#Ilayaraja


நினைவுச்சித்திரம்


” என் கால இயந்திரம் “


- செழியன்

செந்தூரப்பூவே பாடலின் துவக்க இசை
வெயில் எரியும் பொட்டல் காட்டில் மழைவாசம்
அலையும் கானலில்
மீன்கள் நீந்தத்துவங்குகின்றன
உதிர்ந்த மஞ்சள் இலைகள்
காற்றில் அசைந்து அசைந்து
வண்ணத்துப்பூச்சியாகிப் பறக்கின்றன
அம்மாவின் சேலைத்தொட்டிலில்
தூங்கும் குழந்தை கடவுளுடன் மெளனமாகப் பேசிச் சிரிக்கிறது

பூட்டிய வீட்டின் இருளில்
ஒரு சன்னல் தானாகத் திறக்கிறது
இன்னொரு சன்னல்
சுவர் முழுக்கச் சன்னல்கள்
--- என்று அச்சிடப்பட்ட
பழுத்த சித்திரம் ஒன்றின் பின்னணியில் இருந்த
ந ந்தியாவாட்டை மரம் அசைகிறது
சீருடையில் இருந்த சிறுவரும் சிறுமியரும்
சிரிப்பொலியுடன் கலைந்து ஓடுகிறார்கள்
இறந்துபோன டீச்சர் எழுந்து செல்கிறார்

பறவைகள் அனைத்தும் கூடு திரும்பின
ஒரு பன்னீர் மலர் தனது காம்பிலிருந்து அவிழ்ந்து
காற்றில் சுழல்கையில்
மழை
சலனமற்ற ஊருணியின் நீர்ப்பரப்பில் ஒரு மழைத்துளி
க்ளக்
நீரும் நீரும் தொடும் கணம்
ஒரு குமிழி
நீர்மலர்
மலர்கையிலேயே அணைகிறது
குளம் முழுக்கப் பரவுகிறது தொடு உணர்வு
மழை துவங்க்க் குளம் முழுக்க நீர்மலர்கள் மலர்வதும் அணைவதுமாக
நிலத்தில் புழுதி எழும்பித் துளியை மூடுகிறது
மணல் பூ

ஒரு தொடுதல்தான்
கல் மாம்சமானது
ஒரு ஸ்வரம்தான்
புறமுதுகின் அடியில் நுழைந்து நெளிந்து
உச்சந்தலையில் விரியும் நாகம்
தண்டுவடம் வழியாக உடல் முழுக்கப் பரவும் விஷம்

உடலினைக் கடந்து செல்தல்
மஹா சமாதி
எனக்கு இசையில் நிகழ்ந்த்து

ஜபகோடி குணம் தியானம்
த்யான கோடி குணோலய
லயகோடி குணம் கானம்
கானாத் பரதரம் நஹி

.

அப்போது எங்கள் வீட்டில் வானொலிப் பெட்டி இருந்தது. இரண்டு மின் கலங்களில் உயிர்த்துப் பாடுகிற சிறிய பிலிப்ஸ் வானொலி. பொதுவாக அது மாலை நேரங்களில் பாடுவதில்லை. ‘ஆகாஷ் வாணி செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசாமி’ என கரகரத்தக் குரலில் துவங்கும் அலை வரிசைகளை அப்பாதான் தேடிப்பிடித்து வைப்பார். பிறகு இளையபாரதம் என்று இசையுடன் துவங்கும் அறிவிப்பு. அநேகமாக இந்நேரம்தான் இரவுச் சாப்பாட்டுக்கு நானும் தம்பிகளும் வரிசையாக உட்கார்ந்திருப்போம். மின்சாரம் இல்லாத இரவுகளில் ஒரு சிமிழி வெளிச்சத்தில் வானொலி கரகரப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும்.

இரவு உணவு முடிந்ததும் வீட்டின் கல்தூண்களில் அம்மா கொசுவலையின் முனைகளைக் கட்டிக் கொண்டிருப்பார். விளக்குகள் அணைக்கப்பட்டு மூலையில் அந்தச் சிமிழி மட்டும் எரிந்து கொண்டிருக்கும். அப்பா சொக்கலால் பீடியைப் புகைத்து முடித்து, கொசுவலைக்குள் வந்து படுப்பார். கரகரத்த வானொலியை மார்பில் வைத்துக்கொண்டு படுத்துக்கொண்டே அதன் தலையில் செல்லமாகத் தட்டி வலது இடதாகத் திசை திருப்பி சில அலை வரிசைகளை வைப்பார். நான், அப்பா வாசம் அடிக்க அருகில் படுத்துக் கொண்டே நடப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பேன். வானொலிக்குள் நீளமாய் எரியும் மஞ்சள் வெளிச்சத்தில் எண்களுக்கு இடையே ஒரு சிவப்பு முள் இங்குமங்கும் நகர்ந்து ஓர் இடத்தில் நிலைகொள்ளும். ’கனவில் வந்தவர் யாரெனக்கேட்டேன். கணவரென்றார் தோழி..’ பாடல் துவங்க அப்பாவுக்குக் கேட்காத சன்னமானக் குரலில் அம்மா வார்த்தை இல்லாமல் பாடத் துவங்குவார். நான் திரும்பி அம்மாவைப் பார்ப்பேன். அந்த இருட்டுக்குள் அம்மாவின் புன்னகை.

அப்பா வானொலியைத் தலைமாட்டில் வைத்துவிட்டு கைகள் இரண்டையும் தலைக்குப் பின்னே கட்டிக்கொண்டு படுத்திருப்பார். அடுத்த பாடல் இளையராஜாவின் இசையில் “அன்னக்கிளி உன்னைத் தேடுதே...” அப்பா தலையணைக்கருகில் இருந்தத் தீப்பெட்டியை எடுத்து மார்பில் வைத்துக்கொண்டு தாளம் போட த்துவங்குவார். அம்மாவின் சன்னமான குரல் தொடரும். எல்லாப்பாட்டும் அம்மாவுக்கு எப்படித் தெரிகிறது என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். பாடல் எப்போது முடிந்தது எப்போது தூங்கினேன் என்று தெரியாது. தினமும் ஒரு பாடலுடன் தூங்கினேன். எம்.எஸ்.விஸ்வநாதன், பி.சுசீலா, டி.எம்.செளந்தர்ராஜன், இந்தப் பெயர்கள் எல்லாம் கேட்ட பெயர்களாக இருந்தன. இளையராஜா என்ற புதுப் பெயர் மட்டும் எனக்கு வசீகரமானதாக இருந்தது.

விட்ந்ததும் ரேடியோவுக்கு அருகில் இருக்கும் தீப்பெட்டியைப் பார்ப்பேன். ஒரு புலி அதை வெட்டுவதற்கு அரிவாளுடன் கை ஓங்கி நிற்கும் ஒருவன். தீப்பெட்டிப் படத்தைப் பார்த்துக்கொண்டே அதே தாளத்தை நானும் போட முயற்சிப்பேன். தாளம் வராது.

அப்போது நாடரசன்கோட்டை என்ற சிற்றூரில் இருந்தோம். அப்பாவும் அம்மாவும் ஆசிரியர்கள் என்பதால் ஞாயிற்றுக்கிழமைதான் தளர்வான நாள். அதற்கு இன்னொரு காரணம், ஞாயிற்றுக்கிழமைகளில் மதியமே வானொலி கரகரப்புடன் பாட்த்துவங்கும். மதிய நேரங்களில் ஒளிபரப்பாகும் நாடகம் கேட்டுக் கொண்டே அப்பா படுத்திருபார். நானும் வெயிலில் விளையாட வெளியே அனுமதிக்கப்படாமல் கட்டாயமாக அருகில் படுக்க வைக்கப்பட்டிருப்பேன். படுக்கை விரிப்புக்கு அருகே கல்தூணின் ஓரமாக ஒரு மின் விசிறி இருக்கும். மின்சாரம் இருக்காது. ஓலை விசிறியை அப்பா எனக்கும் சேர்த்து விசிறுவார். அம்மா துணிகள் எல்லாம் துவைத்து முடித்து மூன்று மணிக்குத்தான் வருவார். திரை இசைப்பாடல்கள் துவங்கும். அந்த ஊருக்கென்று பிரத்யேகமான வெயில் இருந்தது. அந்த மதியவெயிலில் ஓட்டு வீட்டின் வெக்கையில் வியர்வையுடன் பாட்டுக் கேட்பதென்பது ஒருவிதமான அனுபவம்

சில நாட்களில் மின்கலம் தீர்ந்துவிடும். அந்தச் சின்ன ஊரில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மின்கலம் வாங்கவும் முடியாது. அப்பா மின்கலங்களைக் கழற்றிக் கொடுப்பார். நான் தண்ணீர்த் தொட்டியின் விளிம்பின் வெயில்படும் இடத்தில் அவற்றைக் காயவைப்பேன். ஒரு ஞாயிற்றுக்கிழமை காயவைத்திருந்த இரண்டு மின்கலங்களின்மேல் காக்கை அமர்ந்து அது தண்ணீர்த் தொட்டிக்குள் விழுந்த்து. அந்த ஞாயிற்றுக்கிழமை எம்.எஸ்.விஸ்வநாதனும் இளையராஜாவும் எங்கள் வீட்டுக்கு வரவில்லை. அப்பாவிடம் அடி வாங்கியதுதான் மிச்சம்.

அப்பா ஆசிரியராக இருக்கும் தொடக்கப்பள்ளியில் அவர் வகுப்பில்தான் படித்துக்கொண்டிருந்தேன். காலையில் இருவரும் சேர்ந்தேதான் நடந்து பள்ளிக்குப் போவோம். ஊரின் நடுவே பெரிய பொட்டல் இருந்தது. அந்தப் பொட்டலைக் கடந்து நடந்துதான் பள்ளிக்குப் போகவேண்டும். ஒலிப் பெருக்கியில் எங்கு பாட்டுப் பாடினாலும் அது பொட்டலில் கேட்கும். விசேஷ நாட்கள் மட்டுமின்றி மைக்செட் வைத்திருப்பவர்கள் சில சமயம் சும்மாவே பாடல்களை ஒலிபரப்புவார்கள். ‘ஆரிராரிரோ...’ என்று பாடல் துவங்கும்போதே எதிரொலியாபோல பாடல் பொட்டலைக் கடந்து செல்லும். அப்பா என்னை புன்னகையுடன் பார்ப்பார். நானும் பார்ப்பேன். “மச்சானை..ப் பாத்தீங்களா...” என்று தொலைவிலிருந்து கேட்கத் துவங்கியது ஒரு புன்னகை. இளவெயிலில் பாட்டு கேட்டுக்கொண்டே இருவரும் நடந்து போவோம். பொட்டலைக் கடந்து பள்ளிக்கு போவதற்குள் “அன்னக்கிளி” படத்தின் இரண்டு பாடல்களையாவது கேட்க முடியும்.

பள்ளிக்கு நடந்துபோகும் வரையில்தான் அப்பா. பள்ளியில் நுழைந்ததும் சார். மதியத்துக்கு மேல் விளையாட்டு வகுப்பு அல்லது நீதிபோதனை வகுப்பு. அப்போது அப்பா தனது மாணவர்களை அழைத்து ஏதாவது பாடச்சொல்லிக் கேட்பார். கண்டிப்பான கணக்கு வாத்தியாராக இருந்த அப்பா, அப்போது மட்டும் நண்பராக மாறுவார். சிலர் எழுது பாடுவார்கள். அப்பாவே மேசைத்தாளம் போடுவார். என் முறை எப்படியும் வரும் என்று தெரிந்து நான் குனிந்துகொண்டே இருப்பேன். பக்கத்திலிருக்கும் மாணவன் சுரண்டி என்னை அழைப்பான். நிமிர்ந்தால் எனக்கான அழைப்பு. நான் வெட்கத்துடன் எழுந்து கையைக் கட்டிக்கொண்டு மேசைக்கு அருகில் நின்று குனிந்துகொண்டே இருப்பேன். “அன்னக்கிளி” படத்தில் இருந்து ஒரு பாடல் பாட விரும்புவேன். ஆனால் வெட்கம் பிடுங்கும். நான் என்ன பாடப்போகிறேன் என்று அப்பாவுக்குச் சொல்லாமலே தெரிந்து மேசையில் தாளம் துவங்கும். ஆனாலும் பாடமாட்டேன். ‘ணங்’கென்று தலையில் ஒரு கொட்டு விழும். முதுகைப் பிடித்துத் தள்ள கண்கள் கலங்க உட்காரும் இடத்தை நோக்கி வருவேன். “மச்சானைப் பாத்தீங்களா” பாடலின் ராகத்தை மட்டும் வைத்துக்கொண்டு அப்பாவே வரிகளை மாற்றி பாடத்திலிருக்கும் விஷயங்களையும் மாணவர்களின் பெயர்களையும் இணைத்து மேசையில் தாளம் போட்டுக்கொண்டே நகைச்சுவையாகப் பாடுவார். எல்லோரும் கைதட்டி ஆரவாரிப்பார்கள். எனக்கு மட்டும் அவமானத்தில் கண்கள் கலங்க குனிந்து கொண்டே உட்கார்ந்திருப்பேன்.

மாலையில் பள்ளி முடிந்ததும் அப்பாவுடன் சேராமல் தனியாக நடக்கத் துவங்குவேன். தலையில் விழுந்த கொட்டு புடைத்துப்போயிருக்கும். அந்த ஊரின் பெரிய கட்டடங்களுக்கு நடுவே நான் மட்டும் தனியே நடந்து கொண்டிருப்பேன். பொட்டலில் “மச்சானைப் பாத்தீங்களா..” கேட்டுக்கொண்டிருக்கும். அந்த நாளில் எங்கு போனாலும் அந்தப் பாடல் காதில் விழுந்துகொண்டே இருந்தது. புழுக்கமான பின்னிரவுகளில் எங்கள் வீட்டு வானொலி பாடிக்கொண்டே இருந்தது. “கண்ணன் ஒரு கைக்குழந்தை..” அம்மா மெலிதான குரலில் காய்கறி நறுக்கிக்கொண்டே பாடிக்கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் ஒரு புன்னகை. அருகில் உட்கார்ந்து கொள்வேன்

பள்ளிக்குப் போகும் வழியில் சுவரெங்கும் பெரியம்மை நோயைக்கண்டால் ஆயிரம் ரூபாய் பரிசு என்று சிவப்பு எழுத்துகள் தகர அச்சில் எழுதப்பட்டிருக்கும். அப்பொழுது எனக்கு கடுமையான காய்ச்சல் வந்தது. அம்மை வருவதற்குமுன் காய்ச்சல் வரும் என்று அம்மாவுக்கு பயம். இரண்டு நளில் அது டைஃபாய்டு காய்ச்சல் என்று உறுதி செய்தார்கள். பதினைந்து நாளுக்குமேல் இருந்த காய்ச்சலில் பகலும் இரவும் படுத்தே இருந்தேன். அம்மா மருத்தவ விடுப்பில் இருந்தார்கள். கல்தூணுக்குக் கீழே ஹார்லிக்ஸ் பாட்டிலும் சாத்துக்குடி பழங்களும் வானொலியும் இருந்தன. என்னைப் பார்ப்பதற்கு மாமா, பாட்டி என்று உறவினர்கள் வந்து போனார்கள். மாமா ஒருவர் குன்னூரிலிருந்து வந்திருந்தார். சுவரில் சாய்ந்துகொண்டு உட்கார்ந்து அம்மாவிடம்தான் ரஜினி படம் ஷூட்டிங் பார்த்ததைச் சொல்லிக் கொண்டிருந்தார்.

”முள்ளும் மலரும்” படத்தில் இளையராஜாவின் இசையில்...” என வானொலி அறிவிப்பைத் தொடர்ந்து ஹம்மிங் துவங்கும்போதே விறகு அடுப்பில் ஊதிக்கொண்டிருக்கும் அம்மா நடந்துவந்து வானொலியின் ஒலியைக் கொஞ்சம் கூட்டி வைப்பார். ‘மாமா ஷூட்டிங் பாத்ததாச் சொன்னான்ல அந்த பாட்டு.’ எனக்குக் காய்ச்சலில் மதியம் எது.. காலை எது என்றெல்லாம் தெரியவில்லை. வாய் கசந்துகொண்டே இருந்தது. தலை பள்ளத்திலிருப்பது போலவும் கால்கள் உயரத்திலிருப்பது போலவும் இருந்தது. அப்பொழு எனக்காக கோகுலம், அம்புலிமாமா இரண்டும் வீட்டுக்கு வரும். மதிய நேரங்களில் வேலை முடிந்ததும் அம்மா அருகில் படுத்துக்கொண்டு கதை படித்துச்சொல்லுவார். உதிரிப்பூக்கள் பட்த்தில் இளையராஜாவின் இன்னிசையில்... இனம்புரியாத இசை துவங்கும். “அழகிய கண்ணே.. உறவுகள் நீயே..” பாட்டுக் கேட்டால் அழுகை வருமா? அம்மா கண் கலங்கியதைப் பார்த்தேன். தூக்கமும் விழிப்புமாக அரை உணர்விலிருந்த நாட்களில் அம்மா, பாடல்கள், ஹார்லிக்ஸ்,சாத்துக்குடிகள் மட்டுமெ நினைவில் இருக்கின்றன.

நாட்டரசன்கோட்டையில் அம்மா வேலைபார்க்கும் பள்ளிக்கு அருகிலேயே வளர்மதி சவுண்ட் சர்வீஸ் இருந்தது. ‘விநாயகனே... வெல்வினையை..’ என்ற பாடல்தான் முதல்பாட்டு. பாடல் போடப்படும் அறைக்கு வெளியே ஒரு கூரைக்கொட்டகை இருக்கும். அங்கிருக்கும் கல்தூணில் சாய்ந்து கொண்டு எட்டிப்பார்த்தால் இசைத்தட்டு ஓடிக்கொண்டிருக்கும். அவர் ஊசி மாற்றும்போது கொஞ்சம் பக்கத்தில் போகலாம். பாடல் கொஞ்சம் இழுக்கும்போது ஊசியை லாவகமாகத் தூக்கிவைப்பார். பக்கத்தில் இருக்கும் கைப்பிடியைச் சுற்றுவார். அவர் அருகில் சதுரம் சதுரமாக இசைத்தட்டுகள் அட்டையில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு ஒலிபெருக்கியின் முன்னால் நாய் அமர்ந்திருக்கிற படம் அந்த இசைத் தட்டுகளில் இருக்கும். இந்தச் சாமி பாட்டெல்லாம் எப்படா முடியும் என்று இருக்கும். “வெத்தல்... வெத்தல வெத்தலையோ...” பாடல் எதிரிலிருக்கிற வீரகண்டான் ஊருணியில் எதிரொலித்து ஊருக்கே கேட்கத் துவங்கும். இருட்டும் நேரங்களில் “என்னுள்ளில் எங்கோ...” பாடலின் துவக்க இசை கேட்கும்போதே அந்த உணர்வு ஒரு மாதிரி இருக்கும். சவுண்ட் சர்வீஸ்கார ர்கள் கல்யாணம், காதணிவிழா, பூப்புனித நீராட்டுவிழா, மாரியாத்தா கோயில் திருவிழாக்கள், வீட்டுக்கு வந்தால் வானொலி என எனக்குப் பிடித்த இளையராஜாவின் பாடல்களால் ஊர் நிரம்பி வழிந்தது.

அதன் பிறகு நாட்டரசன்கோட்டையிலிருந்து சிவகங்கை வந்தேன். தாத்தா வீட்டுக்கு வெளியே மாமா ஒருவர் ‘சுவைப்பிரியா டீ ஸ்டால்’ என்ற டீக்கடை வைத்திருந்தார். அவர் கடையில் ரேடியோவிலிருந்து இணைப்புக்கொடுத்து இரண்டு சவுண்ட் பாக்ஸ் வைத்திருப்பார். மதியநேரங்களில் டீக்கடைகளில் ஆளிருக்காது. அதுவும் பள்ளி விடுமுறை நாளென்றால் நானும் அவரும்தான் கடையில் இருப்போம். ஆட்கள் உட்கார்ந்து தேய்ந்து பளபளபக்கும் மரப்பெஞ்சில் இருவரும் உட்கார்ந்திருப்போம். இலங்கை வானொலியின் வர்த்தக சேவை. “என் கண்மணி.. என் காதலி...” என்ற பாடல் துவங்கும். ‘தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கெட் எறங்கு..’ - “எப்படி நம்ம ஆளு... இளையராஜாவா கொக்கா?” என்பார் மாமா. சில நாட்களில் பள்ளிக்குச் சீக்கிரம் கிளம்பிவிட்டால் காலையிலேயே அவர் கடைக்கு வருவேன். அருகிலேயே பேருந்து நிலையம். தொண்டிக்குப் போகிற ஜெயவிலாஸ் பஸ் நிற்கும். சரியாக எட்டு மணிக்கு அந்த பஸ்ஸில் போகிற சில மாணவிகளும் அவர்களுடன் சிவப்பாக ஒரு டீச்சரும் வருவார்கள். மாமா இந்த நேரத்தில் சில குறிப்பிட்ட பாடல்களை மட்டும் ஒலி அளவைக் கூட்டிவைப்பார். அப்போது அது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. ‘மாப்ள உங்க கையால அந்தக் காசை வாங்கி கல்லாவில போடுங்க.’ என்று சொல்லிவிட்டு கடையைவிட்டு வெளியில் வந்து நிற்பார். அன்று அந்த டீச்சர் வருகையில் வானொலியில் அறிவிப்பு வந்தது. “பதரகாளி” என்ற படத்திலிருந்து. மாமா ஒலி அளவை கூட்டினார். வெளியில் வந்து நின்றார். ‘இளையராஜாவின் இசையில். ‘ஏன்னா பால் ஆறப் போறது. ‘டீச்சர் மாமாவைப் பார்த்தாள். ஒரு புன்னகை. அன்று மாமா எனக்கு ஐம்பது காசுகள் கொடுத்தார். ஈப்பி மிட்டாய் என்று அழைக்கப்படும் சவ்வு மிட்டாய்களை வாய்கொள்ளாது வாங்கிச் சாப்பிடும்போது எனக்கு முகம் தெரியாத அந்த இளையராஜாவுக்குத்தான் நன்றி சொல்லத் தோன்றியது. அதற்குப் பிறகு மாமா அந்த டீச்சர் வரும்போது கடையிலிருந்து வெளியில் வந்து நிற்பார். ‘ஏன்னா டீ ஆறப்போகுது. டீ சாப்பிடுங்க.’ என்று கத்திச் சொல்வார்.
இரவு ஒன்பது மணிக்கு பேருந்து நிலையத்திலிருந்து சங்கு ஒலிக்கும். சிறிது நேரத்தில் ஊர் அடங்கிவிடும். மதுரையிலிருந்து கடைசியாகத் தொண்டி போகும் பேருந்தின் விளக்கு வெளிச்சம் டீக்கடையைக் கடந்து போய்க்கொண்டிருக்கும். கடை முடிந்து பாத்திரங்கள் கழுவிவைத்து, கடையிலும் வெளியிலும் முழுக்கத் தண்ணீர் தெளித்துக் கழுவி மரப்பெஞ்சுகளை வெளியில் போட்டு மாமா கைலியை தூக்கிக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருப்பார். தெருவிளக்கின் வெளிச்சத்தில் வானொலி மட்டும் மெதுவாகப் பாடிக்கொண்டிருக்கும். ஒருபடப் பாடல்கள். “ ஒரே நாள்... உனை நான்.. நிலாவில் பார்த்தது.” நானும் மாமாவுடன் பெஞ்சில் வந்து மெளனமாகச் சேர்ந்துகொள்வேன். “செந்தூரப்பூவே.. செந்தூரப்பூவே.. சில்லென்ற காற்றே..” மாமா கண்கள் செருகி உட்கார்ந்திருப்பார். சிலநாட்கள் டீக்கடை பெஞ்சிலேயே தூங்கிவிடுவேன். அப்பத்தா தேடி வந்து எழுப்பியதும் மாமாதான் தூக்கிவந்து வாசலில் படுக்கவைப்பார்.

சிவகங்கையில் பூச்சொரிதல் விழாதான் பெரிய திருவிழா. அந்த வருடம் காந்தி வீதியில் மலேசிய வாசுதேவன் பங்குபெறும் இன்னிசைக் கச்சேரி. அப்பத்தா வீட்டிலிருந்ததால் பெரிய கட்டுப்பாடுகள் இல்லை. ‘அப்பத்தா காலு வலிக்குது..’ன்னு சொன்னாலே போதும். அப்பத்தா சொல்கிற முதல் வார்த்தை ‘அப்ப பள்ளிக்கொடம் போகாதப்பா...’ எனபதுதான். அப்பா, அம்மா ஞாயிற்றுக்கிழமைகளில் சிவகங்கை வருவார்கள். எனவே, இன்னிசைக் கச்சேரிக்குத் திட்டம்போட்டு மேடைக்கு முதலில் இருக்கும் பத்து வரிசைக்குள் போய் நின்றுகொண்டேன். அந்தத்துவக்க இசை துவங்கியதுமே விசில் பறந்தது. ஹம்மிங்குடன் துவங்கும் ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு..’ பாடத் துவங்கியதும் அப்படி ஒரு பரவசம். பிறகு எந்தப் பாடலும் எனக்கு அடையாளம் தெரியவில்லை.

அப்போது ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ ஸ்ரீ ராம் தியேட்டரில் வந்திருந்தது. போஸ்டரை இரண்டு பக்கமும் ஒட்டி ஒரு வண்டியில் வைத்துத் தள்ளிக் கொண்டு வருவார்கள். உடன் ஒருவன் கிடுகிட்டி என்னும் வாத்தியத்தை வாசித்துக்கொண்டே வருவான். புதுப்படம் என்றால் மேளதாளமெல்லாம் வரும். பேருந்து நிலையம் அருகில் கொஞ்சநேரம் நிறுத்தி வாசித்துவிட்டு மாமா கடையில் டீ குடித்துவிட்டுத்தான் போவார்கள். ‘மாப்ளே செகண்ட் ஷோ போகலாமா... ‘யோய் இது ‘ஏ’ படம். சுள்ளான்களை விடமாட்டாய்ங்கடி...’ என்று ஒருவர் கிண்டலாகச் சொன்னார். அதெல்லாம் பொருட்படுத்தவில்லை. பத்தரை மணிக்குத்தான் இரண்டாவது காட்சி. ‘மாப்ள குளிரும் எதுக்கும் துண்டு எடுத்துக்கங்க..’ தலைப்பாகையை அவரே கட்டிவிட்டார். 45 காசு டிக்கெட். கூட்டம் நிரம்பி வழிந்தது. திரைக்கு முன்னால் திண்ணை மாதிரி இருக்கும். அதில் கைகளைப் புறந்தலையில் கட்டிக்கொண்டு கால் நீட்டிப் படுத்துக் கொண்டோம். அந்த வயதில் பத்து மணிக்கு மேல் விழித்திருந்து பழக்கமில்லை. படம் போட்டதும் கமல்ஹாசன், ரஜினிகாந்த் பெயர்கள் வந்ததும் விசில் பறந்தது. கலர் காகிதங்கள் திரை முழுக்கப் பறந்து எங்கள் தலையில்தான் விழுந்தன. அடுத்து இசை இளையராஜா என்ற எழுத்து வந்ததும் விசில்கள் கைதட்டல்கள். நான் படம் போட்டு சில நிமிடங்களிலேயே தூங்கிவிட்டேன். மாமா ஒவ்வொரு பாட்டுக்கும் தோள்களில் தட்டுவார். விழித்துக் கொண்டு பாடல்களை மட்டும் பார்த்தேன். ‘தண்ணி கருத்திருச்சு’ பாடலுக்கு மட்டும் மாமா என்னை எழுப்பவில்லை. “என்னடி மீனாட்சிக்குத்தான்” எழுப்பினார்.

மலேசியா வாசுதேவன் கச்சேரியைப் பார்த்ததிலிருந்து ஒரு பாடகன் ஆகவேண்டும் என்ற ஆசை மனதில் துளிர்விட்டிருந்தது. ஸ்டைலாக மைக்கைப் பிடித்துக்கொண்டு பெல்ஸ் பேண்ட் போட்டுக்கொண்டு பாடலாம். அப்பா சிறுவயதில் கச்சேரிகளில் பாடி இருக்கிறார். அம்மாவுக்குப் பாட்டு ரொம்பவும் பிடிக்கும் என்பதால் பாடகனாகும் ஆசை எனக்குள் ஆழமாக வேர்விட்த் துவங்கி இருந்தது. அதுவும் ‘என்னடி மீனாட்சி..’ பார்த்ததில் இருந்து மைக்கைப் பிடித்து இளையராஜா பாட்டை மேடையில் பாடும் ஆசை உள்ளுக்குள் வளர்ந்துகொண்டே இருந்தது.

அந்தப் பருவத்தில் நாளொரு பாடலுடன் வளர்ந்தேன். ‘கரகரவண்டி காமாட்சி வண்டி... கிழக்கே போகுது பொள்ளாச்சி வண்டி... ஓ..ஓ.. கிறுகிறுகிறுகிறுகிறு...ஆ’ இதன்பின் வரும் வினோதமான இசை வெகுவாக ஈர்த் த து. ‘ஓரம்போ... ஓரம்போ.. ருக்குமணி வண்டி வருது...’ எங்கு பார்த் தாலும் கேட்டுக்கொண்டிருந்தது. நான் மேசைத்தாளம் போட்டுப் பழகி முதல் பாட்டு. ‘தம்தன தம்தன தானம் வரும்... “இதயம் போகுதே...” அப்போது எனது இன்னொரு மாமா எஸ்.எஸ்.எல்.சி பெயிலாகி வீட்டில் இருந்தார். காலையில் தினமும் உடற்பயிற்சி செய்வார். இளமை ஊஞ்சலாடுகிறது கமல்ஹாசன் போல கொஞ்சம் மாநிறமாக இருப்பார். ஒரு நாள் பள்ளிக்கூட த்துக்குப் போய்விட்டு அவர் வீட்டுக்குப் போனேன். ‘இங்க வா’ என்று என்னை கொல்லைப் பக்கம் கூட்டிக்கொண்டு போனார். கருவேல மரங்கள் அடர்த்தியாக இருக்கும். அந்தப் பின்பகுதியில் நின்றால் தெருவிலிருக்கும் மற்ற வீடுகளின் பின்புறமும் தெரியும்.

ஒவ்வொரு வீட்டுக்கு வெளியிலும் துணிகள் காயவைப்பதற்காக நீளமாக கொடிக்கயிறு இருக்கும். மாமாவும் நானும் வீட்டின் பின்பகுதியில் நின்றுகொண்டிருந்தோம் நான்கு வீடுகள் தள்ளி ஒரு காம்ப்வுண்டில் இருந்து பாட்டு சத்தமாகப் பாடிக்கொண்டிருந்தது. என்ன பாட்டு என்பது நினைவில் இல்லை. பாடல் கேட்டதும் மூன்றாவது வீட்டிலிருந்து மாமாவின் வயதுக்குச் சற்று இளமையான பெண் வெளியில் வந்து துணி காயப்போடுவதுபோல நின்றாள். மாமா என்னைச் சுரண்டினார். நான் பார்க்கும்போது அந்தப் பெண் வெட்கத்துடன் சிரித்துக்கொண்டே ஏதோ பேச விரும்புவதுபோல நின்றாள். பாடல் முடியும் வரை காயும் துணிகளைச் சரி செய்வதும் இங்கும் அங்கும் நடப்பதும் இடையிடையே மாமாவைப் பார்ப்பதுமாக இருந்தாள். பாடல் முடியும்போது உள்ளே போய்விட்டாள்.

அந்தச் சிறிய தெருவில் சில வீடுகளில் மட்டுமே ரேடியோ இருந்தது. இருக்கிற வீடுகளில் எல்லாம் பாடல் சத்தமாக ஒலிப்பதால் தெருமுழுக்கப் பாட்டுக் கேட்டுகொண்டிருக்கும். தெருவின் ஒரு முனையிலிருந்து மறுமுனைவரை நடந்தால் முழுப்பாடலையும் கேட்கலாம். “உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்சக்கிளி...” பாடியது. நான் மூன்றாவது வீட்டைப் பார்த்தேன். ‘சோகப்பாட்டு பாடினா வராது’ என்றார் மாமா. இருவரும் பின்படிக்கட்டில் உட்கார்ந்திருந்தோம். ‘அந்த அக்கா ஏன் பாட்டுப் போட்டா வருது..’ மாமா வெட்கத்துடன் புன்னகைத்தார். அடுத்தபாடல் சிகப்பு ரோஜாக்கள் எனும் படத்திற்காக இளையராஜாவின் இசையில் “நினைவோ ஒரு பறவை...” மாமா என்னைச் சுரண்டினார். மூன்றாவது வீட்டு அக்கா கொடித்துணிகளின் அருகே வேறு தாவணியில் நின்று கொண்டிருந்தது. திரும்பவும் காயும் துணிகளைச் சரி செய்தது.

இன்னொரு நாள் இதுபோலவே சாயங்காலம். அந்த மாலையில் பாடல்கள் எதுவும் இல்லை. அந்த அக்கா பாத்திரம் கழுவுவதுபோல் முழங்காலைக் கட்டிக்கொண்டு எங்களுக்குப் பக்கவாட்டில் பாதி முகம் தெரிவதுபோல் ஒரு சிமிண்ட் தொட்டிக்கு அருகில் உட்கார்ந்திருந்தது. மென்மையாக ஒரு பாடலை எங்களுக்குக் கேட்குமாறு முணுமுணுத்துக் கொண்டிருந்தது. பாடலின் வரிகள் இல்லாமல் வெறும் ராகம் மட்டும் பாடியது என்பதால் அது என்ன பாடல் எனபது எனக்குத் தெரியவில்லை. ‘பாட்டு நல்லா பாடுதில்ல..’ என்று மாமா கேட்டார். அது என்ன பாட்டு என்பதிலேயே என் கவனம் இருந்தது. மாமாவிடம் கேட்கவும் ஒருமாதிரி இருந்தது.

சில பாடல்கள் மனதிலிருக்கும் நினைவில் வராது. அது ஒரு பெரிய அவஸ்தை. ஆனால் அந்த அக்கா பாடிய பாடல் கேட்டது போல இருக்கிறது. கேட்காதது போலவும் இருக்கிறது. பாட்டைச் சொல்லிக் கேட்கலாமென்றால் பாடும் அளவுக்கு அந்தப் பாட்டு பரிச்சயமில்லை. ஆனால் ஒரு முறை கேட்டால் கண்டுபிடித்துவிடுவேன். சிலநாள் அந்த நினைவிலேயே இருந்தேன். பிறகு மறந்துவிட்டேன். ஒரு மாதம் கழித்து சிவகங்கையின் அமுதா டூரிங் டாக்கீஸில் புதுப்படம் என்று மேளதாளத்துடன் போஸ்டரைத் தள்ளிக்கொண்டு வந்தார்கள். படத்தின் பெயர் ‘அழகே உன்னை ஆராதிக்கிறேன்’. அதில் எனக்குப் பிடித்த நடிகர்கள் யாருமில்லை. “மாப்ளே இசை நம்ம ஆளுதான். செகண்ட் ஷோ போகலாமா?” என்று டீக்கடை மாமா கேட்டார். நான் வரவில்லை என்று சொல்லிவிட்டேன்.

இந்த அமுதா தியேட்டரில் படம் ஓடினால் குறிப்பாக, இரண்டாவது ஆட்டம் போடும்போது எங்கள் வீட்டுக்குப் படத்தின் வசனங்களும், பாடல்களும் காற்றில் வரும். குறிப்பாக, பாடல்கள் மட்டும் துல்லியமாக்க் கேட்கும். பாட்டு வந்தால் தியேட்டரில் சத்தத்தைக் கூட்டி வைப்பார்கள் என்பது எனக்குப் பின்னால்தான் தெரியும். இப்படித் தூரத்திலிருந்து வரும் பாடலும் வசனமும் ஒருவிதமான எதிரொலிபோல அசரீரியின் தன்மையுடன் இருக்கும். அந்தச் சமயம் வயிற்றுக்குச் சரியில்லாமல் அப்பத்தாவை நடுராத்திரியில் எழுப்பினேன். அப்பத்தா ஒரு பித்தளை வாளியில் தண்ணீர் எடுத்துக்கொண்டு வாசலில் உட்கார் ந்திருக்க நான் வீட்டுக்கு எதிரிலிருக்கும் தாயில்லாப் பள்ளத்தை நோக்கி ஓடினேன். நல்ல நிலா வெளிச்சம். ஊரே தூங்கிக்கொண்டிருக்க மாமாவின் டீக்கடை இருளடைந்து கிடந்தது. காற்றில் வசனங்கள் துல்லியமாக க் கேட்டுக்கொண்டிருந்தன. திடீரென விசில் சத்தம் கேட்க, ‘அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க...’ என்றொரு பாடல். விசில் பறந்துகொண்டிருந்தது. ‘ஏம்பா வாயா.. இருட்டுக்குள்ள பூச்சிபட்ட கெடக்கப் போகுது’ என்று அப்பத்தாவின் குரல் கேட்டதும் வந்தேன்.

மறுநாள் பள்ளிக்குப் போகவில்லை. மதியம்போல மாமாவின் டீக்கடைக்கு வந்தேன். மாமா இல்லை. வேலை பார்க்கிறவர்தான் இருந்தார். பக்கத்திலேயே அழகர் டெய்லர் கடை இருந்தது. அதை வைத்திருந்தவர் சித்தப்பாதான் என்றாலும் அங்கே என்னைப் போல சிறுவர்களுக்கு அனுமதி இல்லை. எப்போதும் இளைஞர்கள் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டு இருப்பார்கள். மாமா இல்லாததால் நான் திண்ணையில் உட்கார்ந்திருந்தேன். அப்போது ஒரு பாடலைக் கேட்டேன். சித்தப்பா கடையிலிருந்து பாட்டு வந்தது. எழுந்து கடையின் வெளியில் நின்றேன். கடையின் உள்ளே தகரத்திலிருக்கும் மடக்கு நாற்காலியைத் திருப்பி முன்னால் போட்டு ஒரு அண்ணன் தாளம்போட த்தயாராக இருந்தார். ‘இந்தப் பாட்டுல இளையராஜா பேங்கோஸ் உருட்டிருப்பான் பாரு.” என்று சொல்லி தாளம்போட பாட்டு வானொலியில் பாடிக் கொண்டிருந்தது. “நானேதானா யாரோதானா... மெல்லமெல்ல மாறினேனா...” தகர நாற்காலியில் தாளம் பறந்து கொண்டிருந்தது. தெரிந்த மனிதரை கொஞ்சம் நேரம் கழித்து அடையாளம் கண்டுகொள்வதைப்போல இந்தப் பாடலை எங்கோ கேட்டிருக்கிறேன். அந்த அக்கா பாடிய பாட்டு. அன்று இரவு நடுநிசியில் தியேட்டரில் இருந்து அந்தப் பாட்டு சுற்றில் வந்தது. அதற்குப் பிறகு எப்போது அந்தப் பாடலைக் கேட்டாலும் மாலை வெயிலில் முழங்காலைக் கட்டிக்கொண்டு தலைகுனிந்தவாறு பாடிக்கொண்டிருக்கிற அந்த அக்காவின் நினைவு வரும்.

இளையராஜாவின் பாடல்கள் வழியே கடந்து சென்று கொண்டிருந்தது காலம். பாடல்களோடு படத்தில் வருகிற பின்னணி இசையும் என்னை ஈர்க்கத் துவங்கியது. “ராஜபார்வை” பட்த்தின் துவக்கத்தில் வயலின் வாசிப்பதுபோல ஒரு நீண்ட இசைக்கோவை வரும். அப்போது இசைத்தட்டுக்களில் அந்த இசை இருந்தது. “அந்திமழை” பாடலுக்கு இணையாக அந்த வயலின் இசையும் எனக்குப் பிடித்திருந்தது. இலங்கை வானொலியின் கே.எஸ்.ராஜா சிறப்பு அறிவிப்புகளோடும் செய்திகளோடும் இளையராஜாவின் பாடல்களை ஒலிபரப்பினார். இரண்டு ராஜாக்களையும் உச்சரிக்கும் விதத்திலேயே ஒரு கொண்டாட்டமிருக்கும். புதிது புதிதாகப் பாடல்கள். “நிழல்கள்” படத்தில் இளையராஜாவின் இன்னிசையில், “தூரத்தில் நான் கண்ட உன் முகம்”, இந்தப்பாடல் படத்தில் இல்லாதது ஏமாற்றமாக இருந்தது. “பூங்கதவே தாழ்திறவாய்.” பாட்டில் துவக்கத்திலும் இடையிலும் வரும் துவக்க இசை கேட்கும்போதெல்லாம் ஒருவிதமான பரவசத்தை உணர்ந்தேன். பதின் வயதுகளில் இளையராஜாவின் இசை எனது நாடிகளில் ஒன்றாகவே மாறி இருந்தது.

அமுதா தியேட்டரில் “அலைகள் ஓய்வதில்லை” வந்தது. முதல் காட்சி பார்த்து வெளியில் வந்து பக்கத்துக் கடையில் புரோட்டா சாப்பிட்டுவிட்டு அய்யப்பனும் நானும் அப்படியே இரண்டாவது ஆட்டம். படம் ஒருபுறம் ஈர்த்தாலும் அதிலிருக்கும் இசை என்னை ஒருவிதமான மயக்க நிலைக்கே இட்டுசென்றது. நாயகி குடைபிடித்து நடந்து வரும்போது வரும் ஸ்வரவரிசை. நாயகனும் நாயகியும் முதன்முதல் தொட்டுக் கொள்வதற்கு முன்பாக ஒவ்வொரு மரமாக கடந்து வருகையில் வரும் இசை, துண்டுப் பாடல்கள் என படத்தின் ஒட்டுமொத்த இசையும் மனப்பாடமாக சொல்லுமளவுக்கு இசை மனதில் ஊறி இருந்தது. “புத்தம் புதுக்காலை” பாடல் மற்ற எல்லாப் பாடல்களை விடவும் புதுவிதமான அனுபவத்தைத் தந்தது. ஆனால் அது படத்தில் இல்லை. ஆனாலும் கே.எஸ்.ராஜா அந்தப் பாடலை விடவில்லை. இலங்கை வானொலியைத் திருப்பினாலே இளையராஜாதான். இதற்கிடையில் எனது பாடகராகும் ஆசையும் வளர்ந்து கொண்டிருந்தது. குரலை கட்டையாக வைத்துக் கொண்டு “தரிசனம் கிடைக்காதா?” என்று நண்பர்களிடம் பாடிக்காட்டினேன். செய்திகளில் இளையராஜாவைப் பற்றி எது வந்தாலும் தேடிப்படித்தேன். அவர் காலை நாலுமணிக்கு எழுவார் என்ற செய்தியைப் படித்து நானும் நாலு மணிக்கு எழ முயற்சித்துக் கொண்டிருந்தேன். “எனது வேலை, பொழுது போக்கு இரண்டுமே இசைதான்” என்று அவர் ஒரு நேர்காணலில் சொன்னது எனக்கு அதிசயமாக இருந்தது.

கல்லூரியில் சேர்ந்தேன். எனது இருக்கை, கடைசிக்கு ஒரு இருக்கை முந்தியது. என் அருகில் இருந்த நண்பன் நந்திகேஸ்வரன் இளையராஜா பைத்தியம். ஆசிரியர் இயற்பியல் நட த்திக் கொண்டிருக்கும்போது தனது நோட்டில் எதையோ வரைந்துக் கொண்டிருப்பான் என்ன என்று கேட்டால் இதுதான் மியூசிக் நோட்ஸ் என்பான். உண்மையில் அவனுக்கு இசையும் தெரியாது. இசைக்குறிப்புகளும் தெரியாது. ஆனாலும் ஆசிரியருக்குக் கேட்காத சன்னமான குரலில் வயலின் இசைத்துக்கொண்டே நோட்டில் இசைக் குறிப்புகளைப் போல ஒரு நீண்ட கோலம் போட்டுக் கொண்டே இருப்பான். அடுத்து “பொத்திவச்ச மல்லிகை கொட்டு.” என்று எழுதிக் காட்டுவான். நான் வாயினால் பாட்டின் முன்னால் வரும் இசையைச் சொல்ல நண்பன் இசைக்கோலத்தை எழுதிக் கொண்டிருப்பான். “மூன்றாம் பிறை” என்று எழுதுவான். இப்போது அவன் “வானெங்கும் தங்க விண்மீன்கள்” பாடலின் முன் இசையைச் சொல்ல நான் கிட்டார் இசைக்கு கோலம் வரைய வேண்டும்.

அப்போது ராக்கிங் கடுமையாக இருக்கும். சீனியர் மாணவர்களிடம் மாட்டிக்கொள்ளாமலிருக்க இருட்டுக்குள் ஓடி ஒளியவேண்டும். ஒரு நாள் நான் மாட்டிகொண்டேன். ‘டான்ஸ் ஆட்த்தெரியுமா? தெரியாது என்று சொன்னால் வேறு ஏதாவது வினோதமாகச் செய்யவேண்டி இருக்கும். எனவே ‘தெரியும்’ என்றேன். “இளையநிலா பாட்டுத் தெரியுமா?” ‘தெரியும்’. ‘எங்க பாடிக்கிட்டே ஆடு. இந்தா கிட்டார் வச்சுக்க’ என்று அறையில் கிடந்த பெருக்குமாரைக் கொடுத்தார்கள். ‘இந்தப் பாட்டுக்கு ஆட முடியாது சார்..’ ‘ஆடுறான்னா..’ அந்தப் பாட்டுக்கு அப்படி ஒரு ஆட்டம் ஆடியது நானாகத்தான் இருக்கும். அவர்களுக்கே சிரிப்புத் தாங்காமல் அத்துடன் அனுப்பி விட்டார்கள்.

மாலைப் பொழுதுகளில் கல்லூரி விடுதியில்

Reply · Report Post