிசு. அவனுக்கு இரண்டாவது. அந்தப் பாட்டுப் போட்டியை ஒட்டி விளையாட்டுப் போட்டிகள் நடக்கும். இறுதிநாளில் பெரிய விருந்து நடக்கும். அந்த இரவில் எல்லோரும் சேர்ந்து ஆடுவோம். "இளமை இதோ இதோ.."  "நேத்து ராத்திரி யம்மா.." "என்னோடு பாட்டு பாடுங்கள்.." "ஆசை நூறுவகை வாழ்வில் நூறு சுவை வா..", "பூ..மா..லை..  ஒரு பாவை ஆனது."



தொழில்நுட்ப கல்வி முடித்து வேலைக்கு போகும் விருப்பம் 

இல்லை. ஊரில் நண்பர்களுடன் சேர்ந்து இலக்கியம் பேசவும், 

கவிதை எழுதவுமாக பொழுதுகள் போய்கொண்டிருந்தன.அந்தச்சமயத்தில்தான் அப்பா ஒரு டேப் ரிகார்டர் வாங்கி வந்தார்.  இரண்டு ஸ்பீக்கருடன் இருந்த பேனாசோனிக் டேப் ரிகார்டர் . 
என்னையும் தம்பிகளையும் அழைத்து அதை எப்படி இயக்குவது என்று சொல்லிகே கொடுத்தார். குறிப்பாக, என்னைப பார்த்து "இந்த செவப்பு பட்டனை மட்டும் அமுக்கிறாத. அதுதான் ரெகார்ட். அப்புறம் எல்லாம் அழிந்து விடும்." என்று சொன்னார்.
எனக்குச் சிரிப்பு அடக்க முடியவில்லை. தொழில் நுட்பம் வளர வளர அதன் முன்னால் பெரியவர்கள் குழந்தைகளாகி விடுகிறார்கள். 


அப்போது சிவகங்கை காந்தி வீதியில் கேசியோ என்ற இசைப்பதிவகம் இருந்தது. அங்குபோய் உட்கார்ந்து 
பாடல்களைத்தேர்வு செய்து, ஒரு கேசட்டுக்கு 14 பாடல் எழுதிக்கொடுக்கிற அனுபவமே அலாதியானது. வீட்டிலிருந்தே 
யோசித்து  இளையராஜா பாட்டுக்களை, "ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு.."  "ஆயிரம் மலர்களே மலருங்கள்.." என்று பதினாலு  பாட்டுக்கள் எழுதி கொடுத்து விட்டு வரலாம். அதிலிருக்கிற  சிக்கல் என்னவென்றால் ஏதாவது ஒரு பாட்டு 
இல்லையென்றால் கூட வேறு இசையமைப்பாளரின் பாடலை அவர்களே  பதிந்து விடுவார்கள். இவ்வாறு பாடல்களைத் தேர்வு செய்வதும், அதை ஒரு காகிதத்தில் எழுதிச் சட்டைப் பையில் மடித்து வைத்துகொண்டு சைக்கிளில் போய்க் கொடுப்பதும், பதிவு செய்த கேசட்டுகளை வாங்கி வந்து போட்டுப் பார்ப்பதும் சுகமான 
அனுபவம் . "ச்சில் வேண்டுமா சவுண்ட் வேணுமா, பேஸ்ல தும் 
தும்னு கேட்கணுமா.." என்பார்கள். இந்த சவுண்ட் எபெக்ட்டுக்காக  
மண்பானையில் டேப் ரிகார்டை இணைத்தவர்கள் அநேகம். 

துபாயிலிருந்து வருபவர்கள் கபாடியன் பேண்ட் துணியும் டேப்ரிக்கார்டரும் இல்லாமல் வந்தால் ஊருக்குள் விட மாட்டார்கள். “மாப்ள, இளையராஜா பாட்டுக் கேக்கணுமின்னா ஸ்டீரியோ இருக்கணும்ல.” வெளிநாட்டிலிருந்து வந்ததற்கான அடையாளம் அவர் வீட்டில் நூறு டி.டி.கே கேசட் இருப்பதும் இளையராஜா பாட்டுச் சத்தமாகப் பாடுவதும்தான். இந்தக் கேசட்டுகள் விஷயத்தில் சில விஞ்ஞானிகள் இருந்தார்கள். அந்த அரக்கு நிற டேப்பைத் தொட்டுப்பார்த்து டூப்ளிகேட்டா இல்லையா என்று சொல்லி விடுவார்கள். ‘கோவிச்சுக்காதீங்க. இது டூப்ளிகேட் கேசட். இதைப்போட்டா ஹெட் தேஞ்சிரும்..’ ஹெட் தேஞ்சிரும் என்றால் யாரும் பதறி விடுவார்கள். இவ்வாறு நண்பர்கள் வீட்டுக்குப் போய் பிடித்த பாடல்களின் கேசட்டை டூப்ளிகேட் என்று சொல்லி கேசட் சுட்ட அனுபவங்கள் சுவரஸ்யமானவை.

அந்தச் சமயத்தில் நாட்டரசன்கோட்டையில் நண்பர்களுடன் சேர்ந்து நாடகம் போடுவதென முடிவானது. முதல் வருடம் நானும் பேரரசும் கதை, திரைக்கதை, வசனம், டைரக்‌ஷன். அந்த நாடகம் ஹிட். நடத்திய எங்களுக்கு 30ரூபாய் நஷ்டம். அதோடு பேரரசு சென்னைக்குப் பறந்து விட்டான். அடுத்த வருடமும் திருவிழாவுக்கு நாடகம் போட வேண்டிய கட்டாயம் உருவானது. இப்போது நான் தான் திரைக்கதை, வசனம், டைரக்‌ஷன். சமூக நாடகத்தில் இசையைப் பயன்படுத்துவது சிக்கலாக இருந்த்து. மதுரைக்குப் போய் நாடக நடிகர் சங்கத்தில் விசாரித்து இசைமாமணி, ஹார்மோனிய கலாநிதி ஒருவரை பசுமலைக்குப் பக்கத்தில் கண்டுபிடித்தோம். அவரைச் சமாளித்துப் பாடவைக்காமல் இருக்க நாங்கள் பட்டபாடு பெரும் கதை. அடுத்த காட்சிக்குக் கொஞ்சம் இடைவெளி இருந்தால், ‘சிங்கார வேலனே...’ என்று பாட த்தொடங்கிவிடுவார்.

இதனால் இனிவரும் வருடங்களில் நாடகத்துக்கு இசையை டேப்ரிக்கார்டர் மூலம் பயன்படுத்துவது என்று முடிவு செய்தேன். இளையராஜா இருக்கும்போது என்ன பயம். அவரது இசைக்கோலங்களான “ஹவ் டு நேம் இட்,” “நத்திங் பட் வின்ட்” இரண்டும் அப்போது வந்திருந்தன. அவற்றிலிருந்த இசைக் கோலங்கள் முழுவதையும் மனப்பாடமாக வாயிலேயே இசைத்துவிடும் பயிற்சி எனக்கு இருந்தது. அந்த 2 இசைக் கோலங்களையும் எனது நாடகப் பிரதியையும் எடுத்துக் கொண்டு எங்கள் வீட்டிலிருந்த டேப்ரிக்கார்டரையும் எடுத்துக் கொண்டு நண்பர் ஒருவரின் வீட்டுக்குப் போய் தேவைப்படுகிற இசையை மட்டும் துண்டுதுண்டாக கதைக்கேற்ற மாதிரி வரிசையாகப் பதிவு செய்து வைத்துக் கொண்டேன்.

நாடகம் துவங்கியது. சரியான திருவிழாக் கூட்டம். காட்சியில் டேப்ரிக்கார்டரில் பதிவு செய்து வைத்திருந்த இளையராஜாவின் இசை பொருந்தியது ஒரு அற்புத கணம் போல நிகழ்ந்தது. சரியான காட்சியுடன் சரியான இசை சேரும்பொழுது கிடைக்கிற பரிமாணத்தை நேரடியாக உணர்ந்தேன். கூட்டம் கைதட்டி ஆர்ப்பரித்தது. அந்த நாடகமே இசையினால் பார்வையாளர்களுக்குத் திரைப்படம் பார்ப்பது போன்ற அனுபவத்தைத் தந்தது.


அந்த நாட்களில்தான் நண்பன் வெள்ளைத்துரை ஸ்டீரியோ வாக்மேன் வாங்கி வந்தான். எங்களிடம் தேர்ந்தெடுத்த இளையராஜாவின் பாடல்கள் இருந்தன. சாயங்காலம் நாட்டரசன்கோட்டையின் கண்ணாத்தாள் கோயில் அருகில் இருக்கும் ஆலமரத்தடியில் கிடக்கும் பாறைகளில் அமர்ந்து பாட்டுக் கேட்போம். இருட்டத் துவங்கியதும் தெப்பக்குளத்தின் ஆளவடியிலமர்ந்து தவணைமுறையில் பாட்டுக் கேட்போம். “கோடைகாலக் காற்றே...”, “என்ன சத்தம் இந்த நேரம்..” “வா வா அன்பே அன்பே..” , “நீயொரு காதல் சங்கீதம்...” ஹெட்போனைப் போட்டுக்கொண்டுப் பாட்டுடன் சேர்ந்து பாடுகிறோம் என்ற நினைப்பில் அளவுக்கு அதிகமாக, சத்தமாகப் பாடியனால் நண்பர்கள் வாய்விட்டுச் சிரிப்பார்கள். என்ன? என்று சைகையால் கேட்டால் கொஞ்சம் சத்தத்தைக் குறை என்று சைகையால் சொல்வார்கள். அந்த முன்னிரவில் கோபுரத்தில் இருக்கும் விளக்கு குளத்துநீரில் அசைந்து கொண்டிருக்கும். எப்போதாவது கடந்து போகிற பேருந்துகளின் வெளிச்சம் எங்கள் மேல் பட்டுக் கடந்து போகும். நிலவொளியில் தெப்பத்தைச் சுற்றி இருக்கிற தென்னமரங்கள் அசைந்துகொண்டிருக்கும். சற்றுத் தள்ளி மேட்டில் நிற்கும் மருதமரங்கள் இருட்டுக்குள் அசைந்துகொண்டிருக்கும். சத்தமில்லாக அந்த ஊரின் பேரமைதியில் இளையராஜாவைக் கேட்பதே ஓர் அனுபவம்.

வாக்மேனில் இதுவரை பாட்டில் கேட்காத சத்தமெல்லாம் கேட்டன. அதுவுமில்லாமல் “அக்னி நட்சத்திரம்” பாடலைக் கேட்கும்போது சத்தம் வலது காதிலிருந்து இடது காதுக்கு கடந்து செல்வதையும் உச்சந்தலையில் ஒரு சத்தம் கேட்பதையும் உணர்கையில் பரவசமாக இருந்தது. அந்த வாக்மேனில் “நத்திங் பட் வின்ட்,” கேட்பது அதீதப் பரவசம். “புத்தம் புது காலை” பாட்டை மட்டும் 100 முறையாவது கேட்டு இருப்போம். இருந்த ஒரே வாக்மேனில் பாட்டு கேட்பதற்காக மட்டுமே மாலையில் நண்பர்கள் சந்தித்தோம்.

நாட்டரசன்கோட்டையில் வெண்கலப் பானைகள் செய்யும் சுப்பு அண்ணன் இருந்தார். அவர் வீட்டில் நண்பர்கள் கூடுவோம். எங்களில் அவர் ஒருவரே சம்பாதிக்கும் நபர் என்பதால் எல்லோரையும் கடைவீதிக்கு அழைத்துப் போய் புரோட்டா, ஆம்லேட், வாங்கித் தந்து வீட்டுக்கு அழைத்து வருவார். அவர் வீட்டின் பின்னால் இருக்கும் பட்டறையில் இரவு இரண்டு மணி வரைக்கும் கச்சேரி நடக்கும். எங்கள் கூட்டத்தில் நான், அய்யப்பன், ஆதவன், பாண்டி நால்வரும் பாடகர்கள். பாண்டி ஒரு டூயட்டை ஆண் குரலிலும், பெண் குரலிலும் பாடுவான். நாங்கள் பாடும்போதும் பெண்குரல் பாண்டிதான். சில வயலின், புல்லாங்குழல் இசைகளை நாங்களே வாயால் கொடுப்போம். துவங்கும்போது, ‘நீ பாடு... நீ பாடுப்பா’ என்று தயங்குவார்கள். கச்சேரி துவங்கிவிட்டால் கேசட் போட்டது மாதிரி வரிசையாக யாராவது ஒருத்தர் பாடிக்கொண்டே இருப்போம். அவர் சட்டையைக் கழற்றி விட்டு வென்கலப் பானையை இளந்தொந்தியில் கடம் மாதிரிக் கவிழ்த்திக் கொண்டு கும்கும்மென்று தாளம் போடுவார். “ராசாவின் மனசிலே.. என் ராசாத்தி நினைப்புத்தான்...” நிலவு தூங்கும் நேரம்’ “மாங்குயிலே... பூஞ்குயிலே..”, “ சொர்க்கமே என்றாலும்..” “வெள்ளிக் கொலுசு மணி...” “பட்டுக் கன்னம் தொட்டுக்கொள்ள...” இந்தப் பாடலில் வரும் எஸ்.பி.பியின் சிரிப்பை அய்யப்பனே கேலியாகச் சிரிப்பான். அவன் சிரித்ததும் எல்லோரும் விழுந்து விழுந்து சிரிப்போம்.


பிறகு, குடும்பத்தோடு சிவகங்கை வந்தோம். படித்த பொறியியலில் வேலை பார்க்கிற ஆர்வமில்லை. திரைப்படம் தேடி சென்னை வருவதிலேயே நோக்கம் முழுமையுமிருந்தது. அந்த நாட்களில் ஒரு பத்திரிக்கையில் இளையராஜாவின் நேர்காணல் வந்திருந்தது. “ஒரு இயக்குநர் இசை தெரிந்தவராக இருக்கும்போதுதான் ஒரு திரைப்படம் முழுமையடைகிறது. அத்தகைய இயக்குநர்களுடன் பணிபுரிவதே எனக்கு விருப்பமாக இருக்கும்” என்கிற அர்த்ததில் அந்த நேர்காணல் இருந்தது. நெடுநாட்களாக எனக்குள் இருந்த இசை கற்கும் ஆர்வம் மேலிட்டது. மதுரைக்குப் போய் அடுத்த சில மாதங்களில் ஆசிரியர் நூர்பாட்சா அவர்களின் இசை வகுப்பில் சேர்ந்தேன்.


கீபோர்ட் வாசிப்பதற்கான பயிற்சி திங்கள், வியாழன் மாலை 5 மணிக்கு இசை வகுப்பு. சிவகங்கையிலிருந்து மதியம் 3 மணிக்குக் கிளம்பவேண்டும். வகுப்பு 7 மணிக்கு முடிந்தாலும் நான் வகுப்பிலேயே உட்கார்ந்திருப்பேன். கச்சேரியில் வாசிப்பவர்கள் வருவார்கள். இசைபற்றி பேச்சு நடந்து கொண்டே இருக்கும். நான் ஆர்வமாக் கேட்டுக் கொண்டிருப்பேன். “செழியன், இவர் ஜெயராஜ், இவர் பையன் ஹாரிஸ்னு மெட்றாஸ்ல கீபோட் ப்ளேயர்” ஆசிரியர் அறைக்கு வருகிற பலரையும் அறிமுகம் செய்துவைப்பார். அந்த அறையைப் பத்துமணிக்குப் பூட்டிவிட்டுப் பெரியார் பேருந்து நிலையம் வரை இருவரும் பேசிக்கொண்டே வருவோம். அவரை அரசரடி பேருந்தில் ஏற்றிவிட்டபிறகு நான் அண்ணா பஸ் ஸ்டாண்ட் வந்தால் பதினோரு முப்பதுக்குத்தான் அடுத்த பேருந்து. பேருந்தில் கண்டிப்பாகப் பாட்டு இருக்கும். இதுபோல 3 வருடங்கள் ஒரு வகுப்பு கூட விடாமல் படித்தேன். எனது இசை ஆசிரியர் ஓர் இசைக்குழு வைத்திருந்தார். நான் வகுப்புக்குப் போகும் போது ஏதாவது இளையராஜாவின் பாடலை வாசித்து கச்சேரிக்காக நோட்ஸ் எடுத்துக் கொண்டிருப்பார். சில இடங்களை வாசிக்கும்போது ஹார்மோனியத்திலிருந்து இரண்டு கையையும் எடுத்து “அடடே என்னதான் சொல்லுங்க ராஜா ராஜாதான். அவர் மியூசிக்கை முழுசா அனுபவிக்கிறதுக்காவது ஒவ்வொருத்தரும் மியூசிக் படிக்கணும்...” என்பார்.


இசை வகுப்பின் கடைசி வருடங்களில் அம்மாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மதுரையில் தனியார் மருத்துவமனையில் சேர்த்திருந்தோம். தம்பிகள் படித்துக் கொண்டிருந்ததால் நான்தான் அம்மாவுடன் இருப்பேன். குடும்பத்திலும் மனநிலையிலும் இருள் படிந்திருந்த மிகவும் கஷ்டமான ஒரு சூழல். அப்போதும் திங்கள், வியாழன் வந்தால் தெரிந்த நர்ஸிடம் அம்மாவைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு இசை வகுப்புக்குக் கிளம்புவேன். படுக்கையில் இருக்கிற அம்மாவிடம் “அம்மா மியூஸிக் க்ளாஸ் இருக்கு.” “நீ போய்ட்டு வாப்பா. நான் நல்லாத்தான் இருக்கேன்” ஒரு நலிந்த புன்னகை. மனசெல்லாம் பாரமாக இருக்கும். இசை வகுப்பில் அமர்ந்து ஸ.. ப.. ஸ.. கேட்டதுமே கண்கலங்கும். ‘நான் பாட்டு சொல்றேன். நோட்டு சொல்ல மாட்டேன். நீங்களா வாசிக்கணும். அதுதான் பயிற்சி.’ “ஆனந்த ராகம்... கேட்கும் காலம்...” ஸ்வரங்களை விரல் தேடும். ஹார்மோனியத்தில் ‘தாராரி ராரி.. தாரி ரா.. ரி.” ஸ்வரங்கள் சரியான கதியில் சேர்ந்து ஒலிக்கையில் கண்கள் தானாகக் கலங்கி வழியும். இந்தக் காலத்தில் எந்த நல்ல பாட்டுக் கேட்டாலும் கண்கள் தானாகவே கலங்கி வழிந்தன.

பிறகு சென்னை வந்து திரைப்படத் துறையில் சேர்ந்துவிட்டேன். ஒரு நாள் திருவான்மியூர் கடற்கரைக்கு நானும் நண்பரும் இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் போனோம். நண்பர் ஒரு வாக்மேனுடன் வந்தார். நிலா வெளிச்சத்தில் கடற்கரை ஒரு விதமான தியானத்தன்மையுடன் இருந்தது. பரந்த கடற்கரையின் முன்னால் கடல் அசைந்து கொண்டிருக்க அந்த இரவில் யாருமே இல்லை. “செழியன் இந்தப் பாட்டைக் கேளுங்க..” என்று நண்பர் வாக்மேனைக் கொடுத்தார். கேட்ட பழைய பாடல்தான் என்றாலும் அந்தச் சூழலில் கேட்க வேறுவிதமாக இருந்தது. “சுந்தரி கண்ணால் ஒரு சேதி..” அந்தப் பரந்த வெளியில் அந்தப் பாடலை கேட்கையில் அதில் இடையில் வரும் இசையும் இசையைத் தொடர்ந்து வரும் புல்லாங்குழல் மெல்ல அணைந்து பாடல் வரத்துவங்கும். அந்த நள்ளிரவில் பாடல் தரும் அனுபவத்தை மொழியில் எப்படி எழுத?

ஒரு நாள் சென்னையிலிருந்து ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். பொதுவாக இது மாதிரியான பேருந்துப் பயணங்களில் நெடுநேரம்வரை தூக்கம் வராமல் விழித்திருப்பேன். காற்று வேகமாக அடிக்குமென்பதால் எல்லோரும் சன்னலை மூடியே வைத்திருந்தார்கள். அப்போது ஓட்டுனரும், நடத்துனரும் இரவில் தூக்கம் வராமல் இருப்பதற்காகப் பாட்டுப் போட்டுக்கொண்டே வண்டியை ஓட்டுவார்கள். அப்போது ஒரு பியானோ இசை பெருகி வந்தது. கேட்டதும் என்னையறியாமல் ஏதோ கலக்கமான மனநிலை. கண்கள் கலங்கி வழிகின்றன. “ நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி. ” இந்தப் பாடலை கேட்கும்பொழுது எனக்கு மரணத்தின் நினைவுகள் வந்தன. சமீபத்தில் இறந்திருந்த தெரிந்த பெண்ணின் நினைவுகள். பிறகு படம் பார்க்கும்போது பாடல் கேட்கும்போது நான் உணர்ந்த விஷயங்கள் கதையோடு வெகுவாகப் பொருந்தியதைக் கவனித்தேன். இசைவழியே படிமங்களை உருவாக்குவதும் கதையின் ஆன்மாவை மேம்படுத்துவதும் எத்தனை பெரிய மேதமை?

இசைப்பயிற்சியில் படிக்கும்போது எனது இசை ஆசிரியர், இளையராஜாவின் பாடல்களின் சிறப்பை ஒவ்வொரு வகுப்பிலும் சொல்லிக்கொண்டே இருப்பார். “பூமாலையே தோள் சேரவா...” இது என்ன அரேஞ்ச்மெண்ட் தெரியுமா... வாய்ஸ் ஓவர்லேப் ஆகிக்கிட்டே வரும். கேனான் அரேஞ்ச்மெண்ட்” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே “தேன் சிந்துதே வானம்” என்று ஹார்மோனியத்தில் வாசித்து “இது ராஜா போட்டது. ஆனா யாருக்கும் தெரியாது. ஒரு பாட்டை ஒரு ராகத்தில் போய்கிட்டே இருக்கும்போது ஒரு அனுஸ்வரத்தைத் தொட்டு அப்படியே மாறுவாரு பாருங்க. ஜீனியஸ்” என்று இளையராஜாவின் புகழ் சொல்லிக்கொண்டே இருப்பார். அந்த நினைவுகளையும் எனது தனிப்பட்ட அனுபவங்களையும் வைத்து இளையராஜாவைப் பற்றிய நீண்ட கட்டுரை ஒன்றைக் கணையாழியில் எழுதினேன். அதைப் படித்த நண்பர் அஜயன்பாலா “நீங்க அவரைச் சந்திச்சே ஆகணும்” என்று என்னை அழைத்தார். எனக்கு இளையராஜாவைச் சந்திக்கவேண்டுமென்பது என் வாழ்க்கையின் கனவுகளில் ஒன்றாக இருந்தது. அஜயன் அழைத்ததும் இத்தனை நாளாய் மனதுக்குப் பிடித்தவரைச் சந்திக்கிற ஆர்வம் இருந்தாலும் எழுதியதைக் காரணம் வைத்து சந்திப்பதில் தயக்கமும் இருந்தது.


”அதெல்லாம் ஒண்ணுமில்ல வாங்க” என்று அஜயன் தியாகராய நகரிலிருக்கும் இளையராஜாவின் வீட்டுக்கு அழைத்துப் போனார். அங்கு அவர் இல்லை. பிரசாத் ஸ்டுடியோவிற்கு வந்தோம். ஒரு நொடி இருக்கும். என் மதிப்பிற்குரிய இளையராஜா வந்தார். அவரைக் காலைத்தொட்டு வணங்கிய அஜயன் என்னைப் பற்றிச் சொல்லி இவர் உங்களைப் பத்தி ரொம்ப நல்லா ஒரு கட்டுரை எழுதி இருக்கார் என்று சொல்லி கணையாழியை நீட்டினார். அவர் அதை வாங்கிப் பார்க்கக்கூட இல்லை. “நான் என்னைப் பத்தி வர்றது எதையும் படிக்கிறதில்லை” என்று சொல்லிக்கொண்டே படிகளில் ஏறிப்போய்விட்டார். இருவருக்கும் ஒரு மாதிரி இருந்தது. இங்கு வந்திருக்க வேண்டாமோ என்று நினைத்தேன். எனது செயல் எனக்கே வெட்கமாக இருந்தது. இனிமேல் அழைப்பு இல்லாமல் இவரைச் சந் திக்கவே கூடாது என்று உறுதி எடுத்துக் கொண்டேன்.

ஏனென்றால் என் அன்புக்கும் மரியாதைக்கும் உரியவர் என்னை அழைப்பார் என்று என் உள்ளுணர்வு சொன்னது. எனது நேசிப்பும் மரியாதையும் உண்மை என்றால் ஒரு நாள் அழைப்பு வரும். வரவேண்டும். அது எப்போது என்று தெரியாது. ஆனால் வரும் என்று என் மனம் உறுதியாக நம்பியது. அதன்பிறகு அவரைச் சந்திக்கும் எண்ணத்தை மறந்துவிட்டேன். திருமணம் நடந்தது. மனைவியுடன் சென்னை வந்தேன். எனக்குத் தெரியாத பாடல்களை கேட்டு தெரிந்துகொள்ளும் அளவிற்கு என் மனைவிக்கு இளையராஜாவின் பாடல்களில் புலமை இருந்தது. சென்னையில் நாங்கள் இருவரும் கடைக்குப் போய் முதன்முதலில் வாங்கிய பொருட்களில் ஒரு சிறிய வானொலியும் இருந்தது. சிறிய வாடகை வீட்டின் பின்னிரவுகளில் வெக்கையடிக்கும் சென்னையின் கோடைக் காலத்தில் பண்பலையில் வரும், “நதியோரம்... நீயும் ஒரு நாணல் என்று..”, “ராமனின் மோகனம்..”, “என்னுயிர் நீதானே...”, இளையராஜாவின் இசையில் ஜானி படத்திலிருந்து “என் வானிலே...” “தூங்காத விழிகள் ரெண்டு..” பாடல்களைக் கேட்கையில் நாட்டரசன்கோட்டையின் இரவு, வாடகை வீடு. வெக்கை, வானொலி என காலத்தின் சுழற்சியில் பருவங்கள் இடங்கள் மாறினாலும் நான் ஒரே இட்த்திலிருப்பதைப் போலவே உணர்ந்தேன்.

சென்னையில் எனது ஆசிரியர் பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளராகப் பணிபுரிந்து கொண்டிருந்தேன். ஒரு நாள் என்னை அவரது காரில் அழைத்துப் போகையில் தனது மீரா படத்தின் “ஓ பட்டர்பிளை” என்ற பாடலைப் பற்றியும் ”தேவர்மகனின் இசைச்சேர்ப்பு” வேலைகள் குறித்தும் சொல்லும்போது இளையராஜாவின் பெருமைகளைச் சொல்லிக்கொண்டே வந்தார். நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை என்பதுபோல எங்கு போனாலும் நானும், இளையராஜாவும் இருந்தோம். இந்தக் காலங்களில் என் அம்மாவின் உடல்நிலை மோசமடைந்துக்கொண்டே இருந்தது. ஒரு நாள் நான் படப்பிடிப்புக் காக வட இந்தியாவில் இருந்து சூழல் பிடிக்காமல் சென்னை வந்து இறங்குகையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அம்மாவின் மரணச் செய்தியை அய்யப்பன் சொன்னான். சிவகங்கை போனேன். நாயனக் கார ர்கள் அம்மாவின் பாசத்தைக் குறிக்கும் இளையராஜா பாடலை வாசித்துக் கொண்டிருந்தார்கள். எனக்கு அழுகை வரவில்லை. அதன்பிறகு காலம் சுழற்றி அடித்ததில் திரும்பவும் சென்னை வர 6 மாதங்களுக்கு மேல் ஆனது. மகன் பிறந்தான்.


ஒரு நாள் மதுரையிலிருந்து சிவகங்கைக்குப் பேருந்தில் வந்து கொண்டிருந்தபோது பேருந்தில் பாடல்கள் பாடிக்கொண்டிருந்தன. நான் அந்தப் பாடல்களுடன் சேர்ந்து பாடிக்கொண்டே நகரும் நிலக்காட்சிகளைப் பார்த்துக்கொண்டே வந்தேன். ஒரு ஹம்மிங்குடன் துவங்கும் “காற்றில் எந்தன் கீதம்...” பாடிக்கொண்டிருக்கும்போதே ஒரு கணம் கீச்சலான என்குரல் அம்மாவின் குரலைப் போல கேட்க, ஒரு கணம்தான். என்னை அறியாமல் வெடித்து அழத்துவங்கினேன். பாடல் முடிந்தாலும் ஊர் வரும் வரை கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது. இன்றும் “அழகிய கண்ணே” பாடலை எந்தச் சூழ்நிலையில் கேட்டாலும், பார்த்தாலும் கண்கள் கலங்கி வழிகின்றன.

சென்னை வந்து திரைப்படம் சார்ந்த வேலைகளில் சகோதரர் சீமான் வீட்டில் தங்கியிருந்த நாட்களில் அவரும் இளையராஜா பற்றிய சுவாரஸ்யமான கதைகளைச் சொல்லுவார். அப்போதுதான் நண்பர் சுரேஷைச் சந்தித்தேன். அந்த நாட்களில் சந்திக்கும்போதெல்லாம் இருவரும் பேசிக்கொள்ளும் விஷயம் இளையராஜாவாக மட்டுமே இருந்தது. சென்னையின் நெரிசலில் இசையைப் பற்றிப் பேச அதிலும் நுணுக்கமாக அவரது பாடலில் சங்கதிகளையும் ராகத்தையும் பற்றிப்பேச சுரேஷ் மட்டுமே ஏற்ற நண்பராய் இருந்தார். அவர் வீட்டுக்குப் போனால் கீபோர்டை எடுத்து வைத்துக்கொண்டு இருவரும் ஒவ்வொரு பாட்டாகச் சொல்லிச்சொல்லி வாசிப்போம்.


இந்த நாட்களில் ஒருநாள் கவிஞர் ரவிசுப்ரமணியனைச் சந்தித்தேன். கனிமொழியின் கவிதைகளை இசைப்பாடலாக மாற்றுவது குறித்தும் அதைப் படம் எடுப்பது குறித்தும் பேசுவதற்காக அழைத்திருந்தார். “ கவிதைகளுக்கு இசை அமைத்தாகிவிட்ட்தா?” என்று கேட்டேன். அவர் ஏதோ புதிய இசையமைப்பாளர்களின் பெயர்களைச் சொன்னார். நான் ‘ஏன் புது இசையமைப்பாளர்கள்? ராஜா சாரைக் கேளுங்களேன்’ என்று சொன்னேன். “அவரை எப்படி? உங்களுக்குத் தெரியுமா?’ என்று அவர் தயங்கினார். “எனக்கு அறிமுகமில்ல. ஆனா ஒத்துப்பார்னு தோணுது. சும்மா முயற்சி பண்ணிப் பாருங்க.” அவர் இசையில் பணிபுரியும் ஆசையில் அவ்வாறு சொன்னேன்.

இரண்டு நாட்கள் கழித்து ரவிசுப்ரமணியத்தை திரும்பவும் சந்தித்தேன். இளையராஜவைச் சந்தித்த விஷயத்தைச் சொன்னார். “முதல்ல மறுத்தார். அப்புறம் ஒத்துக்கிட்டார்.” “இதை எங்கிட்ட வந்து கேக்கணும்னு எப்படி உங்களுக்குத் தோணுச்சு.” என்று கேட்டிருக்கிறார். “உண்மையிலேயே எனக்குத் தோணல், என் நண்பர் ஒருத்தர் சொன்னார்” என்று அவர் என் பெயரைச் சொல்லி இருக்கிறார். “அவரை உடனே கூட்டிட்டு வாங்க” என்று ராஜா சார் சொல்லி இருக்கிறார். 7 வருடங்களுக்குப் பிறகு நான் எதிர்பார்த்த அழைப்பு வந்துவிட்டது.

காலை ஏழு மணி. பிரசாத் ஒலிப்பதிவுக் கூடம். அவருக்கான அறை. தயக்கத்துடன் நுழைந்தால் என் மரியாதைக்குரிய இளையராஜா ஹார்மோனியத்தின் முன்னால் அமர்ந்திருந்தார். இடது பக்கம் இருந்த நீண்ட திரைச்சீலைகளின் வழியே கண்ணாடி சன்னலின் வெளிச்சம் வெண்ணிறமாக அறை முழுக்கப் பரவி இருந்தது. பார்த்ததும் கைகூப்பி வணங்கினேன். பதிலுக்கு வணக்கம் சொல்லி ஒரு புன்னகையுடன் உட்காருங்க என்று சைகை செய்தார். எதிரில் அமர்ந்தேன். “இந்த இடத்துக்கு வர எத்தனை வருடங்கள்? எங்கெல்லாம் உங்கள் பாடலைக் கேட்டிருக்கிறேன். எத்தனை இரவுகள், எத்தனை துயரங்கள், எத்தனை சந்தோஷம்.. உண்மையான ஈர்ப்பு என்னை இங்கு அழைத்து வந்து எதிரில் உட்காரவைத்து விட்டது.” அந்தக் கணத்தில் மனதில் ஒரு பாடலும் இல்லை. அந்தக் கண்கள், வார்த்தைகள் ஏதுமில்லாத மெளனம். சந்திப்பு ஒரு மணி நேரத்துக்கு மேல் நிகழ்ந்தது.

இன்னொரு நாள் காலை. அந்த அறையில் நானும் அவரும் மட்டும் இருந்தோம். பாடல்கள் குறித்துப் பல விஷயங்கள் கேட்டேன். பொறுமையாகச் சொல்லிக்கொண்டே இருந்தார். ஒரு நிலையில் ஹார்மோனியத்தின் பெல்லோஸை விடுத்து கண்களை மூடி, ‘தரரி ராரி ரா... ரரி..’ என்று வாசித்துக் கொண்டே பாடினார். அந்தக் கணம் அற்புதம். “நதியில் ஆடும் பூவனம்” என்ற பாடல் வரிகள் இல்லாமல் முழுப் பல்லவியையும் தத்தகாரமாக வாசித்துக் கொண்டே பாடினார். என் கண்கள் கலங்கின. பாடி முடித்ததும் தியானத்தில் இருப்பதைப் போன்ற அமைதி. அவர் மெளனமாக இருந்தார். நானும் மெளனமாய் இருந்தேன்.


விஜயதசமி பூஜை நடக்கிறது என்று வீட்டுக்கு அழைத்தார். நடப்பது எதையும் என்னால் நம்ப முடியவில்லை. நானும், மனைவியும், மகனும் போய் வந்தோம். இசைக்கச்சேரி முடிந்து உணவு வேளையின்போது, தலையை அசைத்து அருகில் உட்கார அழைப்பார். வீட்டினுள் இருக்கும் அவரது பாடல் இயற்றும் அறைக்குள் அழைப்பார். அதற்குப் பிறகான பல சந்திப்புகள். அவரது இசையில், தயாரிப்பில், எழுத்தாளர் ஜெயகாந்தனின் ஆவணப்படத்தை ஒளீப்பதிவு செய்கிற வாய்ப்பு. இன்னும் சில பாடல் பதிவு. பின்னணி இசைச் சேர்க்கை என்று பல தருணங்களில் மெளனமாக உடனிருக்கும் வாய்ப்பு கிடைக்கிறது என்றாலும் இன்னும் என் பிரமிப்பு கலையவில்லை. பாடல் பதிவு செய்கையில் பொறியாளரின் அறையிலிருந்து வெளிவந்து அகன்ற ஒலிப்பதிவுக் கூடத்தை கடந்து தனது அறையை நோக்கி நடப்பார். நான் சற்று பின்னால் நடந்து செல்வேன். அவரது காலடிச்சத்தம் மட்டும் அந்த ஒலிப்பதிவுகூடத்தில் கேட்கும் வினோதமான கைப்பிடியுடன் தானாக சாத்திக்கொள்ளும் இரண்டு கதவுகளைக் கடக்கவேண்டும். அதைக் கடந்து வருவதற்குள் அவர் தனது அறைக்குள் நுழைந்திருப்பார். வெளியில் அவரது வெள்ளை நிற காலணிகள்.

ஒவ்வொரு சந்திப்பின் பிறகும் மனதில் ஒருவிதமான சக்திநிலையும், நம்பிக்கையும் தோன்ற வெளியில் வருவேன். கண்கள் கூசும் வெயில். என் வாழ்க்கையின் பல பிராயங்களில் இசையாக உறைந்திருக்கும் மாமனிதர். கால இயந்திரம்போல அவரது எந்தப் பாடல் வழியாகவும் எனது இறந்த காலத்திற்குள் நுழைந்துவிட முடியும். அப்பா, அம்மா, தம்பிகள், நண்பர்கள், தோழிகள், பள்ளிப்பிராயம், கல்லூரிக்காலம், சில பயணங்கள், சில தருணங்கள், சில முகங்கள், காதல், திருமணம் என ஏதாவது ஒரு பாடல் அல்லது பாடலில் வரும் இசைத்துணுக்குக் கூட என் நினைவுகளின் பரந்த நிலக்காட்சிகளைத் திறந்துவிடும் வலிமைமிக்கதாய் இருக்கிறது. ஏழுமலைத்தாண்டி ஏழு கடல்தாண்டி குகையில் இருக்கும் கிளியில் மந்திரவாதியின் உயிர் ஒளித்து வைத்திருக்கப் பட்டிருப்பதைப் போல ஒரு வயலின் கோவையில், பியானோவின் தூறலில், பாடகரின் குரலைத் தொடரும் மெளனத்தில் எனது ரகசியங்கள் அனைத்தையும் ஒரு காதல் கடிதம்போல ஒளித்துவைத்திருக்கிறேன். இசைதரும் படிமங்கள் இன்னும் மலர்ந்துகொண்டே இருக்கின்றன.

ஒளியின் நுட்பங்களைக் கற்கிறவனாக ஒரு நிழற்படம் ஆயிரம் வார்த்தைகளுக்குச் சம்ம் என்று அறிந்திருக்கிறேன். ஆனால் ஒரு வயலின் ஸ்வரத்தில் ஆயிரம் வார்த்தைகளுக்கு ஈடாக நினைவில் நிழற்படமாக உறைந்த நினைவுகள் உயிர்ப் பெறத் துவங்குகின்றன. “பூங்காற்று திரும்புமா” பாடலின் சோகமான குழலிசை கண்மாய்க்கரையில் வீசும் எதிர்காற்றில் வேகமாக நண்பனுடன் சைக்கிள் ஓட்டிச்செல்லுகிற ஒரு காட்சியைத் திறக்கிறது. “கீரவாணி...” என் கல்லூரி விடுதியின் 29 ஆம் அறையைத் திறக்கிறது. “இது மெளனமான நேரம்...” பாடல் மழை நாளைத் திறக்கிறது. “பொன்மானைத்தேடி...” நண்பனின் காதல் காலம். “நான் ஏரிக்கரை மேலிருந்து...” ஒரு பிரிவின் வலி. “தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ...” தெப்பக்குளத்தின் ஆளவடியில் யாருமில்லாத முன்னிரவு. ஒவ்வொரு பாடலுக்குள்ளும் என் நாட்கள் உறைந்த சித்திரங்களாக இருக்கின்றன.

இன்று நாட்டரசன்கோட்டையில் நண்பர்கள் யாருமில்லை. சிவகங்கையிலும் யாருமில்லை. அம்மா மறைந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. அப்பாவின் தலைமாட்டில் இன்னும் தீப்பெட்டி இருக்கிறது. அதிலிருந்த தாளம் இல்லை. அவர் பாடல்களை விரும்பாத நலிவின் தனிமையில் இருக்கிறார். தேனீர் கடைகள் இருந்த இடத்தில் டாஸ்மாக் இருக்கிறது. நிலக்காட்சிகள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டன. உலகத்தில் எல்லாம் மாறினாலும் ஒரு பாடல் போதும். எல்லோரும் திரும்ப வருவார்கள்.

இன்றும் எங்கள் வீட்டில் சென்னை வரும்போது வாங்கிய அந்தப் பழைய வானொலி இருக்கிறது. பேட்டரி போடும் திறப்பு உடைந்து ரப்பர் பேண்ட் போட்டு கட்டிலின் மூலையில் இருக்கிறது. எனது மகனுக்கு “ஒரு இனிய மனது..” என்ற பாடல் மிகவும் பிடித்திருக்கிறது. எனது அப்பா நாய் வளர்ப்பதால் அவரை ‘டாக் தாத்தா’ என்கிறான். மனைவியின் அப்பா மேரி பிஸ்கெட் கொடுப்பதால் அவர் ‘மேரி பிக்கெட் தாத்தா’. “ஜனனி..” பாடல் பாடும்போது அவரை முதல் முறையாக நேரில் பார்த்ததால் இளையராஜாவை “ஜனனி தாத்தா” என்கிறான். ஐபாடில் ஜ்னனி தாத்தாவின் பாடலைத் திரும்ப திரும்ப கேட்கிறான். எனது இரண்டரை வயது மகளுக்கும் ஜன்னி தாத்தாவின் “நானே நானா..” பிடிக்கிறது. “பூவிலே மேடை நான் போடவா...” என்று மழலையாகப் பாடுகிறாள். அழும்போது குழலிசையுடன் “இளங்காத்து வீசுதே..” துவங்கினால் அமையாக்க் கேட்கிறாள்.


இன்னொரு இரவு. அறை இருளில் தெருவிளக்கின் மிதமான மஞ்சள் வெளிச்சம். வானொலியின் தலையைச் செல்லமாகத் தட்டி வலமும் இடமும் திருப்பி மனைவி பண்பலைகளைத் தேடுகிறாள். இரைச்சல்களின் பிறகு “விருமாண்டி” படத்திலிருந்து இளையராஜாவின் இசையில் “உன்ன விட... “ தெளிவாகக் கேட்கத் துவங்குகிறது. பெண்குரல் வருகையில் மனைவி சன்னமாக குரலெடுத்துச் சேர்ந்து பாடுகிறாள். மகனும் மகளும் அருகில் படுத்திருக்க நான் இப்போது அப்பாவக இருக்கிறேன். இசையின் உன்னத்த்தில் தீராத என் கண்ணீர் வழிந்துகொண்டே இருக்கிறது.


உயிர் எழுத்து, பிப்ரவரி 2012.

Reply · Report Post